ரத்த மகுடம் - 123பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிவகாமி சட்டென நீருக்குள் மூழ்கினாள். புன்னகைத்த கரிகாலன், மறுகணம் தானும் மூழ்கினான்.நீருக்கு அடியில் இருவரது தேகங்களும் உராய்ந்தன. குழைந்தன. இழைந்தன. எரிந்தன.மற்ற சமயம் என்றால் நாழிகைக் கணக்கில் சிவகாமி தன் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீருக்குள் அமிழ்ந்திருப்பாள். இப்பொழுது அவளால் அது இயலவில்லை. காரணம் அவளோடு ஒட்டி உறவாடிய கரிகாலன் சட்டென தன் கரங்களால் அவளை நீருக்குள் அணைத்து இறுக்கினான்.

சுதாரித்து அவள் மீள்வதற்குள் அவளது முதுகில் இருந்த அவன் கரங்கள், கச்சையின் முடிச்சை நெகிழ்த்தின. சுதாரிப்பதற்குள் இடுப்பு முடிச்சை நெகிழ்த்தி, பின்னோக்கித் தள்ளின.சிவகாமியின் தேகமும் அதற்கு ஏற்ப ஈடுகொடுக்கத் தொடங்கியதும் அவளது புத்தி விழித்துக் கொண்டது. சட்டென தன் தலையை குளத்து நீரில் இருந்து உயர்த்தினாள். வாயைத் திறந்து சுவாசித்தவள் தன் கரங்களால் கரிகாலனைத் தள்ள முற்பட்டாள். ‘‘இது நேரமல்ல...’’ கொங்கைகள் விம்ம முணுமுணுத்தாள்.

‘‘இதுதான் நேரம்...’’ தன் தலையையும் குளத்துக்கு மேலே கொண்டு வந்த கரிகாலன், அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
தன் கண்களுக்கு நேராக தென்பட்ட கரிகாலனின் கருவிழிகளுக்குள் சிவகாமி ஊடுருவினாள். ‘‘இதுதான் நேரமா..?’’
‘‘ஆம்...’’ தடையற்று பதிலளித்த கரிகாலன், அணைத்திருந்த அவளது பரந்த முதுகைத் தடவினான்.‘‘இங்கு யாரும் வரமாட்டார்களா..?’’ நெளிந்த தன் உடலைக் கட்டுப்படுத்தாமல் வினவினாள்.‘‘மாட்டார்கள்...’’
‘‘நங்கை கூடவா..?’’‘‘புலவர் தண்டி உட்பட ஒருவரும் வரமாட்டார்கள்...’’

‘‘அதனால்தான்... அந்த தைரியத்தில்தான்...’’ மேற்கொண்டு வாக்கியத்தைத் தொடராமல் சிவகாமி நிறுத்தினாள்.‘‘ஆம்...’’ சொன்ன கரிகாலனின் கரங்கள் அவளது பின்னெழுச்சியை கெட்டியாகப் பிடித்தன. இடுப்பில் இருந்த அவள் ஆடையின் முடிச்சை அவிழ்த்து சற்றே கீழ்நோக்கி நகர்த்தின.கண்கள் தெறித்துவிடுவதுபோல் அவனைப் பார்த்த சிவகாமியின் நயனங்களில் அச்சத்தின் ரேகைகள் படரத் தொடங்கின.

‘‘வேண்டாம்...’’ என்று சொல்ல வாயைத் திறந்த அவள் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான். இருவரது உமிழ்நீர்களும் சங்கமிக்கத் தொடங்கியபோது தன் உதடுகளை அவளது செவியின் மடல் அருகே கரிகாலன் கொண்டு சென்றான்.
‘‘சிவகாமி...’’
‘‘ம்...’’

அவள் நிலை அவனுக்குப் புரிந்தது. எனவே அவளது செவி மடலை தன் பற்களால் கடித்தான்.உதறிய அவளது தேகத்தில் இருந்து பிறந்த செய்தி, அவள் மயக்கத்தில் இருந்து விடுபடுவதை உணர்த்தியது. இதற்காகவே காத்திருந்ததுபோல் அவள் செவியில் முணுமுணுக்கத் தொடங்கினான். ‘‘சிவகாமி... நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது... அடுத்து நீ செல்ல வேண்டிய இடம் எது என்பதை அறிவாய் அல்லவா..?’’

சிவகாமியின் புத்தி விழித்துக் கொண்டது. குளத்துக்குள் சரசமாட கரிகாலன் முற்படவில்லை என்பதையும், எதையோ ரகசியமாக சொல்வதற்காகவே இப்படி தன்னுடன் இழைகிறான் என்பதையும், யார் தங்களை இந்தக் கோலத்தில் கண்டாலும் ஜலக்கிரீடை செய்வது தோன்றும் என்பதையும் புரிந்து கொண்டாள்.

எனவே அவனது இழுப்புக்கு ஏற்ப அவளும் செல்லத் தொடங்கினாள். ‘‘அறிவேன்...’’ நாடகத்தின் பாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடிக்கத் தொடங்கினாள். தன் நாவின் நுனியால் அவன் நாசியைத் தடவினாள். ‘‘இடம் மாறிவிட்டதா..?’’‘‘இல்லை...’’ சொன்னவன் அவள் நாவின் நுனியை கணத்துக்கும் குறைவான நேரம் தன் உதடுகளால் உறிந்துவிட்டு அவள் கன்னத்தில் தன் அதரங்களைப் பதித்தான். ‘‘பாதை நினைவில் இருக்கிறதல்லவா..?’’

‘‘இ...ரு...க்...கி...ற...து...’’ கொதிக்கத் தொடங்கிய உடல், தன் புத்தியை சிறைப் பிடிக்க முடியாதபடி பார்த்துக் கொள்ள அதிகம் மெனக்கெட்டாள்.
‘‘இருப்பதை உன் மனதில் கல்வெட்டாகப் பொறிக்கிறேன்...’’ அவள் மனம் இருந்த இடத்தில் தன் கரங்களை அழுத்தினான்.
சுண்டி விட்டதுபோல் அவள் உடல் உதறியது. அணைத்து அதை சாந்தப்படுத்தியவன், அவள் முதுகை நீவினான்.
மெல்ல மெல்ல அவள் உடல் சமநிலைக்கு வந்தது.

‘‘இப்போது நாம் மல்லைக் கடற்கரையில் இருக்கிறோம்...’’
‘‘இல்லை... இது உறையூருக்கு அருகில் இருக்கும் குளம்...’’

சொன்ன சிவகாமியின் நயனங்களை உற்றுப் பார்த்த கரிகாலனின் கண்களின் சிவப்பு ஏறியது. ‘‘புத்தியைச் சிதறவிடாதே...’’ பற்களைக் கடித்தவன், அவளை மேலும் இறுக்கியபடி தன் கரங்களை அவள் முதுகில் பரப்பினான். ‘‘மல்லைக் கடற்கரையில் ரவிவர்மனைச் சந்தித்தோம்... பிறகு பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மரின் தாயாதியான ஹிரண்ய வர்மரை... அவருடன் குகை ஒன்றுக்கு சென்றோம்...’’‘‘அங்கு சாளுக்கிய போர் அமைச்சர் ராம புண்ய வல்லபர் நம்மை வரவேற்றார்...’’ வாக்கியத்தை முடித்த சிவகாமியின் மனதுக்குள்
ஆரம்பகாலக் காட்சிகள் விரிந்தன.

கரிகாலன், தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். தன் போக்குக்கு அவள் வரத் தொடங்கிவிட்டது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ‘‘அங்கிருந்து தப்பி வனம் ஒன்றுக்குள் புகுந்தோம்... மரம் ஒன்றின் மீது அமர்ந்தோம்... உன் முதுகில் நான் சிலவற்றை எழுதினேன்...’’நிறுத்திய கரிகாலன் குளத்துக்குள் அவளை அணைத்தபடியே அவள் முதுகில் இப்பொழுதும் தன் ஆள்காட்டி விரல் நகத்தால் மெல்ல கோடு இழுக்கத் தொடங்கினான்.

அதற்கு ஏற்ப சிவகாமியின் குரல் ஒலித்தது. ‘‘இதுதான் தொண்டை மண்டலம்... வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ பிரமித்த கரிகாலன் தன் நக நுனியை அவள் பின்பக்க மேட்டின் அருகில் கொண்டு சென்றான்.

சிவகாமி சிரித்தாள். ‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென்சுபா.

இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வடகிழக்காகச்
செல்கிறது...’’ ‘‘பிரமாதம் சிவகாமி...’’ தன் உதடுகளால் அவளது அதரங்களை மூடி முத்தமிட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.

அவன் நகங்கள் அவள் பின்பக்கம் நகர்ந்தபடி இருக்க... சிவகாமி அதற்கு ஏற்ப சொற்களைச் சிந்தினாள். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு. ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ சிவகாமி கண்சிமிட்டினாள்.

‘‘பலே...’’ என்றபடியே தன் நகத்தை மேலும் கீழுமாக அவள் முதுகில் கீறினான்.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம்...’’ நிறுத்திய சிவகாமி, ‘‘கரத்தை முன்னோக்கிக் கொண்டு வராதீர்கள்!’’ நாசி அதிர சிரித்தவள், தொடர்ந்தாள். ‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் ஜவ்வாது குன்றுகள் இருக்கின்றன.

இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன. வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கின்றன...’’  ‘‘நன்றி சிவகாமி...’’ அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தினான்.

‘‘அன்று சொன்னதை இன்றும் நினைவில் வைத்திருக்கிறாய்... அந்தப் பாதையில்தான் நீ செல்ல வேண்டும்...’’  
நான்கு உதடுகளும் இணைந்தன!மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் இடுப்பில் பதினாறு துண்டுகளாக வெட்டப்பட்ட கச்சை ஒன்று இருந்தது!

(தொடரும்)   

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்