வலைப்பேச்சு



@SanjaiGandhi - அக்டோபர் மாசம் GST Collection ரூபாய் 1 லட்சம் கோடியாம். பொருளாதாரம் மீண்டு எழுகிறதாம். பண்டிகைக் கால விற்பனையால் ஒவ்வொரு அக்டோபரும் GST வசூல் அதிகமாகும். 2017 ஆகஸ்டில் முதல் மாச வசூல் ரூ.95,000 கோடி. 3 வருஷத்துக்குப் பின்னாடி 1 லட்சம் கோடியிலேயே முக்கிக்கிட்டு இருக்கு. இதுக்கு வெட்கப்படணும்.

@CrazeJemi - தன்னுடைய தேவைகளை, தானே நிறைவேற்றிக் கொள்ளும்வரை உள்ள ஆயுட்காலம் போதுமானது!

@talksstweet - 18 வயசுல கல்யாணம் பண்ணி 22 வயசுக்குள்ள இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா ஆகற பெண்களை ஆண்ட்டியாகவும்... 35 வயது ஆனாலும் கல்யாணம் ஆகாத நடிகைகளை கனவுக் கன்னிகளாகவும் பார்க்கின்ற சமூகம் இது!

@iParisal - Me: 2021ல ரெண்டு ப்ளான் இருக்கு. புல்லட் வாங்கணும். லடாக் போகணும். உனக்கெதும் ப்ளான் இருக்கா?
She: உன்னோட இந்த ரெண்டு ப்ளானையும் நடக்காம பாத்துக்கறதுதான். இருக்கற செலவுல புல்லட்டாம்... லடாக்காம்!

@skpkaruna - ‘சினிமா இல்லைன்னா தமிழ்நாடு வாழாது’ என்றனர். எட்டு மாதங்கள் குறையின்றி வாழ்ந்தாச்சு. ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார்கள். கோயில்களை பூட்டி வச்சு குடியிருந்தாச்சு. முந்தைய தலைமுறைகள் கற்பனை செய்திடாத அனுபவத்தை கொரோனா கொடுத்துருக்கு!

@Sriram Narayanan - டெர்ம் பாலிசி ஆன்லைனில் எடுக்கலாமா? ஏஜெண்டிடம் எடுக்கலாமா? இந்தக் கேள்வி பலரிடம் இருக்கிறது.  
இதுக்கு பதில் ரொம்ப சிம்பிள் - வீட்டு வயரிங் ஷார்ட் ஆச்சுன்னா என்ன செய்வோம்? நமக்கு சரிபார்க்கத் தெரியும்னா நாமே செய்வோம், தெரியாதுன்னா எலெக்ட்ரீசியனைக் கூப்பிடுவோம். மோட்டார் ரிப்பேர் செய்யத் தெரிஞ்சா நாமே செய்யலாம், தெரியாதுன்னா பிளம்பருக்கு பணம் கொடுத்துத்தான் ஆகணும். அது Professional Fee, தண்டச்செலவு அல்ல.

இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, நான் முதலீட்டுக்கு ஆலோசகரையும் வருமானவரி தாக்கல் செய்ய சார்ட்டர்ட் அக்கவுண்டண்டையும் நம்பி இருப்பவன். முதலீட்டில் எமோசனை விலக்கி வைப்பதற்கும் வருமானவரி செலுத்துவதில் 100% சரியா செய்வதற்கும் பின்னால் ஏதாவது Query வந்தால்  Handle செய்யவும் ப்ரொபசனல்கள் பெட்டர் என்பதால் அந்த முடிவு.

இவ்விரு வேலைகளையும் என்னால் செய்ய முடியும் என்றாலும் அத்துறை வல்லுனர்கள் உதவியுடன் செய்வது என் வழக்கம். வல்லுனர்களை அமர்த்தும் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் செலுத்தித்தான் ஆகவேண்டும். காப்பீடும் அதுபோலவே. எண்டோமெண்ட், மணி பேக் போன்ற பாலிசிகளில் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரிஸ்க் ரொம்பவே கம்மி. ஈட்டும் வருமானத்திலும் குறைவான தொகையே பயனருக்கு வரும், பெரும்பகுதி காப்பீட்டு நிறுவனத்துக்குப் போகும்.

எனவே, இத்தகைய பாலிசிகளை வழங்குவதில் நிறுவனங்கள் அதிவேகமாக செயல்படும். பெரும்பாலான நேரங்களில் எவ்வித கேள்விகளும் வராது. ஆனா, டெர்ம் பாலிசி அப்படி அல்ல. 1 கோடி, 2 கோடின்னு பெரிய அளவு காப்பீடு வழங்கணும். ப்ரீமியம் தொகையோ மிகக் குறைவு. இதில் பாலிசிதாரர்களுக்கு பயம் மிக அதிகம். ரிஸ்க் முழுக்க நிறுவனத்துக்கு. எனவே டெர்ம் பாலிசிகளை நிறுவனங்கள் எளிதில் வழங்கி விடாது. மருத்துவ சோதனை அது இதுன்னு இழுத்து அடிக்கும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்வதிலிருந்து, மருத்துவ சோதனைக்கு அப்பாயிண்ட்மெண்ட், ஏதாவது Query வந்தால் பதில் சொல்வதுன்னு எல்லாத்தையும் உங்களாலேயே திறம்படச் செய்ய முடியும்னா தாராளமா ஆன்லைன்ல எடுங்க. அதுக்கும் மேல பொறுமை மிக அவசியம்.
டெர்ம் பாலிசி விண்ணப்பத்திலேருந்து பாலிசி டாக்குமெண்ட் ஆகும் வரை ஓரிரு மாதங்கள் ஆகலாம். இதுக்கெல்லாம் ரெடின்னு சொல்றவங்க ஆன்லைன்ல எடுக்கலாம்.

இதெல்லாம் எனக்குத் தெரியாது, இதையெல்லாம் செய்ய எனக்கு நேரமோ பொறுமையோ இல்லேன்னு சொல்றவங்க, ஏஜெண்ட் வழியே டெர்ம் பாலிசி எடுப்பது நல்லது. இதுக்கு நீங்க நேரடியா கட்டணம் செலுத்த வேண்டாம். ஆனா, ப்ரீமியம் தோராயமா 5% அதிகமா வரும். க்ளெயிம் வராது என்று நம்புவோம்.

ஆனா, ஒருவேளை நீங்க இறந்து உங்க மனைவியோ பிள்ளையோ க்ளெயிம் செய்ய வேண்டியிருந்தால், ஆன்லைன் பாலிசிக்கு அவங்கதான் அலைந்து திரிந்து எல்லாத்தையும் செய்யணும். ஏஜெண்ட் வழியே பாலிசி எடுத்திருந்தா, அவர் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு பணத்தை வாங்கித் தர உதவுவார்.
உங்களுக்கு விஷயம் தெரிந்தால் மட்டும் பத்தாது, உங்க குடும்பத்தாருக்கும் க்ளெயிம் பண்ணத்தெரிந்தால் மட்டுமே ஆன்லைன் பாலிசி எடுக்கலாம்.

ஆன்லைனில் எடுப்பதும் ஏஜெண்டிடம் எடுப்பதும் உங்க விருப்பம். ஆனா, உங்க கேள்விகளுக்கு விளக்கங்கள் கேக்க ஏஜெண்ட்களை உபயோகித்து விட்டு, எல்லா விவரங்களும் தெரிந்த பின் அதே நிறுவனத்தின் வெப்சைட்டில் போய் பாலிசி எடுக்காதீங்க. அது அந்த ஏஜெண்டுக்கு செய்யும் துரோகம். உங்களுக்கு விவரம் / விளக்கம் தேவைப்பட்டால், அவற்றைத் தரும் ஏஜெண்டுக்கு உங்க பிசினசைத் தருவதுதான் அறம்.

@Shruthi R - காதலோ அன்போ, வலிந்து சென்று கேட்கும்போது அது யாசகமாகிவிடும் சகி!

@பெ. கருணாகரன் - தான், முட்டாள் என்று புரிந்து கொண்டவன் வாழ்வில் ஜெயித்து விடுவான். முட்டாள் என்பதைப் புரிந்து கொள்ளாதவனே தோற்கிறான்.

@Devi Kamal - கோவைல மழையாம். அதுக்கு ஒரு கோவை வாயன் பதிவு போட... அதுல மத்த கோவை வாயன்ஸ் கரண்டு போயிடுச்சுனு கமெண்ட் போட... செம்ம இடி முழிச்சுட்டே இருக்கேன்னு இன்னொரு கோவை வாயன் சொல்ல.... இன்னொரு கோவை வாயன் பீ சேஃப்னு சொல்ல...
அவுக பாட... இவுக ஆட... ஏன் இதுலாம் ஃபேஸ்புக்லதான் பேசிப்பீங்களா... தெருமுக்குல நின்னு பேசிக்க மாட்டீங்களோ..?

@teakkadai1 - சில தொழிலதிபர்கள் டூப்ளிகேட் பொருள் விற்பனை, வரி ஏய்ப்பு போன்றவற்றைச் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.
ஊர் கோயிலில் ஒரு ட்யூப்லைட் வாங்கிப் போட்டு அதில் உபயம் என தங்கள் பெயரை எழுதி விடுவார்கள். ஊராரும் நல்லவருப்பா என்பார்கள்.

அதேபோலத்தான் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு, தமிழர்களின் உழைப்பால் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி இடங்களை மத்திய தொகுப்பிற்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, தமிழர்களின் அரசு வேலை வாய்ப்பிலும் பொக்லைன் மூலம் மண் அள்ளிப் போட்டுவிட்டு, தமிழர்களுக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்துவிட்டு, மீதமிருந்த மருத்துவக்கல்வி இடங்களில் ஒரு உள் இட ஒதுக்கீட்டைச் செய்துவிட்டு, சமூக நீதியை நிலைநாட்டினோம் என்கிறது இந்த அதிமுக அரசு. தமிழர்களுக்கு வெண்கலப் பூட்டை உடைத்து விளக்கமாற்றைத் திருடியது போல் ஆகிவிட்டது.

@Govi Lenin - தேநீர்க்கடையில் கேட்டது: ‘‘சபாஷ்... ஊழலை -
லஞ்சத்தை ஒழிக்கணும்னா தூக்குத் தண்டனை கொடுக்கணும்னு நீதிபதிகளே கோபமா சொல்லியிருக்காங்க பார்த்தியா?’’
‘‘அவ்வளவு எதுக்கு? பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி குன்ஹா போல, இப்ப இருக்கிற சட்டப்படியே ஸ்ட்ராங்கா தீர்ப்பு கொடுத்தா
போதும். இரும்புன்னு சொல்லி ஏமாத்துனதெல்லாம் துருப் பிடிச்ச  துரும்பாயிடலையா? நீ ஸ்ட்ராங்கா ஒரு டீ சொல்லு!’’

@Sasikala - அதிகமாக கோபப்படுகிறவர்கள்தான் சிரிக்கும்போது பேரழகாகி விடுகிறார்கள்... Especially ஆண்கள்!

@Ramanujam Govindan - ஒருநாள் முகநூலில் பதிவு போடவில்லை என்றால், என்ன ஆச்சு உடம்புக்கு... எந்த ஆஸ்பிட்டல்... என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விட்டால் வந்து வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு விடுவார்கள்!

@Pa Raghavan - ஒரு கதாபாத்திரம் கர்ப்பமாக இருந்தால் அவள் மனச்சாட்சியும் கர்ப்பமாகத்தான் இருக்கும்!