கலைஞர் வழங்கிய உள்ஒதுக்கீட்டை தட்டிப் பறிக்க விசிக முயற்சிக்கிறது…
அழுத்தமாக தன் தரப்பை முன்வைக்கிறார் ‘தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்க’த்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளரான மதிவண்ணன்
தலித் இலக்கியத்துக்கும், லலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ‘நெரிந்து’ என்ற சிறியதொரு கவிதைத் தொகுதியின் வழியே அறிய வந்தார் ‘தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்க’த்தின் தலைவராக இருக்கும் கவிஞர் மதிவண்ணன்.
 கருத்தியல் தளத்தில் தன் படைப்புகள் வழியே குறுக்கீடு செய்து கொண்டிருக்கும் இவர், சமகால சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது எழுத்தைப்போலவே பேச்சும் உணர்த்துகிறது... அந்தவகையில் சமீபத்தில், “அருந்ததியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த குரல் வலுவடைந்து வருகின்ற, உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சூழலில் அருந்ததியரையும், தேவேந்திரரையும் விட்டுவிட்டு எஞ்சிய சாதிகள் அனைத்தையும் ஆதி திராவிடர் என்ற அடையாளத்தில் திரட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஒருபுறம் சொல்கிறார்.
மறுபுறம் அருந்ததியர் உள் ஒதுக்கீடு தலித்துகளைப் பிளவு படுத்த பிஜேபியின் செயல்திட்டம் என அக்கட்சியின் இன்னொரு முகமான வன்னி அரசு குற்றஞ்சாட்டுகிறார்… தமது கட்சியின் நிலை என்ன என்பதை தோழர் திருமாவளவன் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்...” என்ற மதிவண்ணனின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. இந்தப் புள்ளியிலிருந்தே உரையாடலைத் தொடங்கினோம்.
‘ஆதிதிராவிடராய் ஒருங்கிணைவோம்’ என விசிக-வினர் முன்வைப்பது குறித்து? அந்தக் கருத்தின் உள்ளடக்கம் குறித்து பேசுவதற்கு முன், அக்கருத்து எழும் காலச் சூழ்நிலையை முதலில் கணக்கில் எடுத்துக் கொள்வோம். உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த கொஞ்ச நாளுக்குள்ளேயே இந்த முழக்கம் வருகிறது. தீர்ப்பு - உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; உள் ஒதுக்கீடு செல்லும் என வந்திருக்கிறது.
இதற்குமேல் உள் ஒதுக்கீடு விஷயத்தில் தங்களுக்கு சாதகமாக விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை போய்விட்ட சூழ்நிலையிலேயே இத்தகைய வாதம் முன்வைக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ‘ஆதிதிராவிடராய் ஒருங்கிணைவோம்’ என்று இவர்கள் சொல்வது பறையர், குறவர், புதிரை வண்ணார்… ஆகிய சாதிகள் ஒருங்கிணைய வேண்டும் என்பதைத்தான். இவர்களுள் குறவர், புதிரை வண்ணார் சாதியினர் இதனை எதிர்க்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆக, ரவிக்குமார் போன்றவர்கள் முன்வைக்கிற இந்தக் கருத்து சாதியாய் ஒருங்கிணைவோம் என் பதுதான். அது சுயநலம் சார்ந்த தவறான நோக்கம் கொண்டது.
ஏனெனில் உள் ஒதுக்கீடு மோசமானது என்று சித்தரிக்கிற ஒரு நோக்கம் இந்த வாதத்தில் முன் வைக்கப்படுகிறது. அதைத்தான் சுயநலம் சார்ந்தது என்கிறேன். உள் ஒதுக்கீடு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது? ரவிக்குமார் சார்ந்த பறையர் சாதிக்காரர்களாலும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிற ஒரு பிரிவினருக்குத் தானே..? முற்போக்கான கட்சி என்று சொல்லப்படுகிற கட்சியின் பெயரில் இத்தகைய மோசமான கருத்து விதைக்கப்படுவது ஆபத்தானது.
ஆதிதிராவிடராய் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்கு ரவிக்குமார் சொல்லும் நோக்கம்தான் நகைப்பாக இருக்கிறது. இந்துத்துவவாதிகளின் பிடியிலிருந்து காப்பதற்காகவே, சிறுபான்மை தலித் சாதிகளை ஆதிதிராவிடர் என்ற பெயரில் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறார். ஆனால், விசிக-வின் மேடைகளிலேயே அறியப்பட்ட இந்துத்துவவாதிகளான ஜெயமோகனும், ரங்கராஜ் பாண்டேவும் காணப்படுகிறார்களே! விசிக-வின் சென்னை மாவட்ட செயலாளர் கூட இப்போது பிஜேபி-யில்தானே இருக்கிறார்?
இந்துத்துவவாதிகளின் பிடியிலிருந்து தமிழகம் மட்டும் ஓரளவுக்கு விடுபட்டு இருப்பதற்கு பெரியாரின் கருத்தியலை காரணமாக அறிஞர்கள் பலர் சொல்கின்றனர். அத்தகைய பெரியார் மீது அவதூறுகளை முன்வைத்தவர்தானே ரவிக்குமார்? அதுவும் தங்களது கட்சிப் பத்திரிகையான ‘தாய்மண்’ணில் அல்லவா?
அதோடு ஆதிதிராவிடராய் ஒருங்கிணைவோம் என்று அவர் முன்வைக்கிற கருத்தில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று வரை ஆதிதிராவிடர் என்பது பொதுப்பெயராகவே உள்ளது. அப்பெயரில் உள்ளவர்கள் அனைவரும் பறையர்தான் என்று appropriate பண்ணுகிற நோக்கம் கூட அதில் உண்டு என நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமா அமைதியாக இருப்பது சரியல்ல என்பது என் கருத்து. உள் ஒதுக்கீடு குறித்து?
இன்று உள் ஒதுக்கீடு கோரிக்கை இந்தியா முழுவதும் உள்ளது. அந்த உள் ஒதுக்கீடு முதலில் பஞ்சாப்பில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. தலித்களிலும் மிகவும் பின்தங்கிய சாதிகளுள் தங்கள் வலுவை ஓரளவு திரட்ட முடிந்த மாநிலங்களில் உள் ஒதுக்கீடு சாத்தியமாகி யுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கலைஞர் செய்தது மிகப்பெரிய விஷயம். லாப நட்டக் கணக்குகள் இல்லாத ஒரு முற்போக்கு நடவடிக்கை அது. உள் ஒதுக்கீட்டால் அருந்ததியர்கள் பலன் அடைந்திருக்கிறார்களா..?
கண்டிப்பாக! கல்வி, வேலை வாய்ப்புகளில் நிச்சயமாக பயன் அடைந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் தளத்தில் அவர்களுக்கான பங்கு என்பது உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பின்பும் கூட கிடைக்கவில்லை. அரசியல் அதிகாரமே பிற அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதால் இதுவும் அருந்ததியர்களைப் பாதிப்பதாக இருக்கிறது.
இப்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன், வி.பி.துரைசாமி போன்றோர் அரசியல் சூழலில் முக்கியமான இடத்தை வகிக்கிறார்களே? அவர்கள் அருந்தயர்களின் நலன்களைப் பிரதிபலிக்க முடியாது. பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தை, நீட் தேர்வு போன்றவைகளால் கொண்டு வருகிறது. இவற்றால் அருந்ததியர் குழந்தைகள்தானே முதலில் பாதிக்கப்படப் போகிறார்கள்? இவர்கள் அது குறித்து ஏதேனும் வாய் திறக்கிறார்களா? அவர்களால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் மிக பலவீனமானவர்கள்.
அருந்தியர்கள் என்றாலே மலம் அள்ளிகள் என்கிற பொதுப்பதிவு இருக்கிறதே... யார் இவர்கள்?
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் குழுக்களுக்குள்ளே மற்றவர் களைப் போலவே இவர்களும் ஒரு முக்கியமான மக்கள் குழுவினர். அவர்களைப்போலவே இவர்களும் ஆண்ட சாதியினர்தான். இந்த ஆண்ட சாதி என்று சொல்லப்படுவதற்கு எல்லாம் இன்றைய மக்களாட்சியில் சமூகத்தில் ஒரு relevance-ம் இல்லை. இன்றைக்கு பிஜேபி ஆட்சியில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், தலித் மக்கள்… இழிவுபடுத்தப்படுவது போலவே ஒரு காலக்கட்டத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் கீழே தள்ளப்பட்டு இழிவு படுத்தப்பட்டவர்களே அருந்ததியர்களும். அவர்கள் ஆண்டதற்கான கல்வெட்டு வரலாற்றுச் சான்றுகள் நிறைய இருக்கின்றன.
இந்தியம், திராவிடம், தமிழ் தேசியம் இவற்றுள் எந்த அரசியல் தத்துவம் அண்ணல் அம்பேத்கார் எடுத்துரைக்கும் பௌத்தம் வழியிலான சமூக விடுதலைக்கு இணக்கமாக இருக்கும்..? தமிழனாய், திராவிடனாய், இந்தியனாய் என எந்த அடையாளத்தோடு இருந்தாலும் அண்ணல் அம்பேத்கார் தத்துவத்தை ஏற்க முடியும். ஒரு பத்து வருடத்திற்கு முன்பு அண்ணல் பிறந்தநாள் அன்று ‘தி இந்து’ பத்திரிகையில் வந்த கட்டுரை ஒரு விஷயத்தை கவனப்படுத்தி இருந்தது.
ஜுல்பிகார் அலி பூட்டோ என்ற பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ராணுவப் புரட்சிக்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே நாளில்தான் விடுதலை கிடைத்தது.
இந்தியாவிற்கு ஒரு அம்பேத்கார் இருந்தார். அவர் ஜனநாயகபூர்வமான ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தைத் தந்தார். அந்நாடு இன்றும் சுதந்திரமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஓர் அம்பேத்கார் இல்லாததற்கு நான் தூக்கில் தொங்க இருக்கிறேன்’ என பூட்டோ வருந்தினார். பின் தூக்கிலிடப்பட்டு இறந்தார். இப்போது சொல்லுங்கள், பாகிஸ்தானுக்கே அம்பேத்கார் தேவைப்படுவார் என்றால் மற்றவருக்கா தேவைப்பட மாட்டார்..? அம்பேத்காரியம் என்பது உலகம் தழுவிய தத்துவம். உலகம் முழுவதும் எங்கெல்லாம் ஒடுக்கப்படுபவன் இருக்கிறானோ அங்கெல்லாம் அண்ணல் அம்பேத்கார் தேவைப்படுகிறார். தலித் கலை - இலக்கியத்தின் வளர்ச்சி, அதன் மீதான சமூக அழுத்தம், சக எழுத்தாளர்களின் அணுகுமுறை குறித்த உங்கள் அனுபவம்…
இன்றைக்கு தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களே ‘எங்களை தலித் எழுத்தாளர்கள் என்று ஏன் வகைப்படுத்துகிறீர்கள். தலித் என்பதற்காக நான் எழுதுவது தலித் இலக்கியம் என்றால், செட்டியார் இலக்கியம், நாடார் இலக்கியம் என்றெல்லாம் உண்டா’ என்று கேட்கிறார்கள்.
இப்படியான போக்கின் நீட்சி யாக ‘பட்டியல் சாதி என்பது எங்களை இழிவுபடுத்துகிறது. நாங்கள் பட்டியலில் இருந்து வெளியேறுகிறோம்’ என்று சொல்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
பட்டியல் என்பது இழிவானதல்ல. பட்டியல் 1935ல் இடப்பட்டது. வரலாற்றில் அதற்கு முந்தைய எத்தனையோ ஆண்டு காலமாக இந்த ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இழிவு சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ஆக, பட்டியல் சாதிகள் என்பதோ தலித் இலக்கியம் என்பதோ இழிவுபடுத்துவதற்காக தோன்றி யவை அல்ல. ஏற்கனவே உள்ள இழிவுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து அதைத் துடைக்க முற்படுபவை.
உண்மையில் தலித் இலக்கியம் என்ற ஒரு வகைப்பாடு தோன்றியதன் பின்தான் ஏற்கனவே உள்ள இலக்கியம் மீதான ஒடுக்கப்பட்ட சாதிகள் நோக்கிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை கவனிக்க வேண்டும்.
அன்னம் அரசு
ஜோசப் ராஜா
|