கொரோனா காலத்தில் கோயில் ஏன் திறக்கப்படவில்லை... சாத்தான்குளம் சம்பவம்... பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு... இந்திய அரசு நிறுவனங்கள் நவீனமாக உள்ளதா?
தலைப்பைப் படித்ததுமே சிலருக்கு இது என்ன கேள்வி என்று தோன்றும். கொஞ்சம் அபத்தமான தலைப்பு என்றுகூட சிலர் கருதக்கூடும்.
ஆனால், இந்தக் கேள்வி சந்தேகத்திலிருந்து அல்ல. போதாமை உணர்விலிருந்து வருகிறது.
 இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்கள் தொழில்நுட்பரீதியாக நவீனமாகிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் காரண காரிய அளவில் அது அடைந்துவரும் சட்டரீதியான மற்றும் செயல்பாடு ரீதியான வளர்ச்சியை நாம் கேள்வி கேட்கவில்லை.
 ஆனால், சமூகவியல் கோணத்தில் பார்க்கும்போது இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்கள் நவீனமாகிக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்விக்குத்தான் ஆம் என்ற பதிலை நம்மால் சொல்ல இயலவில்லை.இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கங்கள், திட்டங்கள் உருவாக்கப்பட்ட விதம் அனைத்துமே நவீன முறையில்தான் உள்ளன. மெரிட், திறமை, வெளிப்படையான போட்டியின் மூலமாக பணியமர்த்தப்படல், நவீன தேர்வுகள் மற்றும் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல் என அனைத்தும் நவீனமாகத்தான் உள்ளன.
அதிகார அமைப்புகள் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இவற்றை ஆளும் உயர்மட்ட அதிகார மையங்கள் தேர்தல்கள் மூலமாகத்தான் உள்ளே வருகிறார்கள். இங்குதான் பல சிக்கல்கள் எழுகின்றன.சமயங்களில் இந்த இரண்டு தரப்பிலுமே - அதாவது அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் தரப்பு இருவருமே தமது சமூகத் தகுதியினால் அன்றியும் நமது பழைய நிலப்பிரபுத்துவ மனநிலைகளான சாதி மேலாதிக்கம், சமூக மேலாதிக்கம் உள்ளிட்ட ஆதிக்கங்களின் அடிப்படையில்தான் இந்த நவீன அரசு இயந்தி ரங்களுக்குள் ஊடுருவுகிறார்கள்.
இதனால் இந்த அரசு இயந்திரங்களின் நவீன சமூகத்தன்மை கடும் சவாலை எதிர்கொள்கிறது. என்னதான் சட்டத்தில் புதிய நவீன சமூகத்துக்கான ஏற்பாடுகள் இருந்தாலும் இப்படியான புல்லுருவிகளின் ஊடுருவல் அமைப்புகளை கெட்டிதட்டிப் போன பழைய சிந்தனைகளாலும் பிற்போக்குத்தனங்களாலும் காலத்தால் பின்னால் இழுத்துச் செல்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாக காரண காரிய நோக்கோடு இந்த ஊடுருவல் தடை செய்யப்பட்டால் மட்டுமே நல்ல விளைவுகள் உண்டு.
நவீன ஒழுங்குகள் அடிப்படையிலான சிந்தனைகள் பழைய கரடுதட்டிப்போன மதம், சாதி, ரத்த உறவுகள் அடிப்படையிலான சமூகக் கட்டுமானத்துக்கு எதிரானவை. தகுதி மற்றும் திறமை என்பதோடு மனித நேயமும் இணைந்த இந்த நவீன சிந்தனைகளுக்கு எதிரானவையே சாதி, மத, ரத்தப் பாகுபாட்டுச் சிந்தனைகள். ஆனால், ஆளும் தரப்புகள் மக்களிடையே இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருப்பது போல் தோன்றுகிறது.
சமீபமாக இந்த நவீன சித்தாந்தங்களுக்கும் பழைய கரட்டுச் சிந்தனைகளுக்குமான யுத்தம் முறுகலடைந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, மோடி தலைமையிலான ஆளும் பிஜேபி அரசு வந்தபிறகு பழைய மதவாத சிந்தனைகள் அரசியல் முதல் அரசாங்க அலுவல்கள் வரை அனைத்திலும் விஷம் போல் ஊடுருவிக்கொண்டிருக்கின்றன.
நடைமுறைக்கு ஒவ்வாத இச்சிந்தனைகளுக்கு இன்று வேண்டுமென்றே ஊடகங்களில் கருத்தியல் முக்கியத்துவம் உருவாக்கப்படுகிறது. அரசுத் துறைகளில் இவை அடைந்துவரும் செல்வாக்குக்கு எண்ணற்ற சமகால உதாரணங்கள் தர இயலும்.ஒரு சமீபத்தைய உதாரணம் சொல்வது என்றால், மகாராஷ்ட்ராவின் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தின் சாரத்தைச் சொல்லலாம்.
கொரோனாவால் நாடு முழுதும் ஊரடங்கு அமுலில் இருந்த பிறகு படிப்படியாக ஒவ்வொரு பொது இடமாக அரசு திறந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர், ‘ஏன் கோயில்கள் திறக்கப்படவில்லை’ என்று கேட்டிருந்தார். முழுக்க முழுக்க மத ஆதரவான அக்கடிதத்தில் ஒரு மதச்சார்பற்ற நாட்டின் ஒரு மாநில ஆளுநர் என்ற பதவிக்கு ஏற்ற எந்தவிதமான பொறுப்பும் இல்லாததாக ஆளுநரின் கடிதம் இருந்தது.
இந்திய மாநிலங்களின் ஆளுநர் பதவி என்பது தன்னிச்சையானதுதான். சில விஷயங்களில் ஆளுநருக்கு என தனிப்பட்ட கருத்துகளும் இருப்பதில் தவறு இல்லை. ஆனால், தனது அலுவலகக் கடிதம் ஒன்றிலேயே அதை அப்பதவியில் இருக்கும் அதிகாரியின் கருத்து போல வெளியிடுவதுதான் சிக்கலே. அக்கருத்து மதச்சார்பின் மையைக் கொண்டிருந்தால், அது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில் அது இந்திய அரசியல் அமைப்புக்கே முரண்பட்டதாக ஆகி விடுகிறதல்லவா? ஆனால், மத்தியில் ஆளும் அரசின் ஆசீர்வாதம் இருப்பதால் அம்மாநில ஆளுநருக்கு பெரிதாக ஏதும் நெருக்கடிகள் வரப்போவதில்லை.
சமயங்களில் ஒருவர் இப்படியான நவீன அரசுப் பதவிகளுக்கு தம்முடைய பழம் பஞ்சாங்க அரசியல்களாலேயே நீந்தி வந்துவிட முடியும்தான். ஆனால் இப்படியான பதவிகளுக்கு வந்த பிறகாவது தங்களின் எல்லைகள் என்னென்ன, நவீன சமூக அமைப்பு என்பதென்ன என்கிற நிதானம் இல்லாமல் இருப்பதுதான் பிரச்சனை.
அடிமட்ட அதிகார அமைப்பு களில்கூட இத்தகைய விவகாரங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. குறிப்பாக, காவல் நிலையங்களைச் சொல்லலாம். இதுபோலவே குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சமூகங்கள் சார்ந்தும் இந்த நவீன சமூக விதிமீறல்கள் நடைபெறுகின்றன.
உதாரணமாக, பாலியல் வல்லுறவுகளைச் சொல்லலாம். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது நடைபெறும் பாலியல் வல்லுறவு களில் பெரும்பாலானவை இப்படியான பழம் பஞ்சாங்க நடைமுறை மற்றும் சித்தாந்த ஆதரவு கொண்டவைதான். ஒருவரின் சாதி அபிமானம் அவருக்கு இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பெண்ணை நிர்மூலமாக்குவதற்கான அதிகாரத்தைக் கொடுத்திருப்பதாக நம்பச் செய்கிறது. இப்போது, சமூக வலைத்தளங்கள் போன்ற நவீன சமூகவியல் அமைப்புகள், ஒரு காவலரின் சாதியபிமான செயல்பாடுகளையும் ஒரு ரேப்பிஸ்ட்டின் சாதியபிமானத்தையும் பிரித்து எழுதும் என்றா நம்புகிறீர்கள்? நடக்காது. முன்னது அதிகாரத் துஷ்பிரயோகம் போலவும் பின்னது மாபெரும் மானுட பாதகம் போலவும் சித்தரிக்கப்படும்.
உண்மையில் இவ்விரண்டின் பின் உள்ளதும் ஒரேவிதமான சித்தாந்த பலன் கொண்ட கருத்தியல்தான். அது கரடுதட்டிப்போன சாதிய மற்றும் மதவாதச் சிந்தனைகள் அடிப்படையிலானது. ஆனால், இவ்விரண்டு குற்றங்களில் ஒன்று மிக மோசமானதாகவும் இன்னொன்று அப்படி ஒன்றும் பெரிய குற்றம் இல்லை என்பதைப் போன்றும் நோக்கப்படுகிறது.
சமீபத்தில் நிகழ்ந்த சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைப் படுகொலையையே எடுத்துக்கொள்வோம். இதில், போலீஸ் நண்பர்கள் என்ற போர்வையில் ஆளும் பிஜேபி அரசின் அபிமானிகள் இயங்கினார்கள் என்று ஒரு செய்தி உலவியது. அதன் நம்பகத்தன்மை பற்றியோ நிஜத்தன்மை பற்றியோ மேலதிகத் தகவல்கள் வரவே இல்லை.
இறந்தவர்கள் சிறுபான்மை சமூகத்தவர்கள் என்பது மேலும் அதிக சந்தேகத்தை வரவழைக்கிறது. இப்படித்தான் அரசுத்துறையில் பழைய சாதிவாத சிந்தனைகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதுபோல் ஒவ்வொரு துறை சார்ந்தும் எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும்.
நம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, பழமைவாதச் சிந்தனைகளை எல்லாம் மூட்டைகட்டி தூர எறிந்துவிட்டு, புதிய சமத்துவமான சமூகம் நோக்கிச் செல்ல வேண்டும் என்ற கனவோடுதான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு அற்புதமான நவீன சிவில் சட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதன் அருமை தெரியாது இதை அழித்திட்டாலோ அல்லது அழிக்கும் சக்திகளுக்குத் துணை போனாலோ நம்மைவிட முட்டாள்கள் யாருமில்லை.
இளங்கோ கிருஷ்ணன்
|