எந்த கொரோனா தடுப்பூசிக்கு ஆயுள் அதிகம்?



தடுப்பூசிகள் எல்லாம் சில மாதங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்குமா... குறிப்பிட்ட கால அளவுக்கு ஒருமுறை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள  வேண்டுமா...

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அநேகமாக 2021ல் பொதுப்புழக்கத்துக்கு வந்து விடும் எனும் நம்பிக்கையை நமக்குள் விதைத்துள்ளன. சென்ற வாரம் இங்கிலாந்தில் முதல்முறையாக 90 வயது மூதாட்டிக்கு பைசர் - பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி செலுத்தப்பட்ட நிகழ்வு நம் நம்பிக்கைக்கு உரம் ஊட்டுகிறது.

இந்நிலையில் -வரும் தடுப்பூசிகள் எல்லாம் சில மாதங்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எனவே, குறிப்பிட்ட கால அளவுக்கு ஒருமுறை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காரணம், நிரந்தரமான தடுப்பூசிகள் இன்னும் பலகட்ட ஆராய்ச்சி களுக்குப் பின்னரே புழக்கத்துக்கு வர முடியும். அதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாகும். இப்பொழுது அவசரத் தேவை கருதி உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில உலக நாடுகள் புழக்கத்துக்குக் கொண்டு வருகின்றன. ஆனால், அவற்றின் ஆயுள் சில மாதங்கள்தான்... என்ற கருத்து பரவி வருகிறது.

உண்மை நிலவரம் என்ன?

உள்ளே நுழைவதற்கு முன்னால் இரண்டு விஷயங்களை அறிமுகப்படுத்தி விடுகிறேன். ஒன்று, ஆற்றல் (Efficacy). அடுத்தது, ஆயுள் (Effectiveness).
தனது தடுப்பூசி 90 சதவீதத்துக்கு அதிகமாக ஆற்றல் உடையது என பைசர் நிறுவனமும், தனது தடுப்பூசி 100 சதவீதம் ஆற்றல் உடையது என மாடர்னா மருந்து நிறுவனமும் அறிவித்துள்ளன. பிப்ரவரியில் வரவிருக்கும் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் ஆற்றலும் 90 சதவீதத்துக்கு அதிகம் என அதைத் தயாரிக்கும் கமாலியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தயாராகும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ‘கோவிஷீல்டு’ 70 சதவீதம் பலன் தருவதாக பூனாவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆற்றலை அறிவது எப்படி?

ஆய்விலுள்ள தடுப்பூசிகளின் ஆற்றலைக் கணிக்கும் அளவுகோல்களுள் முக்கியமான ஒன்று - தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், வேஷம்போட்ட தடுப்பூசி (Placebo) போடப்பட்டவர்கள் ஆகியோரில் எத்தனை பேருக்குக் குறிப்பிட்ட ஆய்வுக் கட்டத்தில் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை எனும் விகிதத்தைப் பொறுத்து அந்தத் தடுப்பூசியின் ஆற்றல் அறிவிக்கப்படுகிறது.

இந்த அளவு தற்காலிகமானது; ஒவ்வொரு ஆய்வுக் கட்டத்திலும் மாறக்கூடியது; நீண்ட காலப் பாதுகாப்புக்கு உறுதி தராதது.
காரணம், ஆய்வுத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் காய்ச்சல், இருமல் வந்தவர்கள் மட்டும்தான் ஆற்றலைக் கணிக்கும் கணக்குக்கு வந்தவர்கள்.
பொதுவாக, கொரோனாவைப் பொறுத்தவரை அறிகுறிகள் இல்லாமலும் பலருக்குத் தொற்று ஏற்படுவதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர்களிடமிருந்து அடுத்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதும் அறியப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் பார்த்தோமானால், இந்த ஆற்றல் கணக்கு மாறக்கூடும் என்பது தெளிவாகிறது.அடுத்ததாக, ஆய்வுத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிரணுக்களின் (Antibodies) எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நடைமுறையில், கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்கு உருவாகும் எதிரணுக்கள் மூன்று மாதங்களில் மறைந்து விடுகின்றன. இப்போது தடுப்பூசி வழியாக உருவாகும் தடுப்பாற்றல் அணுக்களின் ஆயுளும் இதே போன்று சில மாதங்களுக்கு மட்டும் இருப்பதாகவே தெரிகிறது.
ஆயுளை அறிவது எப்படி?

ஊடகங்களில் தங்களது தடுப்பூசிகளின் ஆற்றல் கணக்கைத் தெரிவித்துள்ள மருந்து நிறுவனங்கள் ஆயுளைத் தெரிவிக்கவில்லை. அப்படித் தெரிவிக்க வேண்டுமானால் குறைந்தது ஓராண்டுக்காவது தொடர்ந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
தடுப்பூசியின் ‘ஆற்றல்’ என்பது அது ஆய்வுக்கட்டங்களில் உள்ளபோது கணிக்கப்படுவது. ஆனால், அதன் ‘ஆயுள்’ என்பது அது பொதுப்புழக்கத்துக்கு வந்த பிறகு கணிக்கப்படுவது. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு பன்னாட்டு மருந்து நிறுவனம் ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சிகள் கொடுத்து, அவர்களில் சிலரை ஆற்றல் உள்ளவர்களாக அறிவித்து, அதன் கிளைகளில் நிரந்தரப் பணியில் அமர்த்துகிறது என்று வைத்துக்கொள்வோம்.

நடைமுறையில், அவர்க ளது ஆற்றல் ஒன்றுபோலிருப்பதில்லை; வித்தியாசப்படுவ துண்டு. நாட்டின் தேவை, சந்தைத் தன்மை, அணுகுமுறை போன்ற பல காரணங்களால் அது வேறுபடுகிறது. அதுபோலவே, பொதுப்புழக் கத்துக்கு வரும் தடுப்பூசி, பயனாளியின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்திக்குறை, உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், சிறுநீரக நோய் போன்ற துணை நோய்கள் காரணமாக தன் ஆற்றலை இழந்துவிடுகிறது. அப்போது அதன் ஆயுள் குறைந்துவிடுகிறது.

இதை அறிவதற்கு புதிய தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும்.
உதாரணமாக, கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தட்டம்மை தடுப்பூசி ஆயுளுக்கும் ஆற்றல் தருவதாகவும், நிமோனியா தடுப்பூசி 5 ஆண்டுகளுக்கே பலன் தருகிறது என்றும் இந்த அடிப்படையில்தான் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது உருவாகியுள்ள தடுப்பூசிகளின் ஆயுளைக் கணிக்க இப்போது கால அவகாசம் இல்லை என்பதால், அவற்றின் ஆயுளைத் தெரிவிக்க முடியவில்லை. அப்படியானால் அதற்கு மாற்றுவழி இல்லையா? இருக்கிறது.

‘டி செல்’ பரிசோதனை நம் தடுப்பாற்றல் மண்டலத்தில், ‘பி செல்’கள், ‘டி செல்’கள் என இருவகை உண்டு. ‘பி செல்’கள் எதிரணுக்களை உற்பத்தி
செய்பவர்கள். உடனடி பாதுகாப்புக்கு (Antibody Mediated Immunity-AMI) உறுதி கொடுப்பவர்கள். ‘டி செல்’கள் நினைவாற்றல் செல்களை உற்பத்தி செய்பவர்கள். நீண்டகாலப் பாதுகாப்பை (Cell Mediated Immunity-CMI) உறுதி செய்பவர்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுள் எந்தத் தடுப்பூசிக்கு ‘டி செல்’களைத் தூண்டும் ஆற்றல் அதிகமாக இருக்கிறதோ, அதன் ஆயுள் கூடுதலாக இருக்கும் என்பது அறிவியலில் அடிப்படை.

இப்போது இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசிகளுக்கு ‘டி செல்’களைத் தூண்டும் ஆற்றலும் உண்டு என்று பொதுவாகவே அறிவித்துள்ளனர். உறுதி செய்யப்படவில்லை.இதை உறுதி செய்ய ‘டி-ஸ்பாட்’ பரிசோதனை (T-SPOT Test) உள்ளது. பயனாளியின் ரத்தத்தில் ‘டி செல்’களை அளக்கும் நவீன பரிசோதனை இது. இப்போது இங்கிலாந்தில் தயாராகும் கொரோனா தடுப்பூசிகளை ஆய்வுக்காகப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்தப்
பரிசோதனையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவற்றின் முடிவுகள் புத்தாண்டில் தெரிந்து விடும்.

இதுபோல் மற்ற கொரோனா தடுப்பூசிகளுக்கும் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டால், எந்தத் தடுப்பூசிக்கு ஆயுள் அதிகம் என்பதைத் தீர்மானித்துவிடலாம்.ஒருவருக்கு கொரோனாவுக்கான தடுப்பாற்றல் எப்படி உள்ளது, எவ்வளவு காலம் அது நீடிக்கும், ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமா, இரண்டாம் தவணை தேவையா, எப்போது அது தேவை ஆகிய விவரங்களையும் துல்லியமாக இதில் தெரிந்துகொள்ளலாம்.

அதனால்தான் நாட்டின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அனுமதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் இந்தப் பரிசோதனையும் இனி இடம்பெற வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

தடுப்பூசி சந்தேகங்கள்!

? கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு எப்போது வரும்?
! இன்னும் சில மாதங்களில் வந்துவிடும்.
? தடுப்பூசியை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டுமா?
! எல்லோரும் போட்டுக்கொண்டால் நல்லது.
? யாருக்கு, எப்போது கிடைக்கும்?
! கொரோனா தடுப்பில் முன்களப்பணியாளர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ராணுவத்தினர், காவலர்கள்,
முதியோர்கள், துணை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாகத் தடுப்பூசி போடப்படும். மற்றவர்களுக்கு அடுத்ததாகப் போடப்படும்.
? எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது
கட்டாயமா?
! கட்டாயமில்லை.
? ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும்
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமா?
? ஆமாம், போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் கடைசிக்கட்டத்தில் போடப்படுவார்கள்.

? குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமா?
! இதுகுறித்த ஆய்வுகள் முழுமை பெறாததால், இப்போதைக்கு
குழந்தைகளுக்கு போடப்படாது.
? குழந்தைகளுக்கான தடுப்பூசி அளவு மாறுமா?
! மாறாது.
? தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதும் நோய் எதிர்ப்பு சக்தி
கிடைத்துவிடுமா?
! இல்லை. இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட 7லிருந்து 15 நாட்களுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

? எவ்வளவு காலத்துக்கு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு
கொடுக்கும்?
! இது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. போகப்போகவே தெரிய வரும்.
? மறுபடியும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமா?
! காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.
? என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
! தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி, மிதமான காய்ச்சல், சோர்வு சில நாட்களுக்கு இருக்கும்.

இந்தியத் தடுப்பூசிகளுக்கு ஆயுள் அதிகம்!

கடந்தகாலத் தடுப்பூசி வரலாறு களைப் புரட்டிப் பார்த்தால் வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் கிருமிகளையோ அதன் மரபணுச்சரடுகளையோ பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு ஆயுள் அதிகம் என்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தோமானால், இந்தியாவில் தயாராகும் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’, ‘ஜைகோவ்-டி’ ஆகிய மூன்றுக்கும் ஆயுள் அதிகம் எனத் தெரிகிறது.

டாக்டர் கு.கணேசன்