கடி ஜோக்ஸுக்கு பதில் சொன்னா உங்களுக்கு பேட்டி தர்றோம்...தெறிக்க விடும் அபியும் நானும் சுட்டீஸ் குட்டீஸ்

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்கள் வரிசையில் ‘அபியும் நானும்’ மெகா தொடரும் இணைந்திருக்கிறது. கிடைக்கும் வரவேற்பும் மிரட்டும் டிஆர்பியும் மக்கள் எந்தளவுக்கு இந்த சீரியலை விருப்பத்துடன் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.யெஸ். டெலிகாஸ்ட் ஆகத் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிஷா என பல மொழிகளில் இந்த சீரியல் டப் ஆகத் தொடங்கியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

விஷன் டைம் தயாரிக்கும் இந்த தொடரில் டாப் ரோல்களில் அசத்துபவர்கள் அபி, முகில், சுமோ கேரக்டர்களில் பட்டையைக் கிளப்பும் மூன்று சுட்டீஸ்தான். சென்னை கோவளம் கடற்கரை பங்களா ஒன்றில் பரபரக்குது ‘அபியும் நானும்’ ஷூட்டிங். அபியாக நடிப்பிலும் டப்பிங்கிலும் (ஆமாம்... ஒரிஜினல் வாய்ஸ்!) வெளுத்து வாங்கும் ரியா மனோஜ், முகிலான நித்திஷ், சுமோவாக கலக்கும் ஆதீஷ் ஆகிய மூன்று வாண்டுகளும் கொஞ்சமும் படபடப்பில்லாமல் பட்டர்ஃப்ளையாகப் பறந்து கொண்டிருந்தார்கள்.

அப்பா சரவணன் (ராஜ்கமல்) கேட்கும் கேள்விகளுக்கு மகள் அபி, அப்பாவியாக ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும். சரவணனின் டயலாக்குகள் ஓகே ஆக... பறந்து வந்த அபி (ரியா மனோஜ்), டைரக்டர் ஏ.ஜவஹரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கேமரா முன்பு நின்றார். ரியாக்‌ஷன்ஸ் கொடுத்தார். சிங்கிள் டேக். டபுள் ஓகே!இயக்குநர், ‘கட்’ என குரல் கொடுத்ததும் அவரை நோக்கி ஓடி வந்தார் அபி. அதற்குள் முகிலும் (நித்திஷ்), சுமோவும் (ஆதீஷ்) பாய்ந்து வந்து இயக்குநரின் மடியில் அமர்ந்து அபிக்கு பெப்பே காட்டுகிறார்கள்!உதட்டைச் சுழித்த அபி, ‘‘சாக்லேட் எங்க அங்கிள்’’ என்றார்.

‘‘லதாம்மா இன்னிக்கும் உங்க மூணு பேருக்கும் சாக்லேட், பிஸ்கட்ஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க...’’ என இன்று ஒரு தகவலை உதிர்த்தார் டைரக்டர்.
சுவிட்ச் போட்டது போல் மூன்று சுட்டீஸ்களின் முகங்களும் பிரகாசமாகின. ‘‘ஹை... ஜாலி...’’ என குதித்தவர்களை இழுத்துப் பிடித்தார் ஜவஹர். ‘‘முதல்ல இவங்களுக்கு பேட்டி கொடுங்க... அப்புறம் சாக்லேட் சாப்பிடுங்க...’’

‘‘இன்டர்வியூ ஓகே. பட், ஒன் கண்டிஷன் அங்கிள்...’’ என்ற அபி, நம் போட்டோகிரா
ஃபரைப் பார்த்தார். ‘‘என்னை நீங்க போட்டோ எடுக்கணும்னா நான் ஒரு கடி ஜோக் சொல்லுவேன். அதுக்கு நீங்க ஆன்சர் பண்ணணும். ஓகேவா..?’’
கேட்ட அபி, நம் புகைப்படக் கலைஞர் பதில் சொல்ல இடம் அளிக்காமல் தொடர்ந்தார். ‘‘ஒரு wild life போட்டோகிராஃபர் வச்சிருந்த கேமரா திடீர்னு பறந்துடுச்சாம்... ஏன்?’’

‘நீயே பதில் சொல்லிடுமா...’ என்பதுபோல் நம் போட்டோகிராஃபர் ரியாக்‌ஷன் தர... கடகடவென சிரித்தார் சுமோ. ‘‘இந்த மொக்க கேள்விக்கு நீங்க பதில் சொன்னா உங்க கெத்து என்ன ஆகறது..? நானே பதில் சொல்றேன் அங்கிள்... அதாவது ‘CLICK’க்கு றெக்க முளைச்சிடுச்சு. அதான் பறந்துடுச்சு... சரியா அபி..?’’பட்டாசாக யூனிட் சிரிப்பில் வெடித்தது.

சுதாரிப்பதற்குள் கேள்விகளை முன்வைத்தோம். ‘‘பிரமாதமா டப்பிங் பேசுறியே அபி... எப்படி இது சாத்தியமாச்சு..?’’
‘‘டைரக்டர் அங்கிளுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். அவ்வளவு ஈஸியா சொல்லிக் கொடுக்கறார். ஆனா, டப்பிங்கை விட ஷூட்டிங் வர்றதுக்குதான் இஷ்டமா இருக்கு. இங்க ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. டப்பிங்னா ஒரே ரூம்ல, ஒரே இடத்துல இருக்க வேண்டியிருக்கு...’’ செல்லமாக அலுத்துக் கொண்ட அபி, அடுத்த கேள்வி பாய்வதற்குள் தன் பயோடேட்டாவை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘அப்பா மனோஜ்குமார். கார்மென்ட் பிசினஸ் பண்றார். அம்மா, தனலட்சுமி. ஒரு தங்கை இருக்கா. ஆரம்பத்துல டிக்டாக் பண்ணிட்டு இருப்பேன். அதுல எனக்கு பெரிய பிரேக் கிடைச்சது. ஒரு சேனல்ல ஜூனியர் சூப்பர் ஸ்டாரா செலக்ட் ஆகி ஃபைனல்ஸ் வரை ஜெயிச்சேன். படங்களும் பண்ணியிருக்கேன். ஆமா... ‘பென்குயின்’ல கீர்த்தி சுரேஷின் சைல்ட்ஹுட் கேரக்டர்ல நடிச்சது நான்தான். அடுத்து ‘இக்’, ‘வசந்த முல்லை’னு படங்கள் பண்ணியிருக்கேன். அப்புறம் ஒரு சீரியல்ல ஏற்கெனவே நடிச்ச அனுபவம் இருக்கு. சன் டிவி ஆடிஷன்ல கலந்துகிட்டு பெர்ஃபார்ம் பண்ணினேன்.

அதைப் பார்த்துதான் இந்த சீரியல்ல நடிக்க வைச்சாங்க...’’ என்ற அபி, திரும்பி முகிலைப் பார்த்தார். ‘‘இப்ப நீ சொல்லுடா...’’
குஷியானார் முகில் (நித்திஷ்). ‘‘நான் ஒண்ணாவது படிக்கறேன். அப்பா பூபதி, எம்என்சில ஒர்க் பண்றார். அம்மா விஜயலட்சுமி. ஒரு அக்கா இருக்கா. பேரு, கனிஷ்கா. மூணாவது படிக்கறா. தம்பி பவன். இந்த சீரியல்ல பேய் ஆக நடிச்சது என் அம்மாவும் அக்காவும்தான்.எங்க அம்மா கிளாஸிகல் டான்சர். ‘மயூரி அகடமி’னு ஒரு பரத நாட்டிய ஸ்கூல் நடத்தறாங்க. நானும், பவனும் கிளாசிகல் டான்ஸ்ல கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கோம்.

சீரியல்ல எப்படி இருக்கேனோ அப்படித்தான் வீட்லயும். அதே சேட்டைதான். படிப்பிலும் கெத்துதான். நான் நல்லா நடிப்பேனானு டைரக்டர் அங்கிள் கூட கவலைப்படலை... ஆனா, எங்க வீட்ல சந்தேகப்பட்டாங்க! அந்த டவுட்டைப் போக்கி இப்ப நீங்க என்னை பேட்டி கேட்கற அளவுக்கு கொண்டு வந்தது டைரக்டர் அங்கிள்தான்...’’ என ஜவஹருக்கு டன் கணக்கில் ஐஸ் வைத்தார் முகில். யூனிட்டே கைதட்டியது.

‘‘எங்க கேங்ல சீனியர் ஃப்ரெண்ட் சுமோவா நடிக்கற ஆதீஷ்தான். நாலாவது படிக்கறார்...’’ என அபியும் முகிலும் பந்தை சுமோ பக்கம் வீசினார்கள்.
கேட்ச் பிடித்த சுமோ, கெத்தாக பேசத் தொடங்கினார். ‘‘அப்பா வேல்முருகன், அம்மா வசந்தி. எனக்கு ஒரு அண்ணன். பேரு ஹரீஷ். டிவில காமெடிஸ் பார்க்க பிடிக்கும். குறிப்பா கவுண்டமணி அங்கிள் காமெடி. டிஆர் சார், எம்ஜிஆர் சார் மாதிரி டயலாக்ஸ் பேசிக் காட்டுவேன். படிப்பிலும் கில்லி.
படங்களும் பண்ணியிருக்கேன். ‘இரும்புத்திரை’ல சின்ன வயசு விஷால் நான்தான். ‘கோமாளி'ல சின்ன வயசு யோகிபாபுவா வந்திருக்கேன். ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘கோப்ரா’, ‘ஜாங்கோ’, ‘மணியார் குடும்பம்’ல எல்லாம் நடிச்சிருக்கேன்.
 
‘அபியும் நானும்’ டீம் ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாரும் ஜாலியா பழகறாங்க. லதா மேம் லெஜண்ட். அவங்க நடிச்ச ‘உரிமைக்குரல்’ படத்தை டிவில நிறைய தடவை பார்த்திருக்கேன். ஆனா என்ன... இந்த சீரியல்ல நான் பாட்டியம்மாவுக்கு பிடிச்ச பேரனா இல்ல! அதான் ஃபீலிங்கா இருக்கு...’’
சுமோ இப்படி சொன்னதுமே அவரை அள்ளி அணைத்து முத்தமிட்டார் லதா.

‘‘எங்களுக்கு அபிகிட்ட பிடிச்சது அவ சென்டிமென்ட் சீன்ஸ்ல வெளுத்து வாங்கறதுதான். அவளோட எமோஷனல் டயலாக்ஸை யார் கேட்டாலும் அழுதுடுவாங்க...’’ கோரசாக பூங்கொத்தை அபியை நோக்கி நீட்டுகிறார்கள் சுமோவும் முகிலும். இதற்குள், ‘‘அடுத்த ஷாட்டுக்கு ரெடியா..?’’ என்று கேட்டபடியே வந்தார் ஜவஹர்.‘‘அதுக்கு முன்னாடி நாங்க உங்களை இன்டர்வியூ பண்றோம் அங்கிள்...’’ என்று முகில் சொல்ல, ‘‘நீங்க படம் டைரக்ட் செய்திருக்கீங்களாமே..?’’ என டிஆர் குரலில் கேள்வியை முன்வைத்தார் சுமோ.

மூவரின் தலையையும் கோதியபடி புன்னகைத்தார் ஜவஹர். ‘‘இப்ப இந்த மூணு குழந்தைகளுமே எங்க யூனிட்டோட செல்லங்களாகிட்டாங்க. லதா மேடம் சீனியர் ஆர்ட்டிஸ்ட். எம்ஜிஆரோட ஜோடி. அவங்களுக்கும் இவங்க மூணு பேருமே செல்லம். டெய்லி ஷூட் வர்றப்ப இவங்களுக்கு ஸ்நாக்ஸ் கொண்டு வர்றாங்க. ஆறு மாசம் கழிச்சு கிடைக்க வேண்டிய பெயரையும் புகழையும் இந்த சீரியல் சில நாட்கள்லயே வாங்கிடுச்சு. அதுக்கு காரணம் சன் டிவி.

அப்புறம் எங்க புரொடியூசர்.இந்த மூணு வாண்டுகளுக்கும் சீரியல்ல சொந்தக் குரல்தான். அவ்வளவு பிரமாதமா டப்பிங் பேசறாங்க.
இதுக்கு முன்னாடி நான் ‘செல்லமே’, ‘அழகி’, ‘பொன்னூஞ்சல்’, ‘தமிழ்ச் செல்வி’ சீரியல்களை இயக்கியிருக்கேன். சில காரணங்களால நான் அதுல இருந்து விலகினப்ப என் ஃப்ரெண்ட் விக்கிரமாதித்தன் அதை இயக்கினார்.

இடைல சத்யராஜ் சார் நடிச்ச ‘மாறன்’, எஸ்.எஸ்.சந்திரன் மகன் ரோஹித் நடிச்ச ‘ஒருமுறை சொல்லிவிடு’ படங்களை டைரக்ட் பண்ணினேன். ‘பூந்தோட்டக் காவல்காரன்’ செந்தில்நாதன் சார், சுந்தர்.சி. சார்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். டயலாக்ஸும் எழுதியிருக்கேன்.
என் கரியர்ல நிறைய ஆர்ட்டிஸ்டுகளை பார்த்திருக்கேன். ஆனா, இந்த மூணு சுட்டீஸும் என்னை வியக்க வைக்கறாங்க. எங்களை மாதிரியே மக்களும் இவங்க நடிப்புல தங்களையே மறக்கறாங்கனு நினைக்கறப்ப சந்தோஷமா இருக்கு.

சன் டிவி, ‘விஷன்டைம்’ ராமமூர்த்தி சார், ராஜேஷ் சார், புராஜெக்ட் ஹெட் ரவி சார்... இவங்களாலதான் எனக்கு இந்த ‘அபியும் நானும்’ கிடைச்சது. அவங்க எங்க மேல வைச்ச நம்பிக்கையைக் காப்பாத்த நாங்க எல்லாரும் முழுசா உழைக்கறோம். ஆர்ட் டைரக்டர் ராஜாவால இந்த வீடு இவ்வளவு கிராண்டா தெரியுது...’’ என்ற ஜவஹர், சினிமா இயக்குவது ஈசி என்கிறார்.

‘‘ஒரு இன்டர்வெல், ஒரு கிளைமேக்ஸ்தான் படத்துக்கு. அதுக்கு மெனக்கெட்டா போதும். ஆனா, சீரியல் அப்படியில்ல. தினம் தினம் கிளைமேக்ஸ் விடணும். அப்படி உழைக்கறதாலதான், குறுகிய காலத்துல நாங்க ரீச் ஆகியிருக்கோம்... இதுக்காக எல்லா ஆர்ட்டிஸ்டுகளுக்கும் டெக்னீஷியன்களுக்கும் நன்றி சொல்லிக்கறேன்... கூட்டு உழைப்புதான் சக்சஸ் தரும் என்பதற்கு எங்க சீரியல் ஓர் உதாரணம்...’’ நெகிழ்கிறார் ஜவஹர்.
அவரை  அன்பாக அணைத்தபடி புன்னகைக்கிறார்கள் அபியும் முகிலும் சுமோவும்!

செய்திகள்: மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்