History of OTT Platforms
ஆன்லைன் வழியே டிவிடிக்களை வாடகைக்கு விட ஆரம்பித்ததுதான் OTT தளங்கள் உருவாகவே காரணம்!
கொரோனா காலத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட மூன்று எழுத்துகள் OTT (Over - The - Top). லாக்டவுனில் திரையரங்குகள் மூடிக்கிடக்க, புதுப்படங்கள் இங்கேதான் வெளியாகி ஹிட் அடித்தன.
தவிர, கடந்த ஐந்து வருடங்களில் அசுர வளர்ச்சியடைந்த துறையும் இதுவே. ‘சன் நெக்ஸ்ட்’, ‘அமேசான் ப்ரைம்’, ‘ஹாட்ஸ்டார்’, ‘நெட்பிளிக்ஸ்’, ‘ஜீ 5’... என உலகளவில் அறுபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஓடிடி பிளாட்பார்மில் ஆட்சி செய்து வருகின்றன. இதன் கடந்த ஆண்டு வருமானம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்.
2012ல் 4.6 கோடியாக இருந்த ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கை இப்போது 80 கோடியைத் தாண்டிவிட்டது.ஓடிடியில் அமெரிக்காவிற்குப் பிறகு இரண்டாவது பெரிய சந்தை இந்தியாதான். இங்கே 40 ஓடிடி நிறுவனங்கள் மக்களின் ரசனைக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 81 சதவீதம் பேர் குறைந்தபட்சம் தங்களின் மொபைலில் 3 ஓடிடி ஆப்களையாவது டவுன்லோடு செய்து வைத்துள்ளனர். 50 சதவீதத்தினர் இணைய சேவையை ஓடிடிக்காகவே பயன்படுத்துகின்றனர்.
2016 முதல் 2019 வரையில் ஓடிடியின் வளர்ச்சி 240 சதவீதம். இந்த வருடத்தின் முடிவுக்குள் ஓடிடியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. சினிமா, சீரியல்ஸ், விளையாட்டு, டாக்குமெண்டரி... என அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங்களையும் நீங்கள் இருக்கும் இடத்துக்கே இணைய சேவையின் மூலம் கொண்டு வருவதுதான் ஓடிடி. இதுதான் எதிர்காலத்தின் முக்கிய பொழுதுபோக்குக் கருவி என்கின்றனர் நிபுணர்கள்.
ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப்... என இணைய வசதியுள்ள எல்லா டிவைஸ்களிலும் ஓடிடி இயங்குவது ஹைலைட்.கேபிள், செட்-அப் பாக்ஸ், டிடிஎச் என எதுவும் இதற்கு தேவையில்லை. விளம்பரம் இல்லாமல் நிகழ்ச்சிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவது இதன் முக்கிய சிறப்பு. இது ஓடிடி சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இப்படியான ஓடிடி உருவான வரலாறு ரொம்பவே சுவாரஸ்யமானது. அதாவது, தொழில்நுட்பம் வளர வளர அதனுடன் சேர்ந்து வளர்ந்தது ஓடிடி. அமெரிக்காவில் 1997ல் மார்க் ராண்டல்ஃப், ரீட் ஹாஸ்டிங்ஸால் ‘நெட்பிளிக்ஸ்’ இணையதளம் நிறுவப்பட்டது. ஆன்லைன் மூலம் திரைப்பட டிவிடிக்களை வாடகைக்கு விடுவதுதான் இவர்களின் பிசினஸ். 30 ஊழியர்கள் மற்றும் 925 திரைப்பட டிவிடிக்களுடன் இயங்கி வந்த ‘நெட்பிளிக்ஸ்’ ஆன்லைன் ஸ்டோரில் டிவிடிக்களை ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்துவிடும். அப்போது ஒரு டிவிடிக்கு வாடகை 4 டாலர். அனுப்புவதற்கான செலவு 2 டாலர்.
இப்படியான சேவையை உலகிற்கு முதலில் வழங்கிய நிறுவனமும் ‘நெட்பிளிக்ஸ்’தான். டிவிடிக்களை வாடகைக்கு விடுவதுடன், மாதச் சந்தா அடிப்படையில் டிவிடிக்களை விநியோகிக்கவும் தொடங்கியது. ஒரு மாதத்துக்கான சந்தாவைச் செலுத்திவிட்டால் குறிப்பிட்ட அளவு டிவிடிக்களை எடுத்துக்கொள்ளலாம். அந்த மாதத்தின் இறுதிக்குள் எடுத்த டிவிடிக்களைத் திருப்பித்தந்துவிட வேண்டும் என்பது சந்தா விதி.
இந்தத் திட்டம் வெற்றிபெறவே 2000ம் ஆண்டு 3 லட்சம் சந்தாதாரர்களை ஈட்டியது ‘நெட்பிளிக்ஸ்’. 2002ல் இது 6 லட்சமாக எகிறி, அடுத்த வருடத்தில் 10 லட்சத்தைத் தொட்டது. இதற்குப் பிறகு ஒரே ஏறுமுகம்தான். 2005ல் 35 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்பட டைட்டில்கள் மற்றும் 50 லட்சம் சந்தாதாரர்களுடன் எங்கேயோ போய்விட்டது ‘நெட்பிளிக்ஸ்’. தினமும் 10 லட்சம் டிவிடிக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் நிறுவனமாக உயர்ந்தது.
‘நெட்பிளிக்ஸு’க்கு மட்டுமல்ல, இன்டர்நெட் துறையிலும் மறக்க முடியாத ஆண்டு 2005. ஆம்; யூ டியூப் அறிமுகமானது இந்த ஆண்டில்தான். அத்துடன் இணைய வேகமும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இணையத்தில் வீடியோவைப் பகிரும் நிகழ்ச்சிகள் நாலாப்பக்கமும் அரங்கேறின. இது ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனத்தினரின் மீது மிகப்பெரிய தாக்கத்தைச் செலுத்த, 2007ல் ‘வாட்ச் நவ்’ என்ற உலகின் முதல் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது.
‘‘எங்களின் சந்தாதாரர்கள் பர்சனல் கம்ப்யூட்டர் மூலம் ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, திரைப்படங்களைக் கண்டு களிக்க முடியும்...’’ என்று அதிரடி யாக அறிவித்தது. வெறும் 1000 டைட்டில்களுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த ஸ்ட்ரீமிங் சேவை பரிசோதனை செய்யப்பட்டது.
மாதத்துக்கு 18 மணி நேரம் மட்டுமே இலவசமாக இந்தச் சேவையை சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும். டிவிடி ஆர்டர் செய்து, அது எப்போது கைக்குக் கிடைக்கும் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்ட்ரீமிங் சேவை வரப்பிரசாதமாகியது. நினைத்த நேரத்தில் தங்களுக்குப் பிடித்த படங்களை அவர்களால் பார்க்க முடிந்தது.
இதனால் 2007ம் ஆண்டின் முடிவில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக உயர்ந்தது. இந்த வாட்ச் நவ் ஸ்ட்ரீமிங் பெரிய வெற்றிபெற்று ஓடிடி துறைக்கு அடித்தளமிட்டது. அதே நேரத்தில் டிவிடி பிசினஸ் சரிய ஆரம்பித்தது. ஆனால், எதிர்பார்க்காத அளவுக்கு ஸ்ட்ரீமிங் வெற்றியடைந்தது. இந்தப் புது முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பால், உலகெங்கும் ஓடிடி தளங்கள் உயிர்பெற ஆரம்பித்தன.
2008ல் இந்தியாவின் முதல் ஓடிடி பிளாட்பார்மான ‘பிக்ஃபிளிக்ஸ்’ அறிமுகமானது. கம்ப்யூட்டர் தாண்டி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட்டிலும் ‘நெட்பிளிக்ஸி’ன் ஸ்ட்ரீமிங் சேவை விரிவடைந்தது. ஸ்மார்ட் போனின் வருகை, ஓடிடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் டிவி, குறைந்த செலவில் அதிவேக இணைய சேவை ஓடிடியின் வளர்ச்சியை சிகரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டன.
2016ல் இந்தியாவிலும் ‘நெட்பிளிக்ஸ்’ கால்பதித்தது. இப்போது 190 நாடுகளில் 19 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் வீறுநடை போடுகிறது. தவிர, சொந்தமாக படங்கள் மற்றும் சீரியல்ஸ் தயாரிப்பிலும் இறங்கிவிட்டது. கடந்த வருடம் இதன் வருமானம் 15 ஆயிரம் கோடி ரூபாய்!
த.சக்திவேல்
|