நீலநிற தேவதைகள்!
‘ஒய்ங்... ஒய்ங்...’ என்ற ஆம்புலன்ஸ் சத்தம் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த சுந்தரின் காதுகளில் விழுந்தது. இரண்டு நிமிடங்களில் அதன் சத்தம் மிக அருகாமையில் கேட்கவே என்னவென்று வெளியே வந்தவன் இரண்டு பேர் நீலநிற சட்டையில் கேட் அருகே வந்து நிற்பதைப் பார்த்தான்.“இங்க யாருங்க சுந்தர்?” என்றான் அதில் ஒருத்தன்.
“நான்தான் சுந்தர்... என்ன விஷயம்…” என்றான் லேசான கலவரத்துடன்.“சார்… கார்ப்பரேஷனிலிருந்து வரோம்... உங்களுக்கு கோவிட் பாசிடிவ்னு வந்திருக்கு...”அதிர்ந்தான் சுந்தர். ‘‘லேசா ஜுரம்னு டெஸ்ட்டுக்குக் கொடுத்தேன்... ஆனா, இப்ப ஒண்ணுமில்ல... ஐயாம் ஆல்ரைட். பாருங்க இப்ப கூட தோட்ட வேலையில்தான் இருக்கேன்...”‘‘சாரி சார்... அதெல்லாம் தெரியாது. உங்கள பிக்அப் பண்ணி மருத்துவமனையில் சேர்க்க ஆர்டர். கொஞ்சம் சீக்கிரம் கிளம்புறீங்களா…”
“ஐயோ சார்… இப்பதான் சார் ஆன்லைன்ல பிஸினஸ் கொஞ்சம் சூடு பிடிக்குது... வீட்ல வச்சே பார்த்துக்கிறேன் சார்…”“சார் இப்ப வரப்போறீங்களா இல்லையா…” அவர்கள் குரலில் இப்போது மரியாதை குறைந்து கடுமை எட்டிப்பார்த்தது.
அப்போது சுந்தரின் போன் ஒலித்தது. “மிஸ்டர் சுந்தரா?’’ என்றது முரட்டுக்குரல் ஒன்று. ‘‘கருணைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் பேசறேன்...”“என்ன போலீஸா….” அதிர்ந்தான் அவன்.
“ஆமா சார்... ஆஸ்பத்ரிலதானே இருக்கீங்க?” இல்லை என்று சொன்னால் அடுத்து சைரன் ஊதிக் கொண்டு போலீஸ் வந்துவிடும் போலிருக்கே...இதற்குள் சித்ரா வெளியே ஓடிவந்தாள். ‘‘என்னாச்சுங்க…?” என்றாள் பரபரப்பாய்,“இன்னும் என்னடி ஆகணும்... கோவிட்டாண்டி எனக்கு… இப்ப உனக்கு சந்தோஷமா இருக்குமே... என் மூஞ்சிய ஒரு பதினைஞ்சு நாள் பார்க்காம இருக்கலாம்னு...”“தெய்வமே…”“தள்ளுடி...” என்றவன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டான். அவள் நிலை தடுமாறி விழுந்தாள்.
ஆம்புலன்ஸ் அவனை ஏற்றிக்கொண்டு ஓசை எழுப்பியவாறே பறந்தது. உள்ளே ஏற்கெனவே அங்கு ஏழெட்டுபேர் பீதியில் இருந்தார்கள். ஒருவரும் பேசிக் கொள்ளவில்லை.“சித்ரா கண்ணு சொல்லிட்டு அழேண்டி… ஏண்டி அழறே… அவர் அடிச்சாரா? சூடு வெச்சாரா..? சாம்பாரை முகத்தில் வீசுனாரா... ஐயோ... அந்தப் பாழாப்போன ஐந்து லட்சத்த அன்னிக்கே கொடுத்திருக்கணும்டி… உங்கப்பா ஹார்ட் அட்டாக்ல போவார்னு யார் கண்டா? இப்படி ஆறு வருஷமா உன்ன கொடுமைப் படுத்துறாரேடி…” - லட்சுமியின் விம்மல் சித்ராவை எரிச்சலடைய வைத்தது.
“அம்மா... இனிமே நான் எதுவுமே உங்கிட்ட சொல்லப் போறதில்ல. இப்ப நான் போன் பண்ணது... அவருக்கு கொரோனா ஜுரம்மா... கூட்டிட்டுப் போய் ரெண்டு நாளாச்சு… எங்க கூட்டிட்டுப் போனாங்கன்னு தெரியல. கார்ப்பரேஷன்காரங்க கிட்ட பேசமுடில… அவர் அண்ணன் தம்பிங்க சரியா பேசல. அண்ணிமாருங்க தடுக்கிறாங்க... நீ மாமாகிட்டயும் தம்பிகிட்டயும் பேசும்மா. எனக்கும் டெஸ்ட் எடுத்திருக்கு...” “கொரோனாவா...” அலறினாள் அம்மா.
“கத்தாதேம்மா… சொன்னத செய்...” “மாமாவையும் தம்பியையும் சண்டையில அடிக்கப்போனாரேடி... அவங்களைப் பார்த்தா அவருக்கு எகிறிடப் போவுதுடி…” “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... சீக்கிரம் போனைப் போடும்மா...” ஏழாவது மாடி. ஜிலுஜிலு காற்று. அவன் அதிர்ஷ்டம். தனி அறை கிடைத்து விட்டது.
‘எனக்குத்தான் ஒன்றுமில்லையே… ஏன்தான் இங்கு கொண்டுவந்தானுகளோ...' என்று நினைத்தான் சுந்தர்.கட்டிலில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு அவர்கள் தந்த சாத்துக்குடி ஜூஸைக் குடித்துக் கொண்டிருந்தபோது கடுமையான இருமல் வந்தது. முதலில் புரை ஏறிவிட்டது என நினைத்தான். ஆனால், அப்படித் தெரியவில்லை. மூச்சுத் திணறுவது மாதிரி இருந்தது. ஏதோ ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட மாதிரி இருந்தது. முதல் முதலாக ஒரு பயம் வந்தது.
வெராண்டாவிற்கு வந்து அங்கு இருந்த பணியாளரிடம் திக்கித் திணறி விஷயம் சொல்ல சில நிமிடங்களில் தலை முதல் கால்வரை முழுக்க முழுக்க நீல நிறத்தில் கோவிட் கவசமணிந்த இரண்டு பேர் ஓடி வந்தார்கள். ஆணா பெண்ணா என்றுகூடத் தெரியவில்லை. அவனருகில் வந்தபோது கேட்ட மெல்லிய குரலில் அவர்கள் பெண்கள் என்று புரிந்து கொண்டான். அடுத்த நிமிடம் ‘கடகட’ வென சக்கரச் சத்தம். அதில் கருப்பு நிற ஆக்ஸிஜன் சிலிண்டர் நின்றுகொண்டிருந்தது. தொடர்ந்து ‘கிரீச் கிரீச்’ என்ற ஒலியுடன் ஸ்ட்ரெச்சர். அதில் படுக்க வைத்தார்கள். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டப்பட்டது.
நீளமான வெராண்டா. பின்னாடி நீலநிற உடை நர்சுகள் ஓடி வந்தார்கள். அப்போது சுந்தர் கத்தினான். ‘‘சிஸ்டர் வயிறு கலக்குது... மோஷன் வர மாதிரி இருக்கு... டாய்லட் உடனே போகணும்...” “அதெல்லாம் முடியாது... இதோ லிஃப்ட் வந்தாச்சு...” அவன் மாஸ்க்கை எடுத்து கத்தினான். ‘‘சிஸ்டர்... இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லையா… நான் இறங்கி ஓடிடுவேன்... படுக்கை அசிங்கமாயிரும் போலிருக்கு சிஸ்டர்…”இதைக்கேட்டதும் ஒருத்தி ஓடி இன்னொரு பெண்ணை அழைத்து வந்தாள். அவளும் முழுக்க முழுக்க நீலக் கவச உடை. அவள் கையில் ஒரு பெட்பேன் இருந்தது.
“அன்பனுக்கு என்னாச்சும்மா…?’’ “இன்னும் அவன் வரலம்மா. அடுத்த அரைமணி நேரம் நாந்தான்...” என்றவள் சுந்தர் காலருகே வந்து ஒரு சின்ன டவலை அவன் இடுப்பில் போட்டு, ‘‘டிரஸ்ஸ இழுத்து விடுங்க சார்...’’ என்றாள்.இரண்டு பேர் ஒரு வெள்ளை பெட்ஷீட்டை உயர்த்திப் பிடித்தார்கள். அவனுக்கு வெட்கத்தில் உயிரே போயிற்று.திடீரென அவனுக்கு சித்ராவின் நினைவு வந்தது. கூடவே ஐந்து வயது மகள் சுதா நினைவும். கண்கள் குப்பென்று கலங்கி விட்டன.
இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் அவன் சந்தித்திராத ஓர் உணர்வு. கண்ணை மூடிக் கிடந்தான். சுதாவிற்கு அப்போது இரண்டுவயதிருக்கும். சுந்தர் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். வெளியில் இருந்து வந்து டிரஸ் கூட மாற்றவில்லை. அப்போது சித்ரா அவனிடம் குழந்தையை நீட்டி, ‘‘ஒரு நிமிடம் குழந்தையை வெச்சுக்கிடுங்க. டாய்லட் போயிட்டு வந்திடறேன்...” என்றவள் அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் சுதாவை அவன் மடியில் வைத்து விட்டு ஓடினாள்.
அவள் திரும்பி வருவதற்கும் குழந்தை உச்சா போவதற்கும் சரியாக இருந்தது. அவ்வளவுதான். வந்ததே கோபம் அவனுக்கு. குழந்தையை வாங்கக் குனிந்தவளின் கன்னத்தில் அறைந்தான். ‘‘சனியனே... இன்னைக்குத்தான் முதல் முதலா போடறேன்... உனக்கு துப்பே இல்லடி. ஐந்து லட்சத்தை வாங்கிவரத்தான் துப்பில்லை. இதுக்குமா துப்பில்லை... என்னடி பார்க்கிறே...” என்றவன் குனிந்து ஒரு பொம்மையை எடுத்து வேகமாக எறிந்தான். அவள், ‘‘ஐயோ குழந்தை...” என்று அலறியவாறே அதை அணைத்துக் கொண்டாள். அதெல்லாம் நினைவு வந்தது. கண்களில் புறப்பட்ட நீர்த்துளி காதுகளை நனைத்தது.
லிஃப்ட்டில் ஸ்ட்ரெச்சர் நுழைந்தது. கண்களை மூடிக்கொண்டான். அவன் தலைமாட்டில் இருந்த யாரோ இரண்டு பெண்கள் கிசுகிசுப்பாய்ப் பேசுவது தெளிவாக இவனுக்குக் கேட்டது.‘‘இன்னைக்கு பனிரெண்டு அட்மிஷன்டி… அஞ்ச தூக்கிட்டாங்க... அதுல ஒருத்தன் நம்ம லோகு. பணம் பணம்னு அலைஞ்சு பொண்டாட்டி புள்ளைய கவனிக்காம கொடுமைப்படுத்தினான்... இப்ப அனாத பொட்லமா கட்டிட்டாங்க... ஒரு ஈ காக்கா வரல... வரவும் முடியாது...”
அவனுக்கு அவர்கள் பேசியது தீக்குழம்பாய் காதுகளில் இறங்கியது. இனி என்ன நடக்கும்? எப்படி போகும்? மருத்துவர்களுக்கே தெரியாதாம். இங்கு வந்தபிறகுகூட நன்றாகத்தானிருந்தேன். இப்போது மூச்சுத்திணறல். டயரியா… இதோ ஸ்கேன் எடுக்க கூட்டிப்போகிறார்களாம். அவனுக்கு சித்ராவையும் குழந்தையையும் உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. சித்ரா வருவாளா அல்லது என் நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் சந்தர்ப்பமாக ‘நல்லா வேணும், படட்டும்...’ என்று இருந்து விடுவாளா... வெளியே தள்ளிக்கொண்டு வந்தார்கள். மரங்களின் நிழல்கள். இடையில் தெரியும் பளீர் வானம். பறந்து செல்லும் பெயர் தெரியா பறவைகள். மரத்தில் சிறகடித்து சந்தோஷமாக அமரும் காகம். எதையோ பார்த்து விரட்டிக் கொண்டு ஓடும் நாய்கள்.
இது என்ன உலகம். இந்த சந்தோஷ உலகம் இப்போது மனிதனுக்கு இல்லையே..!திறந்த கண்களை மறுபடியும் மூடிக்கொண்டான் சுந்தர். மறுபடியும் ஏதோ சத்தம். ‘‘என்னம்மா... அறிவிருக்கா..? இந்த வழியா வர்றியே… அதுலதான போவணும்… இப்ப நாங்க எப்படி போறது... கடவுளே....’’ நர்ஸ்கள் சத்தம் போட அந்த பதில் பெண்குரல் “மன்னிச்சுக்கோங்கம்மா... அந்த வழில ரெண்டு ஆம்புலன்ஸ் முட்டி ஜாமாயிப் போச்சு... ஒரே சண்டை. சூப்ரவைசர் இப்படிக்கா போகச் சொல்லிட்டாரு...”“போய்த் தொலை...” வழிவிட்டார்கள்.
இவன் கண்ணைத்திறந்து பார்த்தான். ‘குபுக்’ என்று ஏதோ ஒன்று தொண்டைக்குழியில் புறப்பட்டு வயிற்றில் இறங்கி அத்தனை குடல்களையும் மொத்தமாகப் பிசைந்தது. அவன் பக்கத்தில் தலை முதல் கால்வரை போர்த்தப் பட்டிருந்தது ஒரு பிணம். ஏறக்குறைய அருகில் படுத்திருந்தது. கத்தினான். முகத்தைத் திருப்ப முடியாமல் ஆக்ஸிஜன் மாஸ்க் தடுத்தது. ‘தடதட’ வென்று ஒரு நிமிடத்தில் அவள் தள்ளிக்கொண்டு போய்விட்டாலும் அவன் மனதுள் ஏதோ ஒரு மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம் இறங்கிய மாதிரி இருந்தது. அவனுக்கு பிடிபட மறுத்தது.
ஸ்கேன் ப்ளாக் வந்துவிட்டது. ஒரு நிமிடம் நின்றார்கள். ‘‘சார் வலது பக்கம் பாருங்க... தூரத்துல...” பார்த்தான். கண்களை நம்ப முடியவில்லை. தூரத்தில் சித்ரா, சுதா, மாமியார், சித்ராவின் மாமா, தம்பி எல்லோரும் மரத்தடியில் இருந்து கை காட்டினார்கள். எல்லோர் முகத்திலும் கவலை. சுதா, ‘‘அப்பா...” என்று ஓடிவர முயல்வதும் எல்லோரும் குழந்தையின் கையைப் பிடித்து இழுப்பதும் தெரிந்தது.
அவன் கண்கள் பனித்து விட்டன. ‘எனக்கென்று இருக்கும் அன்பான உலகம். இதை எப்படி இவ்வளவு நாள் தொலைத்தேன்...’ அவர்கள் கைகாட்டிக்கொண்டே இருந்தார்கள்.இவனால் கை காட்ட முடியவில்லை. ஆனாலும் சத்தமாய்ச் சொன்னான், ‘‘எனக்கு ஒண்ணும் இல்ல... நிச்சயம் வந்துடுவேன்... கவலைப்படாதீங்க...”‘‘உணர்ச்சி வசப்படாதீங்க சார்... போலாமா?’’ என்ற டாக்டர்களும் சிஸ்டர்களும் அவனை மெல்ல தட்டிக் கொடுத்தார்கள். உள்ளே கூட்டி வந்தார்கள். ஸ்ட்ரெச்சர் நீண்ட தூரம் பயணித்த மாதிரி இருந்தது. கண்களை மூடிக்கொண்டான்.
“சுந்தர் சார்… மெல்ல எழுந்திரிங்க... வந்தாச்சு...” திடுக்கிட்டு கண்களைத் திறந்தான். டாக்டர்களும் நர்ஸு களும் புன்னகையுடன் சூழ்ந்து நின்றார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து இருபத்திநான்கு மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் அந்த நீலநிற தேவதை களைப் பார்த்து நம்பிக்கையுடன் சுந்தர் சிரித்தான்.
ஈஷ வருகிறார் ஈஷா!
நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழுக்கு வந்திருக்கிறார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் இப்போது செகண்ட் ஹீரோயினாக கலர்ஃபுல்லாக கலக்கி வரும் மாடர்ன் மயில். அறிமுகமானது தெலுங்கில் என்றாலும், நான்கு வருடங்களுக்கு முன்பே ‘ஓய்’ என்ற படத்தில் இங்கே தடதடத்தார். இப்போது ஜி.வி.பிரகாஷின் படத்தில் நிகிஷா படேல், சாக்ஷியுடன் காம்பினேஷனில் குளுகுளுத்திருக்கிறார்.
அடுத்து அங்கே அகிலுடன் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுல’ராக மின்னும் பொண்ணு முதன்முறையாக கன்னடத்திற்கும் பறந்திருக்கிறார். சிவராஜ்குமாரின் பெயரிடப்படாத படத்தில் ஈஷா, ரொம்ப பேஷா பர்ஃபார்ம் பண்ணவிருக்கிறாராம்.
தமிழில் சிருஷ்டி!
சிருஷ்டி டாங்கே, பிறந்து வளர்ந்தது மகாராஷ்டிராவில்... ஆனால், இந்தியை விட தமிழில் சரளமாகப் பேசுகிறார். ‘‘‘மேகா’ பட இயக்குநர்னாலதான் தமிழ்ல பேச ஆரம்பிச்சேன். அவர்தான் ‘செட்ல எப்பவும் தமிழ்ல பேசணும். ட்ரை பண்ணுங்க’னு சொல்லி பேச வச்சார்.
அதன்பிறகு அடுத்தடுத்த படங்கள்ல நானே டெவலப் பண்ணிட்டேன். ‘தர்மதுரை’யில் நடிக்கும்போது விஜய்சேதுபதி சார்கிட்ட தமன்னா தமிழ்ல பேசுறதைப் பார்த்து ஆச்சரியமாகிடுச்சு...’’ என கண்கள் விரிக்கிறார் சிருஷ்டி.
வம்பை விலைக்கு வாங்கிய சஞ்சிதா!
திருவண்ணாமலையில் தீபதரிசனம் செய்து வந்ததைப் பற்றி சிலிர்க்கிறார் சஞ்சிதா ஷெட்டி. ‘‘மலை உச்சியில் ஏறினது எனக்கே மிராக்கிளா இருக்கு. கிரிவலத்தை ரெண்டரை மணி நேரத்துல சுத்தி வந்துட்டேன். உச்சியில் ஏறுறதுக்கு ஒன்றரை மணி நேரத்துல ஏறிட்டேன்...’’ என இன்ஸ்டாவில் பக்தியை தெறிக்க விட்டிருகிறார் சஞ்சிதா! இதுவே விமர்சனத்துக்கும் வழிவகுத்திருக்கிறது. யெஸ்... கட்டுப்பாட்டை மீறி அவர் எப்படி செல்லலாம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது!
கே.ஜி.ஜவஹர்
|