ஃபாரின் பொங்கல்!



‘தமிழர்கள் இல்லாத நாட்டை இனிமேல்தாம்பா கண்டு பிடிக்கணும்...’ என்று வியக்குமளவுக்கு, உலகமெங்கும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள்.

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா என எல்லா கண்டங்களிலும் தமிழர்கள் அதிகளவு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். ‘என்னதான் ஃபாரின்லே போய் வாழ்ந்தாலும், பாரம்பரியத்தை மறக்கக்கூடாதுப்பா’ என்ற கொள்கைப் பிடிப்போடுதான் இன்னமும் பலர் இருக்கின்றனர். அதைப் பறைசாற்ற பண்டிகைகளைத் தவிர வேறேதும் உண்டா என்ன? வாருங்கள், ஆசிய நாடுகளில் எப்படி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் எனப் பார்க்க ஒரு ரவுண்டு போகலாம்.

முதலில் நாம் பார்க்கப்போகும் ஊர்... சிங்கப்பூர்!

இங்குள்ள ஒரு பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் பிரான்சிஸ்கா லாசரைத் தொடர்புகொண்டு பேசினோம்.‘‘சிங்கப்பூர், ஆசியாவின் முக்கியமான வணிக கேந்திரம். அதனால் இங்கு சர்வதேச கலாசாரமும் இருக்கும். இவற்றுக்கிடையே இங்கு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டுக்கு நிகராகச் சிறப்பாக நடக்கும்.

அதுபோலவே, பாரம்பரியப் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி இங்குள்ள தமிழ்ப் பாட நூல்களில் அவசியம் குறிப்பிடப்பட்டிருக்கும். சிறிய நாடு என்றாலும், கொண்டாட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். பொங்கல் செய்யும் மண் பானையை நாங்களே வண்ணம் தீட்டி அழகுபடுத்துவோம். இங்குள்ள ‘லிட்டில் இந்தியா’ என்ற இடத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்வோம். அங்கு பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். பேனர் எல்லாம் கட்டி ஒரு பிரமாண்ட விழாவாகக் காட்சியளிக்கும். ஓர் அரசு விழா போல சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்து சிறப்பு செய்வார்கள். ஆடல், பாடலுடன் பொங்கல் விழா அமர்க்களமாக நடக்கும்.

‘லிட்டில் இந்தியா’வில் கரும்பு, சிவப்புச் சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கலுக்குரிய பொருட்கள் கிடைக்கும். அத்தோடு தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, புடவை அணிந்து மாணவர்கள், பெரியவர்கள் பங்கேற்கும் கலை விழா நடக்கும். ஒரே குறை, இங்கு பொங்கலுக்கு விடுமுறை கிடையாது. விடுமுறையில் பொங்கல் வந்தால் அந்த வருடம் டபுள் டமாக்காதான்.

வீடுகளைப் பொறுத்தவரை விசேஷமாக வழிபடுவாங்க. பொங்கலன்று வாசலில் மாக்கோலம் அல்லது பெரிய ரங்கோலி வரைவோம். பொங்கல் பானையில் இஞ்சி, மஞ்சள் கொத்து கட்டி வைப்பாங்க. மண் அடுப்பில் பொங்கல் வைப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கு பொங்கலுக்கு சிவப்புச் சர்க்கரையைத்தான் பயன்படுத்துவோம். பொங்கல் மஞ்சளாக பொங்காமல், ஆரஞ்சு நிறத்தில் பொங்கி வருவதைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். அதை அப்படியே சுடச்சுட கடவுளுக்குப் படைத்தபின் அனைவருக்கும் பரிமாறுவோம். உறவினர்களுக்கு வழங்கும் பழக்கமும் இருக்கிறது. புத்தாடைகளையும் உடுத்துவோம். வேட்டி, சட்டை, புடவைதான் கட்டுவோம்.

சிலர் மாட்டுப் பண்ணைக்குச் சென்று மாட்டுப்பொங்கலை விசேஷமாகக் கொண்டாடுவாங்க. மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் விழாக்களை இடப் பற்றாக்குறையினால் பெரியதாகக் கொண்டாட மாட்டோம். மற்றபடி பொங்கலன்று எங்கள் இல்லங்களில், உள்ளங்களில் மகிழ்ச்சிப் பொங்கலை அறுவடை செய்யாமல் இருப்பதில்லை.

இது தமிழர்களால் மட்டுமே கொண்டாடப்படுவது என நினைச்சுக்காதீங்க. மற்ற இனத்தவர்கள், மதத்தவர்கள்கூட இந்த விழாக்களில் கலந்துக்குவாங்க. இது இங்கும் ஒரு மதநல்லிணக்க விழா போலத்தான் நடக்கும். இனம், மதம், மொழிகளைக் கடந்து அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடும் விழாவாகத்தான் பொங்கல் சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது...’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பிரான்சிஸ்கா.

சரி; இனி அமீரகம் எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
அபுதாபியில் பணியாற்றி வரும் நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த பிரபு கங்காதரனைத் தொடர்புகொண்டோம்.

‘‘அபுதாபியில் சில தமிழ் அமைப்புகள் சார்பில் பூங்கா, கலாச்சார மையங்களில் பொங்கல் விழா சிறப்பாக நடக்கும். தமிழர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து கரும்பு எல்லாம் வாங்கி வருவார்கள். பானை வைத்து, அதில் பொங்கல் வைத்து எல்லோரும் பகிர்ந்துண்போம். கேக்கும் வெட்டுவது உண்டு. துபாய், அபுதாபியில் பெருமாள் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை உண்டு. அங்கு பொங்கலுக்குரிய கரும்பு உள்ளிட்ட பொருட்கள், பூ, பழம் எல்லாம் தமிழ்நாட்டில் கிடைப்பது மாதிரியே கிடைக்கும். அதை வாங்கி வந்து வீட்டிலேயும் நிறைய பேர் சிறப்பாகக் கொண்டாடுவாங்க.

குறிப்பாக, அபுதாபியில் உள்ள பெதா சையத் நகரில் நடக்கும் பொங்கல் விழா களைகட்டும். தமிழர்கள் பாரம்பரிய உடையான புடவை, வேட்டியணிந்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள். சூரியனை வணங்கியே விழாவைத் தொடங்குவார்கள். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும். சிறியவர்களுடன் பெரியவர்களும் ஆடிப்பாடி கொண்டாடும் நிகழ்வு பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும். என்னதான் காலங்கள் மாறினாலும் தேசங்கள் மாறினாலும் நம் பண்பாட்டை மறக்க முடியாதில்லையா...’’ என்று பெருமிதமாகச் சிரிக்கிறார் பிரபு கங்காதரன்.

கும்மிப்பாட்டு பாடி... குலவையிட்டு ஆடி...

குவைத் நாட்டில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் அங்குள்ள வப்ரா என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கூடுகின்றனர். அங்கு பேனர் எல்லாம் வைத்து, பொங்கல் விழாவை அமர்க்களமாகக் கொண்டாடுகின்றனர். கும்மிப் பாட்டு பாடி, குலவையிட்டு ஆடி, பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து கொண்டாடுகின்றனர். மேலும், பாட்டுக்குப் பாட்டு, நடனம், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இதில் அங்கு பணிபுரியும் தமிழர்களும் பங்கேற்பார்கள். இந்த விழா குடும்பத்தோடு இணைந்து கொண்டாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைத் தமிழர் வாழ்வில் இன்பம் பொங்கி வழியட்டும்!

இலங்கையின் தலைநகர் கொழும்புவைச் சேர்ந்த சுதர்ஷினி பாலசுப்ரமணியத்திடம் ஈழத்துப் பொங்கல் பற்றி கேட்டோம். ‘‘எங்கள் நாட்டைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்புவில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள். மதங்களைக் கடந்து சிங்களர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையின் வெளிப்பாடாகக் கொண்டாடுவார்கள்.

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பிலுமே, இந்த பண்டிகையை சூரியனுக்கு நன்றி பாராட்டும் பண்டிகையாகவே கொண்டாடுகின்றனர். பொங்கலன்று இங்குள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு இடம்பெறும்.புத்தாடை அணிதல், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு உணவளித்தல், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழும் தருணங்களும் உள்ளன.

அது மட்டுமல்ல, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களைப் புறக்கணித்து, புதுமைகளை இணைத்துக்கொள்ளும் வழக்கமும் இங்கு பின்பற்றப்படுகிறது.

இலங்கைவாழ் உழவர்கள் புதிதாக விளைந்த பயிர்களை அறுவடை செய்து, அதனை நல்ல நேரம் பார்த்து சூரியனுக்குப் படைக்கும் வழக்கமும் உண்டு. அறுவடை செய்த நெல்லில் கிடைத்த புத்தரிசியை, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, மஞ்சள், மாவிலை கட்டிய அலங்கரித்த பானையில் இட்டு பொங்கல் பொங்கியதும் சூரியனுக்கு படைக்கப்படும்.

“பட்டி பெருகவேணும் தம்பிரானே பாற்பானை பொங்கவேணும் தம்பிரானே” என்ற உழவுப் பாடலைப் பாடி மக்கள் மகிழ்வர். அது மட்டுமின்றி, மறுநாள் இலங்கை கிராமங்களில் மாட்டுப்பொங்கலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். இலங்கைத் தமிழர்கள் வாழ்விலும் இந்தப் பொங்கல் நல்லதொரு தொடக்கமாக அமைய வேண்டும். அவர்கள் வாழ்விலும் இன்பம் பொங்கி வழியட்டும்...’’ என்று நெகிழ்ச்சியாக முடித்தார்.

சு.அறிவழகன்