த கால்
சமூக வலைத்தளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கும் கொரியன் படம், ‘த கால்’. நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த காலத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நிகழ்காலத்தில் வாழும் பெண்ணை இணைக்கிறது ஒரு போன் கால். அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப்போடப்படுகிறது என்பதே படத்தின் கதை.
2019ம் வருடத்தின் ஒரு நாள். கிராமத்திலிருக்கும் அம்மாவைக் காணச் செல்கிறாள் இளம் பெண் சியோன். வழியில் தனது மொபைல் போனைத் தொலைத்துவிடுகிறாள். சிறு வயதில் அவள் வாழ்ந்த வீடு அந்தக் கிராமத்தில்தான் இருக்கிறது. ரொம்ப நாட்களாக பூட்டியே கிடக்கும் அந்த வீட்டுக்கு விசிட் அடிக்கிறாள். அங்கே பழமையான கார்டுலெஸ் போன் ஒன்று அவள் கண்ணில் படுகிறது. அந்தப் போனுக்கு இடைவிடாமல் அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. பதறிப்போகிறாள் சியோன்.
ஒரு கட்டத்தில் போனை எடுத்து பேசி விடுகிறாள். எதிர்த்தரப்பில் இருந்து ‘‘என் அம்மா கொடுமைப்படுத்துகிறாள். ப்ளீஸ் என்னைக் காப்பாற்றுங்கள்...’’ என்று ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கிறது. அதிர்ச்சியடையும் சியோன் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறாள். 1999ல் யங் சூக் என்ற பெண்ணும் அவளின் வளர்ப்புத் தாயும் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கும் விஷயம் சியோனுக்குத் தெரிய வருகிறது. யங் சூக் ஓர் அனாதை. ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் ஒரு பெண்தான் அவளை வளர்த்து வந்தாள். யங்- சூக்கைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்க்கிறாள் சியோன்.
வளர்ப்புத் தாயால் யங் சூக் கொல்லப்பட்ட தகவலை அறிந்து பயத்தில் நடுங்கிப்போகிறாள். கார்டுலெஸ் போன் ஒலிக்கிறது. தீ விபத்தில் இறந்துபோன சியோனின் தந்தையைத் திருப்பித்தர உதவுவதாகச் சொல்கிறாள் யங் சூக். தீ விபத்து நடந்த தேதிக்கு முன் சென்று விபத்து நடக்காமல் தடுக்கிறாள்.
சியோனின் அப்பா, வயதான தோற்றத்தில் திரும்பி வருகிறார். அப்பா இறப்பதற்குக் காரணம் அம்மாதான் என்று நினைத்திருந்த அவளது மனது மாறுகிறது. நிகழ்காலத்தில் பெற்றோர்களுடன் மகிழ்ச்சி யுடன் இருக்கிறாள் சியோன்.
மறுபடியும் கார்டுலெஸ் போன் ஒலிக்கிறது. ‘‘என்னைக் காப்பாற்றிக்கொள்ள அம்மாவைக் கொன்றுவிட்டேன்...’’ என்று பயமுறுத்து கிறாள் யங் சூக். அடுத்தடுத்து சில கொலைகள் செய்து சீரியல் கில்லராக உருவெடுக்கிறாள். கடந்த காலத்தில் யங் சூக் செய்யும் ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்தில் இருக்கும் சியோனின் வாழ்க்கையை எப்படி தலைகீழாக புரட்டிப்போடுகிறது என்பதே திக் திக் திரில்லிங் திரைக்கதை.
கொஞ்சம் பிசகினாலும் புரியாமல் போகும் திரைக்கதையை எளிமையாக படமாக்கியிருப்பதே இதன் வெற்றி. சியோனாகவும் யங் சூக்காகவும் நடித்தவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். 2011ல் வெளியான ‘த காலர்’ என்ற ஆங்கிலப்படத்தைத் தழுவி படத்தை இயக்கியிருக்கிறார் லீ சுங் ஹய்ன்.
தொகுப்பு: த.சக்திவேல்
|