லவ் ஸ்டோரி-சொல்லப்படாத ஒரு சொல்...காணப்படாத ஒரு காட்சி... காட்டப்படாத ஓர் அன்பு...



எப்போதும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும்!

லாக் டவுன் தொடங்கி நான்காவது நாள் என் மகன் பிறந்தான்! கொரோனா யுகத்தில், சமூக இடைவெளியுடன் பிறந்தவன் என்ற சரித்திரம் அவனைப் பின்தொடரும். பிரசவ அறைக்குப் போனபோது, சட்டென பற்களும் உடம்பும் கிடுகிடுவென நடுங்க என்னைப் பார்த்தாள் மனைவி. கையைப் பற்றிக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தால், பயம் இன்னும் அதிகமாகிறது.  

“டாக்டர்… எதும் ப்ராப்ளம் இல்லையே..?’’

“ஒண்ணும் இல்ல… நீங்க வெயிட்டிங் ரூம்க்கு போங்க…”
காத்திருப்பு அறையில் நிலைகொள்ளாதிருந்தபோது, செய்த பாவங்களும், செய்வித்த காயங்களும் மனதில் நிறைந்தது. மனைவியின் மீதான அன்பு, நிபந்தனையின்றி பெருகியது. என் அம்மா பட்ட கஷ்டங்களெல்லாம் முன் தோன்றின. தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ கதையில் வரும் அம்மாவின் பெயர், அலங்காரத்தம்மாள். அந்தக் கதையைப் படித்தபோது, நான் அந்தப் பெயரிலேயே நின்றுவிட்டேன்.

அலங்காரத்தம்மாள்… எல்லா வீடுகளிலும் பெண்பிள்ளைகளை அலங்கரிப்பதே விசேஷம். அதுவும் ஆண்பிள்ளைகளையும் இரண்டொரு நாள் பெண் பிள்ளையைப் போல அலங்கரித்து புகைப்படம் எடுப்பது நம் குணாம்சம். சடங்கிலிருந்து சாவுவரை அலங்காரம் கொண்ட அம்மன்கள். உண்மையில், பிரசவங்களின் அலங்காரமாய், நிரந்தர வடுக்கள் நின்றுவிடும் உடம்புதானே ஒவ்வொரு பெண்ணுக்கும்..?

காமம் என்பது பெண்களுக்கு சந்தோசமா..? வெறும் வலிதானா..? தாய்மை என்பது பரிபூரணமா..? நெடும்பாரமா..? தன் ஆண் இணையின் மீது ஒரு புகாரும் சாபமும் இல்லாமல் போய்ச்சேரும் எந்த அலங்காரத்தம்மாளாவது இருக்கிறாளா... என எத்தனையோ கேள்விகளை அந்தப் பெயர் தருகிறது.

கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்து, கையில் பஞ்சுப் பொதியோடு டாக்டர் வந்தார். கண் திறவாத உயிர். தஞ்சாவூர் வீட்டு பத்தாயத்தை, அறுவடைக்கு முன்பு சுத்தம் செய்யும்போதெல்லாம் பழைய நெல் வாசத்தோடு வந்து விழும் எலிக்குஞ்சைப் போல படுத்திருந்தான்.

இரண்டு வாரங்களுக்கு மேல் மருத்துவமனையிலேயே இருந்தோம். குழந்தையின் புதிய மொழிச் சப்தங்களையும் ஹேமாவின் குரலையும் தவிர அந்த அறையில் எதுவுமில்லை.

‘நிலவாகும் ஆசையில்
காற்றில் படபடத்து
படபடத்து
வானெங்கும் அலைபாய்ந்து
அலைபாய்ந்து
திரும்பிய பட்டம்     
கடைசியாய் ஒரு
மரக்கிளையில்
மாட்டிக்கொண்டு
உண்மையை
உணர்ந்தபின்
மலராகிவிட்டது!’

- என்ற ஷீமா கார்வலின் பஞ்சாபிய கவிதை போல வாழ்க்கை மாறிவிட்டது. நாம் பெருவெளிகளில் அலைந்து வருவது இப்படி ஓர் அறையை அடையத்தான் இல்லையா… காதலின் வானத்தில் அலைந்தலைந்து வருவது இப்படி ஒரு மரக்கிளையில் மலராகத்தான் இல்லையா..!

ஒரு காலத்தில் ஒருத்தி வீட்டுக்குப் போனபோது, அங்கே வள்ளலார் படம் போட்ட காலண்டர் இருந்தது. அதுவே என் அன்புக்கு போதுமானதாக இருந்தது. அது காதலாகக் கூட கனியவில்லை. ஆனால், அதன் பிறகும் வடலூர் பக்கம் போனால் வள்ளலாரைப் பார்க்காமல் வந்ததில்லை. அந்த வெண்மையில், அணையா அடுப்பில், திரி கருகிய அகல்விளக்குகளில் எங்கோ ஒரு முனையில் அவள் இருந்தாள்.

இன்னொரு தோழிக்கு மார்க்ஸும் ஜென்னியும் இணைந்திருக்கிற கருப்பு வெள்ளை புகைப்படம் தந்தபோது, ‘இவங்க யாரு..?’ என்றாள். அதுவே அந்த உறவு முறிவதற்கான தொடக்கமாக இருந்தது. இந்த நள்ளிரவில் எதிர் ப்ளாட் பால்கனி இருட்டில், ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்குகிறது. மூலங்குடி பள்ளிக்கூட சர்ச்சில், புனித வெள்ளிக்கு இந்த ஆரஞ்சு வண்ணத்தில்தான் ஏஞ்சலாக வருவாள் இசபெல்லா. அவள் உருவாக்கிய தெர்மோகோல் ஆட்டுக்குட்டியை தூக்கிக் கொஞ்சும் இயேசுவை இன்னொருமுறை நேரில் பார்க்க முடியுமா..?

இப்போது கூட ‘தும்பி வா தும்பர்குடுத்தே…’ பாட்டு எங்கேயாவது கேட்டு நான் ஆர்வமாகப் பார்த்தால், ‘என்ன… மறுபடி மலையாளம் கத்துக்கப் போறிங்களா...’ என ஹேமா முறைப்பாள். காஷ்மீரின் ஒரு வீட்டில் சந்தூர் இசைத்தபடி பாடிய ஒரு பெண்ணின் குரல்… காசியின் இஸ்லாமிய தெருவொன்றில் தினமும் தண்ணீர் கொண்டுவந்து தந்துவிட்டு மொட்டை மாடியிலிருந்து எட்டி எட்டி பார்த்த ஒரு நீள முகம்… இரண்டு இரவுகள் தங்கிய பனிப்பாலையில் பதிந்த நாடோடி வதனம்... எல்லாம் இருந்த மொபைல் போன் சமீபத்தில் ஒரு விபத்தில் விழுந்து நொறுங்கிவிட்டது.

முதலில் ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால், அப்புறம் நினைக்க நினைக்க… எல்லாம் மனதில் இருக்கிறது. கண்களில் மறைந்தவையெல்லாம் மனதில் நினைவாக வளர்ந்து விடுகின்றன. மனமே ஒரு ஃப்ரீஸர் பாக்ஸாக மாறி, ஒவ்வொரு நினைவும் நீரிலிருந்து ஐஸ்கட்டிகளாக மாறிவிடுகின்றன. ஒவ்வொன்றின் மேலும் ஒரு ஃப்ளேவர் ஊற்றி வைத்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யம். ஆரஞ்சில் ஒன்று…. பச்சையில் ஒன்று… வாசனையிலும் வெவ்வேறு.

காமத்தைப் போலவே ரூபமும் இல்லாமல் போகும் காலம் ஒன்று வரும்தானே… அதற்கான முன்னேற்பாடாக வயது ஆக ஆக, மனம் நினைவுகளால் ஆன ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்கிறதோ எனத் தோன்றுகிறது. கடிதங்களில் எழுதிய வரிகளை விடவும் அடித்து அழித்த வரிகள் மீதுதானே மனம் குவிகிறது.

‘உன்னோடு கலக்க
ஒன்றாக இருக்க
உன் ரூபம்
தேவையில்லை’

- என்கிற ராஜாவின் குரலுக்கும் உருவமில்லை. ‘எதுவும் இல்லாததில்தான் எல்லாம் இருக்கிறது’ என்ற பாஷோவின் வார்த்தைகளுக்கும் உருவமில்லை. அப்படித்தான், சொல்லப்படாத ஒரு சொல்… காணப்படாத ஒரு காட்சி… காட்டப்படாத ஓர் அன்பு… எப்போதும் நம் உடன் வந்து கொண்டே இருக்கும்!

நானும் ஹேமாவும் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் பேசியிருப்போம். பார்த்துக் கொண்டதென்னவோ மூன்று நான்கு முறைதான் இருக்கும்.
அப்போது அவள் கண்டங்கள் தாண்டியிருந்தாள். எங்களுக்குள் பிரதானமாக இருந்தது இசைதான். மொழி பேதமின்றி பாடல்களைப் பகிர்வதும் அதைப் பற்றி பேசுவதும்தான் நிறைய.

சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக இருந்ததில் தொடங்கி, அவளுக்கு அடிப்படையிலேயே இசைப்பிரியம் அதிகம். ‘பின்னணியில் இந்த வாத்தியத்திற்கு பதில் அந்த வாத்தியத்தை பயன்படுத்தியிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்’ என்பது மாதிரியான நுணுக்கங்களையெல்லாம் சொல்வாள். அப்படித்தான் நட்பு வளர்ந்தது.

வயதிலும் வாழ்விலும் இருவரும் சில கனவுகளை இழந்திருந்தோம்… சில நிலைகளை அடைந்திருந்தோம்… அன்பை முன்வைத்து பரஸ்பரம் பேசி இணைந்தோம். காதல் என்பது ஒரு முழுமையான இசைப்பாடலைக் கேட்கிற அனுபவம். கல்யாணம் என்பது இசைக்கூடத்தில் பாடல் உருவாகிற ப்ராஸஸ். டேக்… சுருதி பிசகு… ரீ டேக்… குரல் கலவை… இசை சேர்ப்பு.

இன்னொரு பக்கம் ஸ்டூடியோ ரென்ட், சிங்கர், டெக்னீஷியன் பேமென்ட் என பெண்டு வாங்கி விடும். ஆனால், பாடலை முழுமையாக்கி முழுமையாக்கி அவ்வப்போது கேட்கிற சந்தோஷத்தில்தான் இன்னமும் காதலிருக்கிறது. காதலுக்கான அர்த்தம் நமக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக இருக்கும். இப்போது என்னிடம் கேட்டால் என்ன சொல்வேன் தெரியுமா..?‘உங்க பாப்பாவுக்கு டயப்பர் மாட்டிவிடும்போது உங்க மொகத்துல ஒரு சிரிப்பு வருதே… அதான் காதல்..!’

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்