நான்... பிரளயன்
தெருக்கூத்து வேறு, நவீன வீதி நாடகங்கள் வேறு. நான் நவீன வீதி நாடகங்கள் எழுதி இயக்கியவன்; எழுதி இயக்கி வருபவன். அரசியல் முதல் மக்களின் அன்றாடப் பிரச்னைகள் வரை அலசி ஆராய்ந்து அதிகாரத்தின் முகத்திற்கு முன் உண்மையைப் பேசுபவைதாம் எமது நாடகங்கள்.
‘சென்னை கலைக்குழு’ தொடங்கிய பின்புதான் எனது நாடக செயல்பாடுகள் துவங்கின. எனினும் நான் திருவண்ணாமலை கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே எனது நாடக முயற்சிகள் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அது அப்போதிருந்த கலை அரிப்பு என்று கூட சொல்லலாம்.
கவிதை எழுதுவது, பத்திரிகை வாசிப்பது என முதலில் தொடங்கினேன். ‘காற்று’, ‘கொல்லிப்பாவை’ போன்ற பத்திரிகைகளில் நவீன நாடகங்கள் தொடர்பாக வந்த விவாதங்களைப் படிக்கத் தொடங்கியதும் என்னையும் அறியாமல் எனக்குள் நாடகம் மீதான ஆர்வம், காதல் உருவானது.
1979ம் ஆண்டு, தஞ்சையில், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ (தமுஎச) மாநிலம் தழுவிய நாடக விழா ஒன்றை நடத்தியது. திருவண்ணாமலை நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘பறிமுதல்’, ‘வட்டத்திற்கு வெளியே’ என்று இரண்டு குறுநாடகங்களை அவ்விழாவில் மேடை ஏற்றினோம்.
இரண்டு நாடகங்களும் மேடை சார்ந்தவைதான். வசனங்கள் இல்லாத குறியீட்டு நாடகம் ‘பறிமுதல்’. அதில் ஒரு ரிங் மாஸ்டர், நான்கு சிங்கங்கள் ஆகியோரே பாத்திரங்கள். தன்னைக் கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டரை கடைசியில் சிங்கங்கள் ஒன்று கூடி அடித்து வீழ்த்தும்.
ஒடுக்குமுறை... அதிலிருந்து மக்கள் வெளியே வருவது... இதைச் சொல்ல அன்றிருந்த புரிதலில் இப்படி ஒரு குறியீட்டு நாடகம் செய்தோம். ‘வட்டத்திற்கு வெளியே’ டாக்டர் செல்வராஜ் எழுதிய நாடகம். அப்போது அவர் மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்தார். அதில் நான், கவிஞர் வெண்மணி, திருவண்ணாமலை நண்பர்களான கே.செல்லத்துரை, சத்தியநாராயணன் ஆகியோர் நடித்தோம்.
அந்த நாடக விழாவில் நிகழ்த்தப்பட்ட அஸ்வகோஷின் (எழுத்தாளர் இராசேந்திர சோழனின் புனைப்பெயர் இது) சில நாடகங்கள், மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் மேடையேற்றிய ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’ மற்றும் பறம்பை செல்வனின் ‘நிராகரிப்புகள்’, மேலூர் கல்யாணசுந்தரத்தின் ‘காலங்களின் நிழலில்’ போன்ற நாடகங்கள் எங்களை பாதித்தன.
அதைவிட முக்கியமானது விழாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ‘சமுதாயா’ அமைப்பின் நிறுவனர் பிரசன்னா பங்கேற்றுப் பேசியதுதான். அவர் தேசிய நாடகப் பள்ளியில் படித்து முடித்தவர். தென்னிந்தியாவில் திறந்தவெளி அரசியல் அரங்கம் என்பதை அறிமுகப்படுத்தியவரும் அவரே. சைக்கிளிலேயே பயணம் செய்து கிராமம் கிராமமாக போய் நாடகம் போடுவார்கள். இன்று அதை கலைப் பயணம் என்று சொல்கிறோம். அதனை தென் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
தஞ்சை நாடக விழாவில் பாதல் சர்க்காரின் ‘மூன்றாம் அரங்கக் கோட்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் பிரசன்னா பேசினார். அந்தப் பேச்சு எனக்கு எழுச்சி ஊட்டியது. நாடகம் என்னும் ஒரு பெரும் வெளி என் கண்முன்னால் விரிந்தது போல் இருந்தது. அவர் பேசி முடித்ததும் என்னுள் ஒரு பரவசம். மூன்று நாட்களும் அவரோடுதான் இருந்தேன். மேடையில் பேசியதைவிட தனிப்பட்ட உரையாடலில் அவர் பலரோடு பகிர்ந்துகொண்ட விஷயங்கள் எனக்கு பெரும் உந்துதலாகவும் ஞானம் தரும் அனுபவமாகவும் இருந்தன.
ஐஐடியில் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி முடித்து பிஎச்டி ஆய்வு செய்து கொண்டிருந்ததை இடையில் உதறிவிட்டு தேசிய நாடகப் பள்ளிக்கு போய்ச் சேர்ந்த அவரது ஈடுபாடு அவர் மேல் மிகப் பெரும் மரியாதையை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே அவர்களது ‘சமுதாயா குழு’வினரின் நாடகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு ஓராண்டிற்கு முன் கோவையில் நடந்த தமுஎச-வின் முதல் மாநில மாநாட்டில் பீகார் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 400 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகி ஜல சமாதியானதை ‘சமுதாயா குழு’வினர் ‘ஓ... சாஸ்நலா’ என்ற நாடகமாக நிகழ்த்தியிருந்தார்கள். இது வசனமே இல்லாத நாடகம்.
கடைசியில் செய்தி அறிவிப்பாளர் வருவார்; வந்து செய்தி வாசிப்பார். அது மட்டும்தான் வசனம். மற்றவையெல்லாமும் ‘பா’வனையில்தான் செய்து காட்டப்பட்டது. அந்த நாடகம் நடத்தப்பட்ட விதம், அந்நாடகத்தைப் பார்த்தவர்கள் வந்து சொன்னதைக் கேட்டு எழுந்த எழுச்சி... இவையெல்லாம் சேர்ந்து நாமும் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாலென்ன என்று எங்களுக்கு தோன்றியது அப்போது திருவண்ணாமலையில் ‘வானவில் ஃபிலிம் சொசைட்டி’ என்னும் பெயரில் ஃபிலிம் சொசைட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தோம். சென்னை, வேலூர், மதுரை, திருச்சி - இங்கெல்லாம்தான் பிலிம் சொசைட்டிகள் இருந்தன. மாவட்டத் தலைநகரங்கள் தாண்டி திருவண்ணாமலை போன்ற ஊரில் ஃபிலிம் சொசைட்டி நடத்தியது என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.
அப்போது திருவண்ணாமலை தனி மாவட்டமாகப் பிரிக்கப்படவில்லை. நான், வீ.பா.கணேசன், கவிஞர் வெண்மணி, அரசு ஊழியர்சங்கத் தலைவராயிருக்கிற சந்துரு... என எல்லோரும் முன்கை எடுத்துதான் இதனை நடத்தினோம். கணிதம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேலே படிக்க சென்னை வந்தேன். கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்ந்து அதனை முடித்துவிட்டு பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் இளநிலை பயிற்சியாளனாக வேலைக்கு சேர்ந்தேன் அப்போது நான் தங்கியிருந்த இடம், இலக்கம் 4, பிச்சுப் பிள்ளை தெரு, மயிலாப்பூர்.
இடதுசாரி இயக்கத்தோடு தொடர்புடைய பலர் அங்கே தங்கியிருந்தார்கள். அவர்களெல்லாம் நல்ல சம்பளம் வருகிற வேலையிலிருப்பவர்கள். இயக்க வேலைகளுக்காக விடுப்பு எடுக்க முடியவில்லையெனில் பார்த்துக்கொண்டிருக்கிற வேலையையெல்லாம் பட்டென்று விட்டுவிடுவார்கள். பிறகு வேறு வேலை தேடுவார்கள். நிரந்தரமான பாதுகாப்பான வேலையில் இருப்பதும் மாதச் சம்பளம் வாங்கி மூன்றுவேளை சாப்பிடுவதும் மிகப்பெரிய சமூகக் குற்றம்... குட்டி முதலாளித்துவப் பண்பு என்பதுதான் அவர்களில் பலரின் எண்ணம். மூன்றுவேளை சாப்பிடுவதையே ஆடம்பரம் என்று எண்ணியவர்களும் அங்கு உண்டு.
நானும்கூட அப்படித்தான் அப்போது நினைத்தேன். சென்னை வந்தபின், மூன்று வருடம் தொடர்ந்து நாடக முயற்சியில் ஈடுபட்டேன். எதுவும் முழுமையாகக் கைகூடவில்லை. அதே நேரத்தில் அப்போது நாடகம் தொடர்பாக நடந்த பல விவாதங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மதுரையில் மு.ராமசாமியின் ‘நிஜ நாடக இயக்கம்’, நெய்வேலியில் அஸ்வகோஷ் அவர்களின் நாடகச் செயல்பாடுகள், சென்னையில் ‘வீதி’, ‘பரீக்ஷா’ குழுக்களின் நாடகங்கள்... என இச்செயல்பாடுகளோடு அப்போது எனக்கு ஓரளவு பரிச்சயம் இருந்தது.
1984ல் மறுபடியும் நாடகம் போட முயன்றோம். தமுஎச-வோடு அப்போது சேர்ந்து செயல்பட்ட கோமல் சுவாமிநாதனை முன்னிறுத்தி தமுஎசவின் நாடகவிழாவொன்று சென்னையில் நடந்தது. மாநிலம் தழுவிய அவ்விழாவில் சென்னை சார்பாக நாடகம் போடவேண்டுமென தமுஎச வினர் என்னைக் கேட்டார்கள்.
அந்த உற்சாகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் எங்களது ‘சென்னை கலைக்குழு’. வீதி நாடகம் என்கிற புரிதல் அப்போது எனக்கு கிடையாது. அந்த சொல்லாக்கம் கூட அப்போது பரவலாக இல்லை. ‘நிஜ நாடகம்’ என்கிற சொல்லாக்கமே இருந்தது. மூன்றாம் அரங்கக் கோட்பாடுகள் வலுவான ஒரு பிரிவாகவும் மேடை நாடகம் இன்னொரு பிரிவாகவும் இருந்தது. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடப்பதும் உண்டு. எனினும் எங்களின் முதல் நாடகம் மேடை சார்ந்ததுதான்.
தர்மவீர் பாரதி - முக்கியமான இந்தி நாடகாசிரியர். இந்திய அளவில் அரசியல் தன்மையுள்ள நாடகங்களில் முக்கியமானது அவருடைய ‘அந்தாயுக்’ என்னும் நாடகம். அன்றைய அரசியல் சூழலை பின்னணியாக வைத்து மகாபாரதக் கதையை திருதராஷ்டிரன் கண்ணோட்டத்தில் சொல்லக் கூடி யதுதான் அந்நாடகம். அப்போது அந்நாடகம் பற்றி அவ்விதழ்களில் வந்த விமர்சனங்களைப் படித்திருந்தேன். அந்தக் கதையோட்டம் பிடித்திருந்ததால் அதை எங்கள் குழுவில் நாடகமாக செய்யவேண்டுமென்று நினைத்தேன்.
இந்த நாடகம் பற்றியும் அதைத் தமிழில் செய்தது பற்றியும் பெருமையாக தோழர் வி.பி.சிந்தனிடம் சொன்னேன். சென்னைத் தொழிற்சங்க இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர் அவர். அவரை தினமும் சந்திப்பதுண்டு. சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை மிக்கவர். சமஸ்கிருத கிரேக்க நாடகங்கள் பற்றி பேசக்கூடியவர். நவீனபோக்குகள் பற்றியும் பரிச்சயம் உள்ளவர்.
என் நாடகங்கள் மூலம் இப்படி பல சந்திப்புகள் நிகழ்ந்தன. என் நாடக வட்டம் பெரிதானது, அதிகாரத்தில் இருக்கிறவர்களையும், மக்கள் மீதான அடக்குமுறை களையும் எதிர்த்த நாடகங்கள் என வரிசையாக என்னுடைய நாடகப் பணி விரியத் துவங்கியது. மக்களாட்சி சகாப்தத்தின், ஜனநாயக வாழ்முறைகளின் கலாசார வெளிப்பாடே இந்த நவீன வீதி நாடகம் என்பது. அதிகாரத்தின் முன் உண்மையை உரக்கச் சொல்ல பல வகைகளில் நாடகங்கள் பயன்பட்டன.
பிறகு நாடகம்தான் என் வாழ்க்கையென்றானது, அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உங்கள் பத்திரிகையில் இடம் போதாது, கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்வோம். எனக்கு அப்பா, அம்மா வைத்த பெயர் சந்திரசேகர். பிறப்பு வளர்ப்பு எல்லாமே திருவண்ணாமலையில்தான். அப்பா ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் சண்முகசுந்தரம். நான் தாமதமாகப் பிறந்த குழந்தை. அவர் ஓய்வு பெறும்போது நான் ஆரம்பப் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். அம்மா கல்யாணசுந்தரி. ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள்.
எனக்கு வீட்டில் பார்த்து முடித்த பெண்தான் மனைவியாக அமைந்தார்கள். நான் நாடக வேலைகள் காரணமாக எப்போதும் பயணத்திலேயே இருப்பேன். அத்தனையும் தாங்கி ஒரு மனுஷியாக குடும்பத்தை நடத்தியவர் என் மனைவி ரேவதி. எங்களுக்கு ஒரு மகன் சிபி இருக்கிறார். பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று நம்மைச்சுற்றி மிகப்பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முன்பு சினிமா பார்க்க திரையரங்குக்குப் போக வேண்டியிருக்கும். டிவி பார்க்க ஹாலுக்கு வந்து குறித்த நேரத்தில் டிவி முன் உட்கார வேண்டியிருக்கும். இப்போது நீங்கள் அப்படி எந்த பிரயத்தனமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நேரம் காலமின்றி எப்போதும் எதையும் பார்க்கலாம். எல்லாம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்கள் கைபேசிக்குள் பாய்ச்சப்படுகிறன.
ஆனால், நாடகம் என்பது மற்ற டிஜிட்டல் கலைகள் போல உங்களது கைபேசிக்குள் வந்து பாயாது; பீச்சப்படாது.நாடகம் எங்காவது ஓரிடத்தில் நடக்கும். அந்நாடகத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் அந்த நாடகம் நடக்கும் இடத்தில், அது நடக்கிற நேரத்தில், நீங்கள் அங்கே இருக்கவேண்டும்.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அமர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்ப்பது போல, மியூசிக் அகடமியில் அமர்ந்து கச்சேரியைக் கேட்பது போல அது நிஜமான அனுபவம்; உயிருள்ள அனுபவம்; தொட்டுணரும் அனுபவம்.மக்கள் ஒன்றுகூடல் என்பது இருக்கும் வரை அங்கே நிகழ்த்துக் கலைகளும் நாடகங்களும் நிச்சயம் இருக்கும்.
இன்று கொரோனா கோர தாண்டவம் எவரொருவரையும் விட்டுவைக்கவில்லை. இதில் நாடகங்கள் எம்மாத்திரம். நாடகக் கலையின் பலமே மக்களின் ஒன்றுகூடுதல்தான். பழையபடி மக்கள் கூடும் நிலையென்பது இனி அவ்வளவு எளிதில் நடக்குமா எனத் தெரியவில்லை. இப்போது ஆன்லைன் தளங்களில் சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நேரடியான கூட்டமும் கைதட்டலும், நாடகங்கள் கொடுக்கும் அனுபவமும், அது தரும் உந்துதலும் எப்படி டிஜிட்டல் உலகில் கிடைக்கும்? தொட்டு உணரும் அனுபவம் மீண்டும் வந்தால் மட்டுமே மீண்டும் எங்கள் நாடகங்களுக்கும் உயிர் கிடைக்கும். நாடகங்கள் மட்டுமல்ல, பல தொழில்கள், கலைத்துறைகள், விளையாட்டு என அத்தனையும் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்தும் விரைவில் சரியாக வேண்டும் என்பதே என் ஆசை!
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|