சைக்கிள் ராணி!



சென்னை to தனுஷ்கோடி... 585 கிமீ... 36 மணி நேரம்...

‘‘பொதுவா, பெண்கள் குடும்பத்தைக் கவனிக்கிறதோட தங்கள் வாழ்க்ைக முடிஞ்சிடுதுனு நினைக்கிறாங்க. அவங்க உடல்நலத்துல எப்பவுமே கவனம் செலுத்துறதில்ல. இதனால, உடல் மட்டுமல்ல, மனஅழுத்தமும் அதிகரிச்சு நிறைய பாதிப்புகளைச் சந்திக்கிறாங்க.

அப்படி இருக்கக்கூடாதுனு நினைச்சதாலதான் நான் இந்த சைக்கிளிங்கை தேர்ந்தெடுத்தேன்…’’ அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் தீபா சைதன்யா.

சமீபத்தில், ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உடன் சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை 585 கிமீ தூரத்தை சைக்கிளிலேயே 36 மணி நேரத்தில் சென்றடைந்தவர். அந்தக் குழுவுடன் சென்ற ஒரே பெண் தீபாதான். இதனால், அவரை வெகுவாகப் பாராட்டினார் டிஜிபி சைலேந்திரபாபு.
‘‘பூர்வீகம் திருநெல்வேலி. திருச்சியில் பி.டெக் முடிச்சேன். கல்யாணமாகி சென்னைக்கு வந்துட்டேன். கணவர் சைதன்யா, ஐடி கன்சல்டன்ட்டா இருக்கார். குழந்தை பிறந்தபிறகு எம்பிஏ படிச்சேன். அப்புறம், ஒரு ஹெல்த் கேர் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன்.

மாநகர வாழ்க்கையைப் பத்தி சொல்ல வேண்டியதேயில்ல. வேலை, குடும்பம்னு இருபத்தி நாலு மணி நேரமும் வாழ்க்கை பரபரப்புதான். இதுல பல விஷயங்கள் என் உடலையும், மனசையும் பாதிச்சது. இதைப் போக்க நல்ல பொழுதுபோக்கு தேவைப்பட்டுச்சு. அப்ப நண்பர்கள் சிலர், ‘சைக்கிளிங் போங்க. உடலும் ஆரோக்கியமா இருக்கும். மைண்டும் ஃப்ரஷஷாகும்’னு அறிவுறுத்தினாங்க.

முதல்ல வாடகை சைக்கிள் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து ஓட்ட ஆரம்பிச்சேன். வார நாட்கள்ல ரெண்டு மூணு தடவை முப்பது முதல் 50 கிமீ வரை சைக்கிளிங் போனேன். வார விடுமுறையில் 80 கிமீ, 100 கிமீனு நீண்ட தூரம் போயிட்டு வந்ேதன். ரொம்ப ரிலாக்ஸா இருந்துச்சு. அன்றைய நாள் சிறப்பா மாறுச்சு.

ஆனா, வீட்டுல உள்ளவங்க ரொம்ப பயந்தாங்க. எதுக்கு இதெல்லாம்னு கேட்டாங்க. அவங்கள சமாதானப்படுத்தி, விடாமல் சைக்கிளிங் பண்ணினேன். இப்ப சைக்கிளிங் போக ஆரம்பிச்சு மூணு வருஷங்களாச்சு...’’ உற்சாகம் கொள்பவருக்கு 35 வயதாகிறது. ‘‘முப்பத்திரெண்டு வயசுலதான் சைக்கிளிங்கை தொடங்கினேன். இதை ஏன் சொல்றேன்னா, இந்த சைக்கிளிங்ல பெண்கள் குறைவு. அதிலும் நீண்ட தூரம் சைக்கிளிங் போறவங்க ரொம்ப குறைவு.
இதுக்கு வயசு ஒரு தடையில்ல. நம்மாலும் முடியும்னு பெண்கள் நினைக்கணும். இதை வலியுறுத்தவும் தனுஷ்கோடி வரையான நீண்ட தூர சைக்கிளிங்கிற்கு சென்றேன். நான் இதை ஒரு ஸ்போர்ட்ஸா செய்யல. பொழுதுபோக்காவே செய்திட்டு இருக்கேன்...’’ என்கிற தீபா சைதன்யா அனுபவத்தைப் பகிர்ந்தார்.

‘‘இங்க ‘வி ஆர் சென்னை சைக்கிளிங் குரூப்’னு (WCCG) ஒரு அமைப்பு இருக்கு. அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. இதுல என்னுடைய நண்பர்களும் இருக்காங்க. அதுல இணைஞ்சு நிறைய சைக்கிளிங் பண்ணினேன். சென்னை - பெங்களூர் - சென்னைனு 700 கிமீ தூரம் போயிட்டு வந்தேன். அப்புறம், சைக்கிளிங் விளையாட்டுல, ‘Super Randonneur’னு ஒரு டைட்டில் இருக்கு. இருநூறு, முந்நூறு, நானூறு, அறுநூறு கிமீ தொலைவுகளை குறிப்பிட்ட நேரத்துக்குள்ள கடக்கணும். அதை பூர்த்தி செய்து அந்தப் பட்டத்தை வென்றேன்.

இந்த ஈவென்ட்லதான் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சார் பழக்கமானாங்க. பிறகு சார் எங்க குரூப்புடன் ஒருமுறை மாமல்லபுரம் வந்தாங்க. அப்புறம் சார், திருச்சி, திருவண்ணாமலை எல்லாம் போனாங்க. அதுல என்னால கலந்துக்க முடியல. பிறகுதான் ராமேஸ்வரம் ரைடு வருதுனு சொன்னாங்க.

உடலும், மனமும் ஆரோக்கியமா இருக்க சைக்கிள் ஓட்டுறது அவசியம் என்பதை வலியுறுத்த இந்த சைக்கிள் பயணத்தை சார் தேர்ந்தெடுத்திருந்தார். சென்னை- போரூர் டோல்கேட்ல இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பயணத்தைத் தொடங்கினோம். இரவு முழுவதும் ஓட்டினோம். தூக்கம் எல்லாம் பத்து பதினைஞ்சு நிமிஷங்கள்தான். பகல்ல வெயில் அடிக்கிறதால ரொம்ப சோர்வாகிடும். அதனால, இரவுதான் நீண்ட தூர சைக்கிளிங்கிற்கு நல்லா இருக்கும்.

அதிகாலையில பெரம்பலூர் வந்தோம். அங்கிருந்து திருச்சி, புதுக்கோட்டை, தேவகோட்டை வழியா ராமேஸ்வரம் வந்தோம். தனுஷ்கோடியை ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்தடைந்தோம். ஆரம்பிக்கும்போது சாரின் சகாக்கள் 200 கிமீ வரை வந்தாங்க. ஆனா, கடைசி வரை நானும், பிரேம்சாய், கிருஷ்ணகுமார், செரந்தையா பிள்ளைனு மூணு நண்பர்கள் மட்டும் சாருடன் தனுஷ்கோடியில் முடிச்சோம்.

அப்ப, ‘நம்முடைய இலக்கை பெரிசா நிர்ணயிச்சு அதுக்காக உழைக்கணும்... சைக்கிளிங் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஒரு விளையாட்டு. அதனால், எல்லோரும் சைக்கிள் ஓட்டுவது அவசியம்...’னு சொன்ன சார், ‘பெண்ணா இருந்தா முடியாதுனு எதுவும் இல்ல. இது பண்ண முடியிற விஷயம்’னு என்னை அறிமுகப்படுத்தி, ‘பெண்கள் சைக்கிளிங் பண்ணணும்’னு அறிவுறுத்தினார்.

ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, நானும் ஒரு பெண்குழந்தைக்குத் தாயா இருக்கேன். தினமும் அலுவலகம் போறேன். வீட்டுடன் போதுமான நேரம் செலவழிக்கிறேன். இதையெல்லாம் தாண்டியே சைக்கிளிங் பண்றேன். அதனால, பெண்கள் அனைவரும் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சைக்கிளிங் செய்ய முன்வரணும்...’’ என்கிறார் தீபா.

பேராச்சி கண்ணன்