முலான்



அதிரடியான சண்டைக்காட்சிகளை விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஆங்கிலப் படம் ‘முலான்’. ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது. ஒரு பெண் போர் வீராங்கனையின் சாகசக் கதைதான் ‘முலான்’. 1998ல் வெளியான ‘முலான்’ என்ற அனிமேஷன் படத்தின் தழுவல் இது.
குழந்தைப் பருவத்திலிருந்தே வழக்கத்திற்கு மாறாக ஒரு போர் வீரனுக்கு உரிய திறமைகளுடன் வளர்கிறாள் முலான். ஆனால், அவளின் பெற்றோர் ‘‘பெண் என்பவள் திருமணத்துக்குத்தான் தன்னை தயார் படுத்தணும். போருக்கு இல்லை...’’ என்று அவளைக் கண்டிப்புடன் வளர்க்கின்றனர்.

சீனாவில் போர் வருகிறது. எதிராளிகள் ஒவ்வொரு பகுதியாக வென்று வருகின்றனர். எதிராளியை வீழ்த்த வேண்டுமென்றால் சீனப்பேரரசுக்கு போர்வீரர்கள் தேவை. அதனால் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஓர் ஆண் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அரசாணை எல்லா கிராமங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

முலானுக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் குடும்பத்தில் ஆண் என்று பார்த்தால் அது அவளுடைய வயதான தந்தை மட்டும்தான். ஒரு காலத்தில் போர்வீரராக இருந்தவர் அவர். அரசாணை வந்த பிறகு போருக்குச் செல்லவில்லை என்றால் பெருத்த அவமானம் என்று நினைக்கிறார் முலானின் தந்தை.

வயதான காலத்தில் அப்பாவால் போரிட முடியாது என்று வருந்துகிறாள் முலான். ஓர் இரவில் வீட்டுக்குத் தெரியாமல் அப்பாவின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போருக்குச் செல்கிறாள். ஓர் இடத்தில் போருக்குத் தயாராவதற்கான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. தன்னை ஓர் ஆண் போல சித்தரித்து, பெயரை மாற்றி போர்ப் பயிற்சி பெறுகிறாள் முலான்.

நூற்றுக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் அவள் மட்டுமே ஒரே பெண். அதனால் பல சங்கடங்களுக்கு உள்ளாகிறாள். முலானின் உண்மைத் தோற்றம் வெளிப்பட்டதா? அவள் போரில் பங்கேற்று எதிராளிகளை வீழ்த்தினாளா... என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை.பிரமாண்டமான போர்க் காட்சிகளும் லொகேஷனும் விஷுவல் ட்ரீட். இப்படியான கதையம்சம் கொண்ட படங்கள் நிறைய வந்திருந்தாலும் ஆக்‌ஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கின்றனர்.

முலானாக நடித்த லியூ யிஃபை அதகளம் செய்திருக்கிறார். 90 சதவீத சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருப்பது சிறப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும் பேரரசராக ஜெட் லி கச்சிதம். நியூசிலாந்தைச் சேர்ந்த நிக்கி கரோ என்ற பெண்தான் இப்படத்தின் இயக்குநர்.

‘வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான பட்ஜெட்டில் படம் இயக்கிய இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியுள்ளார் நிக்கி. ஆம்; இதன் பட்ஜெட் 200 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 1471.50 கோடி ரூபாய்!