தல! sixers story -31



கோப்பை நமதே!

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் உலகக் கோப்பையை வென்றதை அதிசயம் என்றோ அற்புதம் என்றோதான் குறிப்பிட வேண்டும்.
ஆனால் -28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோனி தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பையை வென்றதை திறமையின் வெற்றி என்றோ, உழைப்புக்கான அறுவடை என்றோதான் சொல்ல வேண்டியிருக்கிறது.2007 உலகக்கோப்பை போட்டித் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, அதிலிருந்து பாடங்களைக் கற்று தன்னைத்தானே திருத்தி சீரமைத்துக் கொண்டது.

மூன்றாவது முறையாக ஆசியாவில் நடந்த உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.அதனாலோ என்னவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இந்தியா என்று ஆசிய அணிகள் கோலோச்சின.இந்தியாவுக்கு முதல் போட்டியே வங்கதேசத்துடன்.கடந்த 2007 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்கதேசம், அதே மேஜிக்கை திரும்பவும் நிகழ்த்தும் முனைப்பில் போராடியது.

இம்முறையோ நிலைமை தலைகீழ்.தோனியின் தலைமையில் திறமையான வீரர்களோடு விளையாடிய இந்தியா, முதல் போட்டியிலேயே 370 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை அடக்கியது.இங்கிலாந்துடன் பெங்களூரில் நடந்த அடுத்த போட்டி இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகம் முழுக்க இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கே ஆச்சரியத்தைத் தந்தது.முதலில் ஆடிய இந்தியா சச்சின் டெண்டுல்கரின் அபார சதத்தோடு 338 ரன்கள் குவித்தது.

ஆனால் -இங்கிலாந்தோ இலக்கை விரைவாகத் துரத்தி, 50 ஓவர்கள் முடிந்தபோது அதே 338 ரன்கள் எடுத்து போட்டியை ‘டை’ ஆக்கியது.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 676 ரன்கள் குவிக்கப்பட்டு, போட்டி ‘டை’ ஆனது என்பது அபூர்வமான சம்பவம். அதுவும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் என்பது ஆச்சரியம்.அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை அசால்ட்டாக ஊதித்தள்ளிய இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் மட்டும் மயிரிழையில் தோற்றது.

தன்னுடைய க்ரூப்பில் இரண்டாம் இடம் பெற்ற இந்தியா, காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சுலபமான வெற்றியைப் பெற்றது.மார்ச் 30, 2011 அன்று சண்டிகர் நகரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த அரையிறுதிப் போட்டியில் அனல் பறந்தது.தான், விளையாடும் கடைசி உலகக்கோப்பைப் போட்டி என்பதாலோ என்னவோ தொடர் முழுக்கவே சச்சின் ராஜ்ஜியம்தான். மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சொதப்பினாலும் சச்சின் மட்டும் ஆக்ரோஷமாக போராடி 85 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு இலக்கு 261 ரன்கள்தான்.அதிரடியான வீரர்களைக் கொண்டிருந்த பாகிஸ்தான் எளிதில் வெல்லும்; உலகக்கோப்பை போட்டிகளில் முதன்முறையாக இந்தியாவை தோற்கடிக்கும் என்றுதான் கணிக்கப்பட்டது.ஆனால் -இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்ததால் பாகிஸ்தானால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய இயலாமல் போனது. 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்தப் போட்டியில் பந்து வீசிய ஜாகீர்கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன்சிங் மற்றும் யுவராஜ்சிங் என்று ஐந்து இந்தியப் பந்துவீச்சாளர்களுமே ஆச்சரியகரமான முறையில் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, கிரிக்கெட் என்பது கூட்டுமுயற்சி என்கிற கூற்றை வலுப்படுத்தினார்கள்.இலங்கையுடனான இறுதிப்போட்டி மும்பையில் ஏப்ரல் 2ம் தேதி நடந்தது.டாஸில் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமாக ஆட முடிவு செய்திருந்தனர் இலங்கை பேட்ஸ்மேன்கள்.

மொத்தம் 7 பவுலர்களைப் பயன்படுத்தி, இலங்கை பேட்ஸ்மேன்களை குழப்பினார் இந்திய கேப்டன் தோனி. முதல் உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடிய விராத் கோஹ்லிக்கும் கூட பந்துவீச வாய்ப்பு கொடுத்தார்.இந்த உத்தி ஓரளவே பலனளித்தது. மற்ற வீரர்களைக் கட்டுப்படுத்த முடிந்தாலும் மகிளா ஜெயவர்த்தனேவை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து, அவுட் ஆகாமலேயே களத்தில் நின்றார்.

ஒருவேளை அவரை மட்டும் வீழ்த்தியிருந்தால் இந்தியாவுக்கு உலகக்கோப்பை ‘கேக் வாக்’காக மிகவும் சுலபமாக இருந்திருக்கும்.ஓரளவுக்கு சவாலான 275 என்கிற இலக்கை, உலகக்கோப்பையை உரியதாக்கிக் கொள்ள இந்தியாவுக்குக் கொடுத்திருந்தது இலங்கை.இந்திய பேட்ஸ்மேன்கள் ஃபுல் ஃபார்மில் இருந்ததால் கோப்பையை சுலபமாகவே கைப்பற்றிவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இரண்டாவது பந்திலேயே மண் விழுந்தது.இந்திய அணியின் பெரும் நம்பிக்கையான சேவாக், மலிங்காவின் துல்லியமான யார்க்கருக்கு பலியானார். டக்-அவுட்.

அடுத்து ஜாம்பவான் சச்சினையும் மலிங்காவே அகற்றிவிட 31 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, இந்தியா பதற்றத்துக்கு உள்ளானது.
கவுதம் காம்பீரும், விராத் கோஹ்லியும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாதவாறு கவனமாக, மெதுவாக ஆடத்தொடங்கினர்.
விராத் கோஹ்லி வீழ்ந்தபோது ஸ்கோர் 114.3 விக்கெட்டுக்கு 114 என்பது கவுரவமான ஸ்கோர்தான்.ஆனால் -இலக்கோ 275.அடுத்து யுவராஜ்சிங் வரவேண்டும்.

எனினும் -ஓர் அதிரடியான முடிவை எடுத்தார் தோனி.அவரே களம் புகுந்தார்.இத்தொடரில் அவருடைய பேட்டிங் சுமார்தான் என்பதால், இறுதிப் போட்டிக்கு அவர் எடுத்த இந்த ‘ரிஸ்க்’ சரிதானா என்று அனைவரும் நகம் கடித்துக்கொண்டே போட்டியைப் பார்க்கத் தொடங்கினார்கள்.தோனி தன்னுடைய முடிவு சரிதான், அதுவே இப்போட்டியின் திருப்புமுனை என்பதை நிரூபிக்கும் விதமாக இலங்கை பவுலர்களை நாலாபுறமும் தண்டித்தார்.

42வது ஓவரில் 3 ரன்னில் செஞ்சுரியைக் கோட்டைவிட்டு பெரெராவின் பந்துவீச்சுக்கு காம்பீர் பலியானபோது ஸ்கோர் 223.46 பந்துகளில் 52 ரன்கள் என்கிற இலக்கு.கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்த தெம்பில் தோனியும், யுவராஜும் கோப்பை தங்கள் வசமாகிவிட்டது என்கிற உறுதி தெரிந்தாலும் நிதானமாகவே நிலைமையைக் கையாண்டார்கள்.50வது ஓவரின் இரண்டாவது பந்தில் குலசேகராவை சிக்ஸருக்கு விரட்டியடித்து உலகக் கோப்பையை கையில் ஏந்தினார் தோனி.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்