பராக் ஒபாமா: உலகின் முதல் ஃபேஸ்புக் அதிபர்!



FaceB(JP)ook - மினி தொடர் 10

மோடியை பிரதமராக்குவதற்கான வேலைகளை பிஜேபியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஜரூராக முடுக்கிவிட்டது. இதற்காக ராஜேஷ் ஜெயினைத் தவிரவும் வேறு பலரும் களமிறங்கினார்கள். பிஜேபியின் ஐடி விங்க் 2013ம் ஆண்டே ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்புடன் தங்கள் உரையாடலைத் தொடங்கினார்கள்.
பிஜேபியின் அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே மைக்ரோ டார்கெட்டிங் பிளாட்ஃபார்ம் எனப்படும் நுண் இலக்கு தளங்களான சமூக வலைத் தளங்களில் பிஜேபிதான் மிகவும் வலுவானது என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

பிஜேபியின் ஐடி விங்க் அணியினரை வழிநடத்த ஃபேஸ்புக் ஊழியர்கள் வழிகாட்டுதல் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்கள். அதில், பிஜேபியினர் பங்குகொண்டனர்.‘க்ரியேட்டிவ் லேண்ட் ஏசியா’ என்ற நிறுவனத்தின் அதிபரான சாஜன் ராஜ் கருப், விளம்பரத்துறை நிபுணர் பிரஹலாத் கக்கார், இவர்களோடு பாலிவுட் நடிகர் அனுபம் கெரும் கொஞ்ச நாட்கள் பிஜேபியின் முகமாக பொதுவெளியில் வலம் வந்தனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் முன்பு எப்போதையும்விட மிகப் பெரிய ஆளுமை மோடி என்பதைப் போன்ற சித்திரத்தை இவர்கள் உருவாக்கினார்கள்.  இந்தச் செயலில் டாக்டர் ஹிரான் ஜோஷிக்கு முக்கிய பங்குள்ளது. அவர்தான் இந்த அணியின் மூளை போன்று இயங்கியவர். இப்போது பிரதமரின் அலுவலகத்தில் அதிகாரத்தில் இருக்கும் இவருக்கு அன்று இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களான இளைஞர்கள் உதவி செய்தார்கள். ஒருவர் நிரவ் ஷா. இன்னொருவர் யாஷ் ராஜீவ்.

ஜோஷி ஃபேஸ்புக்கின் சீனியர் அதிகாரிகளோடு நெருக்கமான தொடர்பிலிருந்தார். 2013ம் ஆண்டு அகிலேஷ் மிஸ்ரா ஜோஷியுடன் இணைந்தார். இந்த மிஸ்ரா தான் பின்னர் இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளமான ‘MyGovIndia’வின் இயக்குநராக இருந்தார். இப்போது, அரவிந்த் குப்தா இதன் இயக்குநராக இருக்கிறார். இந்த அரவிந்த் குப்தாவும் பிஜேபியின் ஐடி விங்கில் பணியாற்றியவர்தான்.

இப்படி இப்போதைய ஆளும் பதவிகளில் நிறைந்திருப்பவர்கள் அனைவருமே முன்பு பிஜேபியை அதிகாரத்துக்குக் கொண்டு வரவும் மோடியை பிரதமராக்கவும் பாடுபட்டவர்கள்தான். அவர்களின் விசுவாசத்துக்குக் கூலியாகத்தான் இந்தப் பெரும் பதவிகள் அவர்களுக்கு தூக்கிப் போடப்பட்டிருக்கின்றன.

மிஸ்ரா ‘ப்ளூக்ராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ட்ரூபிக்சர் - உண்மைக் காட்சி என்ற பெயரில் பொய்களை மட்டுமே அவிழ்த்துவிட்ட இணையதளத்தோடு நெருங்கிய தொடர்புடைய நிறுவனம் இது. இந்த ட்ரூபிக்சர்தான் மோடி எழுதிய நூல்களையும் நமோ தொலைக்காட்சிக்கான கன்டென்ட்களையும் தயாரித்துக்கொடுக்கும் வேலையைச் செய்தது. நமோ என்பது நரேந்திரமோடியின் புகழ்பாடும் கேபிள் வழி தொலைக்காட்சி.

மோடி அணியினருக்கு உற்சாகம் கொடுத்த செய்தி ஒன்றிருந்தது. 2012ம் ஆண்டு பராக் ஒபாமா வெற்றிபெற்றபோது, உலகின் முதல் ஃபேஸ்புக் அதிபர் என்று வர்ணித்தனர் அரசியலாளர்கள். அதாவது, ஃபேஸ்புக்கை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அதிபர் என்று மார்க் ஷூக்கர்பெர்க் உட்பட பல்வேறு ஆளுமைகள் அவரைக் கொண்டாடினார்கள்.

‘வெற்றி ஆய்வகம்: வெல்லும் பிரசாரத்துக்கான ரகசிய அறிவியல்' என்ற பெயரில் வெளியான சாசா ஐசன்பெர்க்கின் நூல் ஒன்று அப்போது உலகையே அதிரடித்தது. நவீன அரசியல் பிரசாரம் என்பது எப்படி அமைய வேண்டும்; குடிமக்களின் டேட்டாக்களை எப்படிப் பயன்படுத்தி அவர்களின் அபிமானங்களை வாக்குகளாக வென்றெடுக்க வேண்டும் என்பதை எல்லாம் அந்த நூல் விரிவாகப் பேசியது. இந்த நூல் ராஜேஷ் ஜெயின் உள்ளிட்ட பிஜேபி ஐடி அணியினருக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இதே ஃபார்முலாவை இந்தியாவில் அமுலாக்குவது எப்படி என்று ஆர்வமாய் சிந்திக்கத் தொடங்கினார்கள். பரிசோதனையில் இறங்கினார்கள். வென்றும் காட்டினார்கள். ஒவ்வொரு சாத்தியமான வழிகளிலும் வாக்காளர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவது, மைக்ரோ டார்கெட் பயன்பாட்டாளர்கள் என்றில்லாமல், மோடி பற்றிய தொன்மங்களை மிகப் பெரிய அளவில் நுட்பமாக வடிவமைத்தார்கள். நாட்டுக்கே மோடியால் ‘ஒரு அச்சே தின்’ அதாவது, நல்ல காலம் வந்துவிட்டது என்பதைப் போன்ற ஒரு மனப்படிமத்தை உருவாக்கினார்கள்.

இந்தப் பிரசாரத்துக்கு நான்கு அணிகள் முடுக்கிவிடப்பட்டன. முதல் அணி ஜெயின் தலைமையில் மும்பையிலிருந்து இயங்கியது. தகவல் தொடர்பு பிரசாரங்கள், வாக்காளர் பட்டிய டேட்டா அலசல் போன்றவற்றை இக்குழு கவனித்தது. இதற்கான நிதி வழங்கல் மேலாண்மை இவர்கள்தான். இப்போதைய பிரசார் பாரதியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சசிசேகர் மேம்படி (இவர்தான் NITI மற்றும் மிஷன் 272+ ஆகியவற்றை நடத்துபவர்) என்பவர்தான் ஜெயினுக்கு அவரின் வேலைகளில் உதவுபவர்.

இரண்டாம் அணி அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தலைமையில் இயங்கியது. இந்திய அரசியல் செயல்பாட்டுக் குழு (Indian Political Action Committee : I-PAC) என்ற பெயரில் இவரின் நிறுவனம் மோடியின் மூன்று கோணங்களிலான பிம்பக் கட்டமைப்புக்கு உதவியது. ஒற்றுமை, தேநீரோடு ஒரு விவாதம், பொறுப்புள்ள அரசின் குடிமக்கள் என்ற மும்முனைக் கருத்தியல்களோடு, படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மோடியின் ஆதரவாளர்களாக மாற்றும் வேலையில் இவர்கள் இறங்கினார்கள்.

இது மிகப் பெரும் அரசியல் தாக்கத்தை உருவாக்கியது.மூன்றாவது அணி மிகத் திட்டமிட்டபடி மோடி பற்றிய பிம்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் முனைப்போடு இயங்கியது. இதை ஹிரான் ஜோஷி தனிப்பட்ட முறையில் செயல்படுத்தினார். அப்போதைய குஜராத் அரசின் முதல்வர் அலுவலகத்திலிருந்து இதற்கான வேலைகளை அவர் செய்துவந்தார்.

இந்த அணியின் உறுப்பினர்களோடுதான் ஃபேஸ்புக்கின் ஊழியர்கள் நெருங்கிய தொடர்பிலிருந்தார்கள். இன்று ஃபேஸ்புக்கில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிவ்நாத் துக்ரால் உட்பட பலர் இந்த அணியோடு நெருக்கமாக இருந்தார்கள். நான்காவது அணியை அரவிந்த் குப்தா நிர்வகித்தார். இவர்தான் தற்போது ‘மைகவ்.இன்’ இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் தில்லியிலிருந்து செயல்பட்டார். அமித் மால்வியா - இப்போதைய பிஜேபி ஐடி செல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் இவரோடு இணைந்து செயல்பட்டார்.

இந்த நான்கு அணியினரும் தனித் தனியாகச் சுதந்திரமாகச் செயல்பட்டனர். வினித் கோயங்கா இதைப் பற்றிச் சொல்லும்போது, ‘இந்த நான்கு அணிகளுக்கு இடையே ஏதேனும் விஷயங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டால் அது அத்தியாவசியத் தேவை அடிப்படையிலானதாக மட்டுமே இருந்தது. மற்றபடி, ஒவ்வொருவரும் சுதந்திரமாக, ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல் இயங்கினர்’ என்கிறார்.

ராஜேஷ் ஜெயின் இதில் மிகச் சுதந்திரமானவராகவும் தனிப்பட்ட விதத்திலும் இயங்கினார். அவர் தனது சொந்த நிதியை இதற்குள் கொண்டுவந்தார். அதாவது, அவரால் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தினார். தேர்தல் நிகழ்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ப்ராஜெக்ட் 275 என்ற இலக்கோடு களமிறங்கிவிட்டார் ராஜேஷ் ஜெயின்.

இன்று ராஜேஷ் ஜெயின் பிஜேபியால் கடும் அதிருப்தியில் இருப்பது போல் தெரிகிறது. சமீபமாக அவரின் பேச்சுகள் அவரின் திருப்தியின்மையை, பிஜேபி மீதான போதாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், இந்த நால்வர் அணி இணைந்துதான் பிஜேபியை, மோடியை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது என்பது நிஜம். இவர்கள் இதை எப்படி நிகழ்த்தினார்கள்?  

(தொடர்ந்து தேடுவோம்)

 - இளங்கோ கிருஷ்ணன்