நான்...பிருந்தா மாஸ்டர்



அம்மாவுக்கு வேலையைத் தாண்டி வேற எந்த வாலுத்தனம் செய்தாலும் பிடிக்காது. போனோமா வேலைய முடிச்சோமான்னு வந்துடு வோம். அதுதான் என் வெற்றிக்குக் காரணம். ‘நான்…’ இப்படிக் கேட்டதால எனக்கு நான் யாருன்னு சொல்லிடறேன். என் கணவருக்கு நல்ல மனைவி, என் குழந்தைகளுக்கு அன்பான அம்மா, என் அக்காக்களுக்கு செல்ல தங்கச்சி. இதுதான் என் உலகம். இதை எதுக்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.

என்னை இன்னைக்கும் ராணி மாதிரி பார்த்துக்கறாங்க என் அக்காக்கள். கொரோனா லாக்டவுன் டைம் அப்பகூட என்னைய சமைக்கவே விடாம தினமும் ஒவ்வொரு அக்கா வீட்ல இருந்தும் சாப்பாடு வந்தது. ஏன், கலா அக்கா தினம் ஈசிஆர்ல இருந்து வந்து சாப்பாடு கொடுப்பாங்க. அவங்களைப் பொறுத்தவரை நான் அவங்களுக்கு முதல் பொண்ணு. அவங்களால்தான் நான். எங்க அம்மாவால்தான் நாங்க.

நான் பிறந்தது சென்னைலதான். மத்த அக்காக்கள் எல்லாம் ஈரோடு, பாலக்காடுன்னு பிறந்தாங்க. அப்பா கல்யாண சமையல்ல கிங். பெரிய பெரிய ஆர்டர் எல்லாம் எடுத்து செய்து கொடுப்பாங்க. கோபால நாயர்னா அவ்ளோ ஃபேமஸ். அம்மா பாலக்காடு சரோஜினியம்மா, நல்லா பாடுவாங்க. அவங்க கிட்டே இருந்துதான் பாட்டு, டான்ஸ் எல்லாமே எங்களுக்கு வந்தது.  
 
அப்பா ஈரோட்டிலிருந்து சம்பாதிச்சு எங்களுக்கு பணம் அனுப்புவார். எங்களை எப்படியாவது நடனம், அரங்கேற்றம் அப்படின்னு பெரிய அளவில் கொண்டுவர ஒரு மனுஷியா எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு சென்னை வந்தாங்க எங்க அம்மா. ஒண்ணுமே தெரியாம ஈரோட்டில் இருந்து ஏழு மகள்களைக் கூட்டிக்கிட்டு இங்க வந்தாங்க.

ஈரோடு மாதிரி நகரத்துல அப்ப டான்ஸ் ஸ்கூல் கிடையாது. அதனால் சென்னை வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். கிரிஜா அக்கா, கலா அக்கானு எல்லோரையும் கிளாசிக்கல் நடனத்தில் அம்மா சேர்த்து விட்டாங்க. நான் அப்ப ரொம்ப சின்னப் பொண்ணு. அப்பறம் கிரிஜா அக்கா ரகுராம் மாஸ்டரைத் திருமணம் செய்தாங்க. என்னுடைய அடுத்தடுத்த அக்காக்கள் ரகுராம் மாஸ்டர்கிட்டயே ஜூனியராக சேர்ந்து நடனம் கத்துக்க ஆரம்பிச்சாங்க.

அப்படித்தான் ஒவ்வொருத்தரும் சினிமாவுக்குள்ள வர ஆரம்பிச்சோம். எங்களுடைய அத்தனை உயரத்துக்கு பின்னாடியும் எங்க அம்மாவுடைய தைரியமும் தன்னம்பிக்கையும்தான் இருக்கு. ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க அம்மாவுக்கு என் நண்பர்கள் எல்லாம் கூட பயப்படுவாங்க. குஷ்பு எல்லாம் அம்மாவைப் பார்த்தாலே அப்படி பயப்படுவா.

ஆனா, எல்லா வகையிலும் எங்களுக்கு சுதந்திரமும் கொடுத்தாங்க. நினைத்த வாழ்க்கை அமைச்சுக்க, பிடிச்ச வேலையை செய்யனு எதுவானாலும் அம்மா கிட்ட பகிர்ந்துக்க சுதந்திரம் உண்டு. வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு லேட்டா வந்தா அம்மாகிட்ட இருந்து திட்டு வராது, அதுவே சும்மா ஊர் சுத்திட்டு வந்தா அவ்வளவுதான்... கதவைப் பூட்டிடுவாங்க. அடிக்கடி நானும் குஷ்புவும் இப்படி மாட்டிப்போம். நல்ல கால்குலேட்டர் மைண்ட். பெரிய அளவில் அம்மா படிக்கலை. ஆனாலும் எவ்வளவு பெரிய கணக்கா இருந்தாலும் சட்டுனு போட்டுடுவாங்க. 81 வயசுல இறந்தாங்க. ஆனாலும் அவங்களுக்கு மறதினு ஒண்ணு இருந்ததே கிடையாது.

நாங்களே சில பொருளை எங்கேயாவது வச்சுட்டு தேடுவோம். ஆனா, அவங்க இதுவரைக்கும் ஒரு பொருளையோ ஒரு விஷயத்தையோ மறந்து நாங்க பார்த்ததே கிடையாது. சின்ன வயதிலேயே அவங்க அப்பா அம்மாவை இழந்தவங்க. தானே வேலை செய்து ரெண்டு சகோதரிகளுக்கும் கல்யாணம் செய்து தானும் திருமணம் செய்து வாழ்வதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை.

ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா பள்ளில படிப்பு. அதைத்தொடர்ந்து எஸ்ஐஇடில பள்ளிப்படிப்பு. பள்ளியில் படிக்கும்போதே சினிமா வாய்ப்புகள்... நடனப் பயிற்சினு வாழ்க்கைப் பயணம் ஆரம்பிச்சுடுச்சு. ரகுராம் மாஸ்டர், அக்காக்களுக்கு கிளாஸ் எடுக்கும் போது ஒளிஞ்சி நின்னு வேடிக்கை பார்த்துட்டே இருப்பேன். அப்பவே ரொம்ப ஆசையா இருக்கும். அக்காக்களும் வெண்ணிற ஆடை நிர்மலா ட்ரூப்ல கிளாசிக்கல் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அவங்களைத் தொடர்ந்து நானும் சேர்ந்திட்டேன்.

நரசிம்மாச்சாரி குருநாதராக வந்தார். தொடர்ந்து வெண்ணிற ஆடை நிர்மலா மேடம், ரகுராம் மாஸ்டர் இவர்கள் எல்லாம் எனக்கு குருநாதரானாங்க. சில மேடை நிகழ்ச்சிகள்...அதைத் தொடர்ந்து சில படங்களுக்கு அசிஸ்டென்ட் நடன இயக்குநராகவும் வேலை செய்தேன்.ஒருநாள் ஷூட்டிங்ல கலா அக்காவுக்கு காலில் அடிபட்டு டுச்சு. அந்த நேரம் ‘புன்னகை மன்னன்’ படத்துடைய வேலை நடந்திட்டு இருந்துச்சு. அக்காவுக்கு அடிபட்டதால கிரிஜா அக்கா என்னை தொடர்ந்து வேலை செய்யச் சொன்னாங்க.

மத்த அக்காக்கள் மாதிரி எனக்கு பளிச்சென பேசத் தெரியாது. இப்ப வரைக்கும் ரொம்ப அமைதியான ஆளு நான். வீட்டிலேயே அவ்வளவு பேச மாட்டேன். என்னால டச் பண்ணி நடனமாட முடியாதுனு சொல்லிட்டேன். அப்புறம்தான் ரகு மாஸ்டர் கிட்ட ஏழு வருஷம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு அவர்கிட்டயே அசிஸ்டெண்ட் ஆனேன்.

இப்பவும் வேலையைத் தாண்டி வேறு எதுவும் பேசவே மாட்டேன். நேரம் தவறாம சரியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிடுவேன். அதனால என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. மாஸ்டரா முதல் படம் ‘நந்தவனத் தேரு’. அதைத்தொடர்ந்து ‘உள்ளத்தை அள்ளித்தா’ல ‘அழகிய லைலா...’ பாடலுக்கு நடனம் அமைச்சேன். என்மேல சுந்தர்.சிக்கும் குஷ்புவுக்கும் பெரிய அளவில் நம்பிக்கை.

அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தினு நிறைய ஆஃபர்ஸ் வர ஆரம்பிச்சு இன்னைக்கு இப்ப பிருந்தா மாஸ்டர் இங்க நிற்கிறேன்.இதற்கிடையில் திருமணம்... எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்ல. வீட்டில் எல்லாரும் சொல்லிச் சொல்லி... ஒரு நாள் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டா ‘நீ கல்யாணம் பண்ணிக்கிற... அவ்வளவுதான்’னு சொல்லிட்டாங்க.

அக்கா ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்ல ஒரு பையனைப் பார்த்துட்டு ‘இந்த பையன் நல்லா இருக்கான்’ அப்படின்னு சொன்னாங்க. அவர் நடிகர் ஜெயராம் மனைவிக்கு உறவுக்காரர். பெயர் கோப்லா. ‘உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே... குறிப்பா என் அக்கா பசங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா நிச்சயம் செய்துக்கறேன்’னு சொன்னேன்.

அவர் என்னை முதல் தடவை பார்க்க வர்றப்ப கூட புடவை எல்லாம் கட்டிக்கலை. சல்வார் போட்டுக்கிட்டுதான் இருந்தேன். இதுபத்தி அம்மாகூட குஷ்புகிட்ட புகார் சொன்னாங்க. குஷ்பு பதறி ‘அவ கல்யாணத்துக்கு ஓகே சொன்னதே பெரிய விஷயம்... அப்படியே விட்டுடுங்க, மறுபடியும் எங்களால போராட முடியாது’னு சொன்னா!  

ஆறு மாதங்கள் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க நேரம் கிடைச்சது. எனக்கு இந்த கிராண்டான கல்யாணம் எல்லாம் பிடிக்காது. கோயில்ல கல்யாணம். அவ்வளவுதான். என்னைப் போலவே அவருக்கும் சிம்பிளா இருக்கதான் பிடிச்சிருந்தது. நானே அளவா பேசுவேன். என்னைவிட அவர் அளந்து பேசுவார். நான் பத்து வார்த்தை பேசினா... அவர் கிட்ட இருந்து ஒரு வார்த்தை வந்து விழும்!

நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ பாலக்காட்டில் கல்யாணம். எங்களுக்கு ட்வின்ஸ். அவங்க பிறக்கறப்ப சுமார் 25 பேர் சூழ்ந்திருந்தாங்க. அப்பதான் புரிஞ்சுகிட்டேன்... என் மேல என் குடும்பத்துக்கு எவ்வளவு அன்புனு.  என் முழு உலகம் அவங்கதான். எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது. சும்மா இந்த தோசை... ஆம்லெட்.... இதெல்லாம் செய்வேன். ஒரு கூட்டு, பொரியல் செய்யறேன்னு சமையலறைக்கு போனா மொத்த ஃபேமிலியும் சேர்ந்து ‘தயவுசெய்து நீ ரிஸ்க் எடுக்காத’னு உட்கார வெச்சிடுவாங்க!

இந்த ஊரடங்கு எனக்கு சில வித்யாசமான அனுபவங்களைக் கொடுத்துச்சு. அக்காக்கள் எல்லாரும் இருந்ததால சமையல் பெருசா செய்யலை. அவங்க வீட்டில் இருந்தே வந்துடும். ஆனா, வீடு சுத்தம் செய்யறது, பசங்க கூட நிறைய நேரம் செலவழிக்கறதுனு இருந்தேன். நீண்ட நாட்கள் தொடர்ச்சியா நான் வீட்ல இருந்தது இப்பதான். என் பசங்க கூட மூணு நாலு மாசம் இருந்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இப்ப மணிரத்னம் சார் படம் போயிட்டு இருக்கு. ‘அண்ணாத்த’ படம் முடிஞ்சு ரெடியா இருக்கு. ஸ்கிரீன் அவார்டு... அதுதான் என் முதல் விருது. அப்புறம் தொடர்ந்து தேசிய விருது, ஸ்டேட் அவார்ட், ஃபிலிம்ஃபேர்…

சினிமாவைப் பொறுத்தவரை நேரமும் காலமும் ரொம்ப முக்கியம். சரியான டைமுக்கு பாடலை முடித்துக்கொடுத்தாலே கரியரில் பாதி சக்சஸ். இப்ப இருக்கற தலைமுறைகளுக்கெல்லாம் நாம சொல்லிக் கொடுக்கவும் தேவையில்லை, நமக்கு அவங்க நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. அவ்வளவு புத்திசாலித்தனமா இருக்காங்க. இது கூடவே வேலைக்கு நியாயமா நடந்துகிட்டா போதும். அதை நான் இப்ப வரைக்கும் கடைப்பிடிக்கறேன்!l  

ஷாலினி நியூட்டன்