பின்வாங்கும் உலக முதலீடுகள்… சமாளிக்குமா பாலிவுட்?



கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் எனப்படும் இந்திய சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் பலருக்கும் நிறுவனத் தலைமையிடமிருந்து ஒரு திடீர் அழைப்பு வந்தது. எந்த விவரமும் சொல்லாமல் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கியது அந்த அழைப்பு.
‘இனி உங்கள் சேவை இந்நிறுவனத்துக்குத் தேவைப்படாது’ - இதுதான் அந்த தொலைபேசி அழைப்பு சொன்ன செய்தி.கொரோனாவால் உலகம் முழுதும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது வாடிக்கையான செய்தியாகிவிட்டதால் இதனைப் பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த யூஎஸ் மீடியா அண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடையது. இது வால்ட் டிஸ்னிக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்று. வால்ட் டிஸ்னியே இந்த கொரோனாவால் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது என்கிறார்கள். தங்களது உலகப் புகழ்பெற்ற டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் பணிபுரியும் சுமார் முப்பத்திரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள்.

ஆனால், ஃபாக்ஸ் ஸ்டாரின் இந்த திடீர் முடிவுக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல; அது டிஸ்னியின் தொழில் கொள்கை மற்றும் வணிகக் கலாசாரம் சார்ந்த நிலைப்பாடு  என்று இந்திய சினிமா துறையின் ஆர்வலர்களும் நலம்விரும்பிகளும் அலறுகின்றனர். அப்படியானால் என்ன சிக்கல்? என்னதான் நடக்கிறது இந்த நிறுவனங்களில் என்று தேடத் தொடங்கினோம்.

இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டூடியோஸ் மூலமாக டிஸ்னி சினிமா தயாரிப்பது என்பதை முழுமையாகக் கைவிட முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஃபாக்ஸ் ஸ்டூடியோஸின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விஜய் சிங் கடந்த மார்ச் மாதம் வெளியேறியதையும் அவரைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி அமர் புட்டாலா மற்றும் தலைமை விற்பனை அதிகாரி ஷிகா கபூர் தத்தம் பதவிகளை ராஜினாமா செய்ததையும் குறிப்பிடுகிறார்கள்.

டிஸ்னி, இந்தியாவில் தனது தொழிலை நிறுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே, யுடிவி என்ற துணை நிறுவனத்தை இப்படி நிறுத்தியிருக்கிறது.
ஹாலிவுட் ஸ்டூடியோ நடைமுறைகளுக்கும் இந்திய ஸ்டூடியோ அல்லது தயாரிப்பு நிறுவன நடைமுறைகளுக்கும் இடையே இருந்த கடுமையான முரண்பாடுகள்தான் இந்த முதலீட்டு நிறுத்தத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

கடந்த ஜூன் 2018ம் ஆண்டு தான் சுமார் ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கொடுத்து ட்வெண்டிஃபர்ஸ்ட் செஞ்சுரி ஃபாக்ஸ் இன்கார்ப்பரேஷன்
நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது டிஸ்னி. இதன் மூலம், ஸ்டார் இந்தியா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடி யோஸ் மற்றும் ஹாட் ஸ்டார் ஆகியவை டிஸ்னியின் வசம் வந்தன.தற்போது ஃபாக்ஸ் ஸ்டார் மட்டுமல்லாது வயாகாம் 18, மோஷன் பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்களும் சிறிய பட்ஜெட் படங்கள், பிராந்திய மொழிப் படங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை டிஜிட்டல் கண்டென்டாக ஆன்லைன் பிளாட்பார்ம்களில் தருவதே இவற்றின் தற்போதைய பணி.

இதே சமயத்தில்தான் யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தனது இந்திய அலுவலகத்தை காலி செய்துள்ளது. இனி அதன் எல்லா புதிய தயாரிப்புகள் சார்ந்த தொடர்புகளையும் டிஸ்னி மூலமே செய்யும் என்று சொல்லப்படுகிறது.இந்த புதிய மாற்றங்கள் இந்திய ரசிகர்கள் சினிமா பார்க்கும் கலாசாரத்தின் அடிப்படையான விஷயங்களை எவ்வாறு மாற்றி அமைக்கும்... சினிமா என்ற வணிகத்தை எப்படி பாதிக்கும்... என்றெல்லாம் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஓடிடி எனப்படும் புதிய தளத்தில் தங்கள் படங்களை இறக்க அனைவருமே தயாராகி வருகின்றனர். வார்னர் பிரதர்ஸ் ஏற்கெனவே ஹெச்பிஓ மேக்ஸை இந்தியாவில் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த விஷயங்கள் குறித்தெல்லாம் மீடியாவுக்கு அதிகாரபூர்வமாக எதையும் டிஸ்னி அறிவிக்கவில்லை என்றாலும் கடந்த அக்டோபர் மாதம் அது வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், தனது ஒரிஜினல் தயாரிப்புகள் இனி ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாவதில் தாங்கள் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்குள் நுழைந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பாரம்பரிய சினிமா தயாரிப்பு முறையை மாற்றி அமைத்தன. யாராவது ஒரு தயாரிப்பாளர் தன் சொத்துக்கள், உடமைகள் எல்லாம் அடமானம் வைத்து ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடுவதுதான் முந்தைய நடைமுறையாய் இருந்தது. ஹாலிவுட் நிறுவனங்கள் உள்ளே வந்ததுமே இதனை எல்லாம் முறைப்படுத்தின. ஒரு படத்தை தயாரிப்பதற்கான முறையான ப்ளூ ப்ரிண்டுகள் உருவாக்கப்பட்டன. ஒரு படத்தை திட்டமிடுவது, படத்தை வாங்குவது, ஒருங்கிணைப்பது, விற்பது, உலகம் முழுதும் எடுத்துச் செல்வது என அனைத்து வேலைகளும் ஒரு கூரையின் கீழ் வந்தன.

தொடக்கத்தில் இந்த வேலையில் அவர்கள் மிக மோசமாக கையைச் சுட்டுக் கொண்டார்கள்தான். ஆனால், போன தசமத்தின் பிற்பகுதியிலேயே எழுந்து நின்றார்கள். இதற்கு இந்தியாவைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்கள் உறுதுணையாக நின்றதும் முக்கிய காரணம்.

ஆனாலும் இந்த உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு மூலதனக்காரர்களுக்கு இடையே பிணக்குகள் உருவாகத் தொடங்கின.
முதல் காரணமாக அவர்கள் சொல்வது உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தின் மீதான தங்கள் அறிவுசார் சொத்துரிமையை அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கத் தயாராய் இல்லை. இன்னொரு முக்கிய காரணம் நம் கதாநாயகர்களின் சம்பளம்.
ஒரு படத்தின் தயாரிப்பு செலவில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் வரை கதாநாயகர்களின் சம்பளமாகவே சென்று விடுகிறது. இது படத்தின் பட்ஜெட்டை தேவை இல்லாமல் கன்னாபின்னாவென எகிறச் செய்கிறது.

பல சமயங்களில் பெரு நகரங்களின் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் தவிர சிற்றூர்களில் பெரிய நடிகர்களின் படங்களே சரியாகப் போகாத சூழலில் படங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. நடிகர்களின் சம்பளம் முறையானதாக இருந்தால் இந்த நஷ்டத்தை சமாளிக்கலாம். சமயங்களில் நஷ்டமற்ற நிலையும்கூட உருவாகும் என்கிறார்கள். ஆனால், நமது நாயகர்கள் எந்நிலையிலும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள தயாராய் இல்லை.
இப்படியான சூழலில்தான் ஓடிடி போன்ற ஆன்லைன் சினிமா தளங்களுக்கு மக்களிடம் கணிசமான வரவேற்பு உருவாகத் தொடங்கியிருப்பதை ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் உணர்ந்தன.

பெரிய முதலீட்டில் சினிமா படங்கள் எடுத்து பெரிய அளவில் நஷ்டத்தை எதிர்கொள்வதைவிட, சிறிய முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தை அறுவடை செய்யலாம் என்ற முடிவில் இறங்கிவிட்டன. அதனால்தான் சினிமா தயாரிப்பு என்பதை பாலிவுட்டில் கட்டுப்படுத்திவிட்டு, ஓடிடி தளங்களில் இறங்குகின்றன ஹாலிவுட் ஸ்டூடியோக்கள்.

சினிமா என்பது இந்தியாவின் மாபெரும் பொழுதுபோக்கு வணிகம். இங்கு அனைவருக்குமே காசுதான் முக்கியம். அதற்காக துறையே சீரழிந்தாலும் பரவாயில்லை, என் கல்லா நிறைந்தால் போதும் என்று நினைப்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் தங்கள் வெள்ளித்திரையில் முதலீடுகளை நிறுத்த முடிவெடுத்திருப்பதும் அதன் அறிகுறிதான்.

இளங்கோ கிருஷ்ணன்