family tree-7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்!



உலகின் செயற்கையான நறுமணத் தோட்டம். இங்கிலாந்து அரசர் மூன்றாம் ஜார்ஜ், பிரான்ஸின் அரசி யூஜின் முதல் இன்றைய ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரின் நறுமணத்துக்கும் காரணமான நிறுவனம். ஏழு தலைமுறைகளாக வாசனைத் திரவிய தயாரிப்பு பிசினஸில் இருக்கும் முதல் குடும்பம்... என ‘கிரீட்’ நிறுவனத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். வாசனைத் திரவிய தயாரிப்பில் முன்னோடி நிறுவனம் இது.

எந்தவித விளம்பரமும் இல்லாத காலத்திலேயே ஐரோப்பா முழுவதும் பரவியது ‘கிரீடி’ன் பெயர். காரணம், இதன் தனித்துவமான தரம். இந்தத் தரத்தை இன்று வரை கடைப்பிடித்து வருகிறது ‘கிரீட்’.

*ஜேம்ஸ் ஹென்றி கிரீட்

உயர் ரக சந்தனமும் மாண்டரின் மற்றும் அம்பெர்கிரிஸ் மலர்களின் சாரமும் கலந்த ‘ராயல் இங்கிலீஷ் லெதர்’ என்ற வாசனைத் திரவியத்தின் சிறு குடுவையிலிருந்துதான் மாபெரும் நறுமண சாம்ராஜ்யத்தின் வரலாறு தொடங்குகிறது. இங்கிலாந்தில் 1710ல் பிறந்த ஜேம்ஸ் ஹென்றி கிரீட், இராணுவ உடைகளையும் நறுமணம் வீசும் தோல் கையுறைகளையும் தைப்பவராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அரிய வகை மலர்களைச் சேகரித்து அதிலிருந்து சாறு பிழிந்து கைகளாலேயே வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதில் ஜாம்பவான் இவர். இவரது தயாரிப்புகளுக்கு ராஜ குடும்பத்திலிருந்து நல்ல பெயர் கிடைக்க, லண்டனில் 1760ல் ‘கிரீட்’ நிறுவனத்தைத் தொடங்கினார். நறுமணத் தோல் கையுறை தைப்பதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய பணி.

அப்போது இங்கிலாந்தின் அரசராகப் பொறுப்பேற்ற மூன்றாம் ஜார்ஜிற்கு நறுமணப் பொருட்களின் மீது தீராத காதல். இதை அறிந்த ஜேம்ஸ், அரசரைக் கவரும் விதமாக நறுமண தோல் கையுறையைப் பிரத்யேகமாக தயாரித்து அரண்மனைக்கு அனுப்பினார்.

ஜேம்ஸின் மேஜிக்கை நுகர்ந்த மூன்றாம் ஜார்ஜ் அசந்துபோனார். அந்தக் கையுறையை மூன்றாம் ஜார்ஜ் அணிந்துகொண்டு குதிரையில் பவனி வந்தபோது லண்டன் முழுவதும் நறுமணம் வீசியதாக ஒரு கதை கூட உண்டு. ஜேம்ஸை அழைத்துப் பாராட்டியதோடு தனக்காக ஒரு வாசனைத் திரவியத்தைத் தயாரிக்கச் சொன்னார் மூன்றாம் ஜார்ஜ். 1781ல் அரசருக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த வாசனைத் திரவியம்தான் ‘ராயல் இங்கிலீஷ் லெதர்’. இதுதான் ‘கிரீடி’ன் முதல் வாசனைத் திரவியம்.

1798ல் ஜேம்ஸ் மரணமடைய, பொறுப்புக்கு வந்தார் அவரது மகன் ஹென்றி கிரீட். இவரது காலத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இவருக்குப் பிறகு வந்த இரண்டாம் ஹென்றி கிரீட் பிசினஸை ஐரோப்பா முழுவதும் விரிவடையச் செய்தார். புதுமையான வாசனைத் திரவியங்களைத் தயாரிப்பதில் நிபுணராகத் திகழ்ந்தார்.

இங்கிலாந்து அரசி விக்டோரியா தனக்கான வாசனைத் திரவியம் தயாரிப்பதற்காக இரண்டாம் ஹென்றியை நியமித்தார். இவரது தயாரிப்பு விக்டோரியாவைக் கவர்ந்திழுத்தது. தனது தோழியும் பிரான்ஸின் அரசரான மூன்றாம் நெப்போலியனின் மனைவியுமான அரசி யூஜினிடம் ‘கிரீடி’ன் வாசனைத் திரவியத்தைப் பற்றி விக்டோரியா சொல்ல, உடனே அவர் இரண்டாம் ஹென்றிக்கு ஆர்டர் தந்தார்.

‘கிரீடி’ன் நறுமணத்தில் மயங்கிப்போன யூஜின், வாடிக்கையாளராக மட்டுமல்லாமல் புரவலராகவே மாறிவிட்டார். யூஜினின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘கிரீடி’ன் தலைமையகம் 1854ல் பாரிஸுக்கு இடம்பெயர்ந்தது. பிரான்ஸில் ‘கிரீட்’ வேரூன்ற அனைத்து உதவிகளையும் யூஜின் செய்துதந்தார்.
பிறகு ஐரோப்பா முழுவதிலும் இருந்த ராஜ குடும்பங்கள் வாசனைத் திரவியங்கள் வேண்டி ‘கிரீடி’ன் கதவைத் தட்ட ஆரம்பித்தன. பாரிஸுக்குப் போனாலும் கூட இங்கிலாந்து ராஜ குடும்பத்துடனான உறவை ‘கிரீட்’ தொடர்ந்தது. இப்போதும் தொடர்கிறது.

*ஒலிவியர் கிரீட்

உலகின் மிக நேர்த்தியான வாசனைத் திரவிய தயாரிப்பாளர் என்று புகழப்படுபவர் ஒலிவியர் கிரீட். ஆறாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவரது காலம் வாசனைத் திரவிய தயாரிப்புத் துறையில் பொற்காலம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜ குடும்பங்கள், பெரும் செல்வந்தர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே வாசனைத் திரவியங்களைத் தயாரித்து, விற்றுவந்தது ‘கிரீட்’. இதை உடைத்து பொது மக்களுக்காகவும் வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார் ஒலிவியர். அதுவும் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்படும் அதே தரத்தில்.

உலகம் முழுவதும் பயணம் செய்து சிறப்பு வாய்ந்த வாசனைத் திரவியங்களின் மாதிரிகளையும் மலர்களையும் சேகரித்து வருவது ஒலிவியரின் பணிகளில் முதன்மையானது. தனக்கு திருப்தியான நறுமணம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் மூலப்பொருட்களை மாற்றி வாசனைத் திரவியத்தை தயாரித்துக்கொண்டே இருப்பார். தரமான ஒன்றை நுகரும் வரை சமாதானமே ஆகமாட்டார். அதனால் சில நேரங்களில் ஐந்து ஆண்டுகள் வரை கூட புதிதாக எந்த வாசனைத் திரவியத்தையும் வெளியிடாமல் பரிசோதனையில் மட்டுமே இயங்கியிருக்கிறது ‘கிரீட்’.

இப்படி தரமான ஒன்றுக்காகக் காத்திருப்பதுதான் ‘கிரீட்’ நிறுவனம் இவ்வளவு ஆண்டுகளாக நிலைத்து நிற்பதற்கும் அதன் உயர்ந்த ரகத்துக்கும் காரணம். தவிர, வீட்டிலிருக்கும் படுக்கையறைக்கு அருகிலேயே சிறிய அளவில் ஓர் ஆய்வுக்கூடத்தை நிறுவியிருக்கிறார் ஒலிவியர். தூங்கும்போது கனவில் ஏதாவது யோசனை தோன்றினால் உடனே எழுந்து அதை ஆய்வு செய்துவிடுவார்.

இப்படித்தான் கிரீடின் அடையாளங்களான ‘அவெண்டஸ்’, ‘கிரீன் ஐரிஷ் டுவீட்’ போன்ற வாசனைத் திரவியங்களைத் தயாரித்தார் ஒலிவியர்.
2000க்குப் பிறகான ஒரு வசந்த காலத்தில் பிரான்ஸில் வெண்மையான மலர்கள் நிறைந்த, இயற்கை அழகு சூழ்ந்த ஓர் இடத்துக்குப் பயணம் போனார் ஒலிவியர். மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய அழகான இடம் என்று அதை அழைக்கிறார்.

அங்கே அவருக்கு அற்புதமான ஒரு மனநிலை உருவாகியது. முதன் முதலாக காதலில் வயப்பட்ட போதும் மனதுக்குப் பிடித்த பெண்ணுடன் மண
மேடையில் இருக்கும்போதும் உருவாகும் மனநிலைக்கு நிகரானது என்று அதை வர்ணிக்கிறார். இந்த ரொமான்டிக் மனநிலையைப் பிரதிபலிக்கும்  ஒரு வாசனைத் திரவியத்தை உருவாக்க எண்ணுகிறார். அப்படி உருவானதுதான் ‘லவ் இன் ஒயிட்’ என்ற வாசனைத் திரவியம்.

மேக்னோலியா, நார்சிசஸ் போன்ற வெண் மலர்களின் சாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ‘கிரீடி’ன் ஒவ்வொரு வாசனைத் திரவியத்துக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

*முக்கிய நிகழ்வுகள்

பெண்களுக்கான பிரத்யேகமான வாசனைத் திரவியமான ‘ஸ்பிரிங் ஃபிளவர்’ 1951ல் அறிமுகமானது. இதன் கவர்ச்சியான குடுவை ஃபேஷன் உலகில் முக்கிய பேசுபொருளாக மாறியது. வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனத்தினர் குடுவை வடிவமைப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இன்று ஹாலிவுட் நாயகிகளின் ஃபேவரிட் வாசனைத் திரவியமே இதுதான். 30 மில்லி குடுவையின் விலை
ரூ.17 ஆயிரம்.

ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த எர்வின் கிரீட் 1980ல் பிறந்தார். தந்தை ஒலிவியருடன் மூலப்பொருள் சேகரிக்கச் செல்பவர் இவர்தான். உலகளவில் அதிகம் விற்பனையாகும் ‘வர்ஜின் ஐலண்ட் வாட்டர்’, ‘ஃப்ளூயர்ஸ் டி கார்டீனியா’ போன்ற வாசனைத் திரவியங்கள் உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.நியூயார்க்கில் முதல் ஷோரூமை 2009ல் திறந்தது ‘கிரீட்’. அதே ஆண்டில் ‘Creed boutique.com’ என்ற இணைய
தளத்தை அறிமுகப்படுத்தி ஆன்லைன் விற்பனையிலும் கால் பதித்தது.

2010ல் ‘கிரீடி’ன் 250ம் ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.ஒரு காலத்தில் ராஜ குடும்பங்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்த ‘ராயல் மேஃபேர்’ என்ற வாசனைத் திரவியத்தின் தயாரிப்பை சுமார் 80 வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தது. மீண்டும் 2015ல் ‘ராயல் மேஃபேரை’ மறு அறிமுகம் செய்தது.உலகப் பெண்களின் விருப்பமான வாசனைத் திரவியங்களில் ஒன்றான ‘அவெண்டஸ் ஃபார் ஹெர்’ 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

*தயாரிப்புகள்

ஆண், பெண்களுக்கான பிரத்யேகமான வாசனைத் திரவியங்கள், நறுமண மெழுகுவர்த்திகள், நறுமண எண்ணெய், சோப் வகைகள், தோல் டிராவல் பேக், ஆஃப்டர்ஷேவ் பாம், பாடி லோஷன், பாத் அண்ட் ஷவர் ஜெல்.

*தனிச்சிறப்பு

உலகளவில் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகளவு இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்
படுத்துவது கிரீட்தான். இன்றும் ஜேம்ஸ் கிரீடின் வடிகட்டும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி கருவிகளின் துணையின்றி வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது.

இந்த செயல்முறைக்கு அதிக காலம் பிடிப்பதோடு செலவும் அதிகம். அதனால் பெரும்பாலான வாசனைத் திரவிய நிறுவனங்கள் இதைத் தவிர்த்துவிட்டன. இருந்தாலும் பழைய மரபை கிரீட் விடாதது அதன் முக்கிய சிறப்பு. ஒரு சில துளிகள் போதும். பல மணி நேரம் வாசனை நிற்கும்.

*இன்று

நியூயார்க், துபாய், பாரிஸ், லண்டன், மிலன், மியாமி என உலகின் முக்கிய நகரங்களில் ‘கிரீடி’ன் ஷோரூம்கள் கம்பீரமாகக் காலூன்றி நிற்கின்றன. தயாரிப்பு பட்டியலில் 200 வகையான வாசனைத் திரவியங்கள் மிளிர்கின்றன. 70 சதவீத வருமானம் ஆண்களுக்கான பிரிவில்
கிடைக்கிறது.

பெண்களுக்கான பிரிவை வளர்க்க புதுப்புது திட்டங்களை வகுத்து வருகின்றனர். வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்தாலும் நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுக்க சரியான பங்குதாரர்களைத் தேடி வந்தார் நிர்வாகி ஒலிவியர். 2020ல் அதிகப்படியான பங்கு களை ‘பிளாக் ராக்’ நிறுவனத்துக்கும் ஸ்பானிய பிசினஸ்மேன் ஜேவியர் ஃபெரானுக்கும் விற்று நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக்கி விட்டார்.

உலகின் சிறந்த நிர்வாகிகளில் ஒருவராக கருதப்படும் ஜேவியர்தான் இனி ‘கிரீடி’ன் சேர்மன். மாஸ்டர் வாசனைத் திரவிய தயாரிப்பாளராக மட்டுமே தனது பணியைத் தொடர்வார் ஒலிவியர். இதற்கு உதவியாக மகன் எர்வின் இருப்பார்.

த.சக்திவேல்