ரஜினி



கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் யோகா, தியானம் என ரிலாக்ஸ் ஆகி வரும் ரஜினி, நியூஸ் பேப்பர்கள், செய்தி சேனல்களை அதிகம் கவனிக்கிறாராம். தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் அனைவரிடமும் ‘ஜனவரி ஆகட்டும்.
அவசர தகவலெனில் சாரே உங்களிடம் பேசுவார்’ என அவரது அலுவலகத்தில் இருந்து பதில் போகிறதாம். ரஜினியும் விபரங்களைக் கேட்டு விட்டு, அவர்களை உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பேசியும் விடுகிறார். ‘அண்ணாத்த’வுக்கு அடுத்து கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சு கசிகிறது.l

இந்த இதழுடன் வழங்கப்படும் Mediclone Healthcare Pvt Ltd வழங்கும் Vipe Out ரூ.50 மதிப்புள்ள ஆன்டிசெப்டிக் லிக்விட் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே!

கமல்

ஜெகஜோதியாக அறிவிக்கப்பட்ட ஷங்கர், கமல் கூட்டணியின் ‘இந்தியன் 2’ சிக்கல் மேல் சிக்கலில் தவிக்கிறது. லாக் டவுன் சூழலால் தயாரிப்பாளர் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட நிலையில் படத்தின் பட்ஜெட்டும் குறைக்கப்பட்டிருக்கிறதாம்.

இதற்கிடையே ஹீரோ கமலும் நூறு நாள் வேலை திட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறிவிட்டார். ஹீரோயினான காஜல் அகர்வாலின் திருமணம், இன்னொரு ஹீரோயினான ரகுல் ப்ரீத் போதை விவகாரத்தில் சிக்கியது என அடுத்தடுத்து இடியாக பிரச்னைகள். எனவே, புராஜெக்ட்டை ட்ராப் செய்துவிடலாம் என கருதுகிறதாம் தயாரிப்பு தரப்பு. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் டேக் ஆஃப் ஆகிறது. தீபாவளி முடிந்ததும் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம்.l

விஜய்

விஜய் - பேரரசு கூட்டணி என்றாலே ஹிட் காம்போதான். ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என எல்லாமே அதிரடி சரவெடிதான். தங்கச்சி பாசமும் ஊர் நேசமும் கலந்துகட்டி ஆக்‌ஷனும் எமோஷனுமாக பின்னி பெடலெடுப்பார்கள். இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? அந்த வெற்றிக்கூட்டணி மறுபடியும் இணையப் போகிறதாம். சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறார் பேரரசு. அதில் இம்ப்ரஸ் ஆன விஜய், ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... சொல்றேன்...’ என ஆஃப் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். ஏக குஷியில் இருக்கிறார் பேரரசு.

அஜித்

ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த படம் செல்வது என்பது அஜித்தின் பாலிஸி. போனிகபூருக்கு கொடுத்த வாக்கிற்காக ‘வலிமை’யை இந்த ஆண்டே முடித்துக் கொடுத்துவிடலாம் என நினைத்த அவர் ஊரடங்கிற்குப் பிறகு படப்பிடிப்புக்குக் கிளம்ப ரெடியானார். இந்நிலையில் கேரளாவில் பிருத்விராஜ், ஹைதராபாத்தில் தமன்னா என பலரும் படப்பிடிப்புக்கு கிளம்பிப் போன இடத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதைக் கண்டு கலக்கமடைந்த அவரது நட்பு வட்டாரம், ‘உங்க உடம்புல ஏற்கெனவே நிறைய ஆபரேஷன்ஸ் பண்ணியிருக்காங்க.

ரிஸ்க் எடுக்காதீங்க...’ என கேட்டுக் கொண்டதால் அரை மனதாக ஷூட்டிங்கில் பங்கேற்பதை தள்ளி வைத்திருக்கிறார் அஜித். அதுவரை அவர் பங்கேற்காத  போர்ஷன்ஸைத்தான் ஷூட் செய்வார்களாம். தவிர, அடுத்த கல்வியாண்டில்தான் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறாராம் தல!

சூர்யா

சினிமாவில் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை அகரம் பவுண்டேஷனுக்காக செலவிடும் சூர்யா, முன்பு வங்கியில் கடனுதவி பெற்று பொள்ளாச்சி பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் விண்ட் மில்லை அமைத்திருந்தார். இப்போது அந்தக் கடனெல்லாம் அடைந்து, மில் சொந்தமாகி யிருக்கிறதாம். ஸோ, சூர்யா இப்போ மில் ஓனர். இன்னொரு தகவல்-உலகப் படங்களில் ஈரானிய படங்களை விரும்பிப் பார்க்கும் அவர், இந்த லாக்டவுனில் தனது நட்பு வட்டம் ரெஃபர் செய்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்தாராம்.

தனுஷ்

மீண்டும் இணைகிறது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. சூர்யாவின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்புக்கு தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சூழல்... சூரியை வைத்து இயக்கும் படத்திற்கு சவுதி, கத்தார் என வெளிநாடு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அதனையெல்லாம்
தள்ளிவைத்துவிட்டு குறுகிய கால புராஜெக்ட்டாக ஒரு படம் பண்ணிவிடலாம் என தனுஷிடம் வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார்.

‘நானும் அப்படி ஒரு படம்தான் எதிர்பார்க்கறேன்’ என்பது போல தனுஷும் ரெடியாக, சீக்கிரமே ஷூட்டிங் கிளம்புகிறதாம் இந்த வெற்றிக் கூட்டணி.
இதற்கிடையே ‘யாரடி நீ மோகினி’ மித்ரன் ஜவஹர் படத்திலும் பரபரக்கிறார் தனுஷ்.

கார்த்தி

கார்த்தியின் ‘சுல்தான்’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு வேலூர் அருகே உள்ள சேவூரில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு கார்த்தி நேரில் சென்று வாழ்த்தவில்லையென்றாலும், கண்ணனுக்கு கல்யாணப் பரிசாக மணமேடையிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வைத்து மகிழ்ந்திருக்கிறார் கார்த்தி.

‘எல்லா கிஃப்ட்டிலும் பெரிய கிஃப்ட் இது’ என மகிழ்கிறார் பா.கண்ணன். கார்த்தி, ‘சுல்தானை’ முடித்துவிட்டு அடுத்து ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். மித்ரன், இப்போது ஸ்கிரிப்ட்டில் கார்த்தி டீம் சொன்ன கரெக்‌ஷன்களை சரிசெய்யும் வேலையில் இறங்கி யிருக்கிறார்.

சிவகார்த்திகேயன்

டாக்டர்’, ‘அயலான்’ படங் களையடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமியின் கதையை ஓகே செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘அயலான்’ படத்தையும் ‘டாக்டரை’யும் தயாரிக்கும் ராஜேஷே இப்படத்தையும் தயாரிப்பதால், பட்ஜெட் பிரச்னைகள் இல்லையென்றாலும் மும்பையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் கால்ஷீட்டை பொறுத்தே ஷூட்டிங் தொடர்வது குறித்து திட்டமிட உள்ளதாம் யூனிட்.
இதனிடையே டிசம்பரில் தேசிங்கின் ஷூட்டிங்கையும் துவங்கும் ஐடியாவில் இருக்கிறார் சிவா.

தொகுப்பு: மை.பாரதிராஜா