கோலிவுட்டின் ரியல் டாப் 10 பிரச்னைகள்



இந்தியப் பட உலகில் பெருமையாக சொல்லிக் கொள்ளும்படி குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது நம் தமிழ் சினிமா படவுலகம். இங்கே 24 யூனியன்கள் இருக்கின்றன. அதிலும் ஃபெப்சியில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வருடத்திற்கு இருநூறு நேரடி தமிழ்ப்படங்கள்... ஐம்பதுக்கும் மேலான டப்பிங் படங்கள் என கிட்டத்தட்ட முந்நூறு படங்கள் ரெடியாகின்றன. ரூபாய் 1500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யுமிடம் இது... என கோலிவுட்டைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கொரோனாவால் சினிமா படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது, தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாதது, தொழிலாளர்கள் வேலையிழப்பினால் வாழ்வாதாரம் பாதிப்பு... என்பது போன்ற சமீபத்திய பிரச்னைகள் மட்டும்தான் கோலிவுட்டின் சிக்கலா?

இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான பிரச்னைகள் என்ன என்று திரையுலக அனுபவசாலிகள் சிலரிடம் கேட்டோம். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு வகித்து வரும் தனஞ்செயன், டி.சிவா, திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், விநியோகத் துறையில் அனுபவம் பெற்ற ‘தமிழ்நாடு என்டர்டெயின் மென்ட்’ ஆர்.ராமானுஜம் என பலரும் இங்கே பிரச்னைகளைப் பட்டியலிடுகிறார்கள்.

1. ஹீரோக்களுக்கு கோடிகளில் சம்பளம்

‘‘கொரோனாவால் தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கு? ஆனா, ஹீரோக்களின் சம்பள எதிர்பார்ப்பு மட்டும் துளியும் குறையல. நடிகர்கள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும், ‘நீங்க எப்படி வேணா இருங்க. ஆனா, எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை குடுங்க’னு இப்பவும் கேட்கறாங்க.

இது ரொம்ப பெரிய சிக்கல். ஒரு படம் தயாரிக்கணும்னு ப்ளான் பண்ணினா, நடிகர்கள் ரெண்டு கோடி குடுங்க... மூணு கோடி குடுங்கனு கேட்கற சூழலை பார்க்கும்போது, அதிர்ச்சியா இருக்கு. இனி வரும் காலங்கள்ல வியாபார சூழல் எப்படி அமையும்னு தெரியாத நிலைல கூட, சம்பளத்தை மட்டும் பழைய மாதிரி கேட்கறாங்க.

இதுக்கு காரணம் ஒரு சில தயாரிப்பாளர்கள்தான். அனுபவம் இல்லாத அவங்க ஹீரோக்களோட மார்க்கெட் வேல்யூ தெரியாம சம்பளத்தை ஏத்தி விட்டுடறாங்க. ஹீரோக்களுக்காவது நடைமுறை தெரியணும். ஆனா, அவங்க கிடைச்ச வரை லாபம்னு பேங்க் பேலன்ஸை நிரப்பிக்கறாங்க...’’ என்கிறார் தனஞ்செயன்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரோ, ‘‘இப்ப தயாரிப்பில் இருக்கும் படங்கள், திரைக்கு வரவிருக்கும் படங்களின் ஹீரோ ஹீரோயின்ஸ் உடனடியா தங்களுடைய சம்பளத்துல 30% குறைக்கணும். மாசக்கணக்கா வட்டி எகிறி தயாரிப்பாளர்கள் முழி பிதுங்கி நிக்கறாங்க. எங்க கஷ்டத்தை அவங்க உணரணும்.

அதேமாதிரி ஃபைனான்ஸியர்களும் திரைத்துறையே இயங்காத இந்த கொரோனா பொது ஊரடங்கு மாதங்களுக்கான வட்டியை வசூலிக்காம இருக்கணும். அப்புறம் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னாடி வெளியான படங்களுக்கு இயல்பு நிலை திரும்பினதும் திரும்பவும் ரீ ரிலீஸ் செய்ய திரையரங்குகள் உதவணும்.

பல ஹீரோக்கள் 25% சம்பளத்தை குறைச்சுக்கறதா அறிவிச்சிருக்காங்க... உண்மைல அப்படி செய்திருக்காங்களானு எனக்கு தெரியாது...’’ என்கிறார் சதீஷ்குமார்.

2. விரலுக்கு ஏற்ற வீக்கமில்லை

‘‘விரலுக்கேத்த வீக்கம் இருக்கணும். ஒரு தமிழ்ப்படம் அதோட வியாபார எல்லை... அதோட வசூல்... இது சம்பந்தமான மதிப்பீடு இல்லாம கோடம்பாக்கத்துல நிறைய பேர் படம் தயாரிக்கறாங்க. ஒரு லிட்டர் பால் பாத்திரத்துல ஒரு லிட்டர் பால்தான் ஊத்த முடியும். அதுக்கு மாறா ரெண்டு லிட்டர் ஊத்தி கொண்டு போக விரும்பினா என்னவாகும்?

ஒரு லிட்டர் பாலின் விலையை பத்து ரூபானு வைச்சுப்போம். அதை 12 ரூபாய்க்கு விற்கலாம். அட... 15 ரூபாய்க்குக் கூட விற்கலாம். ஆனா, நூறு ரூபாய்க்கு விற்க நினைச்சா..? இதுதான் தமிழ் சினிமா.தயாரிப்பு செலவு, நடிகரோட சம்பளம், படத்தோட பட்ஜெட்... இதையெல்லாம் மனசுல வைச்சு சரியா திட்டமிட்டாதான் லாபம் கிடைக்கும். தொடர்ந்து தயாரிப்பாளர்கள் இயங்கவும் முடியும்.

இன்னொரு விஷயம். தயாரிப்பாளர்கள் மத்தில கதை ஞானம் இல்ல. கதையைக் கேட்டு ஓகே செய்துட்டு அப்புறம் நடிகர்களை இங்க யாரும் தேடறதில்ல. முதல்ல ஹீரோவுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு கதை, இயக்குநரை ஒப்பந்தம் செய்யற முடிவையும் அவர்கிட்டயே - ஹீரோகிட்டயே - கொடுத்துடறாங்க.இப்படி இருந்தா எங்கிருந்து தமிழ் சினிமா உருப்படும்..?’’ கேட்கிறார் ராமானுஜம்.

இதை தனஞ்செயனும் ஒப்புக்கொள்கிறார். ‘‘சினிமா பத்தின புரிதல், அதன் வியாபார எல்லைகள்னு எதுவும் தெரியாம ஆண்டுதோறும் நிறைய பேர் படம் தயாரிக்க வர்றாங்க. மத்த எல்லா துறைகள்லயும் அனுபவசாலிங்கதான் தொழிலையே தொடங்கறாங்க. இங்க மட்டும்தான் அந்த நிலை இல்ல.
அதேபோல யார்கிட்டயும் ஒர்க் பண்ணாம, எடுத்தவுடனே இயக்குராகிடணும்னு நினைக்கறவங்களும் உண்டு.

சமீபத்துல ரிலீஸுக்கு ரெடியான ரெண்டு படங்களை பார்க்க கூப்பிட்டிருந்தாங்க. போய் பார்த்தேன். கோடிகள்ல செலவு பண்ணி எடுத்திருந்தாங்க. ஆனா, படம் குப்பை. மனசுக்கு வருத்தமாகிடுச்சு...’’ என்கிறார் தனஞ்செயன்.

3. ஒரு வசந்தத்திலேயே செட்டில்ட்

ஃபைனான்ஸியர்கலின் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பேசுகிறார் வெங்கட் சுபா. ‘‘இங்க வெற்றி பெற்றால்தான் வாழ்க்கை. அஜித், விஜய்யை வச்சு ஒரு படம் மட்டும் இயக்கின இயக்குநர்கள் பல பேர் இங்க இருக்காங்க. அதே டைம்ல ஒரு வெற்றி, ரெண்டு வெற்றி கொடுத்த பலரும் அவங்க கேரியர்ல மட்டுமில்ல, லைஃப்லேயே செட்டில் ஆகிடறாங்க. ஒரு படத்துலயே டப்புனு சம்பாதிச்சிடுறாங்க. ஆர்ட் டிபார்ட்மெண்ட்ல இருந்து, யூனிட்ல இருந்து எல்லாத்துலயும் செலவு வச்சு, குறுக்கு வழியில் கணக்குப் போட்டு சட்டுனு செட்டில் ஆகறாங்க.

உதாரணத்துக்கு, ஒரு இயக்குநர் ஐம்பது லட்சத்துல படம் எடுக்கறேன்னு சொல்லி ஒரு தயாரிப்பாளரை பிடிச்சார். ஆனா, அவர் முப்பது லட்சத்துலயே படத்தை முடிச்சுட்டு மீதி இருபது லட்சம் லாபம் பார்த்துட்டார். இதுல தயாரிப்பாளர் ஏமாளியானார். இதெல்லாம் முன்னாடி காலங்கள்ல எந்த ஓர் இயக்குநரும் பண்ணினதில்ல. அதே போல சில தயாரிப்பாளர்களும் வீடு, வாசல்னு ஸ்டிராங் ஆகிடறாங்க. அதாவது ஒரு வசந்தம் வரும்போதே, செட்டில் ஆகறாங்க.

ஆனா, பெரிய சம்பளம் கொடுத்து படம் தயாரிக்கும் பெரிய புரொட்யூசர்களுக்குதான் தீராத சிக்கல். பெரிய சம்பளம் கொடுத்து ஒருத்தரை கமிட் செய்து, அப்புறம் பெரிய செலவுகள் செய்து, படத்தை முடிக்கணும்னா இன்னும் பெரிய செலவு பண்ணியாகணும். இப்படியான இக்கட்டுகள்ல சிக்கியிருக்கும் தயாரிப்பாளர்களின் நிலை பரிதாபம்.

அவங்களுக்கு மேல சிரமப்படுறவங்க அந்த படத்துக்கு முதலீடு செய்த நிதியாளர்கள் (ஃபைனான்ஸியர்கள்). இந்த கொரோனா பீரியட்ல பலருக்கும் வட்டி வந்து சேரலைனு சொன்னாங்க. பெரும்பாலும் நிதியாளர்கள் பர்சனல் டாகுமெண்ட்டுகள் வாங்கறதில்ல. வீடு, நிலம்னு டாகுமெண்ட்டுகளை வாங்கற ஆட்கள் ரொம்பவும் குறைவு...’’ என்கிறார் வெங்கட்சுபா.

‘‘ஆனா, வட்டி விகிதம் வங்கியை விட அதிகமாக செலுத்த வேண்டியிருக்கு...’’ என ஃபீலாகிறார் தனஞ்செயன். ‘‘படத்துக்கு படம், படத்தோட பட்ஜெட் அதிகரிச்சிட்டே போகுது. அதுக்கேத்த மாதிரி தயாரிப்பாளர்களால ஃபண்ட்ஸ் திரட்ட முடியலை. எந்த ஒரு நிறுவனம் ஆரம்பிக்கணும்னாலும், உங்களால எளிதா பணம் புரட்டிட முடியும். வங்கில இருந்து கடன் வாங்கிட முடியும். அரசு சலுகைகள் கிடைக்கும். ஆனா, சினிமாவுல ரிஸ்க் அதிகம் என்பதால் ஃபண்ட்ஸ் கிடைக்கறது கஷ்டமா இருக்கு.

ஃபைனான்ஸியர்கள்கிட்ட கடன் வாங்கினா வருஷத்துக்கு 36 சதவிகிதத்தில் இருந்து 48 சதவிகிதம் வரை வட்டி ஆகிடுது. உதாரணமா நீங்க பத்து கோடி கடன் வாங்கினா, வருஷத்துக்கு மூணு கோடியே அறுபது லட்சம் வட்டி மட்டுமே கட்டணும். இது மிகப்பெரிய பிரச்னையா இருக்கு...’’ என்கிறார் அவர்.

4. வி.பி.எஃப் விவகாரமும் பனிப்போரும்

தயாரிப்பாளர் சிவா சொல்லும் செய்தி இது. ‘‘நடப்பு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்புல திரையரங்குகளுக்கு வி.பி.எஃப். (virtual print fee) கட்டமுடியாதுனு தீர்மானம் போட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுப்பி வச்சிருக்கோம். புரொஜக்டர்களுக்கான கட்டணத்தை தயாரிப்பாளர்கள்கிட்ட வாங்குவதை எங்களால ஏத்துக்க முடியாது.

ஒரு தியேட்டர் கட்டினா அங்க புரொஜக்டர் நிறுவ வேண்டியது தியேட்டர்களின் வேலைதானே தவிர, தயாரிப்பாளர்கள் வேலையில்ல. படத்தை குவாலிட்டியா காட்டணும்னு ஸ்பெஷல் கேமராவெல்லாம் கொண்டு வந்து செலவு பண்றோம். இதுக்கெல்லாம் தியேட்டர்காரங்ககிட்ட நாங்க பணம் கேட்கறதில்லையே... எல்லாருக்கும் என்ன டேர்ம்ஸ் உண்டோ அதைத்தானே எங்களுக்கும் குடுக்கறாங்க..?’’ என கேள்வியை எழுப்புகிறார்.

சிவாவின் கருத்தை ஆதரிக்கிறார் தனஞ்செயன். ‘‘‘எங்க தியேட்டர்கள்ல இருக்கற புரொஜக்டருக்கும் தயாரிப்பாளர்கள்தான் பணம் கட்டணும்’னு திரையரங்கு உரிமையாளர்கள் சொல்றாங்க. ஏற்கெனவே பலவழிகள்லயும் பாதிக்கப்பட்டிருக்கோம். உங்க தியேட்டர்ல உள்ள புரொஜக்டருக்கு நாங்க ஏன் பணம் கட்டணும்னு தயாரிப்பாளர்களான நாங்க கேட்கறோம். பல வருஷங்களா இதுக்கு ஒரு தீர்வே வராம போய்க்கிட்டிருக்கு...’’ என்
கிறார் கவலையுடன்.

இதுபற்றி திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் போது, ‘‘தயாரிப்பாளர்கள் மறுபடியும் மறுபடியும் எங்ககிட்ட வி.பி.எஃப் விஷயத்தை பேசறாங்க. அவங்க எங்ககிட்ட பேசவேண்டியதில்ல. அதை யார்கிட்ட கட்டுறாங்களோ அவங்ககிட்ட பேசாம, எங்கள வந்து வம்பிழுக்கறாங்க. அந்த வியாபாரத்தை யார் வச்சிருக்காங்களோ அவங்ககிட்டதானே பேசணும்?

இந்தப் பிரச்னையை பெருசு பண்ணி தேவையில்லாம ஒரு மனக்கசப்பை வளர்க்கறாங்க. அப்புறம் இது ஒரு தமிழ்நாட்டுப் பிரச்னை இல்ல. இந்திய பிரச்னை. எல்லா மொழி திரையுலகிலும் நிலவும் சிக்கல்...’’ என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் சொல்கிறார்.

5. தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமையின்மை

‘‘இதுவும் காலம் காலமா நிலவு வதுதான். சினிமால 24 யூனியன்ஸ் இருக்கு. ஆனா, தயாரிப்பாளர்கள் சங்கத்துலதான் நிறைய டிவிஷன்ஸ் இருக்கு.
ஒரு தொழில்நுட்ப சங்கத்தை எடுத்துக்கிட்டா, அதுல எந்த டிவிஷனும் இல்லாம ஒன்றிணைந்து செயல்படுறாங்க. பெப்சியா இருந்தாலும் சரி, யாரா இருந்தாலும் சரி, தன்னுடைய தொழில் பாதிக்கப்படக்கூடாதுங்கறதுல ரொம்ப கவனமா ஒற்றுமையா இருந்து வேலை பார்க்கறாங்க.

தயாரிப்பாளர்களிடம் இந்த ஒற்றுமை கிடையாது. யூனிட்டியா பணியாற்றினா பல சாதனைகள் படைக்க முடியும். ஆனா, யூனிட்டி கிடையாது. அரசியல் போலதான் இங்கயும்... யார் தலைவனாகிறது? யார் செக்ரட்டரியாகறதுனு கவனம் செலுத்தறாங்களே தவிர ஒற்றுமையைப் பத்தி பேசறதே இல்ல.

தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு நகரணும். இங்க வேலை செய்ய ஆட்கள் வரணும்னு யாரும் நினைக்கறது கிடையாது. புராக்ரஸிவ்வா எண்ணக்கூடிய ஆட்கள் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தை பத்து வருஷங்களா கவனிச்சிட்டிருக்கேன். ஒரு டீம் ஜெயிச்சு வருவாங்க.

அவங்ககிட்ட தோல்வியைத் தழுவின டீம், ஆறு மாசத்துக்கு அமைதியா இருப்பாங்க. ஏழாவது மாசத்துல இருந்து ஜெயிச்ச டீமை தூக்கி வீச பார்ப்பாங்க. தயாரிப்பாளர்கள்கிட்ட ஒற்றுமை இருந்தா ஹீரோக்களின் சம்பளத்தை எளிதா குறைச்சிடலாம். செலவுகளை கண்ட்ரோல் பண்ணலாம்...’’ என்கிறார் தனஞ்செயன்.

6. உதவ மறுக் கும் அரசு?

‘‘திரைப்படத் துறைனாலே அது வளமான துறை... அவங்களுக்கு என்ன குறை இருக்கும்னு மத்திய அரசு நினைக்குது. மத்த தொழில்துறைகளை எப்படி பார்க்கறாங்களோ, அதே பார்வை சினிமா துறைக்கும் இருக்கணும்னு விரும்புறோம். சினிமா ஓர் அங்கீகரிப்பட்ட தொழில். மத்த தொழில்கள் மாதிரி இதற்கும் வங்கி கடன்கள் கிடைக்கணும். அப்பதான் சினிமா தலைதூக்கும்.

மத்திய, மாநில அரசுகளுக்கு சினிமாத்துறை முக்கியமான ஒரு துறை. பல லட்சம் தொழிலாளர்கள், பல கோடி வருமானம் வரும் துறை இது. ஆனா, அத்தனை கோடிகள் கொட்டி முதலீடு போட்ட தயாரிப்பாளர்கள் பலரின் வாழ்வாதாரம், இந்த லாக் டவுனால் கேள்விக்குறியாகிடுச்சு.
கோடிகள் புரளும் துறைக்குள்ள நிலவும் வலியும் வேதனையும் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.

மத்த தொழில்கள் மாதிரி இதற்கும் ஜிஎஸ்டி வரிகுறைப்பு செய்து, ஒரு கமிட்டியை நியமித்து இந்த துறையையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரணும்...’’ என்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் குரலும், அதையே பிரதிபலிக்கிறது. ‘‘சினிமா தொழில் மட்டும்தான் முழுக்க முழுக்க சலுகைகளை எதிர்பார்க்காம நடந்திட்டிருக்கு. அதனாலயே இங்க நமக்கு சலுகைகள் எதுவும் கிடைக்காதுனு மனதளவுல ரெடியாகிட்டுதான் படம் தயாரிக்கவே வர்றோம்.

தியேட்டர் கட்டணம் உயர்வு தவிர மத்தபடி புதுசா சலுகைகள்னு கொடுத்திருக்காங்கனு சொல்றதுக்கு எதுவும் இல்ல. வரிச் சுமையை குறைக்கணும்னுதான் சொல்லிட்டிருக்கோம்...’’ என்கிறார்.

தியேட்டர் தரப்பும் அரசிடம் சலுகை எதிர்பார்க்கிறது. ‘‘தியேட்டர்களுக்கு அரசாங்கம் உதவுறதே இல்ல. எந்தவித மானியமும் அளிக்கறதில்ல. இன்னிக்கு இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமா அசாம் இருக்கு. அங்க ஒவ்வொரு திரையரங்கங்களுக்கும் - அதாவது புது திரையரங்குகள்னா 75 லட்சமும், ஓடிக்கிட்டிருக்கும் திரையரங்கை ரெனுவேஷன் பண்ணினா ஐம்பது லட்சமும் - மானியமா கொடுக்கறதா அறிவிச்சிருக்காங்க.

தமிழக அரசும் இந்த மாதிரி சலுகைகள் கொடுக்கணும்னு எதிர்பார்க்கறோம். ஏன்னா, இந்த ஊரடங்கு காலகட்டத்துல மிகப்பெரிய நஷ்டத்தை சந்திச்சிருக்கோம். எல்லா தொழிற்துறையும் ஓடிட்டிருக்கு. எங்க தொழிலை மட்டும் முடக்கி வச்சிருக்காங்க...’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

7. பெருகி வரும் படங்கள்... குறைந்து வரும் தியேட்டர்கள்...

‘‘இருக்கற திரையரங்குகளை சின்ன திரையரங்குகளாக மாற்றுவதற்கான வழிமுறைகள் எதுவும் எளிமையானதா இல்ல. கடுமையான விதிமுறைகள் இருக்கறதால, மாநிலம் முழுவதும் சின்ன திரையரங்குகள் உருவாகல. இந்த விதிமுறைகளை எளிமைப்படுத்தணும். சின்ன திரையரங்குகளை வரவேற்கறோம். ஏன்னா, தொள்ளாயிரம் சீட்கள் இருக்கற தியேட்டர்ல ஒரு பெரிய படம் திரையிட்டா நாலு வாரம் ஓடும். ஆனா, முதல் வாரம் மட்டும்தான் எண்ணூறு பேர் பார்த்து ரசிப்பாங்க. அடுத்தடுத்த வாரங்கள்ல நூறுபேர் கூட வரமாட்டாங்க.

சின்ன படங்கள் வருகையோ அதிகம் இருக்கு. அதனால சின்னச் சின்ன தியேட்டர்களா நாலு தியேட்டர்களுக்கு பர்மிஷன் கொடுத்திருந்தா, முதல் வாரம் நாலு தியேட்டர்கள்லயும் ஒரே படத்தை போடலாம். ரெண்டாவது வாரம் ரெண்டு தியேட்டகள்ல ஒரே படமும், அடுத்த தியேட்டர்கள்ல வேறு படமும் திரையிட முடியும். சின்ன பட்ஜெட் படங்களுக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும்.

ஏற்கெனவே எல்லா விதிமுறைகளுக்கும் உட்பட்டுத்தான் தியேட்டர்களே கட்டறோம். ஸோ, எளிமையான விதிமுறைகள் இருந்தா, தமிழ்நாட்டுல நிச்சயமா மூவாயிரம் நாலாயிரம் தியேட்டர்கள் உருவாகும். தவிர, மத்திய அரசின் வரி தவிர மாநில அரசின் வரியும் கட்றோம். தமிழக அரசு எண்டர்டெயின்மென்ட் டேக்ஸ்னு 8 சதவிகிதம் வசூலிக்குது. இந்தியாவுல வேற எந்த மாநிலத்துலயும் இப்படி இல்ல...’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

8. விதிமுறைகளால் திணறும் திரையரங்குக ள்

‘‘இன்னிக்கு டிஜிட்டல் சினிமா வந்திடுச்சு. ஒரே ஆப்ரேட்டர் இருந்தா போதும், ஏறக்குறைய பத்து, பனிரெண்டு தியேட்டர்களை ஆப்ரேட் பண்ணமுடியும். ஆனா, அரசாங்கம் 1951ல போட்ட விதிமுறைகளின்படி ஒரு தியேட்டருக்கு ரெண்டு ஆப்ரேட்டர்கள் அவசியம்னு சொல்றாங்க. ஆனா, ஆப்ரேட்டர் லைசென்ஸுக்கான தேர்வு நடத்தியே 15 வருஷங்களாச்சு.

இன்றைய சூழல்ல புது ஆப்ரேட்டர் யாருக்குமே லைசென்ஸ் கொடுக்கப்படல. ஒவ்வொரு தடவையும் தியேட்டர் லைசென்ஸை புதுப்பிக்கச் செல்லும்போதும், ஒரு ஸ்கிரீனுக்கு ரெண்டு ஆப்ரேட்டர் லைசென்ஸை காட்ட வேண்டியிருக்கு. அந்த நிலமையை மாத்தி, காலத்துக்கு ஏத்த மாதிரி லைசென்ஸ் முறையைக் கொண்டு வரணும்னு விரும்புறோம்.

தியேட்டர் லைசென்ஸையும் ஆண்டுக்காண்டு புதுப்பிக்கறது சிரமமா இருக்கு. அதை குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கணும்னு அறிவிக்கணும்னு எதிர்பார்க்கறோம்...’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

9. பைரஸியும்... வியாழக்கிழமை விவகாரமும்...

‘‘பல வருஷங்களா பேசிப் பேசி தீர்க்க முடியாத பிரச்சினை பைரஸி. ஒரு படம் வெளியான அடுத்த நிமிஷமே திருட்டுத்தனமா இணைய
தளங்கள்ல அந்தப் படம் வெளியாகிடுது. இந்தப் பிரச்னையை ஒழிக்க 25 வருஷங்களா பேசிட்டிருக்கோம். பேச மட்டுமே செய்யறோம். இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படலை...’’ என்கிறார் தனஞ்செயன்.

டி.சிவாவோ, ‘‘ஒரு வாரம் கூட படத்தை ஓட்ட மாட்டேங்கிறாங்க...’’ என ஆதங்கமாகிறார். ‘‘ஹோல்டு ஓவர் முறைப்படி - அதாவது ஒரு படம் 45 சதவிகிதத்துக்கு குறையாமல் ஓடினா, தியேட்டர்ல இருந்து அந்த படத்தை தூக்கக்கூடாதுனு ஒரு ரூல் இருக்கு. அதை கண்டுக்காம எல்லா படத்தையும் வியாழக்கிழமையே தூக்கிடுறாங்க.

படம் நல்லா போகுது... இன்னும் சில வாரங்கள் ஓட்டினா படம் பிக்கப் ஆகும்னு ஓட்டி கொடுக்கற எண்ணமே கிடையாது. எல்லா படத்தையும் வியாழக்கிழமையே தூக்கிவிட்டுடுறாங்க. இதுல பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் மட்டும் விதிவிலக்கு. கூட ஒருவாரம் சேர்த்து ஓட்டுவாங்க.
அதே மாதிரி எல்லா தியேட்டர்கள்லயும் கன்ஃபர்மேஷன் லெட்டர் வாங்கி வச்சிடறாங்க. இந்த தியேட்டர்ல உள்ளதை அதுல போடுறது... அந்த தியேட்டர்ல உள்ளதை இதுல போடுறதுனு சிண்டிகேட் பண்றாங்க. அதையும் நிறுத்தணும்னு கேட்டிருக்கோம்...’’ என்கிறார் டி.சிவா.

10. தியேட்டர் கட்டணம் அதிகரிப்பு

‘‘ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணும் விவகாரம் இது. ரயில்வேல டிக்கெட் புக் பண்ணினா ஒரு ஃபாரம் பத்து ரூபாதான். அதுல ஆறு டிக்கெட் புக் பண்ணலாம். அதான் சரியான கட்டணம். அதே மாதிரி ஆன்லைன்ல சினிமா டிக்கெட் புக் பண்ணினா, ஒரு டிக்கெட்டிற்கு பத்து ரூபாய் சர்வீஸ் சார்ஜ் வசூலிச்சா, அதுல அஞ்சு டிக்கெட் புக் பண்ணலாம்னு கொண்டு வாங்க. அப்படியில்லாமல் ஒரு டிக்கெட்டிற்கு சர்வீஸ் சார்ஜ் முப்பது ரூபா, ஜிஎஸ்டி அஞ்சு ரூபானு 35 ரூபா கட்டணம் வசூலிச்சா எப்படி?

இந்த அநியாயத்துல தியேட்டர் உரிமையாளர்கள் பாதி தொகையை - பதினைஞ்சு ரூபாயை - தங்களுடைய ஷேரா வாங்கிக்கறாங்க. அந்த ஷேரையும் அட்வான்ஸா ரெண்டு கோடி, மூணு கோடினு பெரும் தொகையா வாங்கிடறாங்க.

ஸோ, பொதுமக்கள் டிக்கெட், ஆன்லைன் சார்ஜ், ஜிஎஸ்டி, பார்க்கிங்னு ஒரு பெரிய தொகையை செலவழிக்க வேண்டியிருக்கு. அதே மாதிரி தியேட்டர்ல விளம்பரங்கள் திரையிட்டா அந்த விளம்பர வருவாய்ல பாதி தயாரிப்பாளர்களுக்கு தரணும்னு கோரிக்கை வச்சிருக்கோம். ஆடியன்ஸ் உங்க தியேட்டரை பார்க்க வரல. நாங்க தயாரிச்சிருக்கற படத்தை பார்க்கத்தான் வர்றாங்க. அதனால விளம்பர வருமானத்துல எங்களுக்கும் ஷேர் வேணும்...’’ என்கிறார் டி.சிவா.

‘‘டிக்கெட் கட்டணம் அதிகமாகிடுச்சு. குடும்பத்தோட படம் பார்க்க முடியலைனு சொல்றதை ஏத்துக்க முடியல. 2010ல ஒரு டீயோட விலை என்ன? இன்னிக்கு என்ன விலை? ஆனா, யாரும் டீ குடிக்கறத நிறுத்தலையே? விலைவாசி அதிகரிக்கும் போது தியேட்டரின் மின்கட்டணமும் அதிகமாகுது. சொகுசான சோஃபா, குளுகுளுனு ஏசினு எதிர்பாக்கறாங்க. அப்ப, அதுக்கேத்த மாதிரி டிக்கெட் கட்டணம் இருக்கத்தானே செய்யும்?

டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு காரணமாக அமையாது. ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ற படம் கண்டிப்பா ஓடும். அதுக்கு மிகச்சிறந்த உதாரணம் ‘பாகுபலி’. தமிழ்நாட்டுல இதுவரை எந்த ஒரு படத்தையும் ஒருகோடியே 65 லட்சம் பார்வையாளர்கள் பார்த்ததா சரித்திரமில்ல. ‘பாகுபலி’யை பார்த்திருக்காங்க. அந்த ரெக்கார்டை ரஜினியோ, அஜித்தோ, விஜய்யோ யாருமே பிரேக் பண்ணல.

இதுக்கு அடுத்த இடத்துல விஜய்யின் சமீபத்திய படங்கள் இருக்கு. ‘மெர்சல், சர்கார்’ படங்களை ஒரு கோடிப்பேர் பார்த்திருக்காங்க.
ஸோ, கன்டன்ட் நல்லா இருந்தா படம் ஓடும்...’’ என்கிறார் ராமானுஜம்.‘‘மத்த எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டுலதான் தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறைவா இருக்கு. அதனாலதான் அரசாங்கம் எங்களுக்கு மானியம், சலுகைகள், வரிக்குறைப்பு செய்யணும்னு விரும்புறோம்...’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.கொரோனா பொது ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் தமிழ் சினிமாவில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புவோமாக.

மை.பாரதிராஜா