தல Sixers Story - 22
இலங்கையில் சொதப்பல்!
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவமான காலக்கட்டமாக கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த ஆண்டுகள் கருதப்படுகின்றன.அவருடைய சாம்ராஜ்யத் தொடக்கம் என்பது ஏற்கனவே இருந்த பல நட்சத்திர வீரர்களின் ஆதிக்கத்தைக் கேள்விக்குறியாக்கியது. சில வீரர்கள் அணியில் இடம்பெறுவது என்பது யாருடைய கேள்விக்கும் உட்படாத செயல்பாடாக இருந்தது.ஃபிட்னஸ் இல்லாத வீரர்கள், ஃபார்மில் இல்லாத வீரர்கள் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் அணியில் இடம்பெறக்கூடாது என்று கண்டிப்பு காட்டினார் சாப்பல்.
சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், ஜாஹீர்கான், ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் எவருமே கிரேக் சாப்பலின் கறாரான அணுகுமுறைக்கு தப்ப முடியவில்லை.சவுரவ் கங்குலி? சொல்லவே வேண்டாம். அணியின் கேப்டனான அவரையே தூக்கியெறிந்து தன்னுடைய பயிற்சியாளர் சர்வாதிகாரத்தை சந்தேகத்துக்கிடமின்றி நிலைநாட்டினார் சாப்பல்.
இத்தனைக்கும் கிரேக் சாப்பல், இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் செலுத்தியவர் கங்குலிதான்! “என்னுடைய பாணியில் என்னை விளையாட அனுமதிக்கவில்லை. ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டர் மாதிரி சாட்டையைச் சுழற்றிக் கொண்டேஇருந்தார்...” என்று சாப்பல் குறித்து குறை சொன்னவர் யார் தெரியுமா?
தன் கிரிக்கெட் வாழ்நாளில் எவ்விதமான சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்த சச்சின் டெண்டுல்கர்தான். அப்படிப்பட்ட கண்டிப்பான சாப்பலின் காலக்கட்டத்தில்தான் வளர்ந்து வரும் வீரராக தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் தோனி. இதற்கு வாய்ப்பாக இந்தியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய மூன்று அணிகள் மோதிய ஒருநாள் கோப்பைத் தொடர் போட்டிகள் இலங்கையில் நடந்தன.
இந்திய கிரிக்கெட் அணி இன்றும் மறக்க நினைக்கும் படுமோசமான தொடர் அது.அப்போது நடந்த பயிற்சிப் போட்டிகளிலெல்லாம் பிரமாதப்படுத்திய தோனி, இலங்கை மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் படுமோசமாக சொதப்பினார். அத்தொடரில் அவர் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் 2, 15 (நாட் அவுட்), 20, 28 (நாட் அவுட்), 7 என்று மொத்தமே 72 ரன்கள்தான் எடுத்தார். இத்தனைக்கும் இலங்கையுடனான முதல் போட்டியில் அவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கி இருந்தார்கள்.
குறிப்பாக கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பினார். பேட்டிங்கிலும் ஏமாற்ற மளித்தார்.இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூர்யாவின் கேட்ச் ஒன்றை அவர் 19 ரன்களில் இருந்தபோது நழுவ விட்டார் தோனி. அப்போட்டியில் ஜெயசூர்யா பின்னர் 67 ரன்கள் விளாசினார்.
இலங்கை அணி நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கினை இந்தியா வெகு விரைவாகவே எட்டிவிடும் என்று கருதுமளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தில் அன்று அனல் பறந்தது.கங்குலி, சேவாக், திராவிட், யுவராஜ்சிங், மொகம்மது கைஃப் என்று அனைவருமே நன்றாக விளையாட இந்தியா, 39வது ஓவரிலேயே 200 ரன்களைக் கடந்தது.கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த நிலையில் இந்தியா சுலபமாக இலக்கை எட்டிவிடும் என்று கருதிக் கொண்டிருந்தபோது திராவிட், எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார்.40வது ஓவரில் களத்துக்கு வந்தார் தோனி.
அனைவரின் எதிர்பார்ப்பும் அவர் மீதுதான் இருந்தது.ம்ஹூம்.உபுல் சந்தனாவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத் தடுமாறி சிங்கிள்ஸ் எடுத்துக் கொண்டிருந்த தோனி, வெறும் ஏழே ரன்களில் வீழ்ந்தார்.அந்தப் போட்டியில் சிங்கிள் டிஜிட்டில் வீழ்ந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் தோனிதான்.அவ்வளவுதான்.சீட்டுக்கட்டு சரிவதைப் போல தோனியைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வால் வீரர்கள், ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட கடைசியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
சச்சின் கலந்துகொள்ளாத அந்த முத்தரப்புப் போட்டியில் ஓரிரு வீரர்களைத் தவிர மற்ற அனைவருமே முற்றிலுமாக சொதப்பியதாலோ என்னவோ தோனியின் தலை பெரும் விமர்சனங்களின்றித் தப்பியது.அடுத்து ஜிம்பாப்வேயில் ஒரு முத்தரப்புத் தொடர். இம்முறை ஜிம்பாப்வே, நியூஸிலாந்து நாடுகளோடு இந்தியா மோதியது.இத்தொடரிலும் நியூஸிலாந்துடனான முதல் போட்டியில் படுமோசமாக சொதப்பியது இந்தியா. தோனியும் வெறும் 2 ரன்தான் எடுத்தார். இத்தனைக்கும் இலக்கு வெறும் 216தான்.
44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை வால் வீரர்களான ஜே.பி.யாதவ் (69 ரன்கள்), இர்ஃபான் பதான் (50 ரன்கள்) தலா அரை செஞ்சுரி அடித்து ஓரளவுக்கு கவுரவமான தோல்வியை எட்ட உதவினார்கள்.ஆனால் -தன்னுடைய தொடர் தோல்விகளுக்கான ஒட்டுமொத்தக் கடுப்பையும் ஜிம்பாப்வேயுடனான அடுத்த போட்டியில் காட்டியது இந்தியா. தோனியும் ஃபார்முக்கு திரும்பி அரை செஞ்சுரி அடித்தார். ஜிம்பாப்வேயை வெறும் 65 ரன்களில் ஆல் அவுட் ஆக்கி 161 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பெற்றது இந்தியா.
இருப்பினும் -நியூசிலாந்துடனான இறுதிப் போட்டி யில் இந்தியா தோற்றது.அடுத்து ஜிம்பாப்வேயுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வென்றது என்றாலும் மூத்த வீரர்களின் ஃபார்ம் குறித்த கேள்விகளை பயிற்சியாளர் சாப்பல் எழுப்பினார். குறிப்பாக கேப்டன் கங்குலிக்கும், அவருக்கும் குடுமிப்பிடி சண்டையே நடந்தது.
இந்த குழாயடிச் சண்டையால் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறி யானது.ஆனால் -ஒருநாள் தொடரில் ஓரளவுக்கு விளையாடினார் என்பதால் தோனியின் எதிர்காலம் பிரகாசமானது. புதுமுகம் என்பதாலோ என்னவோ, சாப்பலின் நெற்றிக்கண் பார்வையிலிருந்து தோனி தப்பித்தார்.
(அடித்து ஆடுவோம்)
யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்
|