30 வருடங்களுக்குப்பின் ஸ்கிரிப்ட் ரைட்டராக புரொமோஷன் ஆன ஒளிப்பதிவாளர்!
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக 30வது ஆண்டை நெருங்குகிறார் எம்.வி.பன்னீர்செல்வம். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கோலோச்சிய காலத்தில் அறிமுகமானவர். இயக்குநர்கள் ஆர்.பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, அர்ஜுன், விஜயகாந்த் இவர்களின் ஃபேவரிட் கேமராமேன் இவர். இப்போது ராய்லட்சுமி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் மூலம் கதை, திரைக்கதையாசிரியர் ஆக அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிறார் பன்னீர்செல்வம். இதனையடுத்து பிரபுதேவாவை இயக்குகிறார் என்பதுதான் இண்டஸ்ட்ரி டாக். ‘‘எப்பவுமே என்னை ஒரு கேமராமேன்னு சொல்லிக்கறதை விட, ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர்னு சொல்லிக்கத்தான் விரும்பியிருக்கேன். ஆனா, அதுக்கான வாய்ப்பு ‘மிருகா’லதான் கனிஞ்சிருக்கு. ரைட்டர் ஆனது யதேச்சையாக நடந்த விஷயம் கிடையாது. நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேரும் போதே, டைரக்ஷனுக்கு ட்ரை பண்ணினேன். கிடைக்கல. அப்புறம் ஒளிப்பதிவுத் துறைக்கு போனேன். ஈஸியா கேமராமேனாகிட்டேன். விரும்பினது கிடைக்கலைனாலும், கிடைச்சதை விரும்ப ஆரம்பிச்சு, இத்தனை வருஷங்கள் ஓடிப்போச்சு.
இப்ப பிரபுதேவா மூலம் இயக்குநராகும் வாய்ப்பு அமைஞ்சிருக்கு. அந்த டைம்ல அவருக்கு சல்மான்கான் கால்ஷீட் கிடைக்க, ‘ராதே’வுக்கு போனார். அந்த இடைவெளில ‘மிருகா’ பண்ணியிருக்கேன். கதை, திரைக்கதையை எழுதியிருக்கேன்...’’ பரவசமாகிறார் பன்னீர்செல்வம்.‘‘நான் போராடாம எல்லாம் இல்ல. 25 வருஷங்களுக்கு மேலா போராடியிருக்கேன். அதான் உண்மை. என் பூர்வீகம் சென்னைதான். பொதுவாக மெட்ராஸ்காரங்க நிறைய மிஸ் பண்ணுவாங்க. நானும் விதிவிலக்கல்ல.
நான் ஒளிப்பதிவாளராக அறிமுகமான நேரம் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களா வந்திட்டிருந்தது. எனக்கு வில்லேஜ் டைப் தோணாது. ஏன்னா, ஒரு வில்லேஜ் பேக்ட்ராப்பிலோ இல்ல கலகலக்குற ஒரு பெரிய கூட்டுக்குடும்ப சூழல்லயோ நான் பொறந்து வளரல. அதனால எனக்கு ஃபேமிலி, வில்லேஜ் சப்ஜெக்ட் கதைகள் எல்லாம் பண்ண வராமப் போச்சு.
ஒரு படம்னா இப்படித்தான் இருக்கணும்னு வித்தியாசமான விஷயங்களை கமர்ஷியலா யோசிப்பேன். ஒளிப்பதிவாளராகவும் இருக்கறதால, டயலாக்கை விட, விஷுவலா சொல்லலாம்னுதான் நினைப்பேன். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்னு தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலாக்குள்ள சிக்கிக்க விரும்பல. ஒரே ஷாட்ல படம் பண்ணலாம்... அந்தாலஜி ட்ரை பண்ணலாம்னு எக்ஸ்பரிமென்ட் சைடும் நிறைய முயற்சி பண்ணினேன்.
நான் திரைப்படக் கல்லூரில ஒளிப்பதிவு படிச்சு முடிச்ச ஒருசில வருஷத்துக்குள்ளயே கேமராமேனாகிட்டேன். பெரிய போராட்டங்களைச் சந்திக்கல. ஒளிப்பதிவாளரா என் முதல்படம் ‘சுகமான சுமைகள்’. அதைத் தொடர்ந்து பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, அர்ஜுன் சார் படங்கள்னு பரபரப்பா ஓடிட்டிருந்தேன்.
அந்த டைம்லயே என்னைப் படம் இயக்கச் சொல்லி நிறைய தயாரிப்பாளர்கள் கேட்டிருக்காங்க. வாய்ப்பு ஒருமுறைதான் தேடி வரும். அதை மிஸ் பண்ணிடக்கூடாதுனு புரிஞ்சுக்கல. ‘நீ தைரியமா டைரக்ஷன்ல இறங்கு’னு என்னை யாரும் கைட் பண்ணவும் இல்ல.
உண்மையை சொல்றதா இருந்தா, அப்ப எனக்கு சரியான முடிவெடுக்கத் தெரியல. ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணிட்டிருக்கும்போது, அதை க்ளாஷ் ஒர்க்கில் விட்டுட்டு நான் படம் இயக்க போயிருக்கலாம். ஆனா, என் படங்களுக்கு நான் க்ளாஷ் ஒர்க் விட்டுட்டு போனதே இல்லை. அர்ஜுன் சாரோட ‘சுதந்திரம்’ பண்ணும்போது கூட அவர் என்னைக் கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்திருக்கார். பார்த்திபன் சாரும் என்னை படம் இயக்க சொல்லியிருக்கார். இப்படி வந்த எல்லா சான்ஸையுமே நான் மிஸ் பண்ணிட்டேன். ஏன் அப்படி மிஸ் ஆனதுனு இப்ப வரை எனக்கு காரணம் தெரியலை.
இன்னொரு பக்கம் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ஹீரோக்கள் அத்தனை பேரும் அந்த டைம்ல பெரிய ஹீரோக்கள் ஆகிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட கதை சொல்லப் போனாக் கூட ‘அண்ணே நீங்க கேமரா பண்ணுங்கண்ணே... அடுத்த படம் டைரக்டராகலாம்’னு சொல்ல ஆரம்பிச்சாங்க. நல்லா தெரிஞ்ச தயாரிப்பு நண்பர்களும் கூட, ‘உங்க கதை நல்லா இருக்கு. ஆனா, அப்புறம் பாத்துக்கலாமே’னு சொல்லியிருக்காங்க.
விஜயகாந்த் சாருக்கு ரெண்டு கதைகள் வச்சிருந்தேன். ஆனா, அதை அவர்கிட்ட சொல்லல. நான் ‘சொக்கத் தங்க’த்துக்கு கேமரா பண்ணும் போது அவர் என்னைக் கூப்பிட்டு, ‘என்ன பன்னீர்... நீங்க எனக்கு கதை ரெடி பண்ணி வச்சிருக்கறத என்கிட்ட சொல்லவே மாட்டேங்குறீங்களே? யார் யாரெல்லாமோ இதைச் சொல்றாங்களே’னு அவராகவே கேள்விப்பட்டு கேட்டார்.
‘சொல்றண்ணேன்’னு சொல்லிட்டு, அவருக்கு கதை சொல்றதுக்கு டைம் கேட்க ராவுத்தர் சாரை போய் பார்த்தேன். என்னோட நேரமோ என்னவோ தெரியல. அவங்க ரெண்டு பேரும் அப்ப பேச்சுவார்த்தை இல்லாம இருந்தாங்க...’’ உச்சுக் கொட்டியவர், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கதை சொல்லியிருக்கிறார்.
‘‘அவர்கிட்ட கூட ஒரு கதை சொல்லி, நீங்கதான் இசையமைக்கணும்னும் சொல்லியிருக்கேன். என் கதையைக் கேட்டு அவர் ஆச்சரியமான தருணமும் உண்டு. ஆனா, சூழல் காரணமா மறுபடியும் அவரைச் சந்திக்க முடியல. ஆர்.கே.செல்வமணி சாரின் ‘மக்களாட்சி’ தயாரிப்பாளர் மூலமா மம்மூட்டி சாருக்கு ஒரு கதை ரெடி பண்ணினேன். அப்புறம் அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில் அர்ஜுன் நடிக்க ஒரு படம் ஷூட்டிங்கும் கிளம்பினேன். சில கதைகள் பக்காவா ரெடி பண்ணியிருப்பேன். ஆனா, அந்த டைம்ல அதே ரகத்துல படங்கள், சீன்கள் அப்படியே வந்திருக்கு.
‘சாமி’, ‘மின்சாரக்கனவு’னு நிறைய படங்களை இப்படி உதாரணமா சொல்லமுடியும். சரி... என்னைத் தேடி வந்த டைரக்ஷனைத்தான் மிஸ் பண்ணிட்டேன்; நாமா தேடிப் போய் சான்ஸ் கேட்கலாம்னு முடிவு செஞ்சு போனப்ப எல்லா இடத்திலும் கேட் லாக் ஆகியிருந்தது. எதுவும் கைகுடுக்காததால இனி கேமராவே பண்ண வேணாம்னு ஒரு வருஷமா ஒதுங்கியும் இருந்தேன்.
சினிமாவுல ‘ஏப்ரல் மாதத்தில்’ படத் தயாரிப்பாளர் வி.ஞானவேல், வெங்கட் சுபா, பி.சி.ராம் சார், ராண்டினு நிறைய நலம் விரும்பிகள் இருக்காங்க. அவங்க கூட எனக்காக முயற்சிகள் எடுத்திருக்காங்க...’’ என நட்புகளை நினைவு கூர்ந்தவர், ‘மிருகா’வுக்குள் வந்தார்.‘‘பிரபுதேவா ‘தேவி’ மூலம் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினதும் அவருக்கு படம் பண்ணணும்னு விரும்பினேன். என் ட்ராவல், டைரக்ஷனுக்கான போராட்டங்கள் எல்லாமே ஆரம்ப காலத்தில் இருந்தே அவருக்கும் தெரியும்.
அவர்கிட்ட ஒரு லைன் சொன்னேன். பிடிச்சிடுச்சு. படம் பண்ணலாம்னு சொல்லிட்டார். அந்த டைம்லதான் அவர் ‘தபாங்’ முடிச்சிருந்தார். ‘மறுபடியும் சல்மான் சார் கால்ஷீட் குடுக்கறேன்னு சொல்லியிருக்கார். அப்படி கொடுத்தா இந்திப் படத்தை முடிச்சிட்டு நாம ஆரம்பிச்சிடலாம்’னு அவர் சொன்னார்.
அவர் சொன்னது மாதிரியே ‘ராதே’ டேக் ஆஃப் ஆச்சு. அந்த கேப்ல ஹீரோயின் சப்ஜெக்ட் ஒண்ணு பண்ணச் சொல்லி நண்பர் நரேஷ் மூலமா ஒரு ஆஃபர் வந்துச்சு. இதை நானே இயக்கறதைவிட, என்னை மாதிரி இன்ஸ்டிடியூட் மாணவரான என் உதவியாளர் ஜெ.பார்த்திபன் டைரக்ட் பண்ணட்டும்னு விரும்பினேன்.
தயாரிப்பு தரப்புல கொடுத்த சாய்ஸ்தான் ராய்லட்சுமி. ‘மிருகா’ ஒரு த்ரில்லர். ‘உலகம் முழுவதும் அபாயகரமானவன் மனிதன்’ இதான் படத்தின் ஒன்லைன். ஆரம்பத்துல இந்தக் கதையில நான் புலியைக் கொண்டு வரல. இந்தியா முழுவதும் ரிலீஸ் பண்ற படமா இருக்கணும்னா, ஒரு பொதுவான செக்மன்ட் தேவையா இருக்கு. ஸோ, ஒரு மிருகத்தை கொண்டு வரலாம்’னு புலியைக் கொண்டு வந்தோம்.
தன்னுடைய பசிக்கும், பாதுகாப்பிற்கும் மட்டுமே மிருகம் வேட்டையாடும். ஆனா, ஆறறிவு படைத்த மனுஷன் மட்டும்தான் பணம், புகழ், பதவி, கௌரவம்னு எல்லாத்துக்கும் வேட்டையாடறான்.பொள்ளாச்சி, மூணாறுல ஷூட் பண்ணிட்டோம். க்ளைமேக்ஸ் மட்டுமே பதினாறு நாட்கள் ஷூட் பண்ணினோம். இன்னொரு விஷயம், படத்தோட ரெண்டாம் பாதியே, க்ளைமேக்ஸ் மாதிரி விறுவிறுக்கும். டயலாக்ஸை குறைச்சு, ஒளிப்பதிவாளர் பார்வைல விஷுவலா பண்ணியிருக்கேன்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவமான கதைனால ராய்லட்சுமிதான் பண்றாங்க. காந்த், தேவ்கில்னு நிறைய பேர் இருக்காங்க. அருள்தேவ் இசையமைச்சிருக்கார். வித்யாசாகரோட இணை இசையமைப்பாளரா ஒர்க் பண்ணியிருக்கார். தெலுங்கில் ‘பாகுபலி’, ‘டிஸ்கோ ராஜா’, ‘மகாநடி’னு பல படங்களுக்கு பின்னணி இசையில் இருந்திருக்கார். அந்த அனுபவங்களோடு இந்த த்ரில்லரையும் மிரட்டி யிருக்கார்.
இந்தப் படத்தோட எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் நரேஷ்தான், தயாரிப்பாளர் வினோத் ஜெயினை அறிமுகப்படுத்தி வச்சார். 52 நாட்கள்ல படத்தை முடிச்சிட்டோம். ராய்லட்சுமிகிட்ட இந்தக் கதையை சொன்னதும், ‘யாரை மைண்ட்ல வச்சு எழுதினீங்க’னு கேட்டாங்க. ஏன்னா, இப்படி ஒரு கேரக்டர்ல அவங்க நடிச்சதே இல்ல. அவங்களுக்கு ஒரு க்ளாமர் இமேஜ் இருக்கு. வழக்கமான ராய்லட்சுமியை இதுல எதிர்பார்க்க முடியாது. ஆறு வயசு குழந்தைக்கு அம்மாவா நடிக்கறாங்க.
காந்தின் முதல் படத்தில் இருந்து அறிமுகம் உண்டு. அதனால அவரும் டச்ல இருக்கார். அவரும் அருமையா நடிச்சிருக்கார்...’’ நிறைவாகப் பேசியவரின் டாபிக், பிரபுதேவா பக்கம் திரும்பியது.‘‘நான் கேமராமேனா பயணிக்க ஆரம்பிச்ச டைம்லதான் அவரும் கேரியரை துவங்கினார். அதாவது ‘இதயம்’ படத்துக்கு அவர் டான்ஸ் ஆட ஆரம்பிச்ச காலத்துல இருந்தே அவரோட நல்ல வேவ்லெங்க்த்துல இருக்கேன். ‘நினைவிருக்கும் வரை’, ‘டைம்’னு அவர் நடிச்ச படங்களுக்கு ஒளிப்பதிவும் பண்ணியிருக்கேன்.
அவரோட முதல் படத்துல இருந்து இப்ப சல்மான்கானை வச்சு இயக்கப்போற ‘ராதே’ வரை அவரோட எல்லா படக் கதையையும் என்கிட்ட அவர் சொல்லியிருக்கார். சொல்லுவார். அவர் பார்த்த படங்கள் பத்தி ஷேர் பண்ணிக்குவார். நாம சொல்றதையும் நோட் பண்ணிக்குவார். அவர் ‘லவ் பேர்ட்ஸ்’ முடிச்சதும், அவருக்காக ‘குருவி குருவி’னு ஒரு படம் பண்றதா இருந்துச்சு. எல்லாம் ஓகே ஆகி வரும் நேரம், யார் தட்டிவிட்டாங்களோ தெரியாது... அது டேக் ஆஃப் ஆகல.
பொதுவாகவே அவர் சென்னையில் ஃப்ரீயா இருந்தா, கூப்பிடுவார். பேசுவார். அப்படித்தான் ஒருநாள் கூப்பிட்டார். இதான் டைம்னு நான் அவருக்குனு ஒரு ஐடியா சொன்னேன். அசந்துட்டார். ஸ்கிரிப்ட் ரெடியா இருக்குனு சொல்லி ஓகே பண்ணிட்டேன். அடுத்த நாளே ராஜா, விஜயகுமார்னு ரெண்டு தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லி அட்வான்ஸையும் குடுத்துட்டோம். அப்ப பிரபுதேவா ‘தபாங் 3’ல இருந்தார். அவர் ‘ராதே’ முடிச்சதும் ஷூட்டிங் கிளம்பறோம்...’’ புன்னகைக்கிறார் எம்.வி.பன்னீர்செல்வம்.
மை.பாரதிராஜா
|