Family Tree - 26 தலைமுறைகளாக தேவாலய மணி தயாரிக்கும் குடும்பம்!



உலகின் உன்னதமான நிறுவனம் மற்றும் மூன்றாவது பழைய குடும்ப பிசினஸ். போப் ஆண்டவருக்கு விருப்பமான இடங்களில் ஒன்று. ‘நீண்ட காலமாக செயல்பாட்டில் இருக்கும் நிறுவனம்’ என்ற இத்தாலிய அரசின் தங்க விருது. ஐநா சபையின் அமைதி மணி, பைசா நகரின் சாய்ந்த கோபுரத்தில் உள்ள மணி, வாடிகன் தேவாலயத்தை அலங்கரிக்கும் மணி உட்பட முக்கிய இடங்களின் அடையாளங்களாகத் திகழும் மணிகளைத் தயாரித்த நிறுவனம்... என்று ‘பொன்டிஃபிசியா ஃபொண்டெரியா மரினெல்லி’ நிறுவனத்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எளிமையாக ‘மரினெல்லி’.

இத்தாலியில் உள்ள அக்னோன் என்னும் கிராமத்தில் 26 தலைமுறைகளாக மணி தயாரித்து வரும் குடும்ப நிறுவனம் இது. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என நான்கு கண்டங்களில் உள்ள பெரும்பாலான ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் இதன் மணிதான் இன்றும் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் மதத்தைத் தாண்டி மணி தயாரிப்பது இதன் தனித்துவம்.

* நிக்கோடெமஸ் மரினெல்லி

எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கிறது மரினெல்லியின் குடும்ப வரலாறு. இத்தாலியின் வெனிட்டோ மாகாணத்தில் இக்குடும்பத்தினர் வாழ்ந்தபோது வெங்கலத்தை உருக்கி வார்ப்பதைக் கற்றுக்கொண்டனர். இந்த வார்ப்புக்கலையை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தியதுதான் இவர்களின் நீண்டகால தொழிற்பயணத்துக்கு அச்சாணி.

12ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறிய அளவில் ஒரு தொழிற்சாலையை நிறுவி, மணி தயாரிக்கும் பணியை ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவ்வளவாக மரினெல்லியின் மணி பிரபலமாகவில்லை. இருந்தாலும் தொழிலை விடாமல் தொடர்ந்தனர். 14ம் நூற்றாண்டில் மரினெல்லியின் குடும்ப பிசினஸ் வரலாறு திருத்தி எழுதப்பட்டது. வெங்கலத்தை உருக்கி மணியாக வார்ப்பதில் ஜாம்பவானாகத் திகழ்ந்தார் நிக்கோடெமஸ் மரினெல்லி.
1339ம் வருடம் அக்னோன் கிராமத்தில் ‘பொன்டிஃபிசியா ஃபொண்டெரியா மரினெல்லி’ யை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.

அந்த வருடத்திலேயே ஃப்ராசினோன் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கு மணி செய்வதற்கான ஆர்டர் வந்தது. 200 கிலோ எடைகொண்ட இந்த வெங்கல மணிதான் மரினெல்லியின் பெயரைத் தாங்கிய முதல் மணி. மணியின் வடிவமைப்பு, ஓசை, தரம் எல்லாமே தனித்துவமாக இருக்க, சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து ஆர்டர்கள் குவிந்தன.

அக்னோனிலேயே மணிகளைத் தயாரித்து, வேண்டிய ஊருக்கு அனுப்புமளவிற்குப் போதிய வசதிகள் அப்போது இல்லை. அதனால் நிக்கோடெமஸ் தனது குழுவினரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் போனார். தேவாலயத்தில் மணி கட்டுவதற்காக அமைக்கப்படும் கோபுரத்துக்கு அருகிலேயே தற்காலிகமாக தொழிற்சாலையை அமைத்து அங்கேயே தங்கிக்கொள்வது அவரது வழக்கம்.

இரவு, பகல் பாராமல் மணி தயாரிக்கும் நுணுக்கமான வேலை நடக்கும். ஆம்; மிகவும் நுணுக்கமான வேலை இது. கொஞ்சம் பிசகினாலும் சிக்கல். வடிவமைப்பு, அளவு, மூலப்பொருட்களின் கலவை, எடை, சூடு என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மணி ஓசையை எழுப்பாது. சரியான ஓசை வரும் வரை மீண்டும் மீண்டும் மணியை வார்ப்பார்கள்.

அதனால்தான், ‘‘எண்கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் இசையில் திறமைசாலியாக இருக்கும் ஒருவரால்தான் நல்ல மணியை உருவாக்க முடியும்...’’ என்கிறார் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாமஸ் மரினெல்லி. இவர் அடுத்து வரும் தலைமுறைக்காக மணி தயாரிப்பு செயல்முறையை எழுத்து வடிவில் ஆவணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.

நிக்கோடெமஸுக்கும் அவரது குழுவிற்கும்தான் மணி தயாரிப்பது ஒரு நுணுக்கமான வேலை. ஆனால், வேலை நடக்கும் ஊருக்கு அது ஒரு கொண்டாட்டம்; திருவிழா. ஆம்; மணி தயாரிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக தொழிற்சாலையைச் சுற்றி ஊரே கூடுவிடும். மணியைக் கோபுரத்தில் ஏற்றும் நிகழ்வும் திருவிழா போல நடக்கும். எடை அதிகமான மணி என்றால் அதை ஏற்றுவதற்காக நூற்றுக்கணக்கானோர் தேவாலயத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த ஊர் என்று யாருக்குமே தெரியாது.

சில நேரங்களில் மணி ஏற்றும்போது கோபுரம் சரிந்து உயிர்ச்சேத அசம்பாவிதங்கள் கூட நடப்பதுண்டு. கோபுரத்தில் மணி ஏற்றப்பட்டு முதல் மணியோசையைக் கேட்ட பிறகே நிக்கோடெமஸ் வேறு ஊருக்குப் புறப்பட ஆயத்தமாவார். இவரது இந்தப் பொறுப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் அடுத்து வந்த தலைமுறைகளும் பற்றிக்கொண்டது. 16ம் நூற்றாண்டில் அசென்சோ மரினெல்லியும் ஃப்ரான்சிஸ் அந்தோணி மரினெல்லியும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இருவரும் இணைந்து இத்தாலியின் முக்கிய ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு மணி செய்துகொடுத்தனர்.

இவர்களின் காலத்தில்தான் நாடு முழுவதும் பிசினஸ் விரிவடைந்தது. எந்த ஊருக்குச் செல்கிறார்களோ அங்கேயே தங்குவதற்கு இடம், உணவு, மூலப்பொருட்களை சர்ச் பாதிரி யார்களே ஏற்பாடு செய்து தந்தனர். மணி தயாரிக்கும் வேலைக்குத் தனியாக ஒரு தொகையும் வழங்கப்பட்டது.
17 மற்றும் 18ம் நூற்றாண்டில் நடந்த போர் மற்றும் கொள்ளை நோய்களின் தாக்கத்தால் இந்நிறுவனம் நிலைகுலைந்து
போனது. அப்போது இத்தாலி யிலிருந்த மணி தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பெரிதாக ஆர்டர்கள் இல்லையென்றாலும் செயல்பாட்டில் இருந்தது.

இதுதான் மரினெல்லி தொடர்ந்து இயங்குவதற்கு முக்கிய காரணம். ஆம்; ஆர்டர், லாபம் இல்லையென்றாலும்கூட நிறுவனம் எப்போதுமே திறந்திருக்கும். இவ்வளவு வருடங்களில் கொரோனா லாக்டவுன் காலத்தில் மட்டுமே மரினெல்லி மூடிக்கிடந்தது. அதுவும் ஒரு சில நாட்கள் மட்டுமே.

* உலகப்போர்

மரினெல்லி நிறுவனத்துக்கு மிகுந்த வேதனையான வருடங்கள் இவை. இரண்டாம் உலகப்போரின்போது இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி, பீரங்கி மற்றும் ஆயுதங்கள் செய்வதற்காக தேவாலயங்களில் இருக்கும் மணிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அப்போது நிறுவனத்தை அர்மாண்டோவின் கொள்ளுத் தாத்தா நிர்வகித்து வந்தார். முசோலினியின் உத்தரவை அறிந்த அவர் உடைந்துபோய்விட்டார். மணிகளைக் காப்பாற்றுவதற்காக தனிப்பட்ட முறையில் பாதிரியார்களுக்குக் கடிதம் எழுதினார்.

அவரது வழிகாட்டலின்படி சில மணிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. இருந்தாலும் ஆயிரத்துக்கும் மேலான தேவாலய மணிகள் பீரங்கிகளாக மாறின. அதனால் இத்தாலியில் உள்ள 50 சதவீத தேவாலயங்கள் மணி இல்லாமல் வெறுமையாகக் காட்சியளித்தன.

ஒரு வகையில் போரின் முடிவு மரினெல்லி நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. மணியை இழந்த தேவாலயங்கள் அனைத்தும் மரினெல்லியை நாடின. 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கியது. இருபதுக்கும் மேலானோர் மணி தயாரிப்பில் ஈடுபட்டனர். மீண்டும் மரினெல்லி விஸ்வ
ரூபம் எடுத்தது. இதுவும் கொஞ்ச காலம்தான். 1950ல் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்த தொழிற்சாலையும் எரிந்து சாம்பலானது. இதுபோக ஆர்டர் சம்பந்தமான முக்கிய ஆவணங்களும் அழிந்தன.

ஆனால், மலை போல குவிந்த ஆர்டர்களாலும் சிலரின் உதவிக்கரங்களாலும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல மரினெல்லி சாம்பலில் இருந்து உயரே எழுந்தது. மட்டுமல்ல; இரண்டு உலகப்போர்களுக்குப் பின் இத்தாலி பொருளாதாரத்தில் நிகழ்ந்த பெரும் சரிவு மற்றும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கே தொழில்களுக்கு விழுந்த பலத்த அடிக்கு நடுவில் உயிர்ப்புடன் இருப்பது மரினெல்லியின் சாதனை. ஆம். ‘‘2008 - 13ம் வருடத்துக்குள் சிறிய அளவில் தொழில் நடத்தி வந்த 37 ஆயிரம் இத்தாலிய குடும்ப நிறுவனங்கள் மூடப்பட்டன...’’ என்று ஓர் ஆய்வு சொல்கிறது.

* சிறப்பு

ஒருமுறை மரினெல்லியின் மணியோசையைக் கேட்டுவிட்டால் போதும். வேறு எங்கு மணியோசையைக் கேட்டாலும் அது மரினெல்லியா அல்லது வேறு மணியா என்று அடையாளம் கண்டுகொள்ளமுடியும். அந்தளவுக்கு சிறப்பானது இதன் ஓசை. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கையாளப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியே இன்றும் மணி தயாரிக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. இயந்திரங்கள் இன்றி கைகளாலேயே மணிகளைப் படைக்கின்றனர்.

அக்னோனில் கிடைக்கும் களிமண் மற்றும் மெழுகில்தான் மணிக்கான அச்சு உருவாக்கப்படுகிறது. உள்ளூர் பாதிரியார் வெங்கலத்தை ஆசீர்வாதம் செய்தபின் மணி தயாரிப்புக்கான பணிகள் தொடங்கும். அளவு, எடை, வெளிப்புற டிசைனைப் பொருத்து ஒரு மணியைத் தயாரிக்க மூன்று முதல் பத்து மாதங்கள் ஆகும். 2200 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் வெங்கலத்தை உருக்கி மணியாக வார்ப்பார்கள்.

அப்போது வேலையாட்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வார்கள். அத்துடன் மணி சீக்கிரம் குளிர்வதற்காக ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள். இதேதான் நிக்கோடெமஸ் காலத்திலும் நடந்தது.

*மியூசியம்

உலகின் உன்னதமான இடங்களில் ஒன்று மரினெல்லி மியூசியம். மரினெல்லி குடும்பத்தின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மணிகளும் ஏராளமான சிறிய மணிகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய மணிகளும் அடக்கம்.
இத்தாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மரினெல்லி தொழிற்சாலைக்கும் அதன் மியூசியத்துக்கும் செல்வதற்குத் தவறுவதே இல்லை.

முன்பு ஒரே நேரத்தில் மியூசியத்தைச் சுற்றிப் பார்க்க 100 பேர் அனுமதிக்கப்பட்டனர். இப்போது சமூக இடைவெளியுடன் 25 பேர். கடந்த வருடம் இத்தாலியில் உள்ள பள்ளிகளிலிருந்து 6000 மாணவர்கள் மியூசியத்தையும் தொழிற்சாலையையும் கண்டுகளித்துள்ளனர்.

*தயாரிப்புகள்

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு உகந்த மணிகள், சிறிது மற்றும் பெரிய அளவிலான தேவாலய மணிகள், இரும்பு மற்றும் மரத்திலான மணி கோபுரங்கள் மற்றும் அதன் உபரி பாகங்கள், தேவாலய மணி அமைப்பதற்கான ஆலோசனை, பழைய மணிகளை மறுசீரமைப்பு செய்தல், மின்சார மணிகளை நிறுவுதல்.

* இன்று

கொரோனா லாக்டவுனால் பல ஆர்டர்கள் நிலுவையில் இருந்தன. இப்போது அந்த வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. வருடத்துக்கு குறைந்தபட்சம் 50 மணிகள் தயாரிக்கப்படுகின்றன. 12 பேர் வேலை செய்கிறார்கள். 26ம் தலைமுறையைச் சேர்ந்த அர்மாண்டோ மரினெல்லியும், பாஸ்கல் மரினெல்லியும் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்கள்.

அர்மாண்டோவின் மனைவியும் குழந்தைகளும் கூட பிசினஸில் பங்குகொள்கிறார்கள். இப்போது 20 சதவீத வருமானம் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்தான் மரினெல்லியை வருடம் முழுவதும் இயங்க வைக்கிறது. 2018ம் ஆண்டின் வருமானம் சுமார் 20 கோடி ரூபாய்!

த.சக்திவேல்