லவ் ஸ்டோரி - சாந்தனு கீர்த்தி



நாங்க டாம் & ஜெர்ரி!

சாந்தனு

எப்படிப் பார்த்தாலும் இந்த உலகம் அன்பினால் நிரம்பியது எனச் சொல்வேன். காதல், பேசுகிற விஷயமில்லை. அது உணரக் கூடியது. நம்மை கனவுலகில் நிறுத்தி அழகு பார்ப்பது. காதல் சுகம் என ஒருவரும், சித்ரவதை என மற்றொருவரும், சொர்க்கமென
இன்னொருத்தரும் சொல்லலாம். ஆக, காதல் என்பது அனுபவம்தான். அனுபவம் நமக்குப் புரிய வேண்டுமென்றால், அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். அதனால் மனம் துள்ளுமா, சிறகு விரிக்குமா, கவிதை பேசுமா, கனவு பெருகுமா என அனுபவித்துப் பார்த்தாலே புரியும்.

படிக்கும் போதே நிறையப் பெண்கள் பாதித்தார்கள். வெறும் கண்களால் பார்த்து ரசித்துவிட்டு செல்கிற இடங்களே அதில் அதிகம் இருந்தது. இந்த கீர்த்தியைத்தான் பள்ளியிலும் காதலித்தேன். அவள் எனக்கு நட்பு வட்டத்திலும், குடும்ப நெருக்கத்திலும் அருகிலேயே இருந்தாள். காதலித்து அந்த பிரியத்தை உணரும்போது ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ‘என்னால் படிக்கவே முடியலை. என்னை விட்டுவிடு’னு ஒதுங்கிக் கொண்டாள். ஆனால், அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் சினிமாவிற்கு வந்தால் கண்டிப்பாக நடனமும், சண்டைப் பயிற்சியும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும். சண்டைப் பயிற்சிக்கு பவர் பாண்டியன் சாரும், நடனத்திற்கு ஜெயந்தி மேடமும்தான் இருந்தார்கள். விக்ரம், ஆர்யா, சூர்யா, விஷால், குஷ்பு அக்கா என அத்தனை நடிகர்களும் அங்கே கற்றுக்கொண்டார்கள். ஒரு சினிமாவில் நடித்து விட்டு நடனமே உயிராக இருந்த ஜெயந்தி மேடத்தின் மகள்தான் கீர்த்தி.

எங்கே போனாலும் கீர்த்தி தட்டுப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். பார்த்த நிமிஷத்திலே பழைய நட்பை அப்படியே பற்றிக் கொள்கிற தினுசுதான் எங்கள் அன்பு.அப்படியே நகர்ந்துபோய் காலேஜில் இரண்டாவது வருஷம் படிக்கும்போது மறுபடியும் பேசினோம். அடுத்து அர்த்தம் புரியாத சண்டையில் திரும்ப பிரிந்து விட்டோம்.

நான் ஒரு சமயம் இன்னொரு ஃப்ரெண்டுடன் காப்பி ஷாப்பில் இருந்தேன். ‘எங்கே இருக்கிறாய் சாந்தனு’ எனக் கேட்டு வைக்க, ‘அப்பாவோடு இருக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டேன். தெரிந்தே கீர்த்தி கேட்டிருக்க, மறுபடியும் வெடித்தது பிரளயம். இந்தத் தடவை சற்று ஆழமாக. அப்புறம் கொஞ்சம் சீரியஸாகப் பிரிந்தோம். எங்காவது பார்த்தால் வெறுமனே கை அசைத்து, சின்னப் புன்னகையில் விலகினோம்.அவள் ‘மானாட மயிலாட’வில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்க, நானும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

ஒரு ஜோடியாக என்னை கீர்த்தி அழைக்க சம்மதம் சொன்னேன். எனக்கு ஜோடியாக ஆட வேண்டிய ஆர்ட்டிஸ்ட் ஆட முடியாமல் போக வேறொருவரைத் தேடினார்கள். ‘நீ ஆடினால் நானும் ஆடுகிறேன்’ என நிபந்தனை வைக்க, முடியாது என முரண்டு பிடித்தாள். இறுதியில் இணைந்து நாங்களே ஆடினோம்.

கீர்த்தியின் கஸின், எங்கள் நண்பர்கள் என எல்லோரும் இணையை மிகவும் விரும்பினார்கள். மூன்று மணி ரிகர்சலுக்கு இரண்டு மணிக்கே போய் வருகைப்பதிவு செய்தேன். மறுபடியும் காதல். ஒருநாள் என் காதலைச் சொன்னேன். ‘நாம் திருமணம் செய்து கொள்வோமா’ எனக் கேட்டேன். அவளுக்கு கோபம் வர ‘எங்க அப்பா, அம்மாகிட்டே கேட்டுட்டு வா, பண்ணிக்கலாம்’ என சூடானாள். இவன் இத்தோடு போய் விடுவான் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.

நான் அந்த வாரமே கீர்த்தியின் வீட்டுக்குப் போனேன். ‘என்னோட கேரியர் இனிமேல்தான் நல்லபடியாக ஆரம்பிக்கணும். அதுவரை நீங்கள் பொறுத்திருக்கணும்’ என்றேன். அவர்களின் பதில் சுமுகமாக இருந்தது.

கீர்த்தி

ஒரு கட்டத்தில் எனக்கு சினிமா பையனே வேண்டாம்னு இருந்தேன். ஆனாலும் சாந்தனு அன்பு ரொம்பவும் பிடிக்குது. பள்ளியிலிருந்து ஆரம்பித்து, அவர்கிட்ட ஒரு தொடர்ச்சியான பிடிமானம் இருக்கு. விட்டுட்டு இருந்திட முடியும்னு தோணலை. நானும் அவரைத் திருமணம் செய்ய சம்மதிச்சேன். அந்தக் கணம் இன்னிக்கும் ஒரு நிறைவாகத் தங்கியிருக்கு. அவரே
திருமணத்திற்கு தன்னை அருமையாக தயார்படுத்திக்கிட்டார்.  

சாந்தனு

சின்ன வயதிலிருந்தே நான் அம்மாவிடம் எதையும் சொல்லி விடுவேன். என் தேவைகள் அம்மா மூலமாகவே அப்பாவிற்கு போய்ச் சேரும்.
அதனால் எங்களின் காதலை அம்மாவிடம் சொன்னேன். அம்மா, அப்பாவிடம் போய்ச் சேர்க்க, அவருக்கு முதலில் அதிர்ச்சி. கீர்த்திதான் காதலிக்கும் பெண் என்றதும் ஆச்சர்யம். ஆனாலும் எங்களின் காதலை உணர்ந்து, அவர் வெள்ளைக் கொடி அசைக்க, திருமணம் நல்லபடியாக முடிந்தது.

திருமணத்தை அறிவித்த போது ‘லிப்ஸ்டிக்’ என்ற ஆல்பம் போட்டோம். பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது ‘எங்கே போறடி’ என்ற ஆல்பம் போட்டிருக்கிறோம். எங்களின் சிறுசிறு சண்டைகள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இல்லாமல் போவதையும், பிறகு நாங்கள் கொண்டாடுவதையும் அந்த ஆல்பம் பேசுகிறது.  

கீர்த்தி

நாங்கள் டாம் & ஜெர்ரி மாதிரி தான். எங்கே போனாலும் என் கஸின்ஸ் கூட சேர்ந்து கேங் மாதிரிதான் போவோம். சாந்தனுவிடம் ஒரு குறையும் இல்லை. தன்னை பிரமாதமாக மாற்றிக் கொண்டார். அவர் இல்லாமல் என்னால் இரண்டு நாளை சேர்ந்த மாதிரி கடத்த முடியாது.

இப்போது கூட ராமநாதபுரத்திற்கு 35 நாட்கள் ஷெட்யூலில் ஷூட்டிங் போகிறார். என்னால் இப்போதே தாங்க முடியவில்லை. ‘உன்னை விட்டுட்டு எத்தனை நாள் இங்கிருப்பேன்’ என புலம்பிக் கொண்டிருக்கிறேன்.  

சாந்தனு

எனக்கென்று ரசனைகள் இருக்க, அவளுக்கென்று விருப்பங்கள் உண்டு. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து சினிமாவில் நடிக்கக் கூட திட்டம் போட்டிருக்கிறோம். இப்போதும் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. என் உலகமே அவள்தான் என ஆகிவிட்டது. கீர்த்தியின் அப்பா எனக்கு  நண்பரைப் போல. அப்படியே என் அம்மாவும், அப்பாவும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

காதலின் அருகாமை, நேசம், நினைவுகள் எல்லாமே கல்லெறிந்த குளம் மாதிரி அப்படியே மனதில் உறைந்திருக்கிறது. ஒரு முழு வாழ்க்கைக்கான ஆதரவு, காதல், பிரியம், அரவணைப்பு எல்லாமே ஒரு பெண்கிட்டே இருந்து கிடைச்சுக்கிட்டே இருக்கிறது என்ன மாதிரி லவ்! கீர்த்தி எனக்கு அப்படி!

நா.கதிர்வேலன்