தல! sixers story - 24



வீ ஆர் என்டெர்டெயினர்ஸ்!

“நீ இப்போது ஒரு ஸ்டார். உன் பெயரைச் சொன்னதுமே சுற்றி இருப்பவர்கள் எப்படி ஆரவாரம் செய்கிறார்கள், பார்த்தாயா? உன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் நீ இனி தயக்கம் காட்டாதே!” என்று சொல்லிவிட்டு, தோனியின் முதுகை தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார் சாப்பல்.
தோனியோடு டீமில் நன்றாக பேசக்கூடிய சகவீரர் வேணுகோபால் ராவ்.அவர் கூட்டத்தினரோடு கலந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருந்ததை தோனி பார்த்தார்.

தினேஷ் கார்த்திக்கோ அமைதியாக ஒரு சோபாவில் போய் அமர்ந்து விட்டார்.சுற்றிலும் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடத் தொடங்கி இருந்தார்கள்.யுவராஜ்சிங்கோ டான்ஸ் மாதிரி ஜாக்கிங் செய்துகொண்டிருந்தார்.சுற்றியிருந்தவர்கள் தோனியையும், பதானையும் நடனமாடத் தூண்டினர்.நடனம் மாதிரி ஏதோ ஒரு ஸ்டெப்பை தோனி வைக்க, “ஹெலிகாப்டர் டான்ஸ்...” என்று எவரோ கத்த, மீண்டும் தோனிக்கு வெட்கம் வந்துவிட்டது.

பதான் நிலைமையோ இன்னும் மோசம்.ஹர்பஜன்சிங் ஆளையே காணவில்லை.திடீரென ஸ்பீக்கரில் ஹர்பஜன் குரல் கேட்டது.
ஒரு கரம்மசலாவான பஞ்சாபி குத்துப்பாட்டை அவர் பாட, ஏற்கனவே வெறியேறியிருந்த கூட்டம் செம்ம குத்து போட்டது.

அப்போதுதான் திராவிட் புயலென அந்த டிஸ்கொதே அரங்குக்குள் நுழைந்தார்.கிரிக்கெட் மைதானங்களில் பொறுமைக்கு பேர் போன திராவிட்டா இவர் என்று தோனி ஆச்சரியப்படுமளவுக்கு பக்காவான பார்ட்டிமேனாக வந்திறங்கினார் திராவிட்.

ஹர்பஜனுடன் சேர்ந்து ஒரு பாங்ரா நடனத்தை பிரபுதேவா கணக்காக அவர் ஆட... கூட்டத்தின் உற்சாகம் அளவு கடந்தது.ஒருகட்டத்தில் தோனியையும், பதானையும் இழுத்துவைத்து அவர் ஆடவைக்க, நாண உணர்வினை மறந்து இவர்களும் ஆட ஆரம்பித்தார்கள்.“பாய்ஸ்! வீ ஆர் என்டெர்டெயினர்ஸ்...” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு பயிற்சியாளர் சாப்பலை நோக்கி நகர்ந்தார் திராவிட்.

சாப்பலும், திராவிட்டும் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் அறையில் அமர்ந்து தீவிரமாக விவாதிக்கத் தொடங்கியது இங்கே டான்ஸ் ஃப்ளோரில் இருந்தவர்களுக்கே தெரிந்தது.அக்காட்சியைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான எண்ணம் எழுந்தது.

“அனேகமாக தோனியை அடுத்த மேட்ச்சுலே தூக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன். அதுபத்திதான் பேசுறாங்க...” மதுபோதையில் நடனமாடிக் கொண்டே நகர்ந்த ஒருவர் சொல்லிக்கொண்டே போனார்.அவர் சொன்னதே தோனியிடம்தான் என்று தெரியாத அளவுக்கு அவருக்கு போதை.
பொதுவாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் விசித்திரமானவர்கள்.

அணி தொடர்ந்து வென்று கொண் டே இருந்தால், அதற்குக் காரணமான வீரர்களை அவர்கள் கடவுளர்களாக வழிபடுவார்கள்.அதே நேரம் ஏதேனும் ஒரு போட்டியில் கொஞ்சம் மோசமாக விளையாடிவிட்டால் போதும், சம்பந்தப்பட்ட வீரர்களின் வீட்டுக்கு எதிரிலேயே கொடும்பாவி கொளுத்துவார்கள்.அந்தக் காலக்கட்டம் இந்திய கிரிக்கெட் உலகின் தாதாவான கங்குலிக்கு தேய்பிறைக் காலம். அவர் சரியாக விளையாடுவதில்லை என்று ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் கோபம் இருந்தது.

ஆனால் -சாப்பல் அவரை ஓரம் கட்டுவதை உணர்ந்ததுமே அந்த கோபம், கங்குலி மீதான அனுதாபமாக ரசிகர்களுக்கு மாறியிருந்தது.
இந்தச் சூழலில்தான் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர், இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது. முதலில் நடந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி.

ஜெய்ப்பூரில் நடந்த மூன்றாவது போட்டியில்தான் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற 183  ரன்களை தோனி விளாசியிருந்தார். ஏற்கனவே இந்தப் போட்டியை விலாவரியாகப் பார்த்தோம்.நான்காவது போட்டிதான் புனே நகரில் நடந்தது.முந்தைய போட்டியில் இமாலய சாதனை செய்திருந்த கெத்துடன் புனே நகரில் நடந்த  நான்காவது போட்டியை அணுகினார் தோனி.

முதலில் ஆடிய இலங்கை 261 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் கேப்டன் அட்டப்பட்டு தனிநபராக நின்று 87 ரன்கள் விளாசி, அணி கவுரவமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்.முந்தைய போட்டியில் 300 ரன்களை சேஸ் செய்திருந்த இந்தியா, சுலபமாக இந்த இலக்கை எட்டி, 7 போட்டிகள் கொண்ட இந்த போட்டித் தொடரை வென்றுவிடும் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் -நான்காவது போட்டி தண்ணி காட்டியது. சேவாக் ஒரு முனையில் போராட, மறுமுனையில் சச்சின், யுவராஜ்சிங் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
சேவாக்கின் விக்கெட்டும் வீழ, திராவிட்டோடு, வேணுகோபால்ராவ் போராட ஆரம்பித்தார்.வெற்றியை எட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்ட போது வேணுகோபால்ராவ், திராவிட், இர்ஃபான் பதான் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன.180 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள்.

ஒரு முனையில் தோனி நங்கூரம் பாய்ச்சி நிற்க, மறுமுனையில் ஓர் இளம் வீரர் தோனியோடு கூட்டணி அமைத்தார்.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்நாள் முழுக்க தொடரப்போகும் கூட்டணி இதுவென்று அப்போது தோனி நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
ஆம். அவர்தான் சுரேஷ் ரைனா.

ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு ரன்களாக தட்டுத் தடுமாறி ஆடிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் கொஞ்சம் தைரியமாக அடித்து ஆட ஆரம்பித்தார்கள்.

35வது ஓவரின் இறுதியில் 90 பந்துகளில் 79 ரன்கள் என்கிற இலக்கு இருந்தது.தோனி- ரைனா கூட்டணி தங்கள் விக்கெட்டு
களைப் பாதுகாத்துக் கொண்டு ஆடிய பொறுப்பான ஆட்டத்தின் விளைவால் 45வது ஓவரின் முடிவில் 30 பந்துகளில் 16 ரன்கள் போதுமென்கிற நிலைக்கு வந்தார்கள்.

ரஸல் அர்னால்ட் வீசிய 46வது ஓவரின் முதல் இரு பந்துகளில் தலா இரண்டு ரன்கள் எடுத்த தோனி, மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசி வெற்றி இலக்கை எட்டினார்.தோனி 45 ரன்களும், ரைனா 39 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.‘மேட்ச் வின்னர்’ என்கிற பட்டம் தோனிக்கு இந்தப் போட்டியில் இருந்துதான் கிடைத்தது.

அன்றைய முன்னணி வீரர்கள் வீழ்ந்தாலும், தோனி இருந்தால் இந்தியா வெல்லும் என்கிற நம்பிக்கையையும் ரசிகர்கள் பெற்றார்கள்.அப்போட்டியில் தோனிக்குக் கிடைத்ததோ விலை மதிக்க முடியாத சுரேஷ் ரைனாவின் நட்பு.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்