நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையும் வெள்ளமாகப் பாயும் பாஜகவினரின் இஸ்லாமிய வெறுப்பு டுவீட்டுகளும்!



ஒரு நடிகரின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்காமல் எப்படி பாஜக அதில் குளிர்காய்கிறது என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு சோறு பதம்...

ஒரு மனிதனின் மரணம்

உருவாக்கும் அதிர்வலைகள் எளிதானவை அல்ல. எளிய மனிதர்களின் மரணம் அவரின் குடும்பத்தையும் அவர் புழங்கிய சூழலையும் பாதிக்கும் என்றால், புகழ்பெற்ற ஆளுமைகளின் மரணம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே புரட்டிப் போடும்.

சில சமயங்களில் சில மரணங்கள் நாம் கணக்கிட இயலா புதிர்மைகளோடு எங்கெங்கோ நுழைந்து ஏதேதோ பெரிய வேலைகளை எல்லாம் செய்துவிடும். அப்படித்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் சினிமா, அரசியல், மீடியா, அதிகார மையங்கள் என பலதரப்பட்ட தளங்களிலும் சூறாவளியாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா ஒருபுறம் மக்களைக் கலங்கடிக்க, பொருளாதார நெருக்கடிகள் மறுபுறம் பதறடிக்க, இவற்றுக்கு இடையே மீடியாக்களிலும் சமூக வலைத்
தளங்களிலும் நான்கு மாதங்களுக்கும் மேலாக அனலடித்துக் கொண்டிருக்கிறது சுஷாந்தின் மரணம்.

இந்தியாவின் புகழ் பெற்ற ஊடகவியலாளர் பி.சாய்நாத் ஒருமுறை கூறினார். ‘விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் இந்த அரசின் தோல்வி மிக மோசமாக அம்பலப்பட்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம்கூட பேசாமல் சிலர் தொடர்ந்து சுஷாந்தின் மரணம் பற்றியே பேசிக்கொண்டிருப்பது சந்தேகமாய் இருக்கிறது...’ என்றார்.

என்னதான் நடக்கிறது இந்த விவகாரத்தில் என்று நமக்குக் குழப்பமாக இருக்கிறது.சுஷாந்த் யார் என்று கேட்பவர்களுக்காக இந்த சின்ன இன்ட்ரோ. சுஷாந்த் சிங் ராஜ்புத் முப்பத்தி நான்கு வயதுக்குள் மிக முக்கியமான வேலைகள் சிலவற்றை சாதித்துவிட்டுப் போயிருக்கும் இளைஞர். ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றவர்.

‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ போன்ற திரைப்படங்களிலும் பட்டையைக் கிளப்பியவர். தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். மத்திய அரசுடன் விரைவில் நெருக்கமானார். ‘நிதி ஆயோக்’கின் விளம்பரத் தூதுவராகவும் உயர்ந்தார். சுமார் முந்நூறு கோடிக்கு மேல்
நிதியைத் திரட்டி மெகா திரைப்படத் தயாரிப்பு வேலைகளை முடுக்க ஆயத்தமாக இருந்தார். கி.பி. 540 முதல் கி.பி. 2015 வரை வாழ்ந்த இந்தியாவின் மகத்தான ஆளுமைகள் 12 பேரின் Biographyகளை தனித்தனிப் படங்களாக தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 14ம் தேதி, மும்பையின் பாந்த்ராவில் இருக்கும் சுஷாந்தின் வீடு பரப்பரப்பானது. மாபெரும் கனவுகளோடு சினிமாவில் நுழைந்திருந்த சுஷாந்த், தன் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதலே இறக்கை கட்டிக்கொண்டன வதந்திகள். காதல் தோல்வி என்பது ஒன்று. தொழில் நஷ்டம் என்பது மற்றொன்று. எதிரிகளின் மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது பிறிதொன்று. நண்பர்களே துரோகம் செய்துவிட்டனர் என்பது அடுத்தது.

இப்படி விதவிதமான தியரிகள். விதவிதமான சதிக் கோட்பாடுகள். எதற்குமே இன்று வரை தெளிவான விடை இல்லை. முடிவான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அப்போது முதல் இப்போது வரை சுஷாந்த் வட இந்திய மீடியாக்களால் லைம்லைட்டில்தான் இருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல், தன் மரணத்திலும் சில மீடியாக்களுக்கு டிஆர்பியை தாரை வார்த்துவிட்டுப் போயிருக்கிறார்.எல்லா சென்சிடிவ் விஷயங்களுக்கும் அரசியல் முலாம் பூசப்படுவதைப் போன்றே சுஷாந்தின் மரணமும் அரசியலாகிவிட்டது.

இந்த விவகாரத்தை பாஜக கையாளும் முறைக்கும் காங்கிரஸ் கையாளும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னால் இந்திப் படவுலகில் நிலவி வரும் வாரிசு அரசியல் இருக்கிறது... இந்த வாரிசு அரசியலின் தாதாவாக அங்கு சல்மான் கான் இருக்கிறார்... என்ற ஒரு சரடைப் பிடித்துக்கொண்ட பாஜகவினர், இந்த மரணத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் தாவூத்துக்குமே கூட தொடர்புண்டு என்று சொல்லி வருகிறார்கள்.

பாஜக அரசியல்வாதிகளும் பாஜக ஆதரவு மீடியாக்களும் இந்த விவகாரத்தை தங்களது இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரத்துக்கான கருவியாகப் பயன்
படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழியாக இந்த கொரோனா காலங்களில் தங்களுடைய ஆளும் தரப்பின் தோல்விகளை மறைத்தும் கொள்கிறார்கள்.
இதில், பாஜகவை விட மிகச் சிறப்பாக கல்லா கட்டுவது பிஜேபி ஆதரவு மீடியாக்கள்தான். சுஷாந்த் மரணத்தை வைத்தே தங்களது டிஆர்பியையும் விற்பனையையும் கணிசமாக இவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் பேரிடர் காலத் தோல்விகளை பேசாமல் லாவகமாக மறைப்பதிலும் ஈடுபடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக அரசியல்வாதிகளால் செய்யப்படும் டுவீட்கள், ரீடுவீட்கள் பலவற்றையும் ஆராய்ந்தால் சில விஷயங்கள் பிடிபடுகின்றன. சுஷாந்த் இறந்த அன்று பிஜேபியினர் வெளியிட்ட டுவீட்களில் சுமார் 800 டுவீட்கள் அது ஒரு தற்கொலை என்பதாகவும் சுமார் நூற்றுக்கும் குறைவானவையே அது ஒரு கொலை என்பதாகவும், இருந்தன.

ஆனால், விரைவிலேயே காட்சிகள் மாறுகின்றன. கொரோனா உச்சத்திலிருந்த ஆகஸ்ட் மாதத்தில் பிஜேபி அரசியல்வாதிகளில் பலர் சுஷாந்தின் மரணம் தொடர்பாக கீச்சிக் கொண்டிருந்தார்கள். அதில், சுமார் ஐநூறு டுவீட்கள் அது ஒரு கொலை என்றும் இருநூறு டுவீட்கள் மட்டுமே தற்கொலை என்றும் அலறின. இந்த டேட்டாவை நாம் காங்கிரஸ் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு நோக்குவோம். சுஷாந்த் இறந்த அன்று காங்கிரஸிலும் சுமார் 800 பேர் அது ஒரு தற்கொலை என்று பதிவிட்டார்கள். அப்போதே அதை கொலை என்றவர்கள் காங்கிரஸில் அதிக பட்சமாக ஒரு பத்து பேராக இருப்பார்கள்.

ஆனால், ஆகஸ்ட் கடைசியில் 500 பேர் தற்கொலை என பதிவிட, கொலை என்றவர்கள் வெறும் நூற்று சொச்சம் மட்டுமே. இந்த இரண்டு டேட்டாவுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு விஷயத்தை நமக்குத் தெளிவாக்குகிறது. சுஷாந்தின் மரணத்தை தற்கொலை அல்ல, கொலை என்று நிறுவ பிஜேபியினர் மற்றவர்களை விட அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

தங்களது அரசுகளின் தோல்வியை மறைப்பது, தங்களது வழக்கமான அஜெண்டாவான இஸ்லாமிய வெறுப்பை வளர்ப்பதன் மூலம் தங்களை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொள்வது ஆகிய இரண்டுதான் இதன் பிரதான நோக்கம் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.

சுஷாந்த் இறந்த அன்று 1500 டுவீட்டுகள் தற்கொலை, மன அழுத்தம், மன ஆரோக்கியம் தொடர்பானதாக இருந்தன. வெறும் 250க்கும் குறைவான டுவீட்டுகளே கொலை, புதிர், சதி என்பதாக இருந்தன. ஆகஸ்ட் மத்தியில் சுமார் இரண்டாயிரம் டுவீட்கள் கொலை என்பதாக உருமாறிவிட, வெறும் நூற்று சொச்சம் டுவீட்களே தற்கொலை, மன அழுத்தம் தொடர்பானதாக இருந்தன.

இந்தப் புள்ளிவிவரம் ஊடகங்களில் சுஷாந்தின் மரணம் அடைந்த பண்பு மாற்றம் பற்றி சூசகமாக சில தகவல்களைச் சொல்கிறது. இந்த பண்பு மாற்றம் இயல்பாக உருவான ஒன்றா? தங்கள் நலனுக்காக சிலரால் வேண்டுமென்றே திட்டமிட்டே உருவாக்கப்பட்ட ஒன்றா..? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இதன் வழியாக சுஷாந்த் மரணத்துக்குப் பின் உள்ள உண்மையான மர்மம் என்ன என்ற வினா குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இனி இதற்கான பதில் உலகுக்கு அறிவிக்கப்படவும் வாய்ப்பு குறைவு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆனால், ஆழப் புதைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும்!

கி.பி. 540 முதல் கி.பி. 2015 வரை

வாழ்ந்த இந்தியாவின் மகத்தான ஆளுமைகள் 12 பேரின் Biographyகளை தனித்தனி படங்களாக தயாரிக்க போவதாக 30அறிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக அரசியல்வாதிகளால் செய்யப்படும் டுவீட்கள், ரீடுவீட்கள் பலவற்றையும் ஆராய்ந்தால் சில விஷயங்கள் பிடிபடுகின்றன.

இளங்கோ கிருஷ்ணன்