Family Tree-275 வருடங்களுக்கு மேலாக இயங்கும் பழத்தோட்டம்!



‘முதல் தலைமுறை பிசினஸை உருவாக்கும்; அடுத்த தலைமுறை அதை விரிவாக்கும்; மூன்றாம் தலைமுறை எல்லாவற்றையும் அழித்துவிடும்...’
- உலகம் ஒப்புக்கொண்ட நிகழ்வு இது. ஆனால், மூன்றாம் தலைமுறைகளைத் தாண்டி ஒன்பது, பத்து என்று தொடர்ந்துகொண்டே செல்கிறது சில குடும்ப பிசினஸ்.

அதுவும் விவசாயம் போன்ற ஆதித் தொழிலில் 275 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நின்று ஆச்சர்யமளிக்கிறது ‘லைமன் பழத்தோட்டம்’ (Lyman Orchards). அமெரிக்காவில் நீண்ட காலமாக குடும்ப பிசினஸை நடத்தி வரும் நிறுவனங்களின் பட்டியலில் 12வது இடம். கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள மிடில்ஃபீல்டு நகரின் அடையாளம். ‘Pick Your Own’ என்ற பிசினஸ் மாடலை அறிமுகம் செய்த பழத்தோட்டம்... என்று இதன் பெருமைகள் நீள்கிறது.

இங்கே விளையும் பழங்கள் அமெரிக்காவின் 27 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய விவசாய முறையையும் இணைத்தது இதன் சிறப்பு. பூச்சிக்கொல்லி மாதிரி சுற்றுச்சூழலுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் எந்த ஒன்றையும் பயன்படுத்துவதில்லை. லைமனின் ஆப்பிள், பேரிக்காய் ‘eco’ சான்றிதழ் பெற்றவை.

பிசினஸைத் தாண்டி ‘Agritainment’, ‘Agritourism’ - என்ற புது டிரெண்டை செட் செய்து குழந்தைகளையும் தன்வசப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இயற்கையுடன் இணைந்த பொழுது போக்கை ‘Agritainment’ என்றும், இயற்கை சூழ்ந்த பகுதிகளையும் விவசாயம் நடைபெறும் இடங்களையும் சுற்றிப்பார்ப்பதை ‘Agritourism’ என்றும் அழைக்கின்றனர்.

அதனால் பழங்களை வாங்க வரும் பெரியவர்களைவிட, பழத்தோட்டத்தில் விளையாட வரும் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
கடந்த 3 நூற்றாண்டுகளில் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்கள், கடும் பனிப்பொழிவு, தீ விபத்திலிருந்து லைமன் தோட்டம் பலமுறை மீண்டு எழுந்தது வரலாறு.

*ஜான் லைமன்

லைமன் குடும்பத்தின் பூர்வீகம் இங்கிலாந்து. அமெரிக்காவில் குடிபுகுந்த லைமன் குடும்பம், மாபெரும் விவசாய சாம்ராஜ்யமாக வளரக் காரணமானவர் விவசாயி ஜான் லைமன். 1717ல் மிடில்ஃபீல்டு நகரில் பிறந்தார். மிடில்டவுனின் மந்திரி யான சாமுவேல் மற்றும் நியூ ஹெவன் நகரை உருவாக்கியவர்களில் ஒருவரான டேவிட் ஆகிய இருவரின் கொள்ளுப்பேத்தியான ஹோப்பைத் திருமணம் செய்ததுதான் ஜான் லைமனின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை.

ஆம்; 1741ம் வருடம் ஜான் லைமன் தன் மனைவியுடன் இணைந்து 37 ஏக்கர் நிலத்தை வாங்கினார். மிடில்ஃபீல்டில் அமைந்துள்ள இந்த இடம்தான் லைமன் பழத்தோட்டத்தின் முதல் சொத்து. கனெக்டிகட் நதிப் பள்ளத்தாக்கின் செழிப்பான பகுதி இது. இதன் வளமான மண்ணும், இங்கே நிலவும் பருவநிலையும் ஆப்பிள் மரங்கள் சிறப்பாக வளர்வதற்கு ஏதுவானவை. அவர் நிலத்தை வாங்கும்போதே அங்கே சில ஆப்பிள் மரங்கள் இருந்தன. ஆப்பிளுடன் சேர்த்து கால்நடைத் தீவனங்களுக்கான பயிர்களையும் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அடுத்த சில வாரங்களில் அருகிலிருந்த 25 ஏக்கரையும் குறைந்த விலையில் வளைத்துப்போட்டார் ஜான்.

1760ல் 187 ஏக்கராக விரிவடைந்தது ஜான் லைமனின் விவசாயம். ‘விவசாயம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நிலத்தைப் பாதுகாத்தல்’ என்பதுதான் ஜான் லைமனின் தாரக மந்திரம். இதையே அவரது சந்ததியினரும் பின்பற்றியதால் நிலத்தைப் பாதுகாத்ததுடன், 275
வருடங்களுக்கும் மேலாக  விவசாயத்தையும் தொடர்ந்து செய்ய முடிகிறது.

*இரண்டாம் டேவிட் லைமன்

ஜான் லைமனின் கொள்ளுப்பேரன். செழிப்பான விவசாயியான டேவிட் குடும்ப பிசினஸை உயர்த்தியதோடு மிடில்ஃபீல்டு நகரத்தையும் வளர்த்தெடுத்தார். 19ம் நூற்றாண்டிலேயே வாஷிங் மெஷின் தயாரிக்கும் நிறுவனத்தையும் ரயில்வே சாலையையும் மிடில்ஃபீல்டுக்கு கொண்டுவந்ததும் இவரே. இதுபோக தானியக் களஞ்சியம், பண்ணை வீடு என அடுத்த தலைமுறைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வைத்தார்.

அதனால் குடும்ப பிசினஸ் எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்தது. தவிர, கொள்ளுத் தாத்தா ஜான் லைமன் வாங்கிய இடத்தில் 1864ம் வருடம் ஒரு  பண்ணைவீட்டைக் கட்டினார். இந்த வீடு அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இப்போது இங்கே திருமணம், கார்ப்பரேட் மீட்டிங், சந்திப்புகள் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. டேவிட்டிற்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் லைமன், 1890லிருந்து பழத்தோட்டத்தை நிர்வகிக்க ஆரம்பித்தார். இவரது காலத்தில்தான் மகத்தான வளர்ச்சியை எட்டியது குடும்ப பிசினஸ்.

கால்நடைத் தீவனத்துக்காக புல்லும் வைக்கோலும் பயிரிட்டார். இதுபோக பீச் பழங்களை ரயில் மூலம் பக்கத்து நகரங்களுக்குக் கொண்டு சென்றார். ஆண்டுக்கு 600 முதல் 900 டன் வரையிலான புல்லும் வைக்கோலும் விற்பனையாகின.

*முக்கிய நிகழ்வுகள்

1917ம் வருடம் மிக சோகமான வருடமாக லைமன் பழத்தோட்டத்துக்கு அமைந்தது. ஆம்; நிலத்திலிருந்து நான்கு அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து நிற்கும் அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு. அதனால் 500 ஏக்கர் பரப்பளவில் செழித்து வளர்ந்திருந்த பீச் பழ மரங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன.

லைமன் பழத்தோட்டத்துக்கு மட்டுமல்ல, கனெக்டிகட் மாநிலத்திலுள்ள அனைத்து பழத்தோட்டங்களுக்கும் இதே நிலை. லைமன் பழத்தோட்டம் முடிவை எட்டிவிட்டது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அடுத்த பத்து வருடங்களில் மீண்டும் பீச் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தவிர, பலவகையான ஆப்பிள் மரங்களை நடவு செய்ய விதைகள் தூவப்பட்டன். அவை இன்றும் செழிப்புடன் காட்சியளிக்கின்றன. இப்போதைய ஆப்பிள் மரங்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

1931ல் 40 ஆயிரம் புஷல் ஆப்பிள்களை வைக்க குளிர்சாதன வசதியுள்ள குடோன் கட்டப்பட்டது. ‘புஷல்’ என்பது அளவீட்டைக் குறிக்கும் சொல். ஒரு புஷல் அளவுள்ள கூடையில் 21.8 கிலோ கிராம் எடையுள்ள ஆப்பிள்களை வைக்கலாம். 200 வருடங்களாக விவசாயம் செய்யும் குடும்பமாக அறியப்பட்ட லைமன் குடும்பம், 1949ல் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக பரிணமித்தது. ‘தி லைமன் ஃபார்ம், இன்க்’ என்று பெயர் சூட்டி நிறுவனத்தை தலைமை தாங்கினார் ஜான் லைமன் சீனியர். நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக ‘போர்டு ஆஃப் டைரக்டர்ஸ்’ குழு உருவாக்கப்பட்டது.

கடும் பனிப்பொழிவுக்குப் பிறகு லைமன் குடும்பத்துக்கு விழுந்த அடுத்த அடி - 1956ல் மூன்று அடுக்கு பிரமாண்டமான தானியக் களஞ்சியம் நெருப்புக்கு இரையானது. அதிலிருந்த 130 மாடுகளில் 75 மட்டுமே காப்பாற்றப்பட்டன. தானியங்கள் அனைத்தும் சாம்பலாகிவிட்டன. இந்தக் களஞ்சியத்தை 1866ல் கட்டியவர் இரண்டாம் டேவிட் லைமன்.

வசந்தகாலத்திலும் கடுங்குளிரிலும் ஆப்பிள் மிருதுவாகவும் கெட்டுப்போகாமலும் இருக்க 1963ல் நவீன வசதிகளுடன் கூடிய கிடங்குகள் அமைக்கப்பட்டன.வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய பழங்களை அவர்களே மரங்களிலிருந்து பறித்துக்கொண்டு பணம் செலுத்தலாம். ‘Pick Your Own’ எனும் இந்த முறையை 1966ல் கொண்டுவந்தது லைமன் குடும்பம். உயரத்திலிருக்கும் பழங்களைப் பறித்துத் தர உதவியாளர் இருப்பார்.

விவசாயம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கால் பதித்தது. 1969ல் பிரமாண்ட கோல்ஃப் மைதானம் உருவாக்கப்பட்டது. இன்று கனெக்டிகட் மாநிலத்திலேயே சிறந்த கோல்ஃப் மைதானம் இதுதான். கோல்ஃப் விளையாடுவதற்கான பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.1972ம் ஆண்டு ஆப்பிள் பேரல் என்ற சந்தை உருவானது. இங்கு இருக்கும் பேக்கரி அமெரிக்கர்களின் மத்தியில் வெகு பிரபலம். இங்கே கைகளால் செய்யப்படும் ‘ஆப்பிள் பை’யின் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. பல விருதுகளை அள்ளி யிருக்கிறது லைமனின் ‘ஆப்பிள் பை’.

1996ல் லைமனில் தயாரிக்கப்படும் ‘பை’களுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டது. அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களுக்கு ‘பை’கள் விநியோகம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அந்த சூடு இன்னும் தணியவில்லை.2000ம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்காக புதிர்ப் பாதைகள் நிறைந்த சோளக்காட்டை உருவாக்கியது லைமன். 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்தக் காட்டுக்குள் நுழைந்து வெளியே வருவது உள்ளூர்வாசி களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு; விளையாட்டு.

புதிர்க் காட்டுக்குள் நுழைய பெரியவர்களுக்கு 10 டாலர் கட்டணம். 4 - 12 வயது குழந்தைகளுக்கு 5 டாலர். 3 வயதுக்கும் குறைவானவர்களுக்கு இலவசம். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அமெரிக்க புற்றுநோய்க் கழகத்துக்கு நன்கொடையாக வழங்கிவருகிறார்கள் லைமன் பழத்தோட்டத்தினர்.

சோளப் புதிர்க்காட்டுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2007ல் 3 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி வடிவில் சூரியகாந்தி மலர் புதிர் தோட்டத்தை கட்டமைத்தது லைமன். கோடைக்காலத்தில் இங்கே மக்களின் கூட்டம் அள்ளும். இதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை கனெக்டிகட் குழந்தைகள் மெடிக்கல் சென்டருக்கு வழங்குகிறார்கள்.2016ல் 275ம் வருடத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடியது லைமன் குடும்பம்.

*இன்று...

மிடில்ஃபீல்டில் 1,100 ஏக்கரில் பரந்து விரிந்து பசுமையாக காட்சியளிக்கிறது லைமன் விவசாய சாம்ராஜ்யம். இதில் 450 ஏக்கரில் கோல்ஃப் மைதானமும், 350 ஏக்கரில் பழத்தோட்டமும், 37 ஏக்கரில் ஆப்பிள் பேரல் சந்தையும் பண்ணை வீடும் அமைந்துள்ளன. 20 வகையான ஆப்பிள்களும் 50 வகையான பீச் பழங்களும் 8 வகையான பேரிக்காய்களும் ஸ்ட்ராபெரீஸ், ப்ளூபெரீஸ், ராஸ்பெரீஸ், ஜோஸ்டாபெரீஸ், ஸ்குவாஷ் மலர்களும், பூசணிக்காய்களும் பருவகாலத்துக்கு ஏற்றமாதிரி விளைந்து லைமன் பழத்தோட்டத்தை அலங்கரிக்கின்றன. எட்டாம் தலைமுறையைச் சேர்ந்த மூன்றாம் ஜான் லைமன் குடும்ப பிசினஸை நிர்வாகம் செய்து வருகிறார். 2020ம் வருடத்தின் நவம்பர் வரைக்குமான ஆண்டு வருமானம் 133 கோடி ரூபாய்!

புத்தகம்

லைமன் குடும்பத்தின் முதல் ஐந்து தலைமுறைகளைப் பற்றி ‘Thy Children’s Children’ என்ற வரலாற்று நாவல் வெளிவந்துள்ளது. பல புகழ்பெற்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்தக் குடும்பத்தைப் பற்றி பெரிதாக திரைப்படங்கள் எதுவுமே வெளிவரவில்லை.

த.சக்திவேல்