தோல்வியில் இருந்து மகனை மீட்கும் தோல்வியடைந்த தந்தை!



இன்றைய சமூகத்துக்குத் தேவையான முக்கிய மெசேஜுடன் களமிறங்கிய இந்திப்படம், ‘சிச்சோரா’. ஹாட் ஸ்டாரில் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது.பசுமையான கல்லூரி நாட்களும், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவும்தான் படத்தின் கதை.
ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மகன் ராகவ்வுடன் வாழ்ந்து வருகிறார் அனிருத். தவறான புரிதல்களால் அவரும் மனைவி மாயாவும் பிரிந்துவிட்டனர். அனிருத்துக்கும் மாயாவுக்கும் இடையில் பாலமாக இருப்பது ராகவ் மட்டும்தான்.

ஐஐடியில் சேர்வதற்காக தினமும் 18 மணி நேரம் படித்து, நுழைவுத்தேர்வு எழுதியிருக்கிறான் ராகவ். இருந்தாலும் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்று ஒருவித பயத்திலேயே இருக்கிறான். ரிசல்ட் வரும் வரை அவனால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. ராகவ் பயந்தபடியே தேர்வில் தோற்றுவிடுகிறான். இனிமேல் எல்லோரும் தன்னை ‘தோற்றுப் போனவன்’ என்று கேலி செய்வார்கள் என்றும், அப்பா, அம்மாவின் முன்பு எப்படி தன்னால் தலைகாட்ட முடியும் என்றும் கவலைப்படுகிறான். இனி வாழ்வதே அவமானம் என்று மாடியில் இருந்து கீழே குதித்து விடுகிறான்.

தலையில் பலத்த அடிபட்டு மூளையில் வீக்கம் ஏற்படுகிறது. உடல் உறுப்புகள் செயலிழந்து போகின்றன. நினைவும் திரும்புவில்லை. ராகவ் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிடுகின்றனர். நினைவிழந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் மகனின் மனதில் தோல்வி குறித்த எண்ணத்தை மாற்ற நினைக்கிறார் அனிருத். மயக்க நிலையில் இருக்கும் மகனிடம் தன்னுடைய கல்லூரிக் கால கதையைச் சொல்கிறார் அனிருத். அது தோற்றவர்களின் கதை.

அந்தக் கதையில் வரும் ஐந்து கதாபாத்திரங்களும் அனிருத்தின் நெருங்கிய நண்பர்கள். ஒரே விடுதியில் தங்கியிருந்தவர்கள். அத்துடன் மற்றவர்களால் தோற்றுப்போனவர்கள் என்று ஏளனம் செய்யப்படுபவர்கள். இப்போது அவர்கள் வெவ்வெறு நாடுகளில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். ராகவ்வின் நிலையைக் கேள்விப்பட்டு அந்த ஐந்து பேரும் தங்களின் வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அப்பாவின் கதை மகனை எப்படி மீட்டெடுக்கிறது என்பதுதான் நெகிழ்ச்சியான திரைக்கதை.

ஒவ்வொரு வருடமும் தேர்வு முடிவுகள் வெளிவரும்போது மாணவ - மாணவர்களின் தற்கொலைச் செய்தியும் உடன் சேர்ந்து வருவது வழக்கமாகிவிட்டது. இப்படியான ஒரு சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படமாகத் திகழ்கிறது ‘சிச்சோரா’.

கல்லூரி மாணவனாகவும் பொறுப்புள்ள தந்தையாகவும் இரு பரிமாணங்களில் அட்டகாசம் செய்திருக்கிறார் அனிருத்தாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்.நண்பர்களாக வரும் ஐந்து பேரும் நல்ல தேர்வு. ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி. ‘தங்கல்’ படத்தை இயக்கியவரும் இவரே!