காவல் நிலையங்களைக் கண்காணிக்கும் கேமரா



‘‘நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்...’’ என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட நாட்டின் முக்கிய புலனாய்வுத் துறையின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.
இரவு நேரங்களின் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவிடும் தரமான கேமராக்களைத்தான் பொருத்த வேண்டும். ஆடியோ பதிவு தெளிவாக இருக்க வேண்டும். அந்த கேமராவில் குறைந்தபட்சம் 18 மாதங்கள் வரையிலான பதிவுகளை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும்... என அடுக்கடுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்து பரபரப்பாக்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில் சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமராவைக் குறித்து கண்காணிப்பு கேமரா விற்பனை மற்றும் இன்ஸ்டாலேஷன் செய்து வரும் உஜ்ஜீவிநாதனிடம் பேசினோம்.‘‘எந்தப் பகுதியில் கேமராவைப் பொருத்த வேண்டும் என சரியாக தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அலுவலகம் என்றால் பணம் வாங்கும் இடம், வாடிக்கையாளர்கள் நடமாடும் இடம் ரொம்பவே முக்கியம். ‘சிசிடிவி அருகே உள்ளது’ என ஸ்டிக்கர் ஒட்டி வைக்க வேண்டும்.

பொதுவாக நுழைவாயிலின் அருகே வெளிப்புற கேமராவை வைப்பது சரி. பாதுகாப்பு அதிகம் வேண்டும் என்றால் கேட்டின் அருகிலேயே வைக்கலாம். சில வீடுகளில் காம்பவுண்ட் மூலைகளில், பின்பக்கம் என்று வைத்திருப்பார்கள். இதற்கு புல்லட் கேமராக்கள் நல்லது.

தட்பவெப்பநிலை, மழை பொழியும் இடம் எல்லாம் பார்த்து கேமராவுக்குப் பாதுகாப்பு இருக்கும்படி பொருத்த வேண்டும். புல்லட் கேமரா அனைத்தையும் நோட்டமிட்டு பதிவு செய்யும். குறிப்பாக வெளிப்புறத்தில் ‘நைட் விஷன்’ எனப்படும் இரவில் கண்காணிக்கும் கேமராவைப் பொருத்த வேண்டும்.

நைட் விஷன் கேமராவை வாங்கும்போது லக்ஸ் (lux) அளவு - அதாவது, ஒளி செல்லும் தூரத்தைப் பார்ப்பது நல்லது. கலர் கேமராவா, கருப்பு வெள்ளையா என்று பார்க்க வேண்டும். மனித நடமாட்டம் அறிய அல்ட்ரா ரெட் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.அண்மைக்காலமாக பனோரமிக் கேமரா பிரபலமாகி வருகிறது. இது ஒயர்லெஸ் கேமரா. ஒயரிங் செய்ய முடியாத இடங்களில் கூட சுலபமாகப் பொருத்திவிடலாம். இவற்றின் விலை அதிகம் இல்லை. எவ்வளவு தூரத்தில் ரிசீவர் என்பதைப் பொறுத்து விலை மாறுபடும்.

பல கிளை நிறுவனங்களை நடத்துபவர்கள் ஐபி கேமராவைப் பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் புரோட்டோகால் கேமரா என்பதே ஐபி கேமரா. இந்த கேமராக்களுக்கு லான் இணைப்பு மூலம் ஐபி முகவரி தரப்படும். அந்த ஐபி முகவரியை வைத்து இணையத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கேமரா ஒளிபரப்பைக் காணலாம். இவையும் இப்போது பிரபலம் அடைந்து வருகின்றன.

அனலாக் கேமராக்களும் இப்போது ஐபி கேமராக்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதிலும் எப்போதும் போல பார்க்க வேண்டியது லக்ஸ் ரேட்டிங் தான். டிஜிட்டலில் இருப்பதால் துல்லியம் மெகா பிக்சலில் கணக்கிடப்படும். நமக்குத் தேவையான அளவில் வாங்கலாம். தவிர, CMOS மற்றும் CCD (Charge Couple Device) என இரண்டு தொழில்நுட்பங்கள் உண்டு. CMOS-இல் வீடியோவின் தரம் சரியாக இருக்காது. வெளிச்ச அளவும் குறைவு. CCD- தான் நல்ல கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது...’’ என்று முடித்தார் உஜ்ஜீவிநாதன்.

ஸ்மார்ட் கேமரா

‘விப்ரோ’வின் நெக்ஸ்ட் ஸ்மார்ட் கேமரா ரியல் டைம் மானிட்டர் செய்ய சிறந்தது. இருவழி கம்யூனிகேஷன், பில்ட் இன் மைக்ரோஃபோன், ஸ்பீக்கர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. நைட் விஷன் மற்றும் டில்ட் போன்ற ஆப்ஷன்களுடனும் வெளியாகிறது. 120 டிகிரி வியூவில் எச்.டி. வீடியோவை ரெக்கார்ட் செய்ய இயலும்.
விலை- ரூ.3,033.

ஹோம் செக்யூரிட்டி கேமரா

வீடுகளில் பயன்படுத்த சிறந்த செக்யூரிட்டி கேமரா இது. ‘ஜெப்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. இதில் இருவழி ஆடியோ தொடர்பு, ஸ்மார்ட் ட்ராக்கிங், சவுண்ட் டிடெக்ஷன் மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் டெக்னாலஜி என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு ஆப் மூலம் சப்போர்ட் செய்யும். கேமரா கண்காணிப்பதை ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம். விலை - ரூ. 3,599.

ஒயர்லெஸ் ஹோம் கேமரா

குறைந்த விலையில் ஒரு ஒயர்லெஸ் கேமரா. ‘YI 87001’ என்பது இதன் பெயர். ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங் மற்றும் இருவழி ஆடியோ வசதி. 111 டிகிரி வைட் ஆங்கிளில் காட்சி களைப் பதிவு செய்கிறது. மேலும் 4 மடங்கு டிஜிட்டல் ஸூம், நைட் விஷன், இன்ஃப்ரா ரெட், நான் இன்வேசிவ் சென்சாரையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூலமாக வீட்டில் நடப்பதை ரியல் டைம் ஸ்ட்ரீமிங்கில் கண்காணிக்கலாம். விலை- ரூ. 2,499.

வைஃபை ஹோம் செக்யூரிட்டி கேமரா

இந்த கேமராவால் 360 டிகிரியில் செக்யூரிட்டி கவர் செய்ய இயலும். ‘MI’ நிறுவனத்தின் தயாரிப்பு இது. இதில் ஏ.ஐ. மோஷன் டிடெக்டர் அலெர்ட், இன்ஃப்ராரெட் நைட் விஷன், டாக்பேக் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. 1080 பிக்சல் ரெசல்யூஷனில் காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. விலை - ரூ.2,699

குற்றங்கள் குறைந்துள்ளன...

சென்னை மாநகர் முழுவதும் இதுவரை சுமார் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்
பட்டுள்ளன. இதன்மூலம் குற்றச்செயல்கள் குறைந்ததோடு, குற்றவாளிகளும் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மட்டுமல்ல, சங்கிலிப் பறிப்புகளும் 615 (2017ம் ஆண்டு); 444 (2018); 307 (2019) என படிப்படியாகக் குறைந்துள்ளன. ஆதாயக் கொலைகளும் 50 சதவீதம் வரை குறைந்துள்ளன.

இதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் குறைந்துள்ளன. சிசிடிவி கண்காணிப்பு கேமரா அதிக அளவில் பொருத்தப்பட்டதற்காக தேசிய அளவிலான ‘ஸ்காச் விருது’ மத்திய மனிதவளத் துறை அமைச்சரால் சென்னை போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கேமரா பல்ப்

பார்ப்பதற்கு பல்ப் போன்றே இருக்கும். இதை ஸ்மார்ட் பல்ப் அல்லது ஸ்மார்ட் கேமரா என்று சொல்லலாம். இதில் 360 டிகிரி கேமரா, ஸ்பீக்கர், வைஃபை, மெமரி கார்டு, எல்டி லைட், ஆடியோ ரெக்கார்டர், மோஷன் டிடெக்டர் என பல்வேறு வசதிகள் உள்ளன. இதனை இன்டர்நெட், ஸ்மார்ட்போன், வைஃபை மூலம் கனெக்ட் செய்துகொண்டு உலகின் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.

இந்த கேட்ஜெட்டை வாங்கும்போது ஆணி, ஸ்குரூ, பல்ப், பல்புக்கு தேவையான ஹோல்டர் என கேமராவை பொருத்துவதற்கான அனைத்துக் கருவிகளும் வழங்கப்படுகின்றன. பல்புக்குள் நல்ல தரமான ஸ்பீக்கர் உள்ளது. இதனை மொபைல் போனுடன் இணைத்து பாடல்களை ஸ்பீக்கரில் கேட்கலாம். பாட்டுக்கு ஏற்றவாறு லைட் கலர் மாறும். மோஷன் சென்சார் இருப்பதால் இந்த கேமரா இருக்கும் பகுதியில் ஆள் நடமாட்டம் ஏதாவது இருந்தால் உங்கள் மொபைலுக்கு அலர்ட் கொடுத்துவிடும்.

இதன் விலை 3,000 ரூபாய் மட்டுமே. சிசிடிவி கேமரா வாங்க முடியாதவர்கள் இந்த ஸ்மார்ட் கேமரா பல்பை வாங்கிக்கொள்ளலாம். கேமராவோடு பல்பும் இருப்பதால், இரவு நேரங்களில் வெளிச்சமும் கிடைக்கிறது. பல்புக்குள் மைக் இருக்கிறது. எனவே, யாராவது பேசினால் கூட தொலைதூரத்தில் இருந்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கேட்க முடியும்.

திலீபன் புகழ்