அணையா அடுப்பு -31



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பந்தல் எரிந்தது!

வடலூர் ஞானசபையின் வரைபடம் முழுக்கவே வள்ளலாரின் கற்பனையில் உதித்தது.ஒரு பொறியியல் நிபுணருக்கு நிகராக தன்னுடைய கரங்களாலேயே அந்த வரைபடத்தை வரைந்து தந்தார்.மேட்டுக்குப்பத்தில் அமர்ந்தவாறே வடலூரில் ஒரு வரலாற்றை அவர் நிர்மாணித்துக் கொண்டிருந்தார்.சபையின் ஒவ்வொரு அங்குலமும் அவரது விருப்பத்தின் படியே கட்டமைக்கப்பட்டது.இத்தனைக்கும் திறப்புவிழா அன்றுகூட அவர் வடலூருக்கு வரவில்லை.அடிக்கல் நாட்டியதில் தொடங்கி, முதல் தைப்பூச விழா வரை மேட்டுக்குப்பத்தில் இருந்தவாறே அவரது மேற்பார்வையில் வெகுசிறப்பாக நடந்தேறியது.

சபையைக் கட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் எவரும் புலால் உண்ணக்கூடியவர்களாக இருந்து விடக் கூடாது என்று மட்டும் அடிக்கடி தன்னுடைய சீடர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் அந்த நிபந்தனையின் அடிப்படையில்தான் வேலைக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.ஆனால் -சபைக்கு முன்பாக மிகப்பெரிய அலங்காரப் பந்தலை அமைத்தவர்கள் மட்டும் விதிவிலக்கு.ஏனெனில் -அந்தக் காலத்தில் இம்மாதிரியான அலங்காரப் பந்தல்களை அமைக்கக் கூடியவர்களாக தஞ்சாவூரில் வசித்த மராத்தியர்கள் மட்டுமே இருந்தனர்.அவர்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள்.

‘பந்தல் அமைப்பவர்கள் தானே? கட்டுமானப் பணிக்குத்தானே அந்த நிபந்தனையை வள்ளலார் விதித்தார்?’ என்று நினைத்தார்களோ என்னவோ, மராத்தியர்களை வைத்து பிரும்மாண்ட பந்தலை அமைத்து விட்டார்கள்.முதன்முதலாக வள்ளலார் ஞானசபையைப் பார்வையிட வந்தார்.

தூரத்தே வரும்போதே, அந்தப் பந்தலை நின்று நிதானித்துப் பார்த்தார்.பந்தலின் கலைநயத்தில் சொக்கிப்போய் பார்க்கிறார் என்றுதான் உடன்வந்த அன்பர்கள் கருதினார்கள்.ஆனால் -வள்ளலாரின் பார்வை பட்டதுமே திடீரென அந்தப் பந்தல் முழுக்க பற்றியெரியத் தொடங்கியது.

சுற்றியிருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள்.எல்லோரும் சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முனைந்தார்கள்.வள்ளலாரோ அவர்களைத் தடுத்தார்.“எரிய வேண்டியது எரிந்தே தீரும்; அகலவேண்டியது அகன்றே தீரும்...” என்றார்.அவரது வாக்குக்கு ஏற்ப மராத்தியர்கள் அமைத்த அந்தப் பந்தல் முழுக்க எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே அங்கு மிஞ்சியது.கட்டடத்தை ஒட்டிப் பந்தல் போடப்பட்டிருந்தாலும், அந்தத் தீயால் கட்டடத்துக்கு யாதொரு பாதிப்பும் ஏற்படாததை எண்ணி அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

போலவே -எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை.வள்ளலாரின் பேச்சை மீறி புலால் உண்போரை பணிக்கு பயன்படுத்தியது குறித்து சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மனவருத்தம் அடைந்தார்கள்.வள்ளலாரை வழிநடத்திய ஒளிதான் உக்கிரமாகப் பாய்ந்து அப்பந்தலை எரித்தது என்பதை உணர்ந்தார்கள்.அறிவுத் திருக்கோயில் என்று சொல்லப்பட்டாலும் ஞான சபையின் வழிபாட்டு முறை, மற்ற மதங்களின் வழிபாட்டு சடங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபாடு கொண்டதாக வள்ளலாரால் வடிவமைக்கப்பட்டது.

* அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்க சாதி சமய வேறுபாடு இல்லை. அனைவருக்குமே வழிபட உரிமை உண்டு.

* வழிபாட்டுக்கு வந்தவர்கள் சபைக்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

* புலால் உண்ணும் வழக்கம் கொண்டோர் வெகு தூரத்தில் நின்று வழிபடலாம். முன்மண்டபத்துக்கு வருவதைக்கூட அவர்கள் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* சபையின் உட்புறத்தைச் சுத்தம் செய்வது, திரி மாற்றுவது, விளக்கு ஏற்றுவது போன்ற பணிகளின் பொருட்டு மட்டும் ஒருவர் சபைக்குள் செல்லலாம். அவரும் கூட புலை, கொலை தவிர்த்தவராகவும், மூவாசையைத் துறந்தவராகவும் இருப்பார்.

* வழிபாட்டுக்கு இசைக்கருவிகள் இசைக்கப்படக் கூடாது.

* படையல் செய்வதோ, தீபாராதனையோ கண்டிப்பாக தவிர்க்கப்படும்.

* திருநீறு மாதிரி பிரசாதம் எதுவும் வழிபாட்டுக்கு வருபவர்களுக்கு வழங்கப்படாது.

மொத்தத்தில் இறையை வழிபட ஆடம்பரம் கூடவே கூடாது என்பதால்தான் இத்தகைய எளிமையான ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கினார் வள்ளலார்.

கூட்டம் சேருமிடத்தில் ஆடம்பரம் கோலோச்சும். ஆடம்பரம் ஊழலுக்கு வழிவகுக் கும் என்பது அவரது கணிப்பு.ஞானசபை தொடங்கிய பிறகும் கூட மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்திலேயே அவர் தங்கினார். பாடல்கள் இயற்றினார். தவங்கள் மேற்கொண்டார்.அவ்வப்போது வடலூருக்கு வந்து செல்வார்.சங்கம், சாலை நிர்வகிக்கப்படுவதை மேற்பார்வை செய்வார்.கணக்கு வழக்குகள் பார்ப்பார்.

ஒருகட்டத்தில் வடலூரில் சாலையில் நெறிகளுக்கு மாறான சில செயல்பாடுகள், சிலரால் நடக்கிறது என்று அவர் கண்டறிந்தார்.
சாலை நிர்வாகி அப்பாசாமி செட்டியாருக்கு 09-03-1872 தேதியிட்ட அவரது கடிதம் இதை உறுதிப்படுத்துகிறது.“அப்பாசாமி செட்டியார் அவர்களுக்கு!
இந்தச் சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்களெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என் மேல் பழியில்லை. சொல்லி விட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்...”என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான மொழியை அவர் பயன்படுத்தி இருப்பது இந்தக் கடிதத்தில் மட்டும்தான்.பொதுவாகவே அவர் எழுதக்கூடிய கடிதங்கள் அன்பைப் பரிமாறும். வாழ்த்துகளை அள்ளிக் கொட்டும்.ஆனால் -இக்கடிதம் முழுக்க கண்டிப்பு காட்டுகிறது.இவ்வளவு கறாராக அவர் சொன்னதற்கான பின்னணிக் காரணங்கள் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் அப்போது வள்ளலார் மனம் வருந்தக்கூடிய வகையில் சாலையில் கணக்கு வழக்கிலோ, ஒழுக்கத்திலோ யாரோ சிலர் எல்லை மீறியிருக்க வேண்டும் என்று கணிக்க முடிகிறது.ஏற்கனவே அவர் வடலூரிலிருந்து மேட்டுக்குப்பத்துக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டதற்கும் கூட இந்த ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டவர்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கருத முடிகிறது.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்