படமான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!



ஃபேஸ்புக்கில் பதிவிடும் ஒரு ஸ்டேட்டஸைக் கூட அழகான திரைக்கதையாக்கி படமாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது ‘விக்ருதி’. நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப்படம்.

விளையாட்டு வினையாகும் என்பதே படத்தின் ஒன்லைன். வாய் பேசமுடியாத, காது கேளாத தம்பதி எல்தோ - எல்சி. இவர்களுக்கு கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் ஒரு மகனும், சுட்டியான ஒரு மகளும் இருக்கின்றனர். மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

மகளை அருகிலிருந்து கவனித்துக்கொண்டதால் இரண்டு நாட்களாக எல்தோ தூங்கவே இல்லை. மகளுக்கு ஓரளவு சரியானதும் வீட்டுக்குப் போய்விட்டு வரலாம் என்று மெட்ரோ ரயிலில் தனியாகப் பயணிக்கிறார். கடுமையான சோர்வில் தன்னையறியாமலே மெட்ரோவில் கால்களை நீட்டி உறங்கிவிடுகிறார்.

அதே ரயிலில் பயணிக்கிறார் துபாய் ரிட்டர்ன் மற்றும் செல்ஃபி பிரியரான சமீர். நன்றாகக் குடித்துவிட்டு ரயிலில் மட்டையாகிவிட்டார் என்று எல்தோவைப் புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறார் சமீர். அந்தப் புகைப்படம் வைரலாக, எல்தோவால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்தில் சிக்கலாகிறது. அவருடைய மகன் சக மாணவர்களால் கேலி, கிண்டலுக்கு உள்ளாகிறான்.
இத்தனைக்கும் குடி, புகைப்பழக்கம் இல்லாதவர் எல்தோ. அதனால் தன்னைப்பற்றி யாரோ தவறாக ஃபேஸ்புக்கில் சித்தரித்துவிட்டார்கள் என்று காவல்நிலையத்தில் வழக்குத் தொடுக்கிறார் எல்தோ.

இந்த வழக்கு தொலைக்காட்சி சேனல்களில் முக்கிய செய்தியாகிறது. எல்தோவைப் பற்றி தவறாக பதிவிட்டுவிட்டோம் என்று குற்றவுணர்வுக்கு ஆளாகிறார் சமீர். அவருக்கு இரண்டு நாட்களில் திருமணம் வேறு. ஒருவரைப் பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் இரண்டு வருடம் ஜெயில், 2 லட்சம் அபராதம் என்பதை அறிந்து இன்னும் பீதியாகிறார்.

தனது ஸ்மார்ட்போனிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பின் ஆப்களை நீக்குகிறார். அப்போதும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. முகூர்த்த நேரத்தில்கூட போலீஸ் வந்து தன்னைக் கைது செய்துகொண்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் சுழல்கிறார். எல்தோவைச் சந்தித்து மன்னிப்புக்கேட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பே நெகிழ்ச்சியான கிளைமேக்ஸ்.அரபு நாட்டிலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய மாடர்ன் இளைஞனாகவும் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கத் துடிக்கும் மனிதனாகவும் இருவேறு பரிமாணங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சமீராக நடித்த சௌபின்.
வாய் பேசமுடியாத, காது கேளாத எல்தோவாக சூரஜின் நடிப்பு அட்டகாசம். கொச்சி மெட்ரோ ரயிலில் பயணித்த எல்தோ என்பவருக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் எம்சி ஜோசப்.