கொரோனா வருடத்தின் மழைக்கால நோய்கள்!
மற்ற எந்த வருடங்களை விடவும் இவ்வருடம் வித்தியாசமானதாக இருந்து வருகிறது. கடந்த வருடங்களில் கோடை விடுமுறையில் சுற்றுலாத்தளங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால், இவ்வருடம் எது விடுமுறை என்று பிரித்தறிய முடியாத வண்ணம், அடுத்த தெருவிற்குக் கூட செல்லமுடியாத லாக்டவுன். அதேபோல இப்போது மழைக் காலம் ஆரம்பித்துவிட்டது. கோடைகாலத்தில் சுற்றுலா செல்ல முடியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், வருடாவருடம் மழைக்காலங்களில் வீடுதேடி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து காத்துக்கொள்வது அவசியமல்லவா?
இந்த கோவிட் வருடத்தில் மழைக்கால நோய்களுக்கான அணுகுமுறையும் சிறிது வேறுபடுகிறது. மழைக்காலத்தில் அதிகம் பரவும் சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் போன்ற வியாதிகள் இந்த வருடம் வழக்கத்தைவிட குறைவாகவே ஏற்படுகின்றன. அதற்குக் காரணம் கொரோனாவிற்கான தடுப்புமுறைகள், மற்ற சுவாசப்பாதை வைரஸ்களுக்கும் தடுப்புமுறையாக அமைவதுதான்.
அதேபோல இந்த வருடம் கிருமிநாசினிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக கொசுக்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டதால், டெங்கு பரவல் சென்ற வருடங்களைப் போல இல்லை. ஆயினும், மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் மற்ற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் நேரிடுகிறது. சிலநேரங்களில் மற்ற உபாதைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வரும்போது நோயாளிக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்தும் உண்டு.
எனவே, பரவல் குறைவென்றாலும் நாம் மேலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மழைக்கால நோய்களின் தூதுவன் ‘கொசுக்கள்’தான். மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து தூய்மைப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் கொண்டுள்ளதால் சென்ற வருடங்களைப் போல வீடுவீடாக தண்ணீர் தேங்கியுள்ளதை அவர்களால் கண்காணிக்க இயலாது. எனவே, நம்முடைய பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.
வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள், ஆட்டு உரல் போன்றவைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ரெஃப்ரிஜிரேட்டர்களின் பின்புறம் தேங்கும் நீரை அவ்வப்போது வெளியேற்ற வேண்டும். சுற்றுப்புறத்திலும், தெருவிலும் கேட்பாரின்றி கிடக்கும் பழைய பொருட்களில் நீர் தேங்கியிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
சுற்றுப்புறத்தில் கொசுக்களின் தாக்கம் அதிகம் இருப்பவர்கள் வீட்டு ஜன்னல்களுக்கு கொசுவலைகளைப் பொருத்தலாம். வெளியில் செல்லும் போது கொசுக்கடியில் இருந்து தப்பிக்க முழு உடலையும் மறைக்கும் வண்ணம் உடை அணியலாம். கொசு எதிர்ப்பு கிரீம்களையும் பயன்படுத்தலாம். கொரோனா வயதானவர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது போல டெங்கு குழந்தைகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சிறுகுழந்தைகள் இருக்கும் இல்லங்களில் சற்று கூடுதல் கவனம் தேவை.
டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இருமல், தும்மல் மூலம் பரவுவதில்லை, கொசுக்கள் மூலமே பரவுகின்றன. அதனால் கொரோனா நோய்க்காக நாம் பின்பற்றும் முகக்கவசம், கைகழுவுதல் போன்றவை டெங்கு, மலேரியா போன்ற நோய்களிடம் இருந்து நம்மைக் காக்காது. கொசுக்கடியைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே வழி. டெங்கைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் பகலில் அதிகம் கடிக்கும் தன்மையுடையவை. இரவில்தானே கொசுக்கடி அதிகமிருக்கும், அப்போது ‘குட்நைட் /ஆல் அவுட்டை’ ஆன் செய்துகொள்ளலாம் என நினைக்காமல் பகலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
டெங்கு நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தத் தட்டணுக்களை சேகரிப்பதில் கொரோனா காலத்தில் இரத்தவங்கிகளுக்கு சிரமம் நேரிடுகிறது. உடல்நலமுடையோர் இரத்ததானம் செய்யலாம்.மலேரியா நோய் வெளியூர் பயணம் செல்வோர்களுக்கு, அதுவும் குறிப்பாக மலேரியா அதிகமுள்ள இடங்களுக்கு பயணம் செய்வோருக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், செல்லும் இடங்களிலும் கொசுக்கடி நேராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
எந்தவகை காய்ச்சல் என்றாலும் உடலில் நீர்ச்சத்தை குறையவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அறிகுறி தென்பட்டால் சுத்தமான குடிநீர், இளநீர், மோர் போன்ற நீராகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.கோவிட் தொற்று காலத்தில் மற்ற சுவாசப்பாதை நோய்கள் குறைந்திருந்தாலும், கோவிட் நோயுடன் அவை சேர்ந்து வரும் போது பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன.
இவ்வருடத்திற்கான எச்1என்1 இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் அந்தத் தடுப்பூசியை மருத்துவர் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம். நிமோனியா தடுப்பூசியையும் தேவைப்படுபவர்கள் போட்டுக் கொள்ளலாம். மழைக்காலத்தின் மற்றொரு முக்கிய பிரச்னை வயிற்றுப்போக்கு.
நீர், உணவு ஆகியவற்றின் மூலம் பரவும் வைரஸ்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது, சுத்தமற்ற உணவுகளைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கலாம். சாப்பிடும் முன் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது அவசியம். வெளியிடங்களுக்குச் செல்லும் போது கையோடு உணவையும் நீரையும் கொண்டு செல்வது நல்லது. இதனால் நீரின் மூலம் பரவும் மஞ்சள் காமாலை, டைஃபாய்டு போன்ற பிற தீவிர நோய்களையும் தவிர்க்கலாம்.
சிலநேரங்களில் கொரோனா தொற்றிலும் வயிற்றுப்போக்கு ஒரு அறிகுறியாக இருக்கிறது. எனவே, தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க நீர், உணவு விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். பெரும்பாலான வைரஸ் நோய்களுக்கு அறிகுறிகள் ஒரேமாதிரி இருப்பதால் கூகுள் டயக்னோசிஸ், சுயமருத்துவத்தைத் தவிர்ப்பது நல்லது.
நோயின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பின்னர் பல பிரச்னைகளைத் தவிர்க்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், உரிய ஓய்வும் உடல்நலத்திற்கு இன்றியமையாதவை. நோய்த்தடுப்பு முறைகளோடு உடல்நலத்திலும் அக்கறை செலுத்தினால் இவ்வருடமும் நோய்களை வென்று நலமுடன் வாழலாம்!
டாக்டர் சென் பாலன்
|