தந்தை பெரியார்... அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை ஹைஜாக் செய்கிறதா பாஜக..?



தலைகீழாக மாறி வருகிறது. ஆம். இதுநாள் வரை சமூகநீதி கருத்தியல்களின் தலைவர்களாக கொண்டாடப்பட்டவர்களை எல்லாம் மெல்ல மெல்ல பாஜக ஹைஜாக் செய்து வருகிறது.அதாவது எந்தக் கருத்தியல்களுக்கு எதிராக அந்தத் தலைவர்கள் குரல் கொடுத்தார்களோ... அந்தத் தலைவர்களை எல்லாம் தங்கள் கருத்தியல்களின் பக்கம் பேசியவர்களாக பாஜக பிரசாரம் செய்து வருகிறது.அப்படித்தான் அண்ணல் அம்பேத்கரை தங்கள் பக்கம் பாஜக இழுத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் தந்தை பெரியார் இணைக்கப்பட்டிருக்கிறார்!

பாஜக தமிழ் மாநில தலைவரான எல்.முருகன் மட்டுமல்ல, அக்கட்சியைச் சார்ந்த அண்ணாமலை, குஷ்பு… போன்றவர்களும் இப்பொழுது மேடைகளில் தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘நான் பெரியாரிஸ்ட்தான்’ என பாஜக மேடைகளில் பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு இப்போக்கு அதிகரித்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து தந்தை பெரியாரை எதிர்ப்பதைக் கைவிட்டு பெரியார் ஆதரவு நிலையை தமிழக பாஜக எடுக்கத் தொடங்கியிருக்கிறதா என்ற வினா அரசியல் அரங்கில் பேசும் பொருளாகியிருக்கிறது.

இதை ‘அரசியலில் கருத்தியல் வேறு தேர்தல் ஸ்ட்ரேட்டஜி வேறு’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.‘கருத்தியல் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் தேங்கிப் போவார்கள். எனவே, பகைத்தால் லாபம் இருக்க வேண்டும். அவ்வாறு லாபம் இல்லாத பகை தேவை இல்லாதது என்ற முடிவுக்கு பாஜக வந்திருக்கிறது.

தந்தை பெரியாரை எதிர்ப்பதால் பாஜகவுக்கு எந்த லாபமும் கிடையாது. மாறாக ஆதரித்தால் பலன் உண்டு. இந்த வாக்கு வங்கி அரசியலை மோடி புரிந்து கொண்டிருக்கிறார். இதுவரை பாஜக தமிழகத்தில் பெரிய கட்சியாக வர பெரியளவில் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இப்போது அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அமல்படுத்திய ஸ்ட்ரேட்டஜியை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதம் கடந்து தனிப்பெரும் தலைவராக விளங்கும் தந்தை பெரியாரை எதிர்ப்பதைக் கைவிட்டு, அந்த எதிர்ப்பலையை அமைதியாக்கும் வேலையை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதனோடு அரசியல் அதிகாரம் இல்லாத சாதிகளைத் திரட்டும் வேலையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் வழியாக எந்த மத அதிகாரத்தை தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுக்க எதிர்த்தாரோ அந்த மதத்தின் பிரதிநிதியாகவே வருங்காலத் தலைமுறை அவரை அறியும் காரியத்தைச் செய்கிறார்கள்.

இப்பொழுது திராவிட இயக்கங்களின், குறிப்பாக திமுகவின் முதன்மையான வேலை... தந்தை பெரியாரை ஹைஜாக் செய்யும் பாஜகவின் செயலை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதான்...’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில் “பாஜகவினால் ஒருபோதும் தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியாது...” என்கிறார் பத்திரிகையாளரும் ‘தன்னாட்சி தமிழகத்தை’ச் சேர்ந்தவருமான ஆழி செந்தில்நாதன்.

“தந்தை பெரியாருக்கு எதிரான கருத்தை தொடர்ந்து பிரசாரம் செய்து வருபவர்கள்தான் பாஜகவினர். சொல்லப் போனால் ஈவெரா என்றுதான் அவரை காலம் காலமாக அழைத்து வருகிறார்கள். அவரது சிலைகளை உடைப்போம்... தமிழகத்தில் இருந்து அவரது கருத்தியலை அகற்றுவோம்... என்பதே பாஜகவின் சூளுரையாக இருக்கிறது.

அதாவது இருந்தது! முந்தைய தமிழக பாஜக தலைவர்கள் இப்படித்தான் செயல்பட்டார்கள்; தந்தை பெரியாரையும் அணுகினார்கள்.
இந்த அணுகுமுறை போதுமான பயனைத் தரவில்லை என்பதால் இப்பொழுது தங்கள் அணுகுமுறையை மாற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதன் ஒருபகுதிதான் இன்றைய தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் போன்றோர் தந்தை பெரியார் குறித்து பேசத் தொடங்கியிருப்பது. இதன் வழியாக தந்தை பெரியாருக்கு, தாங்கள் எதிரியல்ல என்று காட்ட முற்படுகிறார்கள். மறுபடியும் மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பழையபடி அடிக்கவும் ஆரம்பிப்பார்கள்.

இவர்கள் என்னதான் இது போன்று திட்டங்கள் வகுத்தாலும் தமிழகத்தில் ஓரளவு தந்தை பெரியாரை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் கூட பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். இதற்கு பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் அண்ணல் அம்பேத்கரை பாஜக கையில் எடுத்திருப்பதற்கான காரணம் சாதியை ஒழிக்க அல்ல. ஏனெனில் இந்து மதத்தின் பிரிக்க முடியாத பகுதி என்றுதான் சாதியை அன்றும் இன்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஆக, பாஜகவுக்கு எல்லா சாதிகளும் வேண்டும்... எல்லா சாதித் தலைவர்களும் வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் அண்ணல் அம்பேத்கரையும் முன்னிறுத்துகிறார்கள்...’’ என்கிறார் ஆழி செந்தில்நாதன்.இதை முற்றிலுமாக நிராகரித்து, ‘‘சமூக நீதிக்கு ஆதரவாக ஆரம்பக் காலம் முதலே பாஜக செயல்பட்டு வருகிறது...’’ என்கிறார் ‘பெரியாரின் மறுபக்கம்’, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் பாஜக பிரமுகருமான மா.வெங்கடேசன்.

“பாஜக என்றைக்குமே தனிமனித வெறுப்புள்ள கருத்துக்களையோ, கொச்சைப்படுத்துவதையோ விரும்பாது. ஈவெரா-வை இயக்கத்தின் தலைவராகத்தான் பார்க்கிறோம். ஆனால், கொள்கை சார்ந்து எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். மக்களைப் பிளவுபடுத்தும் கொள்கையாகவும், இந்து மதத்தைக் கடுமையாக கொச்சைப்படுத்துவதாகவும்தான் ஈவெராவின் கருத்துகளைப் பார்க்கிறோம்.

விமர்சனம் செய்வது வேறு, கொச்சைப்படுத்துவது வேறு. எல்.முருகன் பெரியார் பற்றிப் பேசினார் என்றால், அன்று ‘பெரியாருக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மாட்டீங்களா’ என்ற கேள்விக்கான பதிலாகத்தான் அப்படிச் சொன்னார். ஆக, அந்த நிருபர் கேட்டதால் அப்படி யொரு பதில் வந்தது. தானாக வாழ்த்து சொல்லவில்லையே! அந்த பதிலுக்குப் பின் ‘பெரியார் கொள்கையை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று யாரும் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் பதில் தெரிந்திருக்கும்...” என்று கூறும் மா.வெங்கடேசன், “பிரதமர் மோடியை விட அம்பேத்கரைக் கொண்டாடியவர்கள் யாருமில்லை...” என்கிறார் அழுத்தமாக.

‘‘நாட்டை ஆண்ட எந்த ஒரு பிரதமரையும் விட அம்பேத்கரின் புகழைப் பரப்பியதில் மோடியே முதன்மையாக இருக்கிறார். அவர் தொழிலாளர்களுக்கு என்ன செய்தார், ஆர்பிஐ கொண்டு வந்ததில் எந்தளவுக்கு முக்கியப் பங்கு வகித்தார், நதி நீர் இணைப்புக்கு எப்படியெல்லாம் பாடுபட்டார்... என்பதை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்றவர் மோடிதான். அவரது இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியவரும் மோடிதான். நாடெங்கும் அவரது சிலையை நிறுவியவரும் மோடிதான்.

ஆக, அம்பேத்கருக்கு மரியாதை கொடுக்கும் கட்சியாகவே பாஜக திகழ்கிறது. மற்ற கட்சியினரைப் போல் சிறுபான்மையினரை தாஜா செய்ய அம்பேத்கரின் புகழை பாஜக பாடவில்லை. ஒன்று தெரியுமா..? நாடு முழுக்க இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு ஸ்லோகம் சொல்வார்கள். அந்த ஏகாத்மதாஸ்தோத்திரத்தில் ‘அம்பேத்கர், ஜோதிபாய் பூலே, நாராயண குரு, காந்தி அடிகள்…’ என்று நாட்டிற்காகப் பாடுபட்டவர்களை வணங்குவார்கள்.

இது ஆரம்பத்திலிருந்தே சொல்லி வரும் ஸ்லோகம். ஏதோ ஓட்டுக்காக இப்பொழுது அம்பேத்கரை நாங்கள் கையில் எடுத்திருப்பதாக எண்ண வேண்டாம்.இன்னொரு விஷயம், தமிழகத்தில் எங்கு ஈவெரா சிலை அவமதிக்கப்பட்டாலும், உடைக்கப்பட்டாலும் உடனே கண்ணை மூடிக்கொண்டு பாஜகவை குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். அப்படிப்பட்ட செய்கைகளைச் செய்தவர்கள் யார் என்று தீர விசாரித்து பின் பேசுங்கள்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், தீண்டாமைக்கு எதிரான ஒரே கட்சி பாஜகதான்...’’ என்கிறார் மா.வெங்கடேசன்.

அன்னம் அரசு