குழந்தைகளின் பாதுகாவலன் குடிகாரன்!



ஆக்‌ஷனும் சென்டிமென்ட்டும் கலந்த ஆங்கிலப் படம் ‘மேன் ஆன் ஃபயர்’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.குழந்தைக் கடத்தல் கும்பலைக் கூண்டோடு அழிக்கப் புறப்பட்ட தனி ஒருவனின் அதிரடிக் கதைதான் இப்படம். ஒரு காலத்தில் கப்பற்படையிலும் சிஐஏவிலும் அதிகாரியாக இருந்தவர் ஜான் கிரேஸி. சில காலம் கூலிப்படைக்கும் வேலை செய்திருக்கிறார். துப்பாக்கி சுடுவதில் வித்தகர். பத்து பேர் எதிர்த்து நின்றாலும் ஒற்றை ஆளாக சமாளிக்கக் கூடிய திறமைசாலி. ஆனால், கடுமையான குடிப்பழக்கத்தால் இப்போது மனதளவிலும் உடலளவிலும் பலவீனமாக இருக்கிறார்.

வாழ்க்கையே வெறுத்துப்போன அவர் நண்பரைச் சந்திக்க மெக்சி கோவுக்கு வருகிறார். மெக்சிகோவில் குழந்தைக் கடத்தலும் சமூக விரோதச் செயல்களும் கொடி கட்டிப் பறந்த காலம் அது. ஏதாவது பணக்காரர் வீட்டைச் சேர்ந்த குழந்தைக்குப் பாதுகாவலனாக வேலைக்குச் சேர்ந்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்; பிரச்னைகளிலிருந்து மீண்டு வரலாம் என்று கிரேஸிக்கு அறிவுரை சொல்கிறார் நண்பர்.

ஆரம்பத்தில் மறுக்கும் கிரேஸி பிறகு நண்பரின் ஆலோசனைக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். மெக்சிகோவின் பெரும் பணக்காரர்
களில் ஒருவரான சாமுவேலின் ஒன்பது வயது மகள் லூபிதாவுக்குப் பாதுகாவலனாக வேலைக்குச் சேர்கிறார் கிரேஸி. வீட்டைவிட்டு லூபிதா எங்கு சென்றாலும் உடன் செல்வது, அவளுக்கு அருகிலேயே இருந்து பாதுகாப்பதுதான் கிரேஸியின் வேலை.

சுட்டிக்குழந்தையான லூபிதா கிரேஸியிடம் நட்பை எதிர்பார்க்கிறாள். ஆனால், கிரேஸியோ வேலையை மட்டுமே பார்க்கிறார். ஒரு வார்த்தை கூட அவளிடம் நட்புரீதியாக அவர் பேசுவதில்லை. லூபிதாவின் கள்ளங்கபடமற்ற அன்பு கிரேஸியிடம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பழைய வாழ்க்கையிலிருந்து மீள்கிறார். லூபிதாவிடம் நட்பாகி அவளுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து சாம்பியன் ஆக்குகிறார்.

இந்நிலையில் ஒரு கும்பல் கிரேஸியைக் கடுமையாகத் தாக்கிவிட்டு லூபிதாவைக் கடத்திச் சென்றுவிடுகிறது. குழந்தை திரும்ப வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை உடனடியாக சொன்ன இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று சாமுவேலிடம் வேண்டுகோள் வைக்கின்றனர் கடத்தல்காரர்கள்.

பணம் தாமதமானதும் லூபிதா கொல்லப்பட்டதாக செய்தி வருகிறது. உடைந்துபோகிறாள் அவளின் அம்மா. கடத்தல்காரர்களை அழிப்பதற்காக பழைய பன்னீர்செல்வமாக விஸ்வரூபம் எடுக்கிறான் கிரேஸி. உண்மையில் லூபிதாவுக்கு என்ன ஆனது? அவள் கடத்தப்பட்டதற்குப் பின்னணியாக இருப்பது யார்... என்பதே பரபரப்பான திரைக்கதை.

ஓர் அட்டகாசமாக திரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கிறது திரைக்கதை. ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது. ஜான் கிரேஸியாக அதகளம் செய்திருக்கிறார் டென்செல் வாஷிங்டன். ஏ.ஜே.குயின்னெல் எழுதிய ‘மேன் ஆன் ஃபயர்’ நாவலுக்கு, ஆஸ்கர் விருது வென்ற ப்ரையன் ஹெல்ஜிலாண்ட் திரைக்கதை அமைக்க, படத்தை இயக்கியிருக்கிறார் டோனி ஸ்காட்.