நடிகையாசனம்!ஆமாம். அதேதான். இன்ஸ்டா பக்கங்களின் பாதிப்பில்தான் இந்த ஆர்ட்டிக்கிளே பிறந்திருக்கிறது!ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போல் இன்ஸ்டாவும் ஒரு சமூக வலைத்தளம்தான். இதில் புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற முடியும்.எனவே நடிகைகள் மற்றும் இளம் பெண்களின் ராஜ்ஜியமாக இன்ஸ்டா தளம் விளங்குகிறது.
விதவிதமாக அவர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொள்ளும் செல்ஃபியை அப்படியே இன்ஸ்டாவில் பதிவேற்ற... ரசிகர்கள் குஷியாகி அப்படங்களை தாங்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து மகிழ்கிறார்கள்.

இதில் அதிகமும் சுற்றுக்கு வருபவை நடிகைகள் செய்யும் யோகாசனப் பயிற்சிப் படங்கள்தான்.குறிப்பாக கொரோனா லாக் டவுன் காலத்தில் யோகா மீது நடிகைகள் பித்துப் பிடித்து அலைகிறார்கள். தவறாமல் யோகா செய்கிறார்கள். அப்போது எடுக்கப்படும் படங்கள் இன்ஸ்டாவில் இன்ஸ்டண்ட் ஆக வைரலாகின்றன.

ஆனால், அவர்கள் செய்யும் ஆசனங்களின் பெயர் என்ன... குறிப்பிட்ட அந்த யோகாவை செய்வதால் ஏற்படும் பலன் என்ன... என்பதை எல்லாம் அவர்கள் தங்கள் இன்ஸ்டாவில் போட்டோ கேப்ஷனாகக் கூட சொல்வதில்லை.அதனால் என்ன... பொது நலன் கருதி முக்கியமான சில ஆசனங்களின் பெயர்களையும் அவற்றிற்கான பலன்களையும் இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறோம்.

புஜங்காசனம்

வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் ஆசனமே புஜங்காசனம். பாம்பு படம் எடுப்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் இதற்கு புஜங்காசனம் என்று பெயர்.தரையைப் பார்த்தவாறு தரைவிரிப்பின் மேல் குப்புறப் படுக்கவும். இரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும். இந்நிலைக்கு அத்வாசனம் என்று பெயர்.

உள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்க வேண்டும். நெற்றியை தரைவிரிப்பின்மேல் வைக்க வேண்டும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்கள் மூடி இருக்கட்டும். இந்த ஆசனத்தில் சில விநாடிகள் ஓய்வாக இருக்கவும். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக தரைவிரிப்பின் மேல் பலமாக ஊன்றி வைக்கவும்.

மூச்சை உள்ளுக்கு இழுத்து தரையிலிருந்து மேலே தூக்கி நெஞ்சை உயர்த்தி வயிறு வரை மெல்ல உயர்த்திக் கொண்டு போய் நிறுத்தவும். மூச்சை வெளியே விட்டு தலையையும், முதுகையும் முடிந்தளவு பின்னோக்கி வளைத்து மார்பை நன்றாக விரிக்கவும். கண்களால் புருவ மத்தியைப் பார்க்கவும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 20 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கி பயிற்சி செய்யலாம்.

தடை குறிப்பு: வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம் (hernia), விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பலன்கள்: வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறுப்பு, கணையம், அட்ரீனல் சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி இவ்வுறுப்புகள் ஆரோக்கியம் பெறும்.

வீரபத்ராசனம்

இரு கைகளையும் உடலுக்கு அருகில் வைக்கவும். கால்களை ஒட்டியபடி நேராக நிற்கவும். இந்த நிலையில் இருந்து, முதலில் இடது காலை முன் பக்கமாக எடுத்து வைத்து வலது பாதத்தைச் சற்று வெளிப்புறமாகத் திருப்பி, தடுமாற்றம் இல்லாமல் நிற்கவும். இதே நிலையில் மூச்சை உள் இழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக உயர்த்தி, தலைக்கு மேல் கொண்டு சென்று, அதே நேரம் முன்புறம் உள்ள காலை மடக்கி, இரு கைகளையும் இணைக்கவும்.

இந்த நிலையில் முதுகெலும்பு நன்கு வளையும்.முதல் நிலையில் இருந்து மூச்சை வெளியேவிட்டபடி, வலது காலைப் பின்புறமாக மேலே உயர்த்தவும். கைகள் இரண்டும் தோள் அளவில் விரிந்திருக்கும். உடலின் முழு எடையும் இடது காலில் இருக்கும்.

இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இரு கைகளையும் தலைக்கு முன்பாக மேல்புறம் ஒன்று சேர்க்கவும்.
இதேபோல் ஆறு முறை இடப்பக்கமும், ஆறு முறை வலப்பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்: கால்கள் நன்கு வலுப்பெறும். பின்புறமாக வளைந்து இருப்பதால், முதுகெலும்பு நன்கு பலம் பெறுகிறது. மனம் ஒருநிலைப்படும். கைகள், தோள்பட்டைகள் வலிமை பெறும்.  இது கால்களுக்கான ஒரு பேலன்ஸ் ஆசனம்.

தடாசனம் (லஞ்சஸ்)

கால் மற்றும் தொடைப் பகுதிக்கான பயிற்சி இது. தரையில் நேராக நிற்கவும். பின் இரண்டு கால்களையும் முன் பின்னாக நன்கு விரித்து வைக்கவும்.
இப்போது வலது காலை சற்று முன் நோக்கி மடக்கி இடது காலை முட்டியிட்ட நிலையில் அமரவும். சில விநாடிகள் கழித்து, படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும்.இதேபோல இடது காலை மடக்கி வலது காலை முட்டியிட்ட நிலையில் 15 முறை செய்ய வெண்டும்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான 7 ஆசனங்கள்!

நடராஜாசனம்: நடராஜரைப்போல ஒரு காலை மட்டும் தூக்கிக்கொண்டு செய்வதால் இதற்கு நடராஜாசனம் என்று பெயர். இந்த ஆசனத்தைச் செய்வதால், கால்கள் உறுதி பெறும். தோள், மார்பு, வயிறு, தொடைப் பகுதியின் இறுக்கம் தளரும். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய உன்னதமான ஆசனம் இது.

மாலாசனம்: சம்மணமிட்டு அமர்வதற்கு மாறாக, அதேநிலையில் உடலை மேலே தூக்கி அமரும் நிலை. பலமணி நேரம் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனத்தைச் செய்வதால், மலம் எளிதாக வெளியேறும்; தொப்பை குறையும். தொடை மற்றும் பின்முதுகின் கீழ்ப்புறம் சரிவர இயங்கும்.

உஷ்ட்ராசனம்: ‘உஷ்ட்ர’ என்றால் `ஒட்டகம்’ என்று பொருள். ஒட்டகத்தின் உடலமைப்பைப் பிரதிபலிக்கும் ஆசனம் இது. ரத்த ஓட்டம், முதுகு வலி, நரம்புப் பிரச்னை உள்ளவர்கள் நிரந்தரமாக நிவாரணம் பெற இந்த ஆசனம் உதவும். மூச்சுக்குழாய் பிரச்னைகள் சரியாகும். கழுத்து, தோள், அடிவயிற்றுக் கோளாறுகள் விலகும். பின்பக்கத் தசைகள் உறுதிபெறும். ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.

பர்வதாசனம்: இந்த ஆசனம் செய்யும்போது பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது மலையைப்போன்று உடலமைப்பு தோற்றமளிப்பதால் இதற்கு ‘பர்வதாசனம்’ என பெயர். `பர்வதாசனம்’ செய்தால், தொடை மற்றும் கால்கள் உறுதியடையும். முதுகுத் தண்டுவடத்துக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் சீராகும்.

பதாங்குஷ்டாசனம்: இந்த ஆசனம் செய்வதால், உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள தசைகள் வலுப்படும். ஆசனம் செய்யும்போது உடலை பேலன்ஸ் செய்வதில் முழு கவனம் செலுத்த வேண்டும். `பதாங்குஷ்டாசனம்’ செய்தால் முழு உடலின் இறுக்கம் தளரும். மனக்கிளர்ச்சி மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கவனச்சிதறல் இல்லாமல் பணிபுரிய உதவும்.

அர்த்த கபோடாசனம்: இந்த ஆசனம் செய்யும்போது புறாவைப் போன்ற தோற்றம் இருக்கும். இந்த ஆசனத்தைச் செய்வதால் அந்தரங்க உறுப்புகள் வலுவடையும். அடிவயிறு, தொடை, முதுகுப் பகுதி தசைகள் இளகும்.நௌகாசனம்: நரம்புகளை வலுவாக்கும் ஆசனம் இது. புட்டப்பகுதியில் உடலை சமநிலைப்படுத்தி நிற்பது இறுதிநிலை. உடல் ஒரு படகு போல இருப்பதால் இதற்கு நெளகாசனம் என்று பெயர்.

10 விநாடிகள் இறுதிநிலையில் நின்று பின் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி ஆரம்பநிலைக்கு வரவும். 3 - 5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.
இந்த ஆசனம் நமது தசை, ஜீரண, ரத்த ஓட்ட, நரம்பு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. டென்ஷனைக் குறைத்து ஓய்வளிக்கிறது. காலை எழுந்தவுடன் செய்தால் சோம்பல் நீங்கி உடனடி புத்துணர்வு கிடைக்கும்.

சக்கராசனம்

நேராக நின்றுகொண்டு வலது கையை, வலது பக்கவாட்டில் வைத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி மேலே உயர்த்தவும். கை, காலைத் தொட்டவுடன் மெதுவாக மூச்சை வெளியேற்றியபடி இடது பக்கம் சரியவும். சிறிது நேரம் சீராக மூச்சு விட்டபடி நிற்கவும்.
மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடி நேராக நிமிர்ந்து வரவும். பின் மூச்சை வெளியேற்றியபடி கையைக் கீழே இறக்கவும். ஐந்து முறை இப்படிச் செய்வது நல்லது.

இதேபோல், இடது கையைத் தூக்கி மறுபக்கமும் செய்ய வேண்டும்.பலன்கள்: இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம். ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். கை, தோள் வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.எச்சரிக்கை: ஆசனம் செய்யும்போது கைகளை மடக்கவோ, முட்டியை மடக்கவோ கூடாது. இதயநோய் இருப்பவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.

நமஸ்காராசனம்

தொடை, கைகளை வலுவாக்கும் ஆசனமே நமஸ்காராசனம். கால்களை அகலமாக வைத்துப் பாதங்களில் உட்காரவும். முழங்கால்களுக்கு இடையில் முழங்கைகள் இருக்கட்டும். சாமி கும்பிடுவது போல் கைகளை இணைத்து மார்புக்கு முன்னால் வைக்கவும். முழங்கைகளைப் பயன்படுத்தி முழங்கால்களை எவ்வளவு தள்ள முடியுமோ அந்த அளவு தள்ளவும்.

பின்னர் தலையை முன்னால் குனிந்து அதே சமயம் கூப்பிய கைகளை முன்னே நீட்டவும். இதே நிலையில் மூன்று விநாடிகள் மூச்சை நிறுத்தி இருக்கவும். பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யலாம்.தொடை, கைகளில் உள்ள தசைகள் வலுப்பெறும். நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறும். இடுப்பின் வளையும் தன்மை அதிகரிக்கும்.

விருட்சாசனம்

`விருட்சம்’ என்றால் `மரம்’. இந்த ஆசனத்தைச் செய்தால் மரத்தைப்போன்று உறுதியான கால்களைப் பெறலாம். கண் மற்றும் செவிப்பறை சார்ந்த பிரச்னைகள் சரியாகும். இடுப்பு வலி குணமாகும்; முழங்கால்கள் வலுவடையும். அத்துடன் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.l

திலீபன் புகழ்