சின்னமனுர் செங்கரும்புகள்!தேனி மாவட்டத்தில் இனிப்பான ஊர் எது என்றால் அது சின்னமனூர்தான்.இம்மண்ணின் மடியிலிருந்துதான் நாக்கில் தித்தித்து மனதை  இனிக்க வைக்கும் சுவை மிகுந்த செங்கரும்புகள் பிறக்கின்றன. சின்னமனூரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு சாகுபடி நடந்துவருகிறது. மூவர்ணங்களைக் கொண்ட ‘ராம கரும்பு’ என்றொரு வகையைப் பயிரிடுவார்கள். சரியாக தைத் திருநாளுக்கு அறுவடைக்குத் தயாராகும் இவை பனிரெண்டு அடி உயரம் இருக்கும். தற்போது ராம கரும்பு பயிரிடப்படுவதில்லை.

அதற்கு பதிலாக செங்கரும்பினைப் பயிரிடுகிறார்கள். இவை, அன்னை வயிற்றில் கருவாகி உருவாகும் மழலை போல் பத்து மாதங்கள் இம்மண்ணில் ஊறி, மண்ணின் இனிப்பெல்லாம் உறிஞ்சிப் பருகி, தித்திக்கும் செங்கரும்பாய் விளைந்து நிற்கின்றன. இவை சுவையான சர்க்கரைப் பொங்கலுக்கு துணையாய் மேலும் சுவை சேர்க்கின்றன. சின்னமனூரின் நூற்றி ஐம்பது ஏக்கர் வயல்வெளிகளில் இந்த எட்டு அடி உயர செங்கரும்புகள் விளைகின்றன. தென் மாவட்டங்களின் தந்தை எனப்படும் கர்னல் பென்னிகுயிக்கால் அர்ப்பணிக்கப்பட்ட முல்லைப்பெரியாறு பாசனத்தின் தேன் நீர்தான் இந்தக் கரும்புக்கு ஆதாரம்.

சராசரியாக ஏக்கருக்கு 80 ஆயிரம் வரை விதைக்கச் செலவாகும் இக்கரும்புகள் அறுவடையின்போது, அடக்கச் செலவைவிட மும்மடங்கு அதிக வருவாயைத் தரும் பணப் பயிராகும். திருநெல்வேலி முதல் சென்னை வரையில் தமிழகம் முழுவதும் சின்னமனூர் கரும்பை தைத் திருநாள் தொடங்கும் முன்பே லாரிகளில் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

அருகிலுள்ள தேவதானப்பட்டி, மதுரை, மேலூர், ராமநாதபுரம் உட்பட ஈரோடு வரை கரும்புகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், மண்ணின் மணமும் பெரியாற்றின் சுவையும் நிரம்பிய சின்னமனூர் கரும்புகளின் மவுஸே தனிதான். இன்றும் தைப் பொங்கலுக்குப் படைக்க ‘சின்ன மனூர் செங்கரும்பு’ என்று கேட்டு வாங்கிச் செல்லும் மக்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் நிறைந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் பெருகிவரும் தேவையை நிறைவு செய்யும் வகையில், சின்னமனூர் விவசாயிகளும் கரும்பு சாகுபடியைப் பெருக்க முயற்சிக்கிறார்கள்.

சின்னமனூர் கரும்பு சாகுபடி பற்றி அவ்வூரின் விவசாயி கருப்பையா கூறும்போது, ‘‘தைப்பொங்கலுக்கு அர்த்தம் சொல்லும் வகையில் செங்கரும்பை காலங்காலமாகப் பயிர் செய்துவருகிறோம். சின்னமனூர் மண்ணின் தன்மையும், முல்லைப்பெரியாற்றின் சுவையும், மண்ணின் சுவையூறிய போர்வெல் தண்ணீரும் சேர்வதாலும், குளிர்ந்த காற்றும், மிதமான வெயில் சீதோஷ்ணமும் இருப்பதாலும் இம்மண்ணில் 10 மாதங்கள் வளரும் செங்கரும்புகள் அலாதியான சுவையோடு இருக்கின்றன. உள்ளூர் தவிர, மேலூரில் இருந்தும் இந்தக் கரும்புகளுக்கான விதை கருணை வாங்கி வரப் படுகிறது. ஏக்கருக்கு கரும்பு 250 கட்டு வீதம் விதைத்து, சுமார் ஒரு லட்சம் செலவைத் தாண்டி விளைவித்து தமிழர் திருநாளில் அறுவடை செய்து வழங்குகிறோம்...’’ என்றார்.

சின்னமனூர் செங்கரும்பு வியாபாரி பாண்டி கூறும்போது, ‘‘சின்னமனூர் செங்கரும்புக்கு தனி கிராக்கி இருக்கிறது. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தைப் பொங்கலுக்கு மக்களிடம் சேருமாறு மொத்தக் கொள்முதல் செய்து லோடு கணக்கில் லாரிகளில் அனுப்புகிறோம். கேரள மாநிலத்துக்கும் இந்த சின்னமனூர் கரும்புகள் ‘செல்லமான கரும்பாக’ அனுப்பி வைக்கப்படுகின்றன. பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே சின்னமனூருக்கு வியாபாரிகள் குவிந்து, போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். சின்னமனூர் சந்தையில் இந்த சீசனில் எங்கு பார்த்தாலும் மொத்தக் கரும்புகள் விற்பனைதான் களைகட்டும்...’’ என்றார்.

எம்.என்.குமரவேல்