லூசிஃபர்
மலையாளத் திரைப்பட வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம், ‘லூஃசிபர்’. அமேசான் ப்ரைமில் தமிழில் காணக்கிடைக்கிறது. முதலமைச்சர் இறந்துவிடுகிறார். அவர் இடத்தைப் பிடித்துவிட்டால் நம் ராஜாங்கம்தான் என்று முதலமைச்சருக்கு நெருக்கமான உறவுகள் சதித்திட்டம் தீட்டுகிறது. இதை முறியடித்து அறத்தை நிலைநாட்ட கிளம்பியவனின் கதைதான் இந்தப் படம்.
குரேஷி அப்ராமை சர்வதேச போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கேரளாவின் முதலமைச்சர் பிகேஆர். மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அடுத்து யார் முதலமைச்சர் என்று கேரளாவே பரபரப்பாகிறது. பிகேஆரின் மகள் பிரியா, மருமகன் பாபி, அமெரிக்காவில் இருக்கும் மகன் ஜத்தின், கட்சியில் நீண்டகாலமாக இயங்கும் அனுபவசாலி வர்மா, சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்த ஸ்டீபன் - இந்த ஐந்து பேரில் ஒருவர்தான் பதவிக்கு வரப்போகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.
கட்சி நடத்துவதற்கு ஃபண்ட் தரும் அளவுக்கு கொள்ளைக் கும்பலுடன் நெருக்கமானவன் பாபி. வர்மா உட்பட பிகேஆரின் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களின் அனைத்து ரகசியங்களும் பாபிக்குத் தெரியும். அதனால் அவர்கள் அனைவரும் பாபியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அவன் சொல்வதைத்தான் கட்சியே கேட்கும். பாபி யாரை கை நீட்டுகிறாரோ அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர்.
இதில் ஸ்டீபன் மட்டுமே விதிவிலக்கு. மர்மமானவன். அவனைப் பற்றி பிரியாவுக்கு மட்டுமே ஓரளவு தெரியும். ஆனால், பிரியாவுக்கு அவனை சுத்தமாகப் பிடிக்காது.
ஸ்டீபனும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கிறான். இந்நிலையில் பிகேஆரின் மகன் ஜத்தினை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துகிறான் பாபி. ஜத்தின் ஆட்சிக்கு வந்தால் மாநிலமே தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்துவிடும். போதைப்பொருள் விற்பனை, கொள்ளைத் தொழிலை சுலபமாக நடத்தலாம். கேட்க யாருமில்லை என்று நினைக்கிறான் பாபி.
அத்துடன் தனது திட்டத்துக்கு எதிரியாக இருக்கும் ஸ்டீபன் மேல் பொய்க்குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கிறான். பாபியின் உண்மையான முகம் தெரியவர, அதிர்ந்துபோகிறாள் பிரியா. வேறு வழியில்லாமல் ஸ்டீபனின் உதவியை நாடுகிறாள். பாபியின் சதித்திட்டத்தை துவம்சமாக்கிய ஸ்டீபன் உண்மையில் யார்? ஸ்டீபனுக்கும் பிகேஆருக்கும் என்ன தொடர்பு? குரேஷி அப்ராம் யார்... என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை.
ஒரு ரசிகன் தனது தலைவனுக்குச் செலுத்திய காணிக்கையாகத்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது. அந்த ரசிகன், படத்தின் இயக்குநரான பிருத்விராஜ். தலைவன் ஸ்டீபனாக கலக்கியிருப்பவர் மோகன்லால்.
பிருத்விராஜ் இயக்கிய முதல் படம் இது. இயக்குநரின் பார்வையில் இல்லாமல் ஒரு ரசிகனின் கண்கொண்டு மோகன்லாலின் ஒவ்வொரு அசைவையும் படமாக்கியிருக்கிறார் பிருத்வி. சலிப்பே தட்டாமல் மூன்று மணி நேரம் செல்லும் திரைக்கதையை எழுதியவர் முரளி கோபி.
|