68 வயது மலையேற்ற வீராங்கனை!மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஹரிஹர் மலைக்கோட்டை. இதன் உயரம் 3676 அடி.

செங்குத்தாகச் செல்லும் இம்மலையின் மேற்பகுதிக்குச் செல்ல கற்களால் வடிவமைக்கப்பட்ட குறுகிய படிக்கட்டுகள் உள்ளன.  
இந்தப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக மட்டுமே செல்ல முடியும். இதில் ஒருமுறையாவது ஏறிவிட வேண்டும் என்பது ஒவ்வொரு மலையேற்ற வீரரின் கனவு.

இப்படியான ஒரு மலையில் அசால்ட்டாக ஏறி சாதனை புரிந்திருக்கிறார் ஆஷா அம்படே. இவரது வயது 68.ஒரு குழந்தையைப் போல கைகளைப் படிக்கட்டில் ஊன்றி தவழ்ந்தே இந்த மலையில் அவர் ஏறியிருக்கிறார். அவர் மலையேறும்போது உச்சியில் நின்று பலர் உற்சாகக் குரல் எழுப்ப, ஆஷாவுக்குப் பின்னால் பாதுகாப்புக்காக ஒருவர் வந்தது ஹைலைட்.

ஆஷா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் தட்டிவிட, மகாராஷ்டிராவின் கடைக்கோடி மனிதரிலிருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து ஆஷாவை வைரலாக்கிவிட்டனர்.

த.சக்திவேல்