அணையா அடுப்பு-24



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

உருவ வழிபாடு தேவையா இல்லையா..?

மேடைப்பேச்சு என்கிற கலையே தமிழகத்தில் தொடக்கமானது வள்ளலாரின் காலக்கட்டத்தில்தான்.அடிப்படையில் பிரசங்கம் செய்வதே வள்ளலாரின் தொழிலாக இருந்தது.அந்த அனுபவம் காரணமாக மேடையில் எவ்வாறு பேசுவது, கூட்டத்தை எவ்வாறு வசியப்படுத்துவது என்பதையெல்லாம் நன்கு அறிந்திருந்தார்.

ஒலிவாங்கி இல்லாத அந்த காலக்கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருக்கும் கூட்டங்களில் மிகவும் உரத்துப் பேச வேண்டியிருந்தது.
அடிப்படையில் மென்மையான குணம் கொண்டவரும், மிகவும் மெல்லிய குரலில் பேசுபவருமான வள்ளலார், மேடை என்று வந்துவிட்டால் தன் கருத்துகளை ஆணித்தரமாக நிறுவும் சிங்கமாக கர்ஜித்தார்.

உருவ வழிபாடு தொடர்பாக வள்ளலாருக்கும், அப்போது நாடெங்கும் புகழ் பெற்று வந்த பிரம்ம சமாஜம் அமைப்பினருக்கும் நடந்த பொது விவாதம் வெகு பிரசித்தம்.திருப்பாதிரிப்புலியூருக்கு அடுத்திருக்கும் பெண்ணை நதிக்கரையில் திருவிழா ஒன்று நடந்தது. அங்கே பிரம்ம சமாஜத்தைச் சார்ந்த பிரசங்கியான தர ஸ்வாமி நாயக்கர் என்பவர் வந்திருந்தார்.

பிரம்ம சமாஜம் அமைப்பினர் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள். உருவங்களை வழிபட வேண்டாமென்று பிரசாரம் செய்து வந்தனர்.
அம்மாதிரி பிரசாரம் செய்யும் தரஸ்வாமி நாயக்கரை அங்கே சந்தித்த மக்கள், இது தொடர்பாக வள்ளலாருடன் தாங்கள் விவாதிக்க வேண்டும்; அவ்விவாதம் எங்களுக்கு தெளிவினை வழங்கலாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இவ்வாறே வள்ளலாரிடமும் தரஸ்வாமி நாயக்கரிடம் தர்க்கம் புரிய வேண்டும் என்று வேண்டினார்கள்.இருவரும் சம்மதித்ததும் ஆற்றங்கரையில் உக்கிரமான சொற்போர் தொடங்கியது.அன்று நடந்த வாதத்தை நேரில் கண்டவர்களில் ஒருவர் ஆலப்பாக்கம் நாயனா ரெட்டியார். அந்த விவாதத்தை அப்படியே ‘நடந்த வண்ணம் உரைத்தல்’ என்று பெரிய கட்டுரையாக எழுதி வைத்திருந்தார்.

வெகு காலத்திற்குப் பின்னர் அது நூலாக வெளிவந்து, அவ்விவாதம் குறித்த விவாதத்தை மீண்டும் மக்களிடையே பரவலாக்கியது.
விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசியவர்கள் முதலில் வள்ளலாரிடம் இருந்து துவக்கி இருக்கிறார்கள்.“அய்யா, பிரம்மத்தை நினைப்பதே தகுதி. விக்கிரகத்தை ஆராதனை செய்வது தகுதியல்ல என்று தரஸ்வாமி நாயக்கர் அவர்கள் இங்கே பல முறை பிரசங்கித்திருக்கிறார்கள்.

உருவ வழிபாடு தவறா என்கிற சந்தேகம் எங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதை தாங்கள் நிவர்த்திக்க வேண்டும்...” என்று கேட்டுக் கொண்டார்கள்.வள்ளலார் மிகக்கடுமையாக தன்னை எதிர்ப்பார், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார் தரஸ்வாமி.

ஆனால் -வள்ளலாரோ எவரும் எதிர்பாராவிதமாக அதே நேரம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியாக ஒரு பதிலை சொன்னார்.
அதாவது -“பிரம்மத்தை அறியத் தொடங்கினோர் தொடர்ந்து அறிதலில் கவனம் செலுத்த வேண்டும். விக்கிரகங்களை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து அதைச் செய்யலாம். இரு வகைகளிலுமே அவரவருக்கு உரிய பலன்களை எட்டுவார்கள். இரண்டுமே இறையை அறியும் முறைதான் என்கிற பக்குவத்தை இருவகையினருமே அடைய வேண்டும்...” என்று வள்ளலார் பதிலளித்தார்.

சீர்திருத்தவாதி என்று பெயர் பெற்றிருந்தாலும் மக்களிடம் மரபாக வந்து கொண்டிருந்த நம்பிக்கைகளை வெகு கவனமாகவும், லாவகமாகவுமே வள்ளலார் கையாண்டார் என்பதற்கு இந்தப் பதில் நல்ல உதாரணம்.பிரம்ம சமாஜத்தின் விக்கிரக எதிர்ப்பு வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்களும் சரி, விக்கிரகங்களை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோரும் சரி, இரு தரப்பையுமே திருப்திப்படுத்தக்கூடிய ஒரு கருத்தை வள்ளலார்
சொன்னார்.

வள்ளலாரின் இந்தப் பதிலையடுத்து தரஸ்வாமிகள் தன்னுடைய கருத்து மாறியிருக்கிறதா என்று தெளிவுபடுத்துமாறு அங்கிருந்த
மக்கள் கேட்டார்கள்.தன்னுடைய வாதத்தை எதிர்த்தால் எதிர்த்து வாதாடலாம். வள்ளலாரோ பிரம்ம சமாஜத்தினர் வைக்கும் வாதத்தையும்
ஏற்றுக் கொள்கிறார்,அதற்கு எதிர்வாதமான விக்கிரக வழிபாட்டையும் குறை சொல்லவில்லை. எனவே என்ன எதிர்க்கருத்து வைத்து வாதிட முடியுமென தர ஸ்வாமிகள் குழம்பிப் போனார்.

“என்னால் உடனடியாக என்னுடைய வாதத்தை இங்கே முன்வைக்க முடியவில்லை. நான் எழுத்து மூலமாக பின்னர் பதிவு செய்கிறேன்...” என்றார் தர ஸ்வாமிகள்.“நேருக்கு நேர் வாதத்தின் போது இருவரும் வாதம் மூலமாக மட்டுமே தங்கள் தரப்பை நிறுவ வேண்டும். மாறாக பின்னர் எழுத்து வாயிலாக கருத்துப் போர் செய்வேன் என்று சொல்வது சரியல்ல...” என்றார் வள்ளலார்.

வேறு வழியில்லாமல், “பிரம்மத்தை நினைப்பது தவிர விக்கிரக வழிபாடு செய்வது தகாது என்பதே எங்கள் பிரம்ம சமாஜத்தின் கோட்பாடு...” என்று மீண்டும் தன் கருத்தை கோட்பாடாக முன்வைத்தார் தர ஸ்வாமிகள்.“ஆகாயத்துக்கு எத்தனை படிக்கட்டுகள்?அதை அடியால் அளக்க முடியுமா? காற்றை கையால் பிடிக்க முடியுமா? அளக்க முடியும், பிடிக்க முடியும் என்று நாயக்கரவர்கள் சொல்கிறாரா?” என்று பதிலடி கொடுத்தார்
வள்ளலார்.விவாதம் சூடு பிடித்தது.

இறையை வணங்குவது என்பது மனம் தொடர்பானது என்பது தர ஸ்வாமிகளின் கருத்தாக இருந்தது.உடல் என்கிற ரூபத்தை ஓர் உயிர் வைத்திருக்கும் நிலையில், உருவ வழிபாடு ஒன்றும் தவறானதல்ல என்பது வள்ளலாரின் பதிலடியாக இருந்தது.அதாவது -அன்றைய விவாதத்தில் வழிபாட்டுக்கு தங்களுடைய முறையைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென தர ஸ்வாமிகளும், வழிபாட்டில் ஜனநாயகத்தன்மை இருக்கலாம் என்று வள்ளலாரும்
வாதிட்டனர்.

“பிரம்மம் என்பது மனம் தொடர்பானது...” என்றே திரும்பத் திரும்ப தரஸ்வாமிகள் சொன்னார்.“மனம் தொடர்பானது மட்டுமல்ல. கண், காது, மூக்கு, மெய், வாய், கை என்று மற்ற இந்திரியங்கள் தொடர்பானதும் கூட...” என்று தன் வாதத்தை வலுவாக எடுத்து வைத்தார் வள்ளலார்.

“மனம் தொடர்பான ஒன்று கண்ணுக்கும் தொடர்பானதோ?”
“நிச்சயமாக…”
“மனதுக்கு என்று பிரத்யேகமாக எதுவுமில்லையா?”

“ஏதாவது இருக்கிறதா என்று நாயக்கரவர்களே சொல்ல வேண்டும்…”
“மகிழ்ச்சி என்பது மனம் தொடர்பான விஷயம் மட்டுமே…”
“கண் பார்க்காமல், காது கேட்காமல், மூக்கு நுகராமல் ஒரு மகிழ்ச்சியான விஷயம் மனதுக்கு எப்படி கடத்தப்பட முடியும்?”
இப்பதிலைக் கேட்டவுடனே வள்ளலாரை மடக்கும் விதமான ஓர் எதிர்க் கேள்வியை தர ஸ்வாமிகள் போட்டார்.

வாதத்தை நேரில் கண்டு கொண்டிருந்தவர்கள் இருதரப்பு கருத்துகளிலும் சூடு பரவு வதை உணர்ந்து ‘சபாஷ், சரியான போட்டி’ என்று மேலும் ஆர்வமானார்கள்.வள்ளலாருக்கும், நாயக்கருக்குமான விவாதம் பற்றிய தகவல்கள் பரவி மேலும் கூட்டம் கூட ஆரம்பித்தது.

(அடுப்பு எரியும்)

 - தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்