ரத்த மகுடம்-121



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘அதுதானே ரணதீரா காலம்தோறும் எல்லா நிலப்பரப்புகளிலும் அரங்கேறி வருகிறது..?’’ சட்டென்று பதில் அளித்தார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மன்.‘‘அடியேன், கரிகாலனுக்கும் சிவகாமிக்கும் இடையிலான உறவு முறை குறித்து வினவினேன் மன்னா...’’ பாண்டிய இளவரசனான கோச்சடையன் இரணதீரனின் புருவங்கள் உயர்ந்தன.‘‘அதற்குத்தான் விடையளித்தேன் இளவரசே...’’ மன்னர் நகைத்தார்.
‘‘எப்படி... பிரபஞ்சம் தழுவியா..?’’

‘‘பூரணத்திலிருந்து கிள்ளப்பட்ட துளியும் பூரணம்தானே..!’’‘‘அதுபோல்தான் என்கிறீர்களா..?’’‘‘எதுபோலவும்தான் என்கிறேன்!’’ நெருங்கி வந்து இரணதீரனை தோளோடு அணைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘‘உறவு முறையே தெரியாதவர்கள் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவு முறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாய்... இதை வியந்தாய் என்றும் கொள்ளலாம். ஆனால், எல்லா காலங்களிலும் எல்லா தேசத்தின் நிலப்பரப்புகளையும் வடிவமைப்பவர்களும் உறவுமுறையை வகுத்துச் சொல்பவர்களும் வெளியில் இருந்து சம்பந்தப்பட்ட நிலத்துக்கு வருபவர்கள்தான்... இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்...’’

‘‘நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறீர்கள் மன்னா...’’ மரியாதையுடன் தன் கைகளைக் கட்டியபடி இரணதீரன் வார்த்தைகளை உதிர்த்தான்.
‘‘எல்லா காலங்களும் நிகழ்காலம்தான் ரணதீரா... கடந்த காலத்தைப் பற்றி எப்பொழுது பேசினாலும் அதை நிகழ்காலமாகவே மனிதன் கருதுகிறான்... போலவே எதிர்காலக் கனவுகளை விவரிக்கும்போதும் நிகழ்காலத்துடனேயே அதை இணைக்கிறான்...

எழுதப்பட்ட வரலாறுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நாடோடி களாக அலைய ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்கு சவுகரியமான இடத்தில் தங்க ஆரம்பித்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே ஒரு பரப்பில் வசிப்பவர்களுடன் இரண்டறக் கலப்பதும், மனிதனின் காலடி படாத நிலத்தை வசப்படுத்தி அங்கு வாழத் தொடங்குவதும்தான் மனிதனின் இயல்பு.  

சற்றே சிந்தித்துப் பார்... தமிழகத்துடன் யவனர்கள் வணிகம் செய்யத் தொடங்கியது எப்போது..? அறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் சங்க காலத்திலேயே இந்த வணிகப் போக்குவரத்து ஆரம்பித்து விட்டதல்லவா..? அப்படி இங்கு வந்த யவனர்களில் எத்தனை பேர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள்..? தமிழகத்திலிருந்து யவனத்துக்குச் சென்ற வணிகர்களில் எத்தனை பேர் அந்தந்த தேசங்களிலேயே தங்கிவிட்டார்கள்..? அவர்கள் எல்லாம் அந்தந்த தேசங்களுடன் இரண்டறக் கலந்துவிடவில்லையா..? அந்தந்த நாட்டின் வரைபடங்களை வரையறுப்பதிலும் மாற்றி எழுதுவதிலும் தங்கள் உழைப்பைச் செலுத்தவில்லையா..?

இதனால்தானே இம்மண்ணின் கவி ஒருவன் பல நூறாண்டுகளுக்கு முன்பேயே ‘யாதும் ஊரே... யாவரும் கேளிர்...’ என்றான்?! எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம் இது...’’நிறுத்திய தன் தந்தையை இமைக்காமல் பார்த்தான் இரணதீரன்.‘‘என்ன அப்படிப் பார்க்கிறாய் மகனே..?’’ அரிகேசரி மாறவர்மரின் குரலில் வாஞ்சை வழிந்தது.‘‘எந்த விதத்தில் கரிகாலன் உங்களைக் கவர்ந்தான் என்று யோசிக்கிறேன் தந்தையே...’’
‘‘பொறாமைப்படுகிறாயா..?’’
‘‘அது தவறு என்கிறீர்களா..?’’
‘‘எதிரியாகவே இருந்தாலும் சக வீரனை வியப்பதும் அவனுக்கு மரியாதை செலுத்துவதும் பண்பல்லவா..?’’

‘‘அந்தப் பண்பினால் நமது வீரத்தையும் மானத்தையும் மரியாதையையும் பறிகொடுக்கும் விதமாக நடந்து கொள்வது தவறல்லவா..?’’
‘‘நடந்து கொள்வதைப் பற்றிப் பேசுவதைவிட அப்படி நடந்து கொள்வதால் பெறும் பலனைக் குறித்து ஆராய்வது சரியல்லவா..?’’
‘‘பாண்டியர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்...’’

‘‘அதிகமாக எடை போடுவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறேன்...’’
‘‘ஆபத்துக்கு அஞ்சுபவன் நாட்டை ஆள முடியாது...’’
‘‘நாட்டை ஆள்பவன் தன் நிலப்பரப்பை ஒருபோதும் பறிகொடுக்கக் கூடாது...’’
‘‘பறிகொடுத்திருப்பவர்கள் பல்லவர்கள்... பாண்டியர்களல்ல...’’
‘‘பாண்டியர்களுக்கு அப்படியொரு நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை...’’
‘‘அளவுக்கு மீறி மிகைப்படுத்துகிறீர்கள்...’’

‘‘அளவுக்கு அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும் என்கிறேன்...’’
‘‘அதற்காக எப்பொழுதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?’’
‘‘தற்காப்பு நடவடிக்கையில் மட்டும் இப்பொழுது இறங்கினால் போதும் என்கிறேன்...’’
‘‘உங்கள் அகராதியில் தற்காப்புக்கான அர்த்தம் என்ன மன்னா..?’’

‘‘எல்லா இலக்கண நூல்களிலும் அதற்கான பொருள் ஒன்றுதான்... விழிப்புடன் இருப்பது...’’
‘‘நாம் விழித்திருக்கிறோமா..?’’‘‘உறக்கத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை ரணதீரா...’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், சாளரத்தின் அருகில் சென்று மதுரை வீதிகளைப் பார்த்தார்.அவரே பேசட்டும் என கொந்தளிக்கும் மனதுடன் இரணதீரன் மவுனமாக நின்றான்.

சில கணங்களுக்குப் பின் அரிகேசரி மாறவர்மர் திரும்பி தன் மகனைப் பார்த்தார். ‘‘நடக்கவிருக்கும் பல்லவ - சாளுக்கியப் போரில் பாண்டியர்களும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறாய்... அதன் வழியாக பாண்டியப் பரப்பை விஸ்தரிக்கலாம் என்பது உன் எண்ணம்... ஓர் இளவரசனின் கனவு இப்படித்தான் இருக்க வேண்டும்... ஆனால், எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாக்கும் வல்லமை கனவுக்கு இருப்பதால் எந்தவொரு மன்னனும் கனவு காணக் கூடாது ரணதீரா... அவன் பாதங்கள் பூமியிலேயே ஊன்றியிருக்க வேண்டும்...’’இரணதீரனின் உதடுகள் துடித்தன.

‘‘தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களை தெற்கே நாமும் வடக்கே பல்லவர்களும் வீழ்த்தினோம். தனித்தனியாக அதுவும் சுதந்திரமான ராஜ்ஜியங்கள் அமைத்தோம். இதன் வழியாக சங்க காலப் பேரரசு களில் ஒன்றான பாண்டிய வம்சம் மீண்டும் தலைநிமிர்ந்தது. ஆனால், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் இருந்த சோழர்கள் மட்டும் இப்பொழுது வரை தலைதூக்கவே இல்லை. சிற்றரசர்களா அல்லது குறுநில மன்னர்களா என்று இனம் காண முடியாத அளவுக்கு இன்று சுருங்கியிருக்கிறார்கள்.

காரணம், களப்பிரர்களுக்கு எதிராக பாண்டியர்களும் பல்லவர்களும் போரிட்டபோது சரியான நிலைப்பாட்டை சோழர்கள் எடுக்கவில்லை. வெற்றி பெறுபவர்களின் பக்கம் அவர்கள் இணையவில்லை. எனவேதான் இப்பொழுது அவர்களுக்கு இந்த நிலை.இதை மாற்ற இப்போதைய சோழக் குடிகள் முயற்சி எடுக்கிறார்கள். வெற்றி பெறுபவர்களின் பக்கம் நின்று சுதந்திரத்தை சுவாசிக்க நினைக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாகவே சோழ இளவரசனான கரிகாலன் காய்களை நகர்த்துகிறான். சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை காஞ்சிக்கு வரவழைத்தது கூட அவன்தான் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அவன் சாளுக்கிய உளவாளியா அல்லது பல்லவர்களின் உபசேனாதிபதியா என்ற குழப்பம் இரு தேசத்திலும் நிலவுகிறது.

இந்த ராஜதந்திரத்தை நான் ரசிக்கிறேன் ரணதீரா... அதற்குக் காரணம் கரிகாலன் என் மைத்துனரின் மகன் என்பதல்ல... அவன் சோழர்களின் வித்து என்பதால்! இந்த தமிழகத்தின் மைந்தன்தான் அவனும் என்பதால்! பாண்டியர்கள் போலவே சோழர்களுக்கும் சங்க காலம் தொட்டே வேர் இருப்பதால்!

இதனால்தான் அவன்மீது அன்பு அதிகரிக்கிறது. அதற்காக பாண்டிய அரியணையை அவனுக்குக் கொடுத்துவிட மாட்டேன்! இந்த அரியணை... இந்த பாண்டிய நாடு... உனக்குத்தான் சொந்தம். இதில் அமர உனக்கு மட்டுமே வீரம், தீரம் உட்பட சகல தகுதிகளும் இருக்கின்றன.அதேநேரம் சோழர்கள் தலைதூக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறேன்... அது, நமக்கு எதிரியாக யார் இருக்க வேண்டும் என்று நாம் தீர்மானிப்பதன் ஒரு பகுதிதான்!

உன்னைப் போலவே எனக்கும் பல்லவர்களைப் பிடிக்காது. பல்லவர்களை வீழ்த்த வேண்டும் என்பதே எனது லட்சியம். அதனாலேயே பால்யத்தில் பல்லவர்கள் மீது நானும் போர் தொடுத்தேன். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நம் பாண்டிய வீரர்களை கணிசமான அளவுக்கு பறிகொடுத்ததுதான் மிச்சம்.

ஏனெனில் பல்லவர்கள் வலிமையாக இருக்கிறார்கள். ஆம். நாட்டைப் பறிகொடுத்த இந்த நேரத்திலும் பல்லவர்கள் அதே வலிமையுடன்தான் திகழ்கிறார்கள். இதையும் மிகைப்படுத்தி நான் சொல்வதாகக் கருதாதே! சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் காஞ்சியை போரிட்டுக் கைப்பற்றவில்லை என்பதை நினைவில் கொள்.

எனவே, முன்பு பாண்டிய சேனை சேதப்பட்டது போல் இப்பொழுதும்... சாளுக்கியர்களுடன் பல்லவர்கள் போரிடப் போகும் இந்த சமயத்தில் மூக்கை நுழைத்து... சேதமடைய வேண்டாம்... அமைதியாக இருங்கள்... என சூட்சுமமாக கரிகாலன் அறிவுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறான். இதோ இருக்கிறதே சிங்கள மோதிரம்... இது உணர்த்தும் செய்தி அதுதான்.

சிங்களவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருக்கிறது. வேறு எந்த தமிழ் மன்னருக்கும் இல்லாத தொப்புள் கொடி உறவு அது. சிங்களர்களின் ‘மகாவம்சம்’ இந்த ஜென்மாந்திர தொடர்பைத்தான் விளக்குகிறது.ஆனால், நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இது தலைகீழாக மாறியது. வாதாபியை எரித்தபின் தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த சிங்கள மன்னனான மானவர்மனை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தன் கப்பற்படையையே நரசிம்மவர்ம பல்லவன் அனுப்பினான்.

லட்சக்கணக்கான பல்லவ வீரர்கள் சிங்களத்துக்கு சென்று போரிட்டார்கள். விளைவு... பல்லவர்களிடம் அடைக்கலம் தேடி வந்த மானவர்மன் மீண்டும் சிங்கள அரியணையில் அமர்ந்தான்.இப்பொழுது சிங்கள அரியணையில் அமர்ந்திருப்பவன் மானவர்மனின் மகன். பல்லவர்கள் மீதான நன்றி அவனுக்குள்ளும் தளும்புகிறது.இந்த வரலாற்றைத்தான் கரிகாலன் இந்த முத்திரை மோதிரத்தின் வழியே சுட்டிக் காட்டுகிறான்.

அதாவது இப்பொழுது சிங்களமும் பல்லவர்களும் நட்பு நாடுகள்... எனவே, பல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்... அப்படி நீங்கள் செய்தால் தெற்கே சிங்களப் படை வந்து உங்களைத் தாக்கும். அதுமட்டுமல்ல... தென் தமிழகத்தில் பாண்டியர்களுக்கு எதிராக கலகங்கள் உருவாகக் காத்திருக்
கின்றன. அதை அடக்குங்கள்... உங்கள் அரியணையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்... என குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறான்...’’
பெருமூச்சுடன் நிறுத்திய அரிகேசரி மாறவர்மர் தன் மகனை நெருங்கி வந்து அவனது இரு தோள்களையும் பற்றினார்.

‘‘பல்லவ இளவரசனான ராஜசிம்மனுடன் ஒரு சீனன் சுற்றுகிறானே... அவன் யார்... எதற்காக தமிழகம் வந்திருக்கிறான்... என்று உனக்குத் தெரியுமா ரணதீரா..? ‘உறவுமுறையே தெரியாத கரிகாலனும் சிவகாமியும் தமிழகத்தின் நிலப்பரப்புகளுக்கு இடையிலான உறவுமுறையை எழுதிக் கொண்டிருக்கும் விந்தையை என்னவென்று சொல்வது’ என்று கேட்டாயே...

தமிழக கடல்பரப்பின் எல்லையை சீனர்களோடு சேர்ந்து வகுக்க முற்படுகிறானே ராஜசிம்மன்... அது குறித்து என்ன நினைக்கிறாய்..? நிலமென்னும் நல்லாளை போலவே சமுத்திரம் என்னும் அன்னையும் பல்லவர்களை அரவணைக்கிறாளே ரணதீரா... இந்த நேரத்தில் அல்லவா மீன் எச்சரிக்கையுடன் நழுவ வேண்டும்! அப்போதுதானே வலையில் சிக்காமல் இருக்க முடியும்!’’ அதிர்ச்சியுடன் தன் தந்தையை ஏறிட்டான் இரணதீரன்!

(தொடரும்)  

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்