கஞ்சாவுட்! போதையில் கோடம்பாக்கம் ஒரு ஷாக் ரிப்போர்ட்



கிணறு தோண்டப் போய் பூதம் வந்த கதையாக, இந்திப் படவுலகில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து விசாரிக்கப் போய்... இப்போது அது போதைப் பொருள் பயன்படுத்தும் விவகாரத்தில் வந்து நிற்கிறது. சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி போதைப் பொருளை வாங்கி விற்றார்... பயன்படுத்தினார்... என அதிரடி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.
‘யாரிந்த ரியா?’ என கேள்வி எழுவதற்குள்... அடுத்த குண்டை கன்னட திரையுலகம் வீசியிருக்கிறது. அங்கே நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி என அடுத்தடுத்து போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது மொத்த சினிமா இண்டஸ்ட்ரீயையுமே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அவர்கள் இருவருமே தமிழில் தலைகாட்டியவர்கள்!இப்படி தேசம் முழுக்க போதை நெட்ஒர்க் பரவியிருக்கும் நிலையில் கோலிவுட் எப்படி என நம் திரைவட்டாரத்தில் விசாரித்தோம். பெயர் வெளியிட விரும்பாமல் அவர்கள் கொட்டிய தகவல்கள் அத்தனையும் தெளசண்ட் வாலா அணுகுண்டு கள்! ‘கோலிவுட் நல்லா இருக்கணும்... இங்கேயும் மாஃபியா கண்ட்ரோல் வந்துடக்கூடாது... ஆரம்பத்துலயே அதை கிள்ளி எறியணும் என்ற நல்லெண்ணத்தில்தான் சொல்றோம்...’ என்றவாறே பேச ஆரம்பித்தார்கள்.

‘‘இன்னிக்கு உலகம் முழுக்க போதைப் பழக்கம் அதிகரிச்சிருக்கு. நம்ம கோடம்பாக்கத்துலயும் இருக்கு. ஆனா, இந்தி, கன்னட இண்டஸ்ட்ரீ அளவுக்கு இல்ல. அங்க பயன்படுத்தப்படுகிற அயிட்டங்கள் எல்லாம் இன்னும் இங்க எட்டிப் பார்க்கலை.
அதேநேரம் மதுவும் கஞ்சாவும் இங்க நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமா இருக்கு. ஹீரோக்கள் மட்டுமில்ல... பல ஹீரோயின்களும் நம்ம கோலிவுட்ல கஞ்சா அடிக்ட்!’’ என அதிர்ச்சி கொடுக்கிறார் தமிழ் சினிமா தயாரிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளில் இவரும் ஒருவர் என்று சொல்லப்படும் ஒரு தயாரிப்பாளர்.

‘‘ஒரு காலத்துல சரக்குதான் தமிழ் சினிமால தாராளமா கிடைக்கும். பார்ட்டிகள்ல சரக்கு ஆறா ஓடும். அந்தக் காலம் மலையேறிப் போச்சு! இப்ப கஞ்சாதான் கோலிவுட்டை ஆட்சி செய்யுது. கேமரா, டைரக்‌ஷன், இன்ஸ்டிடியூட் மாணவர்கள், விஸ்காம் ஸ்டூடண்ட்ஸ்னு இந்தத் தலைமுறை சர்வசாதாரணமா கஞ்சா புகைக்கறாங்க.

கஞ்சானு மட்டும்தான் பொதுவா தெரியும். ஆனா, இதுல ஏகப்பட்ட வேரியேஷன்ஸ் இருக்கு. ஹைகிளாஸ் ரகமிருக்கு. ‘வீட்’னு (weed) சொல்வாங்க. ‘ஜாயிண்ட்’னு ஓர் அடைமொழி இருக்கு. அடைக்கப்பட்ட ரூமுக்குள்ள டீமா கஞ்சாவை புகைப்பாங்க. அந்தப் புகை ரூமை விட்டு வெளியேறாது. அறைக்குள்ளயே சுத்தும். இப்படி புகைமூட்டமா இருக்கற ரூம்ல இருப்பதை ‘ஹாட் பாக்ஸ்’னு சொல்வாங்க.

அதேமாதிரி போதை மருந்துகளும் நிறைய வகைகள்ல கிடைக்குது. ஓபிஎம், எல்எஸ்டி, எம் டிஎல்எஸ்டி, பிரவுன்சுகர், கோக்கெய்ன்... இப்படி 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு! இது அத்தனையும் எல்லா இண்டஸ்ட்ரீலயும் புழங்குது.‘மணி ஹீஸ்ட்’னு கூட ஒரு பில்ஸ் உண்டு. ‘சூப்பர்மேரியோ’, ‘ஹேப்பி பில்ஸ்’ இப்படி வகை வகையா பில்ஸ் புழங்குது.

ஹை க்ளாஸ் கஞ்சாவை ‘ஓஜி’னு சொல்றாங்க. தமிழ் சினிமாவுல இந்த ‘ஓஜி’க்கு அடிமையான நடிகர்களைவிட நடிகைகள் அதிகம்! இதுல பலருக்கு கைவசம் படங்களே இல்ல. ஆனாலும் லைம்லைட்டுல இருக்காங்க! கோக்கெய்னுக்கு சமமானது ‘ஃபாரீன் வீட் (weed)’. இதுவும் ஹை க்ளாஸ் கஞ்சாதான். இரண்டு இழுப்பு இழுத்தா சூப்பர் பவர் கிடைக்குமாம்! பல இளம் இசையமைப்பாளர்களும் இளம் பாடகர் - பாடகி
களும் இந்த ‘ஃபாரீன் வீட்’டுக்கு அடிமை! அதே மாதிரி ‘ரைட்டர்ஸ் ஸ்ட்ரெய்ன்’ என்கிற பெயர்ல ஒரு ‘ஃபாரீன் வீட்’ கிடைக்குது. அதை ‘வொயிட் ஊக்கீஸ் ஓஜி’னும் ‘குஷ்’னும் செல்லமா அழைக்கறாங்க.

முதல் படத்துலயே ஹிட் கொடுத்த ஓர் இளம் இயக்குநரின் டீம் மொத்தமும் இந்த ‘வொயிட் ஊக்கிஸ் ஓஜி’லதான் மூழ்கியிருக்காங்க. ஒருத்தர் மூணு இழுப்புக்கு மேல இழுக்க மாட்டாங்க; முடியவும் முடியாது. அதனால குழுவா உட்கார்ந்து மாத்தி மாத்தி இழுக்கறாங்க.கொரோனா மட்டும் இல்லைனா வாரக் கடைசில லூட்டி அடிச்சுட்டு இருப்பாங்க. ஈசிஆர்ல இருக்கற வில்லாக்கள் எல்லாமும் கஞ்சா புகைல மறைஞ்சிருக்கும்!’’ என்றவர், சாதாரண பார்ட்டி வழியாகத்தான் இவை ஊடுருவுகின்றன என்கிறார்.

‘‘சக்சஸ் பார்ட்டினுதான் மொதல்ல நடக்கும். சரக்குதான் பிரதானமா புழங்கும். அங்க வரும் ஒருத்தர் வழியா கஞ்சா - பில்ஸ் லிங்க் கிடைக்கும். அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் பார்ட்டினா வெறும் கஞ்சா - பில்ஸ்னு மாறிடும். இதெல்லாம் மும்பைல நடக்கலை... நம்ம சென்னை மாநகரத்துல... அதுவும் தமிழ் சினிமாவுலதான் அரங்கேறிட்டு இருக்கு...’’ என்ற அந்த பழம்பெரும் தயாரிப்பாளர், ‘‘யார் யார் இதுல முத்துக் குளிக்கறாங்கனு சொல்றேன். முடிஞ்சா கண்டு பிடிங்க. இது எனக்கு தெரிஞ்ச லிஸ்ட். இது மாதிரி பட்டியல் பலரிடம் இருக்கு...’’ என்றபடியே சொல்லத் தொடங்கினார்.

‘‘மூணெழுத்து நடிகை... மூணெழுத்து நடிகர்... எல்லாம் எப்பவும் போதைல இருப்பாங்கனு எல்லாருக்கும் தெரியும். நான் சொல்லப் போறவர் வேற ஒருத்தர். ‘அட... இவரா இப்படி’னு அதிர்ச்சியடைவீங்க. ஆனா, சத்தியமான உண்மை.ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பட்டையை கிளப்புபவர். தேசிய விருது கூட வாங்கியிருக்கார். டாப் ஹீரோக்களோட எப்பவும் தொடர்புல இருப்பவர்.

ஸ்கிரிப்டுல கவனம் செலுத்தணும்... மைண்ட் எப்பவும் ஷார்ப்பா இருக்கணும்னு நினைச்சார். எவன் கொடுத்த ஐடியாவோ கஞ்சா புகைக்க ஆரம்பிச்சார். அப்புறம் போதை. லிவிங்டுகெதரா ஒரு பார்ட்னர் இணைய... கஞ்சாவும் போதையும் அதிகரிக்க... ஒரு கட்டத்துக்கு அப்புறம் இண்டஸ்ட்ரீல இருந்தே காணாமப் போயிட்டார்.

அப்புறம் நண்பர்கள்தான் அவரை டீஅடிக்‌ஷன் சென்டர்ல சேர்த்து இப்ப மீட்டிருக்காங்க. அதேமாதிரி கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர், தன் மகனை ஹீரோவாக்கினார். முதல் படமே மெகா ஹிட். அடுத்தடுத்தும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி. ‘பரவாயில்லையே... நம்ம பையன் தேறிட்டான்’னு அந்த தயாரிப்பாளர் நினைச்ச நேரத்துல ஹீரோவுக்கு நடிக்கும் ஆர்வம் குறைஞ்சுது. கதையே கேட்காம... பணத்துக்காக வந்த படங்கள்ல எல்லாம் நடிச்சார்.

அவ்வளவுதான். ‘ஹிட்’ என்னும் வார்த்தையே அவரை விட்டுப் போயிடுச்சு. இப்பவும் சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கார். ஆனா, காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கால்ஷீட்னா, அதிக பட்சம் இரண்டு மணிநேரம்தான் நடிப்பார். அப்புறம் கஞ்சா புகைக்க கிளம்பிடுவார்!
இன்னொரு நடிகை. குடும்பப்பாங்கான வேடங்களுக்கு பெயர் போனவர். ஒரு படத்துக்காக மூணு நாட்கள் டே அண்ட் நைட் நடிச்சார்.

நாலாவது நாள் பிரேக். ஆனா, நடிகையால தூங்க முடியலை. அப்ப அவர் அசிஸ்டெண்ட், ‘இது சகஜம் மேடம்... டிரக்ஸ் எடுத்துக்கிட்டா நல்லா தூங்கலாம்’னு மாத்திரை கொடுக்க... நடிகையும் அதை விழுங்க... இப்ப போதைக்கு அடிமையாகிட்டார். நடிக்கும்போதும் அவருக்கு பில்ஸ் தேவைப்படுது. பட வாய்ப்புகள் இல்ல. ‘படிக்கப் போறேன்’னு பேட்டி கொடுத்துட்டு சிகிச்சை எடுத்துகிட்டு இப்ப திரும்பியிருக்கார். சான்ஸ் தேடி அலையறார்.

இது இன்னொரு ஹீரோவின் கதை. இவரும் சினி ஃபேமிலில இருந்து வந்தவர்தான். ஆனா, தொடர் ஹிட் கிடைக்கலை. மன அழுத்தத்துக்கு ஆளானவர் மதுவுக்கு அடிமையானார். கைவசம் இருந்த படங்களும் நழுவிச்சு. அவ்வளவுதான், முழுநேர குடிகாரரா ஆனார்.
ஒருநாள் குடிச்சுட்டு வண்டி ஓட்டி போலீஸ்ல சிக்கினார். இதுக்குப் பிறகு குடும்பம் தலையிட்டு அவருக்கு சிகிச்சை கொடுத்து இப்ப அமைதியா ஒரு படத்துல நடிச்சுட்டு இருக்கார்.  

அடுத்து நான் சொல்லப் போறவர் ஹீரோ இல்ல. வில்லனாகவும், தயாரிப்பாளராகவும் மாறி மாறி நல்ல பெயர் எடுத்தவர். இவரும் மூன்றெழுத்து ஹீரோ மாதிரிதான். காலை 7 மணி ஷாட்டுக்கு மதியம் 3 மணிக்குதான் வருவார். அதுவும் எப்படி? தூங்கி எழுந்து முகத்தைக் கூட கழுவாம, குளிக்காம வருவார். நைட் முழுக்க முட்ட முட்ட குடிச்ச வாசனை அவரைச் சுத்தி வீசும்.

இத்தனைக்கும் நல்ல படங்களின் தயாரிப்பாளர். ஆனா, எதுவும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் இல்ல. கடன் அதிகரிச்சது. மீட்டர் வட்டியைக் கட்ட முடியாம ஆறுதலுக்கு குடிக்க ஆரம்பிச்சவர் இப்ப அடிக்ட் ஆக இருக்கார்...’’ பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் அந்த அனுபவசாலி தயாரிப்பாளர்.
சரி; நட்சத்திரங்களும் டெக்னீஷியன்களும் ஏன் இப்படி போதை, கஞ்சாவில் சிக்கிக் கொள்கிறார்கள்..?

‘‘இண்டஸ்ட்ரீதான் காரணம்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்.
‘‘அஜித் - விஜய்க்கு அப்புறம் நாமதான்னு கனவுகளோடு இண்டஸ்ட்ரீக்கு வந்த பல சினிமா பின்னணி குடும்ப ஹீரோக்கள், நிலையா ஓர் இடத்தைப் பிடிக்க முடியாம இப்ப வரை அல்லாடிட்டு இருக்காங்க.

ஆனா, சினிமா பேக்ரவுண்டே இல்லாம வந்த சேது நடிகரும் சிவா நடிகரும் இன்னைக்கு டாப் கியர்ல பயணிக்கிறாங்க.

இது அவங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்குது. இதைப் பயன்படுத்தி கஞ்சா- போதை நெட்ஒர்க்கை சிலர் அவங்களுக்கு அறிமுகப்படுத்தறாங்க. முதல்ல லைட்டா ஆரம்பிக்கறாங்க... ஆனா, புதைகுழில மாட்டிக்கறாங்க...’’ என்கிறார் அந்த புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்.

‘‘ஏதோ இது இப்ப நிலவும் பிரச்னைனு நினைக்காதீங்க...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் பழம்பெரும் இயக்குநர் ஒருவர்.

‘‘காலம் காலமா மதுவும்  சினிமாவும் பின்னிப் பிணைஞ்சிருக்கு. என்ன... ராகினி திவேதி மாதிரியோ, சஞ்சனா கல்ரானி மாதிரியோ யாரும் இங்க அரஸ்ட் ஆகல. ஆனா, இங்கயும் சந்திரபாபு, சாவித்திரினு ஒரு லிஸ்ட் சொல்ல முடியும்.ஆனா, தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னை காரணமாதான் அந்தக் காலத்துல மது - போதைக்கு அடிமையானாங்க.

இப்ப அப்படியில்ல. வசதியான வீட்டுப் பசங்க... நல்லா சம்பாதிக்கிற நட்சத்திரங்கள் - டெக்னீஷியன்ஸ்தான் கஞ்சாவுக்கு அடிக்ட் ஆகறாங்க. கேட்டா எனர்ஜிக்காக... ராப் பகலா வேலை செய்யனு சொல்றாங்க. வயித்தெரிச்சலா இருக்கு...’’ என தலையில் அடித்துக் கொள்கிறார் அந்த பழம்பெரும் இயக்குநர்.

மலையாள இண்டஸ்ட்ரீயிலும் கஞ்சா - போதை அதிகமாகி யூனியனில் புகார் தரும் அளவுக்கு போயிருக்கிறது. தெலுங்கு இண்டஸ்ட்ரீ இன்னும் மோசம். அங்கு ஒரு மாஸ் ஹீரோவின் தம்பி தான் போதை - கஞ்சா சப்ளையராம்!

கன்னடத்தில் கைதாகியுள்ள நடிகைகள் எல்லாம் தமிழ்ப் படங்களிலும் நடித்தவர்கள்தான். ராகினி திவேதி (‘நிமிர்ந்து நில்’), அனிகா (‘ஆம்பள’), சஞ்சனா (‘ஒரு காதல் செய்வீர்’) என பட்டியல் நீள்வதால் போதைத் தடுப்பு போலீசாரின் பார்வை கோலிவுட் பக்கமும் விழுந்திருக்கிறது.

இந்நிலையில் கன்னடத்தில் ஹீரோயினாகவும், தமிழில் ஒருசில படங்களிலும் (‘போர்க்களம்’, ‘சித்திரம் பேசுதடி 2’, ‘கதை’) நடித்த நிவேதிதா, கஞ்சாவை மூலிகையுடன் ஒப்பிட்டு அதை சட்டபூர்வமாக பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்!

எம்.இக்னேஷியஸ்