பாடும் நிலா எஸ்பிபிக்காக ஒரு வனம்!



கோவையில் உருவாக்கி வரும் சிறுதுளி அமைப்பு

‘‘எஸ்பிபி சாரின் கடைசி இன்டர்வியூவை நீங்க பார்த்தீங்களானு தெரியல. அதுல, ‘இந்தக் கொரோனாவை நாம் வெறுக்கக் கூடாது. நாம் காற்றுக்கும், தண்ணீருக்கும், மரங்களுக்கும் நிறைய தீமை ஏற்படுத்தியிருக்கோம். அதனால, இயற்கை அன்னை கொடுத்த சாபம்தான் கொரோனா.
இதிலிருந்து எப்படி மீண்டு வரணும்னு சிந்திக்கணும். இயற்கையை மீட்டெடுக்கணும். இயற்கைக்கு நாம் செய்த அநியாயத்தை அகற்றணும்’னு ரொம்ப நெகிழ்வா சொல்லியிருந்தார்.

அது எங்களை வெகுவா பாதிச்சது. அதுக்காகவே இந்த வனத்தை அவர் பெயர்ல உருவாக்குறோம்...’’ நெகிழ்ந்தபடி பேசுகிறார் கோவையிலுள்ள ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலரான வனிதா மோகன். ‘இந்தத் தேகம்... மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…’ எனப் பாடிச் சென்ற காந்தக் குரலோன் எஸ்பிபிக்காக இவரின் ‘சிறுதுளி’ அமைப்பு அவர் பெயரில் ஒரு வனத்தை உருவாக்கி வருகிறது.

முதல்கட்டமாக இரண்டு மரங்களை ‘சிறுதுளி’ அமைப்பின் அலுவலக வளாகத்தில் நட்டு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. இந்நிகழ்வை காணொலி மூலம் எஸ்பிபி சரணும், எஸ்பி.ஷைலஜாவும் துவக்கி வைத்துள்ளனர்.ஒரு மரக்கன்றை கோவையைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகரும், மெல்லிசைக் கலைஞர்களின் வாழ்வியலை ‘நகலிசைக் கலைஞன்’ என்கிற நூலில் ஆவணப்படுத்தியவருமான ஜான்சுந்தர் நட்டுவைக்க, இன்னொரு மரக்கன்றை வனிதா மோகன் நட்டுள்ளார்.   

‘‘நாங்க கோவையில் ‘சிறுதுளி’ அமைப்பை பதினெட்டு ஆண்டுகளாக நடத்திட்டு இருக்கோம். நொய்யல் நதி புனரமைப்புக்கு துவக்கப்பட்ட அமைப்பு இது. அதன்வழியா குளம், குட்டைகளை தூர்வார்கிற பணிகளைச் செய்ேறாம். தவிர, மரங்கள் நடுகிற விஷயத்தையும் முன்னெடுக்கிறோம்.
இதுவரை ஆறு லட்சம் மரங்கள் நட்டிருக்கிறோம். சமீபத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனம் ஏற்படுத்தினோம். நகரத்திற்குள்ள இடங்கள் குறைஞ்சுகிட்டே வர்றதால இந்த முறையில் எங்கெல்லாம் காலி இடங்கள் கிடைக்குதோ, அதாவது இரண்டு சென்ட், மூணு சென்ட் இடம் கிடைச்சாலும் அங்கெல்லாம் நாங்க மரங்கள் நடறோம். கோவை மத்திய சிறையில் கூட அடர்வனம் பண்ணியிருக்கோம். அங்க 12 ஆயிரம் மரங்கள் நட்டு கல்லும் மண்ணுமா கிடந்த இடத்தை பசுமையா மாத்தினோம்.

எங்களுக்கு இந்தப் பசுமைப் பயணத்தைத் துவக்கி வச்சவர் டாக்டர் அப்துல் கலாம் சார். அவர் குடியரசுத் தலைவரா இருக்கிறப்ப 2005ல் இந்தப் பயணத்தைத் துவக்கி வச்சார். அப்போதிலிருந்தே எங்களின் செயல்பாடுகளில் நிறைய ஆர்வம் காட்டினார். அவரின் 80வது பிறந்தநாளை கோவையில் ெகாண்டாடினப்ப அவர் இங்க வந்தார். அப்ப நாங்க பல்வேறு அமைப்புகளுடன் இணைஞ்சு ஒரு லட்சம் மரங்கள் நட்டோம்.

கடைசியா, லட்சமாவது மரமா நாவல் மரத்தை கலாம் சார் வந்து நட்டார். அவர் மறைவிற்குப் பிறகு, ஞாபகார்த்தமா அக்டோபர் 15ம் தேதி அவரின் பிறந்தநாள் அன்று மரங்கள் நட்டுட்டு வர்றோம். இந்த ஆண்டும் அப்படி மரங்கள் நடுவதற்கு திட்டமிட்டிருந்தோம். அப்பதான் எஸ்பிபி சார் காலமானார். அவருக்கு ஓர் அஞ்சலி செய்யலாம்னு முடிவெடுத்தோம். ஏன்னா, இயற்கையை அவர் ரொம்ப நேசிச்சார். அதனால வழக்கமான பாட்டு, இசைக் கச்சேரினு இல்லாம அவரை எப்பவும் நினைவு கூர்வது போல இருக்கணும்னு நினைச்சோம். அவர் பெயரில் ஒரு வனத்தை உருவாக்கலாம்னு முடிவெடுத்தோம்.

அவர் இறந்தப்ப 74 வயசு. அதனால, 74 மரங்கள் வச்சு ஒரு வனத்தை நிர்மாணிக்க திட்டமிட்டோம். எஸ்பிபி சார் உலகம் முழுக்க ரசிகர்களைத் தன்பால் ஈர்த்ததற்கு காரணம் இசை. அதனால, இசைக் கருவிகள் செய்ய பயன்படும் மரங்களை நட்டு ஒரு வனத்தை உருவாக்குறதுனு தீர்மானிச்சோம்...’’ என்கிற வனிதா மோகன், நடப்படும் மரங்களை அடுக்கினார்.

‘‘பொதுவா, இசைக்கருவிகள் செய்ய செம்மரம், ரோஸ்வுட், வேம்பு, மகோகனி, சந்தனமரம், தேக்கு, வேங்ைக, புன்னை, கருங்காலி, பண்ருட்டி பலா, மாமரம், மூங்கில், சில்வர் ஓக்னு பதிமூணு மரங்கள் பயன்படுவதாகச் சொல்லப்படுது.

இந்த மரங்களை எல்லாம் அந்த வனத்துல நட இருக்கோம். அப்புறம், எஸ்பிபி சார் திருவண்ணாமலை, பழநி, குருவாயூர்னு நிறைய கோயில்களுக்கு
பக்திப் பாடல்களைப் பாடிக் கொடுத்திருக்கார். அதனால, அந்தக் கோயில்களின் தலவிருட்ச மரங்களை நடலாம்னு முடிவெடுத்தோம்.
இதுல, கடம்ப மரம், மருத மரம், நாகலிங்கமரம், வன்னி மரம், வில்வமரம், நாவல் மரம்னு ஆறு மரங்கள் அடக்கம். அதனுடன் நறுமணம் தரக்கூடிய பவழமல்லி, மகிழம், மனோரஞ்சித மரங்களையும் நடப் போறோம்.

அப்புறம், அவரின் நட்சத்திரம் ஆயில்யம். அந்த நட்சத்திரத்திற்கு உகந்த மரம் செண்பக மரம். இதெல்லாம் கலந்து 74 மரங்களுடன் எஸ்பிபி வனம்
இருக்கும். இதற்குதான் கலாம் சாரின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதி கால் நட்டிருக்கிறோம். ஒரு துவக்கத்திற்காக அன்னைக்கு பண்ருட்டி பலாவும், செண்பக மரமும் நட்டோம்...’’ என்கிறவர், இதற்கென தகுந்த இடத்தைப் பார்த்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.  

‘‘இப்ப தகுந்த இடம் பார்த்திட்டு இருக்கோம். ஏன்னா, சும்மா ஓர் இடத்தை வச்சு மரத்தை நட்டோம்னு இல்லாமல் ஒரு சிறந்த நினைவார்ந்த இடமா ஆக்கணும்னு நினைக்கிறோம். அதாவது, பொதுமக்கள் அங்க போய் உட்கார்ந்து பாடவோ, தியானம் பண்ணவோ, தங்களை ஆசுவாசப்படுத்தவோ செய்யக் கூடியமாதிரி அந்த இடம் இருக்கணும்.  

கூடிய விரைவில் அப்படி ஒரு இடம் கிடைச்சிடும்னு நினைக்கிறேன். அது கிடைச்சதும் இசைக் கலைஞர்களை வச்சே மரங்கள் நடப் போறோம்.
ஏற்கனவே நாங்க கலாம் சார் நினைவாக நிறைய இடங்கள்ல கலாம் வனம் ஏற்படுத்தியிருக்கோம். அதேவழியில் இந்த
எஸ்பிபி வனம் உருவாகும்.

எப்படி கலாம் சார் தலைமைப் பண்பாலும், வழிகாட்டுதலாலும் மக்களை ஈர்த்தாரோ அதேபோல எஸ்பிபி சாரும் தன் குரலால் மக்களை ஈர்த்தவர். ரெண்டு பேரும் இயற்கையை ரொம்ப நேசிச்சவங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இந்தமாதிரி அஞ்சலி செலுத்துறது தான் சரியாயிருக்கும்…’’ உற்சாகமாகச் சொல்கிறார் வனிதா மோகன்.