வலைப்பேச்சு
@Tk Kalapria - நல்ல பாடலென்று மகிழ ஆரம்பித்த மறுநிமிடம் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது மனது...
@நேச மித்ரன் - ஒரே புத்தகத்தை ஒரு பருவத்தில் நீ ஏற்கவும் மறுபரு வத்தில் மறுக்கவும் தோன்றுகிறது என்றால் இடையில் நீ வாசித்த புத்தகங்களுக்கு நன்றி சொல். ஆம்; நீ சற்று வளர்ந்திருக்கிறாய்!
@Karunakaran Karthikeyan - மழைநாளின் பெருந்துயரம் டீக் கடையில் புதுக் குடை மாறியபின் திகிலோடு வீடு திரும்புவது...
@Lakshmi Saravanakumar - நடுராத்திரில மோர்க் குழம்பு, வெண்டக்கா பொரியலோட சாப்டணும்னு தோணுதே... என்ன வியாதியா இருக்கும்?
@Sriram Narayanan - சிக்கனமான வாழ்க்கை, சேமிப்பு, முதலீடு, ஓய்வுக்கான திட்டமிடல் அனைத்தும் அவசியமே. ஆனா, அவற்றைவிட அத்தியாவசியமானது காப்பீடு. Trust in God but Lock the Door போல சேமிப்பிலும் முதலீட்டிலும் கவனம் வைங்க. ஆனா, Unforeseen Circumstances வரும்போது சமாளிக்க காப்பீடு எடுத்து வைங்க. மருத்துவச் செலவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ், உடமைகளுக்கு ஜெனரல் இன்சூரன்ஸ், இதுக்கெல்லாம் மேல திடீர் மரணம் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தாமலிருக்க டெர்ம் இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீடு. புரிஞ்சுக்குங்க மக்கா.
@Vinod Kumar Arumugam - ஆன்லைன் வகுப்புகள் என்பது நேரடியாக கற்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. 6 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு இது ஒரு பலனும் கொடுக்காது. ஆனால், 6 வயதுக்கு மேல் உள்ள பிள்ளைகளுக்கு மெல்ல ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தி பழக்க வேண்டும். அப்படியே ஒரு பிள்ளை ஆன்லைனில் தகவலைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
@nk chandar - ஒரு நல்ல மொபைல் வாங்கணும்ங்கிறது பொண்ணு பாத்து கல்யாணம் பண்ற மாதிரி அவ்ளோ சாதாரணம் கெடையாது!
@Vinayaga Murugan - ஒரு வாரமாக வேலைப்பளு. சோர்வாக உள்ளது. சிலர் எந்த வேலைக்கும் செல்வதில்லை. ஆனால், எப்போதும் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். நேரத்துக்கு சோறு வந்துவிடுகிறது. சுற்றி இருப்பவர்கள் அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள். உண்மையில் இவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது.
@Mani Mathivannan - இந்திய ஆண்கள் ஒரு மிகப்பெரிய ஆளுமைச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கின்றனர். உணவு உண்பதென்பது மலங்கழிப்பதைப் போன்றே அசிங்கம் பிடித்த வேலை என்றார் காந்தி.நமது சமகால ஆண்கள் மனதுக்குப் பிடித்த பெண்களுடன் கூடுவது என்கிற உயரிய செயலை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பலவீனநிலையில் உள்ள குழந்தைகளை, பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதன் மூலம், புறக்கணிக்கப்பட்ட, பாதுகாக்கப்படாத இடங்களில் மலங்கழிப்பதைப் போன்ற அநாகரீகமான, மனிதத்தன்மையற்ற ஒரு செயலாக மாற்றி விட்டார்கள் என்று தோன்றுகிறது. பாதுகாப்பற்ற, ஆதரவற்ற குழந்தைகளைக் கூட்டமாக வல்லுறவுக்குள்ளாக்குவது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
@Magudeswaran Govindarajan - நம் அனைவர்க்கும் ஆத்திசூடி மனப்பாடமாகத் தெரியும். அதன் கருத்துகளும் நாமறிந்ததே. ஆனால் ஆத்திசூடியிலும் நமக்குப் பொருள் ஐயம் ஏற்படுத்தும் அடிகளும் இருக்கின்றன. தற்செயலாக அதனைப் படிக்கும்போது இதற்கு என்ன பொருள் என்ற குழப்பம் வரலாம்.
அறஞ்செய விரும்பு என்பது பொருளறிந்த ஒன்று. ஆறுவது சினம் என்றால் தெரியும். இயல்வது கரவேல் என்றால் சிலர்க்குத் தெரியாது. பலர்க்கும் பொருள் தெரியாத ஆத்திசூடியின் தொடர்களைப் பார்ப்போம்.இயல்வது கரவேல்: கரத்தல் என்றால் மறைத்தல், ஒளித்தல் என்று பொருள். இயல்வது என்றால் நம்மால் முடிவது. இல்லாதவர்க்கு உன்னால் உதவக்கூடிய ஒன்றைத் தராமல் மறைத்து வைக்காதே.
ஐயம் இட்டு உண்: ஐயம் என்றால் பிச்சை. சோறில்லாமல் இரந்து நிற்பவர்க்கு உணவளித்துவிட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு: ஒப்புரவு என்றால் உலக வழக்கம். நாட்டு நடைமுறை. ஒழுகுதல் என்றால் அதன்வழி நடத்தல். உலக வழக்கத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள். ஔவியம் பேசேல்: ஔவியம் என்றால் பொறாமை. பொறாமைப்பட்டுப் பேசாதீர். (ஔவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - குறள்) அஃகம் சுருக்கேல்: அஃகம் என்றால் தானியம். நெல், கேழ்வரகு, தினை, சாமை போன்றவை அஃகங்கள். அவற்றைத் தரும்போதும் விற்கும்போதும் அளவு குறைக்கவே கூடாது. கூடுதலாகத்தான் வழங்க வேண்டும்.
ஙப்போல் வளை: தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தேழு. அவற்றில் ஙகர வரிசை எழுத்துகளில் ங், ங ஆகிய இரண்டு எழுத்துகளைத் தவிர பிறவற்றுக்குப் பயன்பாடில்லை. அதற்காக ஙகர வரிசை எழுத்துகளைப் புறந்தள்ளவில்லை. பட்டியலில் அவையும் இருக்கின்றன. அதனைப்போல பயனில்லை என்பதற்காக நமக்கு வேண்டியவர்களைத் தவிர்க்கக் கூடாது. அணைத்துச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கிழமைப்பட வாழ்: கிழமை என்றால் உறவும் உரிமையும் சேர்ந்த தொடர்பு. ஒருவர் உன்னை உறவாகக் கருதி உரிமையோடு அணுகும்படி வாழ். கோதாட்டொழி: கோது என்றால் நெறிதவறல். குற்றமான செய்கை. கோதாட்டு என்றால் நெறிதவறிய செயல்கள். அவற்றை விட்டொழி. கௌவை அகற்று: கௌவை என்றால் துன்பம். துன்பத்தை முதலில் அகற்று.
நுண்மை நுகரேல்: நுண்மை என்பதற்கு நோய்தரும் சிற்றுண்டி உணவு என்பது பொருள். அவற்றினை உண்ணாதே. நைவினை நணுகேல்: துணி நைந்துவிட்டது என்கிறோம். நைதல் என்றால் அழிதல். நணுகுதல் என்றால் சார்ந்திருப்பது. அழிவுச் செயலைச் சார்ந்து வாழாதே.
வாதுமுற்கூறேல்: வாதத்தில் ஈடுபடுகையில் தன்னுடையதை முந்திச் சொல்லக் கூடாது. பிறர் கூறுவதைக் கேட்டு அதற்கேற்ப நம் கருத்தினைக் கூறல் வேண்டும். ஒன்னாரைத் தேறேல்: ஒன்னார் என்றால் பகைவர். தேறுதல் என்றால் நம்புதல். பகைவருடைய சொற்களை நம்பாதே.
@@itsgullysports - எத்தனை காய்கள் வெட்டுப்பட்டாலும், முன்னாடி போய்ட்டே இருக்க ஒரு சிப்பாய் இருக்கிற வரைக்கும் எந்த ஆட்டமும் முடிஞ்சிடாது. அந்த சிப்பாய் கடைசி சதுரத்துக்குள்ள கால் எடுத்து வச்சிடுச்சுனா, அந்த ஒரு மூவ் ஆட்டத்தை மாத்திடும்.
@Ramanujam Govindan - எந்த விவாதம் என்றாலும் என் மனைவி நான் சொல்வதை மறுக்கவே மாட்டார். உடனே ஏற்றுக்கொண்டுவிடுவார். விவாதம் தொடங்கிய உடனேயே ‘ஆமாம். நான் முட்டாள்தான். என் மேல்தான் தவறு’ என உரக்கச் சொல்லிவிடுவேன். மறுத்து பதில் பேச முடியாமல் ஏற்றுக் கொண்டுவிடுவார்!
@R.c. Mathiraj - மௌனத்தை விட பேரிரைச்சல் வேறேது?
@@bharath_kiddo - எந்த ஒரு கணம் உங்கள் பெற்றோர் உங்களை நாமினி ஆக நியமிக்க யோசிக்கிறார்களோ அந்தக் கணம் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்தாற்போல வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.
@Kavitha Bharathy - எப்போதும் சூழலின் எதார்த்தம்தான் அவரவர் அரசியலைத் தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் திரைத்துறையின் அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. இங்கு பசியோடு வெற்றியைத் தேடுகிறவன் அரசியல் தெளிவோடு இருக்க முடியும். அந்த உரிமை வெற்றியாளர்களுக்கில்லை.
திரையுலகில் வெற்றியைத் தொட்டவரில் இரண்டு வகையுண்டு. 1. வரிக்கு பயப்படுகிறவர்; 2. வட்டிக்கு பயப்படுகிறவர். இந்த இரண்டு பேராலும் மக்களுக்கான அரசியலைப் பேசமுடியாது. உங்கள் அரசியலைப் பொருத்தி இங்குள்ள யாரையும் புகழ்வதும் தவறு, இகழ்வதும் தவறு. ஆத்திரப்படுவதா, அனுதாபப்படுவதா என சம்பந்தப்பட்டவரின் நிலையை ஆராய்ந்து முடிவெடுங்கள். அதைவிடவும் நன்று, கடந்து போங்கள்...
@umakrishh - சினிமாவுல பூரா பொம்பளைப் புள்ளைங்களைக் கொஞ்சுற பாட்டா நிறைய இருக்கு. ‘வரம் தந்த சாமிக்கு’, ‘பிள்ளை நிலா...’ தவிர வேற பையனைக் கொஞ்சுற பாட்டு இருந்தா பரிந்துரைக்கவும். கேட்டு பாசம் ஏத்திக்கலாம்னு இருக்கேன்!
|