நீட் தேர்வு ஒரு சமூக நோய்...



நீட் தேர்வு ஒரு சமூக நோய்... இதை உலகத்துக்கு உணர்த்தவே அரசுப் பள்ளி மாணவரான ஜீவித்குமாரை இந்திய அளவில் முதலிடம் பெறவைச்சோம்!

நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில், அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்த ஜீவித்குமார் என்னும் மாணவர்தான் கடந்த வார ஹாட். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர் ஜீவித்குமார். தன் குடும்ப வறுமையிலும் மருத்துவக் கனவை நனவாக்கப் போராடியவர். அவரின் போராட்டத்திற்குக்
கிடை த்த பரிசுதான் முதலிடம்.

ஆனால், இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துவிட்டதாக சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை என்பதே இன்று கேள்வியாக எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 2018ல் தமிழகத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 45 ஆயிரத்து 336 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் 9 ஆயிரத்து 154 பேர். தகுதி பெற்றவர்கள் ஆயிரத்து 337 பேர்.

இதுபோல, 2019ல் நீட் தேர்வெழுதியவர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர். இதில், 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 17 ஆயிரத்து 630 பேர். தகுதி பெற்றவர்கள் 2 ஆயிரத்து 557 பேர். இதிலும் நான்கு பேர் மட்டுமே 400க்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்.

நீட்டைப் பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை எட்டினால் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளை எதிர்நோக்க முடியும். இதனால், கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒருவருக்குக் கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய 99 ஆயிரத்து 610 மாணவர்களில் 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் ஆயிரத்து 615 பேர். இவர்களில் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

15 பேர் 400 முதல் 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தாண்டு கட் ஆஃப் மதிப்பெண்ணைப் பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். ஆனால், பெரும்பாலும் இரண்டாவது முறையிலேயே நீட் தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களைப் பெறுகின்றனர். இது தனியார் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவர்களுக்கும் பொருந்தும்.

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் கூட இரண்டாவது முறையே இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். ஜீவித்குமாரும் கடந்தாண்டு 193 மதிப்பெண்கள் பெற்றவர்தான். ெதாடர்ந்து தனது பெற்றோர், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியை சபரிமாலா, வெளிநாட்டுத் தமிழர்கள் ஆகியோர் உதவியால் நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றார். அந்தத் தனியார் பயிற்சி மையமும் உதவிகள் செய்தது. இதனால் இந்த வெற்றியை அவரால் அடைய முடிந்திருக்கிறது.

இப்படி எத்தனை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கும்? இந்நிலையில், ஜீவித்குமாருக்கு உதவிய ஆசிரியை சபரிமாலாவிடம் பேசினோம். ‘‘நான் அனிதா மரணத்திற்குப் பிறகு ஆசிரியை வேலையை ராஜினாமா செய்திட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண் குழந்தைகள் பாதுகாப்பு பரப்புரை பண்ணிட்டு வர்றேன். நீட் தேர்வு பத்தியும், தற்கொலை செய்யக் கூடாதுன்னும் பரப்புரை செய்றேன். அப்ப சில்வார்பட்டி பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் அருள்முருகன் முகநூல் தொடர்பு ஏற்பட்டது. இவரும், அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மோகனும் அரசுப் பள்ளிக் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வர பாடுபட்டு வர்றாங்க.

அப்பதான் அருள்முருகன், தன்னுடைய வகுப்பு மாணவன் ஒருவன், ‘நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் கொடுத்தா தேர்ச்சி பெற்றுவிடுவேன்னு சொல்றான் மேடம்’னு சொன்னார். ‘நாளைக்கே வந்து அந்தப் பையனைப் பார்க்கிறேன்’னு சொன்னேன். ஏன்னா, நீட்ல தேர்ச்சி பெற்றிடுவேன்னு எந்த அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளும் சொல்லி நான் கேட்கல. என் காதுகள்ல நெகட்டிவ்வான செய்திகளே விழுந்துட்டு இருக்கும்போது முதல்முறையா பாசிட்டிவ்வா ஒரு மாணவர் சொல்லும்போது பார்க்கணும்னு தோணுச்சு.

அந்தப் பையனையும் அவங்க அம்மா, அப்பாவையும் சந்திச்சு பேசினேன். அவர்தான் ஜீவித்குமார். அப்ப பள்ளிக்கு முன்பாகவே எடுத்த அந்தப் பதிவுதான் இப்ப வைரலாகியிருக்கு.  நான், ‘எவ்வளவு மதிப்பெண் எடுப்ப’னு கேட்டேன். அதுக்கு ஜீவித்குமார், ‘650க்கு மேல வாங்குவேன்’னு சொன்னான். ஓராண்டு அதற்கான முயற்சிகளைச் செய்தோம். இதுக்கு அவன் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் எல்லோரும் உதவினாங்க.

நிறைய நிதியுதவிகள் பெற்று தனியார் பயிற்சி மையத்துல சேர்த்தோம். அதுலதான் இப்ப நல்ல மதிப்பெண் பெற்று, அரசுப் பள்ளிகள்ல முதல் மாணவனா வந்திருக்கான்...’’ என்றவரிடம், இது எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சாத்தியமாகுமா என்றோம். ‘‘இது எல்லோருக்கும் கிடைக்காது. அதனால்தான் நான் நீட் தேர்வே தேவையில்லனு சொல்றேன். நீட்டுக்கு எதிரா போராடறோம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கணும்னு சொல்றோம்.

இருந்தும், எதுக்காக இந்த வெற்றியை நான் ஊக்கப்படுத்தினேன்னா, அனிதா இறப்புக்குப் பிறகு தற்கொலை தீர்வு அல்லனு நான் தொடர்ந்து சொல்லிட்டே வர்றேன். அப்படியும் 18 குழந்தைகளை நாம் இழந்திட்டோம். அதுவும் இந்தாண்டு தேர்வுக்கு முன்னாடி ஒரே நாள்ல மூணு குழந்தைகள் இறந்து போனாங்க. இதுக்கு நீட் குறித்த பயம்தான் காரணம்.

அப்படியான அச்சுறுத்தல் இங்க இருக்கு. அரசியல் சூழலும் அப்படித்தான் இருக்கு. அப்ப இந்த பயத்தை உடைக்கணும்னு நினைச்சேன். முதல்ல நீட் தேவையா இல்லையா என்பதைத் தாண்டி நீட் குறித்து தற்கொலை செய்யக்கூடாது என்பதுதான் நோக்கமா இருந்துச்சு. அதுக்கு ஒரு தன்னம்பிக்கையும் வெற்றியும் தேவையா இருந்துச்சு. எல்லா பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தணும்னு தோணுச்சு. அனிதாவுக்கு நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் கிடைக்கல. அப்ப வசதி வாய்ப்பும், மெட்டீரியலும் கொடுக்கப்பட்டால் அவங்களால் ஜெயிக்க முடியும்தானே?!

இப்ப அரசு கோச்சிங் கொடுக்கல. மெட்டீரியல் கொடுக்கல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தைத் தமிழாக்கம் செய்து தரல. இது எல்லாத்தையும் கொடுத்தா அரசுப் பள்ளி மாணவர்கள் ஜெயிச்சிருப்பாங்கன்னு காட்டணும் இல்லையா? ஜீவித்குமார் வழியா அதை சாத்தியப்படுத்தியிருக்கோம்.
இன்னைக்கு ஒட்டுமொத்த மீடியாவும், அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் செய்ய முடியாத காரியத்தைச் செய்ததா சொல்றாங்க இல்லையா? அது எல்லாமே இந்த வெற்றியால்தான் நடந்துச்சு.

ஆனா, இந்த வெற்றியைத் தொடர்ந்து நீட் நல்லது, ஏழை மாணவர்களுக்கு வரம்னு எல்லாம் பேசுறது அபத்தமானது. ஏன்னா, இன்னைக்கு அரசு நடத்துற 412 நீட் பயிற்சி மையங்களும் கண்துடைப்புதான். எல்லாமே தேவையில்லாதது. அங்க பாடத்திட்டமோ, மெட்டீரியலோ, தேர்ந்த பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களோ கிடையாது. இங்க 11, 12ம் வகுப்பு எடுக்கிறவங்கதான் அங்க பயிற்சி கொடுக்கிறாங்க.

ஆனா, நீட்டுக்கு ரொம்பவே சிறப்புப் பயிற்சி தேவைப்படுது. ஒவ்வொரு இயற்பியல், வேதியியல் பிரிவுக்கும் நானூறு கணக்குகள் தேவைப்படுதுனு படிச்சிட்டு வந்த பிள்ளைகள் ெசால்றாங்க. ஆனா, அரசு மையம் கொடுத்திருக்கிறதுல நாலஞ்சு கணக்குகள்தான் இருக்குது. 45 நாட்கள்தான் பயிற்சி அளிக்கிறாங்க. இந்த நாட்கள் போதுமானதல்ல. இதனால, எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. ஓராண்டு பயிற்சி தேவை. அதேநேரம், தனியார் பயிற்சி மையத்துல படிக்க பொருளாதாரமும் தேவை.  

அதனால்தான் நீட் ஒரு பெரும்நோய்னு சொல்றேன். தேவையில்லாதது. எளிமையா பிளஸ் டூ கட் ஆஃப் வைத்துக் கொண்டே நேர்மையா நடத்தினால் நிறைய அரசுப் பள்ளி மாணவர்களால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும்.

அப்புறம், நீட் தேர்வால் பணக்காரர்களால் கூட மருத்துவராக முடியாதுனு ஒரு பொய்யான பரப்புரை செய்திட்டு இருக்காங்க. நீட்ல 135தான் பாஸ் மார்க். நீங்க 135 மார்க் வாங்கிட்டு பணம் கொடுத்தால் சீட் உண்டு. இப்படி நிறைய பேர் பணம் கொடுத்தும் படிக்கிறாங்க.  

அனிதாவைப் போல மருத்துவக் கனவை அடைந்தே தீருவேன்னு சொல்ற பிள்ளைகளுக்கு நான் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான். நீட் இருந்தாலும் இல்லாட்டாலும் மிகத் தெளிவா படிங்க. அதன் ஃபார்முலா என்னனா… என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை தமிழாக்கம் பண்ணிப் படிங்க. 1980களில் இருந்து கேட்கப்பட்ட எல்லா துறை தேர்வுகளின் கேள்வித்தாள்களையும் பெற்று படிங்க. அதுக்கான மெட்டீரியல் வெளியில் கிடைக்குது.
அடுத்து, உங்களுடைய பழைய பாடப்புத்தகங்கள், இப்ப உள்ள பாடப்புத்தகங்கள் எல்லாம் படிங்க. இதை பத்தாம் வகுப்பு முடிச்சதும் படிக்க ஆரம்பிச்சிடுங்க.

இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்களை நீங்களாவே சேகரிக்கலாம். செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள் வாங்கலாம். வாங்க முடியாதவங்க என்னைப் போன்றவர்களை அணுகலாம். ரெண்டு வருஷம் பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததும் வீட்டுல உட்கார்ந்தே இந்தத் தேர்வுக்கான மெட்டீரியலை படிங்க. கோச்சிங் சென்டர் போகணும்னு அவசியம் கிடையாது. இப்படி படிச்சாலே கோச்சிங் சென்டர் போகாமல் பாஸாகிடுவீங்க.
நீட் தேர்வு ரத்துக்காக போராட்டம் ஒருபுறம் நடக்கட்டும். அதுவரை சாவு முடிவல்ல. எதிர்த்து போராடுங்க. எப்படி இந்தச் சூழ்ச்சியை உடைக்கிறதுனு பாருங்க…’’ என்கிறார் சபரிமாலா.   

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியையான புவனேஸ்வரியிடம் பேசினோம். ‘‘நீட் தேர்வில் ஒரு அரசுப் பள்ளி மாணவன் ஜெயிச்சிருப்பது சந்தோஷம். ஆனால், அதை பயிற்சி இல்லாமல் எழுத முடியாது. கோச்சிங்னு வரும்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களால் கோச்சிங் கொடுக்க முடியாதா? அவங்களுக்கு திறமை இல்லையானு கேட்குறாங்க. திறமை இருக்கக்கூடிய ஆசிரியர்கள் நிறைய இருக்காங்க. ஆனா, மாணவர்களுக்கு அதுக்கான வசதி வாய்ப்பு இருக்கணும்.

பெரிதாக புள்ளி விவரங்களுக்குள் செல்லாமல் ஏன் நீட் வேண்டாம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
இப்ப தனியார் கோச்சிங் சென்டர்ல காலையில் தொடங்கினா மாலை வரை நீட் தேர்வு சம்பந்தமான கோச்சிங்தான் இருக்கும். ஒரு கேள்வித்தாளை எவ்வளவு நேரத்துக்குள்ள எழுதுறது... எப்படி எழுதுறதுனு திரும்பத் திரும்ப பயிற்றுவிப்பாங்க. முழுக்க முழுக்க நீட் தேர்வு எழுதுற நோக்கிலே கொண்டு போவாங்க.

தனியார் பள்ளிகளும் இப்படிதான் செய்றாங்க. அப்படி படிக்கிற குழந்தைகளின் நீட் தேர்ச்சி விகிதமே குறைவாதான் இருக்கு.
இவ்வளவு வசதி வாய்ப்புள்ள குழந்தைகளாலயே சாதிக்க முடியலனு சொல்லும்போது அரசாங்க நடைமுறைப்படி வகுப்பு எடுக்குற பள்ளிகள்ல எப்படி முடியும்? அரசு கோச்சிங் கிளாஸ் சனி, ஞாயிறுகள்ல மட்டும்தான் நடக்குது. இப்ப தினமும் முட்டை சாப்பிடுறவனுக்கும் சனி, ஞாயிறுகள்ல மட்டும் சாப்பிடுறவனுக்கும் ஹெல்த்ல வேறுபாடு வருமா இல்லையா? அதுமாதிரி வருஷம் முழுவதும் நீட் தேர்வுக்கு படிக்கிற குழந்தையும், சனி, ஞாயிறுகள்ல மட்டும் நீட் தேர்வுக்கு படிக்கிற அரசுப் பள்ளிக் குழந்தைகளும் எப்படி ஒண்ணாக முடியும்?

தனியார் பள்ளி குழந்தைகள் போல அரசுப் பள்ளியில் படிக்கிற ஏழைக் குழந்தைகள் நீட் பயிற்சிக்குப் போய் நிறைய நேரம் செலவழிக்க முடியாது.
இன்னொன்று, நிறைய பேர் நீட்ல ரெண்டாவது மூணாவது முறையாக எழுதிதான் ஜெயிக்கிறாங்க. முழுசா நீட் பயிற்சி எடுக்கிறவங்களாலே கூட ஒரே தடவையில் ஜெயிக்க முடியல. அப்ப அரசுப் பள்ளியில் படிக்கிற ஏழை மாணவர்களால் ரெண்டு மூணு முயற்சி என்பது கஷ்டம்தான். வீட்டுலயே, படிச்சது போதும்னு சொல்ற நிலையே இருக்கு.

வாய்ப்பை சமமாக வழங்காமல் தேர்வை மட்டும் சமமாக நடத்தி, திறமையை மதிப்பிடுவது சமூக அநீதி. எனவே, பழைய முறைப்படி பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்துவதுதான் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற வைக்கும் வழியாக இருக்க முடியும்...’’ என்கிறார் புவனேஸ்வரி.   

பேராச்சி கண்ணன்