ஜல்லிக்கட்டுசிந்து சமவெளி முதல் கணிப்பொறி காலம் வரை தொடரும் பண்பாடு!

பொங்கல் பண்டிகையோடு பிரிக்கமுடியாத விஷயங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. உழவர்கள் தங்கள் வாழ்வை வளமாக்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி பொங்கலிட்டு வழிபட்டு,

காணும் பொங்கலில் உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தைப் பார்த்து அளவளாவியபின், தினவெடுத்த தோளோடு ஜல்லிக்கட்டில் இறங்குவர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் ஆதிக் கலை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது தமிழ்க் குடி என்றால், அதனோடு அப்போதே உடன் தோன்றிய போர்க் கலை ஜல்லிக்கட்டு. இந்தக் கலை சொல்லும் வரலாற்றுச் செய்திகள் நமது புதிய கற்காலத்துப் பழையவை.  

விவசாயம் கண்டுபிடிக்கும் முன்பு உலகம் முழுதும் வேட்டைச் சமூகங்கள், மேய்ச்சல் சமூகங்கள் என இரண்டுபழங்குடி சமூகங்கள் இருந்தன. ஆரம்பத்தில் விலங்குகளை வேட்டையாடி உண்டவர்களில் ஒருசாரர் சிறிய குட்டிகளை வளர்க்கத் தொடங்க, அதுவே பின்னாட்களில் மேய்ச்சல் சமூகம் எனும் மாபெரும் சமூக வளர்ச்சியாக மாறியிருக்க வேண்டும்.

வேட்டைச் சமூகங்கள் நிலத்தில் விலங்குகளை வேட்டையாடி தங்கள் வாழ்வைத் தற்காத்துக்கொண்டன என்றால், மறுபுறம் மேய்ச்சல் சமூகங்கள், ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை கானகத்திலிருந்து சேகரித்தும், தாமே வளர்த்து இனப்பெருக்கம் செய்தும் தங்கள் வாழ்வை வளமாக்கிக்கொண்டன.

இந்தியா முழுதுமே மேய்ச்சல் நிலமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. அந்நாட்களில் மேய்ச்சல் சமூகத்தவர்கள் இந்நிலம் முழுதும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். இன்றும்கூட மேய்ச்சல் சமூகத்தினரின் ஒரு சிறு பிரிவினர் நாடோடி வாழ்வு வாழ்ந்து
கொண்டிருப்பதைக் காணலாம்.

மேய்ச்சல் சமூகங்களின் தொடக்க காலத்தில் விலங்கு களைச் சேகரிக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கிருந்தது. குழுவாகக் கிளம்பிப் போய் மாடுகளை, எருமைகளை லாவகமாகப் பிடித்துவந்து வளர்ப்பார்கள். அப்படி, மனிதர்கள் குழுவாக விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் பிடிப்பது பற்றிய ஆதிகால பாறை ஓவியங்கள் உலகம் முழுதுமே நிறைய கிடைத்துள்ளன.

கிட்டத்தட்ட இந்தக் காலக்கட்டத்தில்தான் ஜல்லிக்கட்டு எனும் மாடு பிடித்தல் விளையாட்டு உருவாகியிருக்க வேண்டும். காட்டில் திரியும் மாடுகளையும், எருமைகளையும் பிடிக்க பயிற்சியாகக் குடியிருப்புகளில் தாங்கள் வளர்க்கும் மாடுகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதுவே, பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டாக பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு- என்ன பொருள்?
ஜல்லிக்கட்டு என்ற சொல் சமீபத்திய வழக்கம்தான். சங்க இலக்கியத்தில் இதனை ஏறு தழுவுதல் என்கிறார்கள். மஞ்சு விரட்டு என்ற சொல்லும் உண்டு. ஆனால், இவற்றுக்கிடையே நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. அதனைப் பின்னால் பார்ப்போம்.

சல்லி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பண
முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு

உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்துசமவெளி நாகரிகத்தின் அகழாய்வுகளில் அங்கு ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அங்கு கிடைத்த முத்திரை ஒன்றில் ஒரு வீரன் துள்ளிவரும் எருதின் எதிர் நின்று அதன் கொம்பைப் பிடித்துத் தடுத்து நிறுத்துவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.       

சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள தொல்லியல் பொருட்களில் உள்ள குறியீடுகளை நவீன முறையில் வாசித்தறிந்து (Deciphering) சொன்ன ஐராவதம் மகாதேவன் போன்ற ஆய்வாளர்கள் அந்தப் பழைய நாகரிகத்திலேயே ஜல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்றும், அது தமிழர் நாகரிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பழந்தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பற்றி பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் விரிவாகப் பதிவாகியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எட்டுத்தொகை நூலான கலித்தொகையில் இதனைப் பற்றி பாடல்கள் உள்ளன. மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் விரிவான சித்திரங்கள் உள்ளன.தொல்காப்பியம் தமிழர் வாழ்வை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐந்து நில வாழ்வாக வகுத்துச் சொல்கிறது. இதில், முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியில் நிகழ்வது ஜல்லிக்கட்டு என்று கலித்தொகை காட்டுகிறது. காட்டில் வாழும் மக்களுக்கு மேய்ச்சல்தான் முக்கிய தொழில். இந்த மேய்ச்சல் சமூக மக்களை ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

கலித்தொகையில் முல்லை நில வாழ்வைச் சொல்லும் முல்லைக் கலி என்ற பகுதியின் முதல் மூன்று பாடல்கள் ஜல்லிக்கட்டு பற்றி மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இதற்கு அடுத்த பாடல்களில் குரவைக் கூத்து பற்றி குறிப்பிடப்படுகிறது. ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்துக்கும் தொடர்புள்ளது. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலோ, ஏறு தழுவும் நாளின் மாலையிலோ ஊருக்குப் பொதுவான இடத்தில் நிகழும். முதல் நாள் என்றால் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர்.

சங்க கால மேய்ச்சல் சமூகத்தில் ஏறு தழுவுதல் என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமன்று. அது திருமணத்தோடு தொடர்புடையது. பெண் குழந்தை பிறந்ததுமே தாங்கள் வளர்த்துவரும் கால்நடைச் செல்வத்திலிருந்து நல்ல வலுவான காளைக் கன்றைத்  தேர்ந்தெடுத்து அதை பொலி
காளையாய் வளர்ப்பர் பெற்றோர். பெண் திகைந்து மண வாழ்வுக்குத் தயாரானதும், வரன் கேட்டு வரும் மாப்பிள்ளையைத் தாங்கள் வளர்த்துவரும் காளையை அடக்கச் சொல்லி தேர்வு வைப்பர். அந்தப் போட்டியில் வென்றால்தான் அவனால் மணவாளன் ஆக முடியும்.

‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’
என்ற கலித்தொகையின் வரிகளுக்கு ’கூடிக் கொல்லுகின்ற ஏறு எனும் கொம்புடைய காளைக்கு அஞ்சுபவனை மறுபிறப்பிலும் விரும்பமாட்டாள் பெண்’ என்பது பொருள்.

இந்த சங்க கால ஆதாரம்கொண்டு நோக்கும்போது ஜல்லிக்கட்டு என்பது முல்லை எனும் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியிலிருந்துதான் மருதம் எனும் வயலும் வயல் சார்ந்த பகுதிக்கு நகர்ந்துவந்தது என்பது உறுதியாகிறது. விவசாயம் நன்கு தழைத்தோங்கி, ஆதிப் பொதுவுடமைச் சமூகம் எனும் பழங்குடி வாழ்வு நீங்கிய, நிலப்பிரபுத்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தில்தான் இந்தச் சடங்கு முல்லையிலிருந்து மருதத்துக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும். முல்லை நிலத்துக் குடிகள் மருதம் வந்து, அங்குள்ள குடிகளோடு கலந்தபோது இந்தக் கலையும் இங்கு நிலைகொண்டிருக்க வேண்டும்.
ஏறு தழுவுதலும் ஜல்லிக்கட்டும்ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு இரண்டும் ஒன்றே என்பார் உளர்.

ஆனால், இரண்டுக்கும் சின்னச் சின்ன வித்தியாசங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏறு தழுவுதல் பழங்கால சடங்கு என்றால் அதன் நவீன வடிவமே ஜல்லிக்கட்டு. பழங்கால ஏறு தழுவுதல் ஆயர் குடிகளுக்கிடையே முல்லைத் திணையில் நடந்தது. ஜல்லிக்கட்டில் பல்வேறு சமூக மக்களும் பங்கேற்கிறார்கள். குறிப்பாக, போர்ச் சமூகங்கள் ஊக்கமுடன் பங்கேற்கின்றன.

இரண்டிலுமே மாட்டின் கொம்பில் கட்டப்பட்டுள்ள பண முடிப்பும் தைத் திருநாள் முடிந்த பின் விழா நிகழ்வதும் ஒற்றுமைகள். ஆனால், ஏறு தழுவுதல் எனும் பழைய விளையாட்டு தெய்வ நம்பிக்கையோடு தொடர்புடையதாய் இருக்கவில்லை. மேலும், அது மணமகனைத் தேர்ந்தெடுக்கும் வீர விளையாட்டாகவும் இருந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் இந்த ஜல்லிக்கட்டு வேண்டுதல் நடை
பெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் இருக்கிறது. இந்தப் பண்பு பழங்கால ஏறு தழுவலுக்கு இல்லை. ஆனால், இவை எல்லாம் ஒரு வீர விளையாட்டு, ஒரு திணையைவிட்டு இன்னொரு திணைக்கு நகர்ந்துவரும்போது நிகழும் இயல்பான மாற்றங்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு ஊர்கள்

ஜல்லிக்கட்டு இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்கா
நல்லூர், பேரையூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. சிவகங்கையில் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலையிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

மேலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேடு, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி ஆகிய இடங்களிலும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டின் வகைகள்

மஞ்சுவிரட்டு, வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என்று இப்போது ஜல்லிக்கட்டில் பல வழக்காறுகள் உருவாகியிருக்கின்றன. காளையை அடக்குவதை மையமாகக் கொண்ட இந்த வீர விளையாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் சின்னச் சின்ன வேறுபாடுகளே உள்ளன.

வேலி ஜல்லிக்கட்டு

வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.மற்ற நாடுகளில் காளைச் சண்டைஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளிலும் காளைச் சண்டை முக்கியமான தேசிய பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்துக்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைச் சண்டைகளின் நோக்கம்.

இம்மேனாட்டுக் காளைச் சண்டையும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய ஜல்லிக்கட்டில் காளைகள் கொல்லப்படுவதில்லை. மாறாக, காளைக்கும் மனிதருக்குமான உறவு பேணப்படுகிறது. சொந்தப் பிள்ளை போல் காளையை வளர்க்கும் வீட்டாரின் பெருமிதமாக காளை இருக்கிறது. அதை அடக்கும் வீரனுக்கோ அது கடவுள். அவனால் அடக்கப்பட்டாலும் அது வணக்கத்துக்குரிய உயிர். தன் உடல் வலுவை சோதிக்கும் இயற்கையின் படைப்பு. இந்த உயர்வாக்கம் பிற நாட்டு காளைச் சண்டை
களில் இல்லை.

ஜல்லிக்கட்டும் பிராணிகள் நலமும்

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதாலேயே சிலர் இதனை எப்படியாவது முடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதம் வாயில்லாப் பிராணி துன்புறுத்தப்படுகிறது என்பதுதான். உண்மையில் ஒரு வீட்டில் ஜல்லிக்கட்டு காளை எப்படி வளர்கிறது என்று பார்த்தால் யாருமே இப்படிச் சொல்ல மாட்டார்கள். சொந்த மகன் அல்லது மகளுக்குக்கூட கிடைக்காத செல்லமும் போஷிப்பும் இந்தக் காளைகளுக்குத் தரப்படுகின்றன. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பதென்பது மிகப் பெரிய கெளரவம். காளைக்காக தன் சொத்தையே அழித்தவர்கள்கூட இருக்கிறார்கள். இதில் என்ன துன்புறுத்தலைக் கண்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்பது வெறுமனே வீர விளையாட்டு மட்டுமல்ல. இன்று அலங்காநல்லூர் போன்ற ஊர்களுக்கு அந்நியச் செலாவணியையும் சுற்றுலா வருமானத்தையும் உருவாக்கும் பொருளாதாரம். இந்தத் திருவிழா நடக்கும் ஊர்களில் அந்நாட்களில் சிறப்பான பொருளாதாரப் பகிர்மானம் நிகழ்கிறது.

மேலும், காளைகளில் உள்ள பல்வேறு பழந்தன்மை வாய்ந்த வகையினங்கள், இவ்வாறான கொண்டாட்டங்களால் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு உருவாகிறது. தமிழகத்தில் ஆலம்பாடி, புளிகுளம், உம்பளஞ்சேரி, பருகூர், மலைமாடு, காங்கேயம் எனப்படும் காளை வகையினங்கள் உள்ளன. இதில் ஆலம்பாடி வகை இப்போது இல்லை. கிட்டத் தட்ட அழிந்தேவிட்டது. ஜல்லிக்கட்டுத் தடை மூலம் படிப்படியாக வட்டார காளையினங்கள் அழியும் நிலை உருவாகும். இதனால், சீமை சார்ந்த வகையினங்களை இறக்குமதி செய்ய நேரிடும்.

தற்போதே, மாடுகள் விவசாயிகளுக்குத் தேவையில்லாத சுமையாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் தீவனம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் தீவனத்துக்குக்கூட கட்டுப்படியாவதில்லை. இந்தக் காரணங்களால் நாட்டார் மாடுகள் பலவும் அடிமாடுகளாய் கேரளாவுக்குத் தள்ளிவிடப்படும் நிலையில் இருக்கின்றன.

இப்படியான சூழலில் ஜல்லிக்கட்டு போன்ற ஆயிரம் காலப் பயிரான பண்பாட்டுப் பொக்கிஷங்களையும் அழித்துவிட்டால் நம் நாட்டுமாடுகள் என்ற இனமே முற்றிலும் இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்த் தொட்டுத் தொடரும் இந்தப் பண்பாடு மேலும் ஆயிரம் ஆண்டுகள் நீள வேண்டும் என்பதே ஒவ்வொரு உண்மைத் தமிழரின் விருப்பமாகவும் இருக்க முடியும்.

இளங்கோ கிருஷ்ணன்