ரத்த மகுடம்-116



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

படலை வலதும் இடதுமாகவும் மேலும் கீழுமாகவும் சுற்றிலும் பார்த்துவிட்டு தன் தொண்டையைக் கனைத்தான் கடிகை பாலகன்.
பணிபுரிந்து கொண்டிருந்த பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.‘‘வாருங்கள்...’’ குரல் கேட்டு கடிகை பாலகன் திரும்பினான்.பனங்கற்கண்டும் மஞ்சளும் கலந்த நீரை ஏந்தியபடி அங்கு நங்கை நின்றிருந்தாள்.‘‘இது எதற்கு..?’’ கடிகை பாலகனின் கண்கள் விரிந்தன.‘‘உங்களுக்குத்தான்...’’ நங்கை புன்னகைத்தாள்.

‘‘எனக்கா..?’’
‘‘ஆம்... தொண்டையைக் கனைத்தீர்கள் அல்லவா..?’’
‘‘அதற்கு..?’’

‘‘கமறலை சரிசெய்ய நீரைக் கொதிக்க வைத்து அதில் பனங்கற்கண்டுத் துகள்களையும் மஞ்சள் பொடியையும் கலந்து தங்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன்...’’கடிகை பாலகன் எதுவும் சொல்லாமல் அந்த மண்குவளையை வாங்கிக் குடித்தான்.

உண்மையிலேயே தொண்டைக்கு இதமாக இருந்தது. குவளையை நங்கையிடம் கொடுத்தான். ‘‘கலியூர் கோட்டத்தில் இருப்பாய் என்று நினைத்தேன்...’’ குரலைத் தாழ்த்தி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கடிகை பாலகன் வினவினான். ‘‘நேற்று பகல் வரை அங்குதான் இருந்தேன்...’’ நங்கை
முணுமுணுத்தாள்.

‘‘ம்...’’
‘‘சிரசைப் பாதுகாக்க வேண்டும் என்று தோன்றியதால் பையூர்க் கோட்டத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தேன்...’’
‘‘வழியில் யாரும் நிறுத்தவில்லையா..?’’‘‘நிறுத்தி விசாரிக்கும் இடங்கள் எவை எவை என்று தெரியும்... அவற்றைத் தவிர்க்கும் விதமும் அறிந்திருந்ததால் சாளுக்கியர்களின் கண்களில் மண்ணைத் தூவ முடிந்தது...’’ ‘‘காபாலிகர்..?’’ கடிகை பாலகன் இழுத்தான்.‘‘கரிகாலர் எதிர்பார்த்தது போலவே கைது செய்யப்பட்டார்...’’

‘‘கச்சை..?’’
‘‘கணக்கிட்டது போலவே சாளுக்கிய வீரர்கள் அதை அபகரித்து விட்டார்கள்...’’
‘‘கரிகாலரின் இழுப்புக்கு ஏற்ப சாளுக்கிய மன்னர் அசைகிறார்...’’ கடிகை பாலகன் புன்னகைத்தான்.
நங்கையின் நயனங்களில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.
‘‘என்ன யோசிக்கிறாய்..?’’ கடிகை பாலகன் கேட்டான்.

‘‘விக்கிரமாதித்த மன்னரை அவ்வளவு குறைவாக எடை
போட்டுவிட முடியாது என்று தோன்றுகிறது...’’
‘‘இங்கும் சாளுக்கிய வீரர்கள் வருவார்கள் என்று நினைக்கிறாயா..?’’
‘‘ஒருவேளை வந்தால் என்ன செய்ய வேண்டும் என
சிந்திக்கிறேன்...’’
‘‘நங்கை...’’
‘‘ம்...’’

‘‘பெண்கள் எல்லாம் இவ்வளவு அறிவாளிகளாக இருந்தால் ஆண்களான நாங்கள் என்னதான் செய்வது..?’’
‘‘கரிகாலரைக் கேளுங்கள்...’’
‘‘அவரையா..?’’
‘‘ஆமாம்... அவர்தான் இந்த விஷயத்தில் அனுபவம் வாய்ந்தவர்... அறிவாளிப் பெண்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கசடற கற்று நிற்க அதற்குத் தக என்றிருப்பவர் அவர்தான்! உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்!’’
‘‘சிவகாமி யார் நங்கை..?’’
கடிகை பாலகனை உற்றுப் பார்த்தாள் நங்கை.

‘‘அவள் பல்லவ இளவரசியா... அல்லது சாளுக்கிய ஒற்றரா..?’’
கேட்ட கடிகை பாலகனுக்கு எந்த பதிலையும் சொல்லாமல்
தன் வலது கையை நீட்டினாள். ‘‘கொடுங்கள்...’’
‘‘எதை..?’’
‘‘கச்சையை!’’

கடிகை பாலகன் தன் கையில் இருந்த கச்சையை நங்கையிடம் கொடுத்தான். ‘‘எவ்வளவு துண்டுகள் என்று தெரியுமல்லவா..?’’
‘‘அதுதான் மதுரையில் ஒன்றே போல பதினைந்து செய்திகளை தயார் செய்தீர்களே!’’ நாசி அதிர சிரித்த நங்கை, கச்சையை அங்கிருந்த பணிப்பெண்ணிடம் கொடுத்தாள். ‘‘பதினைந்தும் ஒன்றுமாக மொத்தம் பதினாறு துண்டுகளாக இந்தக் கச்சையை வெட்டு. ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு படலுக்கு அனுப்பு!’’ உத்தரவிட்டுவிட்டு கடிகை பாலகனை ஏறிட்டாள். ‘‘அடுத்த பணிக்கு நீங்கள் செல்லலாம்...’’
கடிகை பாலகனின் கண்கள் வியப்பால் விரிந்தன. ‘‘அடுத்த பணியா..?’’

‘‘ம்... புலவர் தண்டி உங்களுக்கு கட்டளையிட்ட பணி! உங்கள் மீது வீசும் சாம்பிராணி மணம் புலவர் வீட்டில் மட்டுமே புகையும் பிரத்யேக மணம்! அவரைச் சந்தித்துவிட்டு இங்கு வந்திருக்கிறீர்கள். நாழிகைகள் கடந்தாலும் அந்த சாம்பிராணி வாசனை அகலாது... மூன்று நாட்களாவது அதன் வாசம் வீசும்!’’‘‘சாளுக்கியர்களும் இதை அறிவார்களா..?’’
‘‘வாய்ப்பில்லை. புலவரின் சீடர்கள் மட்டுமே அறிந்த உண்மை இது!’’ சொல்லிவிட்டு படலை நோக்கி நகர முற்பட்டாள்.
‘‘நங்கை...’’

திரும்பினாள். ‘‘என்ன..?’’  
‘‘நான் கேட்டதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லையே..?’’ கடிகை பாலகனின் கண்கள் கெஞ்சின.

நங்கை அவனை உற்றுப் பார்த்தாள். ‘‘நான் ஒரு கேள்வி கேட்கலாமா..?’’
‘‘நான் விடையைக் கேட்டேன்...’’
‘‘அதற்குத்தான் வினாவைத் தொடுக்கலாமா என்று வினவுகிறேன்...’’
‘‘கேள் நங்கை...’’

‘‘சிவகாமி யார் என்று அறிய முற்படுகிறீர்கள் அல்லவா..?’’
‘‘ஆம்...’’
‘‘அதற்கு முன்னால் கரிகாலர் யார் என்று தெரிந்து கொண்டீர்களா..?’’
கடிகை பாலகன் அதிர்ந்தான். ‘‘என்ன கேள்வி இது நங்கை..?’’

‘‘பல்லவ நாட்டைச் சுற்றும் வினா இது...’’ நங்கையின் கருவிழிகளில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. ‘‘காஞ்சிக்கு எப்பொழுது தன் படையுடன் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் வர வேண்டும்... எந்தக் கணத்தில் வந்தால் பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர் போர் புரியாமல் காஞ்சி நகரை சாளுக்கியர்களுக்கு தாரை வார்த்துவிட்டு வெளியேறுவார்... சேதாரமின்றி எப்படி பல்லவ நாட்டைக் கைப்பற்றலாம் என்பதையெல்லாம் சாளுக்கிய விக்கிரமாதித்தருக்கு துல்லியமாகக் குறிப்பிட்டு முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்தவர் கரிகாலர்தான் என்கிறார்கள்...’’
‘‘யார் அப்படிச் சொன்னது..?

சொல் நங்கை... உடனடியாக அவன் நாக்கை அறுத்து எறிகிறேன்...’’
‘‘அது பல்லவ மன்னராலும் பல்லவ இளவரசராலும் கூட
இயலாது...’’‘‘அப்படிப்பட்ட செல்வாக்கு படைத்த மனிதனா இப்படியொரு அபாண்டமான பழியை கரிகாலர் மீது சுமத்துகிறான்..?
‘‘ஆம்...’’
‘‘யாரவன்..?’’

‘‘யார் அவர் என மரியாதையுடன் கேளுங்கள்...’’
கடிகை பாலகன் கேள்வியுடன் அவளைப் பார்த்தான்.
நங்கை அவன் பார்வையை எதிர்கொண்டாள்.
‘‘சரி... யார் அவர்..?’’
‘‘புலவர் தண்டி!’’

‘‘என்ன... என்ன... திரும்பவும் சொல்...’’ தன்னை மறந்து நங்கையின் தோள்களைப் பற்றி கடிகை பாலகன் உலுக்கினான்.
தன் இமைகளை மூடித் திறந்த நங்கை பெருமூச்சு விட்டாள். ‘‘ஆம்... என் குருநாதரான... நமது வழிகாட்டியான புலவர் தண்டிதான் இந்த ஐயத்தை எழுப்பியிருக்கிறார்...’’
திகைத்தான் கடிகை பாலகன். ‘‘அப்படியானால் சிவகாமி..?’’
‘‘தெரியவில்லை...’’‘‘நங்கை...’’

‘‘உண்மையைத்தான் சொல்கிறேன்... இத்தனை நாட்களாக சிவகாமியாக நடமாடுபவள் யார் என்றுதான் தெரியாமல் இருந்தது... இப்பொழுது அதனுடன் கரிகாலர் யார் என்ற வினாவும் சேர்ந்திருக்கிறது! ஒன்று மட்டும் நிச்சயம்... கரிகாலரும் சிவகாமியுமாகச் சேர்ந்து பல்லவ, சாளுக்கிய, பாண்டிய நாடுகளை தங்கள் விருப்பப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்... போர் அமைச்சரான ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மட்டுமல்ல... மிகச்சிறந்த ராஜ தந்திரியான புலவர் தண்டியும் குழம்பித் தவிக்கிறார்...’’‘‘அப்படியானால் சிவகாமியும் கரிகாலரும் கூட்டாளிகளா..?’’ கடிகை பாலகன் படபடத்தான்.

‘‘இருக்கலாம்... அல்லது இல்லாமலும் போகலாம்...’’‘‘நங்கை...’’‘‘கத்தியோ என்னை உலுக்கியோ பயனில்லை... இக்கணம் வரை கரிகாலரும் சிவகாமியும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களா அல்லது தனித்தனி அணிகளின் பிரதிநிதிகளா என்று தெரியவில்லை... அவ்வளவு ஏன்... எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்பதைக்கூட ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை... எதற்காக, யாருக்காக, ஏன் இவ்வளவு பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கவில்லை...’’
‘‘நாம் என்ன செய்வது..?’’

‘‘புலவரின் ஊழியர்கள் நாம்... அவரை நம்பி அவர் இட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதுதான்...’’
‘‘நம்மால் கண்டுபிடிக்க முடியாதா..?’’
‘‘எதை..?’’‘‘கரிகாலர் - சிவகாமி குறித்த ரகசியத்தை...’’
‘‘முடியும் என்று நினைக்கிறீர்களா..?’’ அவன் கருவிழிகளை உற்றுப் பார்த்தபடியே நங்கை கேட்டாள்.
‘‘முயற்சி செய்வதில் தவறில்லையே...’’

‘‘அப்படியானால் மல்லைக்கும் காஞ்சிக்கும் இடையில் இருக்கும் சத்திரத்துக்குச் செல்லுங்கள்... அங்குதான் மல்லைக் கடற்கரை சுங்கத்துறை தலைவரும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரின் சகோதரர் அனந்தவர்மரும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்...’’
‘‘அவர்களை நான் விடுவிக்க வேண்டுமா..?’’

‘‘இல்லை...’’ என்றபடி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடிகை பாலகனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை நங்கை முணுமுணுத்தாள்.
கடிகை பாலகனின் வதனத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. ‘‘நீ புத்திசாலி நங்கை... நாட்டை ஆள வேண்டியவள்... இதோ இப்பொழுதே புறப்படுகிறேன்... கவலைப்படாதே... மாறுவேடத்தில்தான் செல்வேன்...’’ கடிகை பாலகன் வேகமாக படலை விட்டு வெளியேறினான்.

தன் பார்வையை விட்டு அவன் மறையும் வரை அங்கேயே நின்ற நங்கை, அதன் பிறகு படலுக்குள் நுழைந்தாள்.ஓர் ஓரமாக அமர்ந்திருந்த ஒருவன் குறுவாளால் கச்சையை பதினாறு துண்டுகளாகக் கிழித்துக் கொண்டிருந்தான்.நிமிர்ந்து நங்கையைப் பார்த்துப் புன்னகைத்தான்.பதிலுக்கு நங்கையும் புன்னகைத்தாள்.அவன், கரிகாலன்!

‘‘குருவே வணக்கம்...’’ என்றபடியே புயலைப் போல் உறையூர் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தாள் சிவகாமி.
தன்னைத் தடுக்க வந்த சாளுக்கிய வீரர்களை நோக்கி ‘‘அதுதான் நுழைந்து விட்டேனே... பிறகென்ன..? செல்லுங்கள்...’’ என்று கட்டளையிட்டுவிட்டு, அமர்ந்திருந்த ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

வீரர்களை வெளியேறும்படி மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் சைகை செய்யவே, வீரர்கள் அவனுக்கு தலைதாழ்த்திவிட்டு அறைக்கதவை மூடிவிட்டு வெளியேறினார்கள்.விநயாதித்தனும் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘எழுந்திரு சிவகாமி...’’ என்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.

நிமிர்ந்த சிவகாமி ஸ்ரீ ராமபுண்ய வல்லபரைப் பார்த்து மலர்ந்தாள். ‘‘குருவே... சொன்னபடி மதுரைக் கோட்டையில் இருந்து வெளியேறிய பல்லவ வீரர்களைக் கைது செய்து விட்டீர்களா..?’’விநயாதித்தனின் புருவங்கள் சுருங்கின. ‘‘வெளியேறியது வணிகர்கள்தான்... அதுவும் நெசவாளிகள்...’’
‘‘அவர்கள்தான் பல்லவ வீரர்கள் என்கிறாயா..?’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் கிண்டலாகக் கேட்டார்.

‘‘இல்லை... நடக்கவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரை வடிவமைப்பவர்கள் என்கிறேன்!’’ என்றபடியே சிவகாமி தன் இடுப்பில் இருந்து ஒரு பொருளை எடுத்தாள்.

அதைக் கண்ட சாளுக்கிய இளவரசனின் கண்களும் ராம
புண்ய வல்லபரின் நயனங்களும் சுருங்கி விரிந்து சுருங்கின.
‘‘என்ன இது..?’’ விநயாதித்தன் கர்ஜித்தான்.
‘‘பார்த்தால் தெரியவில்லையா இளவரசே..? கச்சை! நான் அணிந்திருந்த கச்சை!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்