அணையா அடுப்பு - 32



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அற்புதம் நிகழாது!

சங்கம், சபை, சாலையென்று நிறுவி சாகாவரம் பெற்ற சாதனைகளைப் புரிந்தாலும் வள்ளலாருக்கு மனநிம்மதி இல்லாமல் போயிற்று.
அதற்குக் காரணம் நிறுவனமயமானதின் சிக்கல்களே.ஆன்மீக நிறுவனமோ, வணிக நிறுவனமோ, அதனை வைத்து லாபம் பார்க்கும் அண்டக் காக்கைகள் எல்லா இடங்களிலுமே உண்டு. அம்மாதிரி சிலரால், தான் சலிப்புற்றதைக் குறிப்பிட்டு சாலை நிர்வாகி அப்பாசாமி செட்டியாருக்கு கண்டிப்பான தொனியில் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்ததை கடந்த அத்தியாயத்தில் வாசித்தோம்.

அப்பாசாமி செட்டியார் எடுத்த சில ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையில் உடனடியாக சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் -மாதங்கள் உருள பழைய குருடி கதவைத் திறடி கதையானது.வடலூர் தர்மச் சாலையில் இருந்தவர்கள் மட்டுமல்ல, வள்ளலாரோடு மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் தங்கியிருந்த சிலரின் ஒழுங்கீனமும் அவ்வப்போது வெளிப்படலானது.இதைத் தொடர்ந்து ஒரு வெளிப்படையான எச்சரிக்கை அறிக்கையையே வள்ளலார் வெளியிட வேண்டியதானது.

25-11-1872ல் அவர் வெளியிட்ட இந்த அறிக்கை அவரது உள்மன வேதனையை நன்கு வெளிக்காட்டுகிறது.“சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை…ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி லுள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றனர் என்றும், அது காலையில் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்.

அன்றியும் கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதாயிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றி லும் மறந்துவிடல் வேண்டும். அப்படியிருத்தல் மேல்விளைவை உண்டு பண்ணாதிருக்கும்.அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத்தக்கதாக வைதாலும், அப்படி வைதவர்களையும் அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடு மறுபடி அத்துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக் கலப்புடன் மருவுதல் வேண்டுவது.

அப்படி மருவாதவர்களையும் உடனே ஒதுக்கிவிட வேண்டுவது. அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்.

அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.
- சி.இராமலிங்கம்”

வள்ளலாரின் இந்த எச்சரிக்கை அறிவிப்பின் மூலமாக, அவர் எவ்வித பேதங்களை மனிதர்களுக்கு இடையே களைய நினைத்தாரோ, அப்பேதங்களை கடைப்பிடித்து வந்த சிலரால் தருமச்சாலைக்குள் பிரச்சினை வந்திருப்பதாக யூகிக்க முடிகிறது.வள்ளலாருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள நினைத்தோர் சிலர் அமைப்புக்குள் புகுந்திருப்பார்கள் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

அருட்பெருஞ்சோதி வழிபாடு எவ்வகையில் நடக்க வேண்டும் என்று அவர் கறாராக விதித்த விதிகள் மற்றும் அப்பாசாமி செட்டியாருக்கு எழுதிய கடிதம், இந்த எச்சரிக்கை அறிவிக்கை போன்றவற்றைக் காண நேர்கையில் வள்ளலாரை எந்தளவுக்கு இவர்கள் துன்பப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

அதுநாள் வரை உலகிலிருந்த மதம், மார்க்கம், கடவுள், வழிபாடு என்பதையெல்லாம் தாண்டி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான, தொழில்நுட்பத்தில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தப் போகும் அடுத்த நூற்றாண்டுக்கான புதிய ஆன்மீக சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டிருந்தவரை, வெறுமனே அற்ப அற்புதங்கள் நிகழ்த்தும் சாதாரண சாமியாராகக் காட்டக்கூடிய முயற்சிகளையும் சிலர் செய்தார்கள்.

குறிப்பிட்ட ஒரு நாளில் வள்ளலார் ஒரு மகத்தான அற்புதத்தை நிகழ்த்தப் போகிறார் என்கிற தகவலை கசியவிட்டார்கள். ஏனெனில் அற்புதம் போன்ற மாயங்களைச் செய்பவர்களை நோக்கித்தான் நிறைய கூட்டம் கூடும், அந்தக் கூட்டத்தை தம் சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்திருக்கலாம்.இந்த வதந்தி அப்போது காட்டுத்தீயாகப் பரவியது.குறிப்பிட்ட நாளில் வடலூருக்கு விரைய தமிழகமெங்கும் மக்கள் தயாராகினர்.

வள்ளலாரின் காதுக்கு இந்த வதந்தி வந்தபோது மிகக் கடுமையாக வருந்தினார்.தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்களே என்று வேதனையுற்றார்.மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல, ‘உலக அறிவிப்புப் பத்திரிகை’ என்கிற பெயரில் 08-09-1873 அன்று தனியாக ஒரு விளம்பரமே செய்தார்.

“ஞானசித்திபுரம் என்றும் உத்தரஞான சிதம்பரம் என்றும் பிரமாணிக்கப்படுகின்ற வடலூர் சத்திய ஞானசபைக்கு முக்கிய சம்பந்தம் உடையதாகி, அடுத்த கருங்குழி எல்லை மேட்டுக் குப்பத்தில் வழிபடப்படுகின்ற சித்தி வளாகத்தில் வந்திருக்கின்றவர்களும், வருகின்றவர்களும், வருபவர்களுமாகிய ஜனங்களுக்கு அறிவிப்பது.

மேல் குறித்த விடத்தில் இந்த மாதத்திற்கு அடுத்த புரட்டாசி மாதம் ஐந்தாம் தேதியில் அற்புத விளக்கம் நேரிடுவதாக ஓர் வதந்தி வழங்கப்படுகின்றது. அது கேள்விப்பட்டு நம்புதலோடு நீங்களும் நீர்களும் பொருள் வகையாலும் தேக வகையாலும் உழைப்பெடுத்துக் கொண்டு பின்பு நிட்டூரப்பட்டுக் கொள்ளுதல் வேண்டாம்.

அந்தக் கேள்வி உண்மை அல்ல. இவ்விடத்தில் அற்புதம் விளங்குவது மெய்யோ, பொய்யோ, இந்தக் காலமோ, எந்தக் காலமோ. ஆகலில், இந்த அறிவிப்பினால் ஜாக்கிரதையோடு உங்களுங்களுக்கு அடுத்த காரியங்களையோ அவைகளைச் செய்வீர்களாக.சிதம்பரம்இராமலிங்க பிள்ளை”என்று அந்த விளம்பரம் செய்யப்பட்டது.

தனக்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வதந்தி பரவியது. அதை நம்பி பெரும் கூட்டம் வந்துகொண்டிருக்கிறது எனும்போது, அக்கூட்டத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ளாமல் சத்தியத்தை எடுத்துரைத்த அந்த உத்தம மனம் எத்தனை ஆன்மீகவாதிகளுக்கு உண்டு?இன்றைய ஆன்மீகவாதிகள் வள்ளலாரிடம் பெற்றுக் கொள்ள வேண்டிய மிக அரிய பண்பு இது.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்