குளோபல் டீச்சர்



கணித ஆசிரியை பாசிரத் என்பவரைப் பற்றித்தான் நைஜீரியாவில் ஹாட் டாக். கடந்த ஆறு மாதங்களாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் வழியாக பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதப் பாடத்தை எடுத்து வந்தார். இதுபோக கணிதம் சம்பந்தமான சின்னச் சின்ன வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றி அசத்தினார். சில நாட்களில் அதிகாலை 2 மணி வரை அவரது வகுப்புகள் நீளும்.

சமூக வலைத்தளங்களின் வழியாக பாடம் நடத்துவதால் அவரது பள்ளியைத் தாண்டி மற்ற மாணவர்களும் வகுப்பில் கலந்துகொண்டனர். இதுவரை 1800க்கும் அதிகமானோருக்கு பாடம் நடத்திவிட்டார். அதுவும் இலவசமாக. இப்போது நைஜீரியாவைத் தாண்டி கனடாவில் இருப்பவர்களும் பாசிரத்திடம் படிக்கின்றனர்.

இத்தனைக்கும் அவரிடம் பாடம் நடத்த போர்டு கூட இல்லை. ஏ4 சீட்டில் கணக்குப் போட்டு அதை வீடியோவாக்கி பாடம் நடத்திவந்தார். இதைப் பார்த்த ஒரு மாணவரின் தந்தை ஒரு போர்டை பரிசாக அனுப்பியது ஹைலைட். உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக கணிதப் பாடம் நடத்துவது பாசிரத்தின் கனவு.

த.சக்திவேல்