அணையா அடுப்பு - 17



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

பேயும் நோயும் ஓடிய கதை!

இறைவனின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?
* தினசரி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
* அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்ய வேண்டும்.
* பிரார்த்தனைக்காக முடி வளர்த்து மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.
* அர்ச்சகர் நீட்டும் தட்டில் தட்சணை இட வேண்டும்; உண்டியலில் காசு போட வேண்டும்.
* தீ மிதிக்க வேண்டும்; நாக்கில் வேல் குத்திக் கொள்ள வேண்டும்; முதுகில் கொக்கி போட்டு தேர் இழுக்க வேண்டும்.
* குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருக்க வேண்டும்.
* கோயில்களில் பெரிய திருவிழாக்கள் எடுக்க வேண்டும்.
* ஆடு, மாடு, கோழியென்று தன்னுடைய வசதிக்கேற்ப பலி கொடுக்க வேண்டும்.

சொல்லிக்கொண்டே போகலாம்.இதெல்லாம் தனக்கு செய்ய வேண்டும் என்று இறைவன் கேட்டாரா?
இறைவனின் வடிவமே அருள்தான். அவன் அருளைப் பெற அவனுக்கே கையூட்டா?
வள்ளலார், இதையெல்லாம்தான் கேட்டார்.

சக உயிர் மீது நாம் செலுத்தக்கூடிய அன்பே இறைவனின் பேரருளைப் பெறுவதற்கான ஒரே வழி என்று வழியும் காட்டினார்.
ஜீவகாருண்யமற்ற எந்த ஒரு காரியத்தையும், அது இறைவன் பொருட்டேயாக  இருந்தாலும் செய்வது  வீணென்று உபதேசித்தார்.சமண மதம் உள்ளிட்ட ஒரு சில மதங்கள் தவிர்த்து மற்றவை எதுவும் பொதுவாக மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களைக் கண்டுகொள்வதில்லை.சன்மார்க்கம் கண்ட வள்ளலாரோ, நிறையப் பேர் எதிர்ப்பார்கள்; மார்க்கத்தைப் புறக்கணிப்பார்கள் என்று தெரிந்தும் புலால் உண்பதைக் கண்டித்தார்.
ஒரு மனிதன் சக மனிதனுக்கு மட்டுமல்ல; சக உயிர்களாகிய ஜீவராசிகளோடும் அன்பு செலுத்த வேண்டும், கருணை காட்ட வேண்டும் என்கிற அடிப்படையிலே வள்ளலாரின் புலால் மறுத்தல் வலியுறுத்தப்பட்டது.

வள்ளலார் வாழ்ந்த காலக்கட்டத்தில் ஏராளமான கோயில்களில் உயிர்ப்பலி கொடுத்து வேண்டிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
“எந்தக் கடவுளும் உங்களிடம் உயிர்ப்பலி கேட்பதில்லை. கடவுள் படைத்ததை, திரும்பவும் கடவுளுக்கே பலியிட்டு படைப்பது தர்க்க அடிப்படையிலும் தவறு. மந்திரவாதிகளும், தந்திரவாதிகளும் மக்களை ஏமாற்ற உருவாக்கிய போலிச் சடங்கு இது...” என்று பிரசாரம் செய்தார் வள்ளலார்.
வள்ளலாரின் இந்த ஜீவகாருண்யப் பிரசாரத்தில் முக்கியமான ஒரு சம்பவம் வேட்டவலம் ஜமீனில் நடந்தது.

வேட்டவலம் என்பது விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் இருக்கும் ஒரு பேரூர்.அக்காலத்தில் இங்கே வசித்த ஜமீன்தார் அருணாசல வசந்த கிருஷ்ண வானாதிராய அப்பாசாமி பண்டாரியார்.சொத்து சுகத்துக்கு பஞ்சமில்லை. இரண்டு மனைவிகளோடு செழிப்பாகவே வாழ்ந்து வந்தார் ஜமீன்தார்.திடீரென சொல்லி வைத்தது போல அடுத்தடுத்து சோதனை.

ஒரு மனைவி திடீர் திடீரென விசித்திரமாக நடந்துகொண்டார். அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று ஊர் மக்கள் சொன்னார்கள்.
இன்னொரு மனைவி யோதிடீரென வித்தி யாசமான நோயால் வயிறு பெருத்து அவதிப்பட்டார். சூனாவயிறு என்று கிராமத்தவர்களால் சொல்லப்படும் மகோதரம் என்கிற நோய்.

பண்டாரியார் முதல் மனைவியைப் பிடித்த பேயை விரட்ட பார்க்காத மாந்திரீகர்கள் இல்லை; செய்யாத சடங்குகள் இல்லை.போலவே, அடுத்த மனைவியும் உடல் நலம் பெறுவதற்காக நாட்டில் பிரசித்தி பெற்ற மருத்துவர்களை எல்லாம் பார்த்தார்.ஆங்கில மருத்துவர்கள் தொடங்கி உள்ளூர் மருத்துவர்கள் வரை சிகிச்சை அளித்தும் மகோதரம் குணமாகவில்லை.இந்தச் சூழலில்தான் வள்ளலாரைப் பற்றி ஜமீன்தாரிடம் சிலர் சொன்னார்கள். வள்ளலாரின் திருப்பாதங்கள் ஜமீனில் பட்டாலே போதும், பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று வலியுறுத்தினார்கள்.
பண்டாரியாருக்கோ வள்ளலாரின் ஆற்றல் மீது சந்தேகம். வள்ளலாரைச் சோதிக்கவும் தலைப்பட்டார்.

இரண்டு நாற்காலிகளை ஒரே மாதிரி செய்தார். அதில் ஒரு நாற்காலி வள்ளலாருக்கு உரியது.தன்னுடைய ஜமீனுக்குள் வந்ததுமே தன்னுடைய நாற்காலி யில் வள்ளலார் அமர்ந்தால், அவருக்கு சக்தி இருக்கிறது என்று தாம் ஒப்புக் கொள்வதாக விளையாட்டுத்தனமாக ஓர் ஏற்பாடு செய்தார்.
பொதுவாக இதுபோன்ற செல்வந்தர்களை வீடு தேடிப்போய் சந்திக்கும் வழக்கம் வள்ளலாருக்கு இல்லை.

சென்னையில் அப்போது சோமு செட்டியார் என்கிற மிகப்பெரிய செல்வந்தர் இருந்தார். வள்ளலாரின் தீவிரமான அன்பர். செல்வந்தர் என்பதாலேயே சோமு செட்டியாருக்கு வள்ளலார் கடிதம் கூட எழுத மாட்டார்.அப்படிப்பட்ட வள்ளலார், வேட்டவலம் ஜமீனுக்கு வருகை புரிய ஒப்புக் கொண்டார்.

காரணம்?வேட்டவலம் ஜமீனுக்கு உட்பட்ட ஆலயங்களில் ஏராளமான உயிர்ப்பலி தரப்பட்டுக் கொண்டிருந்தது.குறிப்பாக ஜமீன் குடும்பம் வழிபடும் காளி கோயில், உயிர்ப்பலிக்கு மிகவும் பிரசித்தமானது. அதைத் தடுக்கவே வேட்டவலம் வந்தார் வள்ளலார்.

ஜமீன் இல்லத்து வாசலுக்கு வள்ளலார் வந்தபோதே பேய் பிடித்த ஜமீனின் மனைவி ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டு வந்தார்.வெள்ளை உடையில் அமைதியே உருவான வள்ளலாரைக் கண்டதுமே வழக்கத்துக்கு மாறாக அவரது ஆட்டம் அதிகரித்தது.தன் மடியிலிருந்து விபூதியை எடுத்து, ஜமீன் மனைவியின் நெற்றியில் பூசினார் வள்ளலார்.அடுத்த நொடியே அந்த அம்மையார் மயங்கி விழுந்தார். முகத்தில் நீர் தெளித்து எழுப்பியவுடன் மிகவும் தெளிவாக இருந்தார்.அவரைப் பீடித்திருந்த பேய் அகன்றதாக அனைவரும் உணர்ந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ஜமீனின் ஏற்பாட்டின்படி இரண்டு நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட வள்ளலார் புன்னகைத்தார்.அதில் ஒரு நாற்காலியில் அமர்ந்துவிட்டு, “பண்டாரியாரே! நீங்கள் மனதில் நினைத்த ஆசனத்தில்தானே அமர்ந்திருக்கிறேன்?” என்று கேட்டார்.
ஜமீன்தார் அப்படியே வள்ளலாரின் கால்களில் விழுந்து, “அடிகளாரே! தங்களை சோதிக்க நினைத்த அடியேனின் மடத்தனத்தை மன்னிக்க வேணும்...” என்று கதறினார்.

அடுத்து, மகோதர நோயால் வாடிக்கொண்டிருந்த ஜமீன்தாரின் இளைய மனைவி வந்து வள்ளலாரிடம் ஆசி பெற்றார்.அவரிடம் திருநீறு கொடுத்து, “இரவு தூங்கும் முன்பு திருநீறை குடிநீரில் கலந்து குடி...” என்றார்.மறுநாள் காலையில் அம்மையாருக்கு நோய் முற்றிலுமாகத் தீர்ந்தது.அடுத்தடுத்து தொடர் அதிசயங்களைக் கண்ட ஜமீன்தார் அப்படியே வள்ளலாரிடம் சரணடைந்தார்.“அடியேனால் தங்களுக்கு என்ன கைமாறு வேண்டும்?” என்று கேட்டார்.

ஜமீன்தாருக்கு மட்டுமின்றி அந்த ஊருக்கே ஜீவகாருண்யப் பாடம் போதித்தார் வள்ளலார்.அசைவ விருந்துக்கு பேர் போன ஜமீன் குடும்பம், உடனே சைவத்துக்கு மாறிவிட்டது.வேட்டவலம் ஜமீனுக்கு உட்பட்ட கோயில்களில் இனி உயிர்ப்பலி இல்லை என்று வள்ளலாருக்கு உறுதி கூறப்பட்டது.

அது மட்டுமில்லை. ஊருக்குள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களாக இருந்தாலும் அவையும் கொல்லப்படக்கூடாது என்று ஆணையும் இடப்பட்டது.

வேட்டவலம் சம்பவத்துக்குப் பிறகே வள்ளலாரின் ஜீவகாருண்யக் கொள்கை, தமிழகம் முழுக்க பிரபலமானது.அந்த வேட்டவலம் ஜமீனில்தான் வள்ளலாரின் திரு உருவம், ஓர் ஓவியரால் முதன்முறையாக வரையப்பட்டது. வள்ளலார் இப்படித்தான் இருப்பார் என்று இன்று நாமறிவதற்கு அதுவே காரணம்.வள்ளலார் வாழ்ந்த காலத்தில் புகைப்படம் எடுக்கும் கருவி நடைமுறைக்கு வந்துவிட்டாலும், ஏனோ ஒரு புகைப்படத்தில் கூட வள்ளலாரின் உருவம் பதிவானதில்லை.

(அடுப்பு எரியும்)  

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்